உதைபந்து

Friday, September 30, 2011

என்னால‌ முடிய‌ல‌டா சாமீ...

எப்பிடி நாலு நாளான சோத்த நாலு கவளம் திண்டா வயித்த குமட்டுமோ , அது போல எனக்கு இந்த லெக்சர்ஸ் எண்டு காதில கேட்டவுடனேயே, தலையெல்லாம் சுத்தி அடிவயித்தில ஏரோபிளேன் பற‌ந்து, கொலவெறியாகும்.
அது ஒண்டுமில்ல அண்ணச்சி ! சும்மா நல்லா பாடம் நடத்துறவன் பாடம் எடுத்தாலே எனக்கு பகல் நித்திர வரும். என்னோட துர் அதிஸ்ரம் எனக்கு பாடம் எடுக்கிற‌வனுகள் பாதி பேர் அர குற..

பகல்ல எல்லாம் பாண் பேக்கரி போல புளுங்கிக்க் கொண்டிருக்கும் எங்கட போடிங் சாமத்தில தான் சகஜ நிலைக்கு வரும். சாமம் ஒரு ரெண்டு மணிக்கு கண்ண லேசா மூட றூம்ல எவனாவது "சுச்சா" போற‌துக்கு லைற்ற போடுவான்.(அதுக்கு எதுக்குடா லைற்று) அவன் வந்து ஓஃப் பண்ணும் வரைக்கும் முழிச்சு கிடக்க (வெண்ண நீ எழும்பி ஓஃப் பண்ணினா குறைஞ்சா போயிடுவ?#பஞ்சி பாஸ்) ரெண்டர ஆயிடும் நேரம். அப்பாடா எண்டு நித்திர கொண்டா றூம்ல ஒருத்தன் வச்சிருக்கான் பாரு ரிங் டோன்!!! யப்பா சரியா மூன்று மணிக்கு அறுக்கிற ஆடு போல கத்தும் பாருங்க.... அப்பிடியே அவன ராஜேந்தர் படம் நாலு மூண்டு பாக்க வைக்கலாமா எண்டு தோணும். கொல கேசில உள்ள போயிடுவன் எண்ட பயத்தில மூடிக்கொண்டு கிடக்கிற‌துதான். அது ரிங் டோன் இல்லயாம்.. அலாரமாம்! அத்த சாமத்தில இந்த நாய் எதுக்கு அலாரம் வைக்குது எண்டு பாத்தா... சாமத்தில முழிச்சிற்று படுத்தா நல்ல நித்திர வருமாம்.(அடேய் நாதாரி பயலே.. உன்ன வேலாயுதம் படத்துக்கு முதல் ஷோவுக்கு அனுப்பி சாவடிக்கிற‌னா இல்லயா பாரு..!!)

விதிய நொந்து கொண்டே கண் அயர இரவு கொஞ்சம் ஒவரா தண்ணி குடிச்சதன் விளைவு அடியேனும்"சுச்சா". அட போங்கடா எண்டு கட்டிலில் விழ எந்த மூதேவியோ சாமத்தில அனுப்பின எஸ்.எம்.எஸ் க்கு ஒரு பக்கி விடியப்பறத்தில றிப்ளை போடும். அந்த எஸ்.எம்.எஸ் டோன நீங்க கேக்கணுமே.... நரகாம்சமா இருக்கும்...

அப்புறம் என்ன? மணி ஆயிடும் ஏழு.. அத யாருமே அலாரம் வைக்க தேவயே இல்ல. றூமில ஒண்டு இருக்கு (அத பத்தி எழுத தனி பதிவே போடணும்)அது தன் பாட்டுக்கு சோம்பல் முறித்து, அலுப்பு எடுத்து காட்டு கத்து கத்த தொடங்கிடும். எவெனெவனெல்லாம் தூங்குறானோ அவனுகள்ற கத அத்தோட காலி..கண்ட இடத்தில கடிச்சு வச்சிரும். அது எழும்பின உடனயே நான் ஏதோ பூசாரிய கண்ட பேய் மாதிரி பிறஷ்ச எடுத்த்க் கொண்டு எஸ்கேப். பாவம் அதுட சித்திர வதையில சிக்கிறது தோழர் கணேஷ் தான்.சும்மா நிண்டு கொண்டு துன்பம் தாறத்துக்கு அதுட்ட தான் படிக்கணும். வெய்யில் விழாத இடத்தில் எல்லாம் கணேஷுக்கு அடி விளுந்த பிறகு தான் அண்ணாத்த எழும்புவார்.
அடிச்சு பிடிச்சு வெளிக்கிட்டு ஓட‌ வெளிக்கிட்டா.. பொறு நானும் வாற‌ன் எண்டு அப்ப‌ தான் எழும்பி க‌ட‌வாய‌ துட‌ச்சு ப‌க்க‌த்து றூம் துன்ப‌ம் ப‌ல்ல‌ காட்டிக்க் கொண்டு நிக்கும். "அட‌ ராமா! என்ன‌ ஏன் இந்த‌ க‌ளுச‌ட‌ ப‌ச‌ங்க‌ளோட‌ கூட்டு சேர‌ வைகிற " எண்ட‌ க‌வுண்ட‌ ம‌ணியின் ட‌ய‌லாக்கு தான் ஞ‌ப‌க‌ம் வ‌ரும்.

8 ம‌ணி லெக்ச‌ருக்கு ,‌ க‌ம்ப‌சுக்குள் வ‌ர‌வே நேர‌ம் 7.55 ஆக‌ இருக்கும். க‌ன்டீனில் க‌டைக்கார‌ன் சாப்பாடு(????) எண்டு த‌ருகிற‌ எத‌யாவ‌து (எங்க‌ள் க‌ன்டீன் ப‌ற்றி அவ‌சிய‌ம் த‌னி ப‌திவு போடுகிறேன்)வ‌யிற்றில் எறிந்துவிட்டு லெக்ச‌ர் போனால் அங்கு ந‌ட‌க்கும் அநியாய‌ம்.... அய்ய‌ய்ய‌ய்யோ... "கொடும‌ கொடும‌ எண்டு கோயிலுக்கு வ‌ந்தா அங்க‌ ஒரு கொடும‌ நிண்டு ட‌ங்கு ட‌ங்குன்னு ஆடிச்சாம்" (எங்க‌ள் லெக்ச‌ர் ப‌ற்றி அவ‌சிய‌மாக‌ குறைந்த‌து மூன்று ப‌திவுக‌ளாவ‌து போடுற‌ன்.) அது வ‌ரையில் என் துன்ப‌ம் தொட‌ரும்...

நான் நாதாரி, மூதேவி, அது, ஒண்டு,துன்பம் என்றெல்லாம் அஃதிணையில் விளித்தது வேறு யாருமல்ல என் நண்பர்கள் தான்

எனக்கென்னவோ இது சரியாப் படல....

முதல் பதிவு..!
இருதய நோயாளிகள், இதய பலவீனம் உள்ளோர் யாரும் இதை வாசிக்கலாம். ஆனால் தீவிர மத வெறியர்கள் யாருக்கும் இந்த பதிவை நான் சிபாரிசு செய்யவில்லை.
நேற்று முகநூலில் நண்பர் ஒருவரின் பதிவு ஒன்றை பார்க்க நேர்ந்தது. எனது நெருங்கிய நண்பர்,எனது ஊரைச் சேர்ந்தவர், என்னை விட இரு வயது கூடியவர்.தற்போது மதகுருவாகும் நோக்கத்தில் அதற்குரிய பயிற்சியில் உள்ளார்.அவரது அந்த பதிவில் எங்களது ஊரின் மதங்கள் பற்றியும், அதன் பரவல்கள் பற்றியும் சிலாகித்து இருந்தார். சிலாகித்து இருந்தார் என்பதை விட தான் என்ன ஊகிக்கிறார் என்பதை கூறியிருந்தார் என்பது சால பொருந்தும். அது ஒரு வரலாற்று ஆய்வு பாணியில் சென்றிருந்தது.(அத்தனைக்கும் அவற்றில் அதிக உண்மைகள் இருப்பதாக எனக்கு புலப்படவில்லை, எனக்கு மட்டுமல்ல வரலாறு அறிந்த யாரும் அதை ஏற்க தயங்குவர்)
எங்களது ஊர் பல் சமய பரம்பல் கொண்டது.கத்தோலிக்கம்,இந்து மற்றும் முஸ்லிம் சமயத்தவர்களை கொண்டது.தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் இந்தியாவிலிருந்து வந்த ஒரு தொகை எங்கள் ஊரவர்கள் தங்களோடு கத்தோலிக்கம் அல்லாத பிற கிறிஸ்தவ சபைகளை காவி வந்தனர்இருந்த போதும் நான் அறிய,என் தந்தை அறிய,பாட்டனார் அறிய எந்த விதமான தீவிர மத கலகங்களும் இடம் பெறாத ஊர்.(ஒரு தடவை கத்தோலிக்க மற்றும் வேற்று கிறிஸ்தவ அமைப்பிகளுக்கிடையே ஒரு கலகம் மூண்டதை தவிர).
 
 குறித்த‌ ந‌ண்ப‌ரின் ப‌திவு எம‌து ஊரின் க‌த்தோலிக்க‌ ப‌ர‌வ‌லை வ‌ர‌லாற்று ரீதியாக‌ சுட்டிக்காட்ட‌ முய‌ன்று தோற்றிருந்த‌து. அவ‌ர‌து க‌ருத்துப்ப‌டி க‌த்தோலிக்க‌ம் ம‌ற்றும் இந்து ச‌ம‌ய‌ங்க‌ள் இர‌ண்டும் ஊரின் பூர்வீக‌ ச‌ம‌ய‌ங்க‌ள் என்று சுட்டிக்காட்டியிருந்தார். ந‌ண்ப‌ருக்கு குரும‌ட‌த்தில் ஆன்மீக‌த்தோடு வ‌ர‌லாறும் சொல்லித்த‌ர‌ அவர‌து அதிப‌ருக்கு சிபாரிசு செய்கிறேன். ஏனென்றால் இலங்கை‌யில் போர்த்துகீச‌ரின் வ‌ருகைக்கு பின்ன‌ரே க‌ரையோர‌ங்க‌ளில் கிறிஸ்த‌வ‌ம் ப‌ர‌வ‌ ஆர‌ம்பித்த‌து. அப்ப‌டியிருக்க‌ போர்த்துகீச‌ரின் வ‌ருகைக்கு முன்ன‌ரே எங்க‌ள் ஊரிலிருந்த‌ இந்து ச‌ம‌ய‌த்த‌வ‌ர்க‌ளை விட‌ எப்ப‌டி க‌த்தோலிக்க‌ ச‌ம‌ய‌ம் பூர்வீக‌ ச‌ம‌ய‌மாக‌ இருக்க‌ முடியும்? அது போக‌ எனது பாட்ட‌னின் தாத்தாவும் அவ‌ர‌து மூதாதேய‌ரும் இந்து ச‌ம‌ய‌த்த‌வ‌ர்கள் யாழ்ப்பாண வேலணை பிரதேசத்தை சேர்ந்தவர்கள். ஆக எனது தந்தை வழியில் எனக்கு முன்னால் ஜந்தாம் தலைமுறையிலேயே கத்தோலிக்கம் எங்கள் குடும்பத்திற்குள் நுளைந்துள்ளது.அதற்கு முன்னரான எமது பரம்பரை இந்துக்களாக இருந்துள்ளது என் வாளும் நூலகம் (எனது பாட்டி தாங்க அது. வயது 84 , ஊரின் மூத்த குடிமகள்) மூலம் அறிந்து கொண்டேன். அத்தோடு ந‌ண்ப‌ர் இன்னொன்ற‌யும் க‌வ‌னிக்க‌ த‌வ‌றிவிட்டார். த‌வ‌றி விட்டாரா? அல்ல‌து த‌ன‌து ம‌த‌பிர‌சார‌த்துக்கு ஆதார‌ ப‌ங்க‌ம் வ‌ந்துவிடுமென்று வேண்டுமென்றே த‌வ‌ற‌விட்டாரா தெரிய‌வில்லை. எங்க‌ள‌து ஊரில் அமைந்துள்ள‌ பிள்ளையார் கோவிலின் வ‌ய‌சுதான் அது. அத‌ன் சுற்று ம‌தில்க‌ள் க‌வ‌னிக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌வை.சீமெந்து பூசாம‌ல் பாரிய முருகக் க‌ற்க‌ளை ஒன்ற‌ன் மேல் ஒன்று வைத்து அழுத்தி பிடிமான‌ம் கொடுக்க‌ப்ப‌ட்டு க‌ட்ட‌ப்ப‌ட்டிருந்த‌து.(த‌ற்போது முழுதும் தூர்ந்து போய் புதிய‌ ம‌தில் எழுப்ப‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ கேள்வி). இந்த‌ க‌ட்டுமான‌ பொறிமுறை கால‌ணித்துவ‌ ஆட்சிக்கு முன்னுள்ள‌ த‌மிழ‌ரின் க‌ட்ட‌ட‌க்க‌லைக்கு சொந்த‌மான‌து.அத்தோடு இன்னொன்ற‌யும் குறிப்பிட‌ வேண்டும்! ஊரில் இந்துக்களின் பிள்ளையார் கோவில் மாதா கோவிலிலிருந்து 50 மீற்றருக்கும் குறைவான தூரத்தில் அமைந்துள்ளது. எங்க‌ள் ஊர‌வ‌ர்க‌ள் ச‌ற்று இல்லை ரொம்ப‌வே ம‌த‌ ப‌ற்று (வெறி???) கூடிய‌வ‌ர்க‌ள்.ஊரின் பெரும்பான்மையும் க‌த்தொலிக்க‌ரே! அப்ப‌டியிருக்க‌ மாதா கோவிலிலிருந்து 50 மீற்ற‌ருக்கும் குறைவான‌ தூர‌த்தில் ஒரு பிள்ளையார் கோவில் க‌ட்டுவ‌த‌ற்கு அவ‌ர்கள் இந்துக்களுக்கு மூத்த‌ ஊரின் பூர்வீக‌ குடிக‌ளாக‌ இருந்து இந்துக்கள் பின் வந்து அனுமதி கேட்க்கும் ப‌ட்ச‌த்தில் கட்டுவத‌ற்கு அனும‌தித்திருப்பார்களா? என்ற‌ கேள்வி எழுந்தால் விடை பூச்சிய‌மே!
    
அடுத்து இன்னுமொரு வ‌ர‌லாற்று சான்று.... எங்க‌ள் ஊரின் க‌டைத்தெருவை ஊட‌றுத்து கிழ‌க்கு ப‌க்க‌ எல்லையால் செல்லும் வீதி இற்றைக்கு 450 (சில வேளை அதற்கு முன்னரே) வ‌ருட‌த்துக்கு முன்ன‌ர் யாழ‌ப்பாணம் செல்லும் பாதையாக பயன்பட்டு வந்திருக்கிறது. இந்த பாதையின் ஊரின் முச்சந்திப்பு ஒன்றில் அமைந்துள்ளது "பிள்ளையார் கோவில் பயணிகள் தங்குமடம்". முற்றுமுழுதாக காட்டு கற்களால் கட்டப்பட்டு த‌ற்போது இல‌ங்கை தொல்பொருள் திணைக்க‌ள‌த்தின் பாதுகாப்பின் கீழ் "அரச புராதான சொத்து" வகையில் சேர்ந்துள்ள‌ இந்த‌ க‌ட்ட‌டம் (வயது கிட்டத்தட்ட 450 வருடங்கள்) ஊரின் பிள்ளையார் கோவிலின் நிர்வாக‌த்துக்கு உட்ட‌ப்ட்ட‌து. ஆக‌ ப‌ய‌ணிக‌ளின் ந‌ல‌ன் க‌ருதி க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ இந்த‌ த‌ங்கும‌ட‌ம் போர்த்துகேய‌ரின் வ‌ருகை இட‌ம்பெற்ற‌ கால‌ப்ப‌குதியில் க‌ட்ட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. எனவே எமது ஊரில் இந்து ச‌ம‌ய‌த்தின் இருப்பு அத‌ற்கு முற்ப‌ட்ட‌தாக‌ இருக்கின்ற‌து என்ப‌து தெளிவு. இந்த‌ விட‌ய‌ங்க‌ளை யோசிக்க‌ ம‌ற‌ந்து போனார் ச‌கோத‌ர‌ர்.  
அத்தோடு பல வருடங்களுக்கு முன்னமே வ‌ணிக‌ நோக்க‌மாக‌ ஊரின் "புதுகுடியிருப்பு" (நீங்க நினைக்கிறது இல்ல. இந்த "புதுகுடியிருப்பு" எங்கட ஊர்ல இருக்கிறது) என்னும் ப‌குதியில் குடியேறிய‌ முஸ்லிம் ச‌மூக‌த்த‌வ‌ரை, ஊரின் குடிம‌க்க‌ளாக‌ ஏற்ப‌தில் அவ‌ரின் ப‌திவு த‌ய‌க்க‌ம் காட்டி , பின் அர‌சாங்க‌மே எற்றுக்கொண்டுள்ள‌து என‌ தெளிந்து வேண்டா வெறுப்பாக‌ போனால் போக‌ட்டும் என்று ஏற்றுக் கொள்வ‌து தெரிகிற‌து.ஒரு ஊரின் ச‌மூக‌ம் என்ப‌து குடியேற்ற‌ங்க‌ளால் நிக‌ழ்வ‌து, யாரும் வானிலிருந்து தொப்பென்று அந்த‌ ஊரில் விழுவ‌தில்லை என்ப‌தை ந‌ண்ப‌ர் ஏற்றுக்கொள‌ வேண்டும். ந‌ண்ப‌ரின் வாத‌ப்ப‌டி பார்க்க‌ போனால் அமெரிக்க‌ர் யாருமே அமெரிக்க‌ர் அல்ல‌ர் அவ‌ர்க‌ள் இங்கிலாந்தின் குடிம‌க்க‌ள், சிங்க‌ள‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் இந்திய‌ பிர‌ஜைக‌ள் , த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ரும் க‌ருணாநிதிக்கும், ஜெய‌ல‌லிதாவுக்கும் ஓட்டு போட‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் தாம்.
அடுத்து க‌த்தோலிக்க‌ம் அல்லாத‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் மீது இவ‌ர‌து கோப‌ம் பாய்ந்திருந்த‌து. அதாவ‌து இந்தியாவில் எம‌து ஊர‌வ‌ர்க‌ள் இருந்த‌ போது அங்கு வாழ‌ வ‌ழியில்லாத‌தால் ப‌ண‌த்திற்கு ஆசைப்ப‌ட்டு ம‌த‌ம் மாறிய‌தாக‌ கொச்சையாக‌ எழுதியிருந்தார்.ஒரு ம‌த‌குரு ப‌யிற்சி ப‌ள்ளி மாண‌வ‌னிட‌மிருந்து இவ்வாறான‌ துவேச‌ம் வெளிப்ப‌டின் அது அவ‌ர‌து ம‌த‌த்திற்கு தான் இழுக்கு.ந‌ண்ப‌ர் ம‌த‌குருவான‌ பின்பும் இது தொட‌ர்ந்தால் யேசு போதித்த‌ "உன்னைப் போல் உன் அய‌லானையும் நேசி" என்ன‌வாவ‌து? ச‌ரி அவ‌ர்க‌ள் ப‌ண‌த்திற்கே சோர‌ம் போன‌தாக‌ இருக்க‌ட்டும். அவ்வாறாயின் இப்போதுள்ள‌ இல‌ங்கை க‌த்தோலிக்க‌ரில் ப‌ல‌ர் போர்த்துக்கேய‌ரால் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ ச‌லுகைக‌ளுக்காக‌வும், ப‌ண‌ம், வேலை ஏன் உயிர் ப‌ய‌த்திற்காக‌வும் ம‌த‌ம் மாற்ய‌வ‌ர்க‌ள் தானே? அத‌ற்காக‌ அவ‌ர்க‌ள‌து மூதாதை ச‌ம‌ய‌ங்க‌ள் இவ‌ர்க‌ளையெல்லாம் ச‌லுகைக்கு சோர‌ம் போன‌வ‌ர்க‌ளென்றால் ந‌ண்ப‌ரின் மூக்கு என்ன‌வாகும்? நான் சொல்வ‌து என்ன‌வெனில் ம‌னித‌னின் தேவைக‌ளும்,சூழ‌லுமே அவ‌ன‌து ம‌த‌ம், க‌லாசார‌த்தை தீர்மானிக்கின்ற‌து. ஆக‌ யாரிலும் குற்ற‌ம் சொல்லும் நிலையில் யாரும் இல்லை.
    
நண்பர் தனது மதத்தின் வரலாற்றை கூற அவருக்கு உரிமை இருக்கின்றது. அதற்காக வரலாற்று பிறழ்வுகளை ஆதாரமாக கொள்ள கூடாது. அதே போல் தனது மத பிரசாரத்தில் அடுத்த மதங்களை , சமூகத்தை கொச்சைப் படுத்த கூடாது. இத்தனைக்கும் பிறப்பாலும் , வளர்ப்பாலும் நான் ஒரு கத்தோலிக்கன், அதே ஊரவன். இருப்பினும்"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" இந்த‌ ப‌திவு என‌து எண்ண‌ங்க‌ள் ம‌ட்டுமே. யார‌யும் நான் ஏற்றுக்கொள்ள‌ திணிக்க‌வில்லை! "கேட்க‌ செவியுள்ளோன் கேட்க‌ட்டும்"

 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...