உதைபந்து

Saturday, June 30, 2012

முத்து முத்து பேச்சி!


அவள் தூரே இருந்தாலும் மாமன் மீது காதல் கொண்ட பருவக்கிளி, இவன் காதல் இருந்தாலும் சொல்லத்தெரியாமல் வெட்கத்தால் கூசும் முரட்டு மாமன்! நடக்கிறது ஒரு அன்புப்போர்! 

புதுக்கவிதையும் , கிராமத்து வாசனை கவிதையுமாய் கலந்து தந்திருக்கிறேன். ( கவிதையா? # அப்பிடித்தான் நெனைக்கிறேன்.)





அன்றொரு நாள்
நள்ளிரவைக் கடந்து
நாளொன்றை பிரசவிக்க
மௌனவானம் முனகிக்கொண்டிருந்த நேரத்தில்
என் செல்போனில் சிணுங்கினாய்!

கொவ்வையாய் பழுத்திருந்த உன் உதடுவழி வார்த்தைகள்
தழுத்து தழுத்து தவழ்கின்றன!

"காலை விடிகையில்
உன் முகச்சாவி கொண்டு
என் கண்கள் திறகிறேன்!
இரவு உறங்கப்போகையில்
உன் நினைவுகள் எனக்குத் தந்த
நீங்கா பரிசுகளை நித்தலமாய்
என் பெட்டக மனதுக்குள் பூட்டிவைத்து நித்திரையாகிறேன்!

காலையொன்று பிறந்து
பிற்பகலில் பூப்பெய்தி
மாலையில் மணம் சூட்டி
ரத்திரியாய் உறங்கும் வரைக்கும்
உன் ஞாபகங்களின் கைகள் பிடித்து தான்
நீண்ட வழி நடக்கிறேன்!

"நீ எனை பிரிந்த இந்த சில நரக நாட்களுக்குள்
நாள் முழுதும் உன் ஞாபகம் தான் அசுரனே!
குளிக்கும் போதும்.....
தலை துவட்டும் போதும்.....
உன் முத்த எச்சில்
என் முழுஅழகை நான் காணும் போதும்..........
சோதியாய்..... சொப்பனமாய்......
என் கற்பனைக்குள் நிற்பவனே!
கணப்பொழுதேனும் என்
ஞாபகச்சில்வண்டு
காதல் செல்லரித்துப்போன உன் மரத்த மனதில்
சின்னதாயேனும் சிறகடித்துப்போனதுண்டோ.....?"


கேட்டாய் ! கேட்டாய்! கேள்விகளாய் கேட்டாய்!
செத்துவிட போக்றேன் என்று
என் செல் பேசி அணு அணுவாய் அலறும் வரை
கறையேதும் படியா என் கற்கண்டே
கேள்வியாய் கேட்டாய்!                    

மின்னேதும் இல்லாமல் செல்பேசி சாகிறதென்றேன்,
"பேசப்பிடிக்கா உனக்கு
பொய்யாய் ஒரு சாட்டு!
ரோமாய் நான் எரிய
நீயேன் நீரோவாய் பிடில் வாசிக்கிறாய்?" என்று
உன் வாழைமடல் விரல் வலிக்க
உன் தொலைபேசியின் "துண்டி" பொத்தான் அழுத்தி
அர்த்த ராத்திரியில் என்னை தண்டித்தாய்!

காற்று புக இடம் கொடாமல்
கவிதையாய் என்னை
கடிந்து கொண்டவளே!
கடைசிவரை நான் உனக்கு
முழுசா பதில் தர‌
மூணு செக்கன் ஒதுக்கலியே!

இதயத்தின் நாலு அறையும்
நெறஞ்சிருக்கும் உனையும் தாண்டி
சோணவறை சுவர்களை
சுரண்டிப் பார்க்கிறேன்!

தூங்கி எந்திரிச்சும்......
தூங்காம சாஞ்சிருந்தும்.....
பிஞ்சு பாதம் மோதி
கொஞ்சி கொஞ்சி நடக்கும் போதும்……
சேறில்லா கொளத்தில் பூத்த
என் செந்தாமரை வதனக்காரி
நாளும் பொழுதும் என்னையே நெனைக்கிறாளாம்!

வீட்டோடு கெடந்துருகி
பாட்டெழுதும் பாவி மாமன்
ரோட்டோரம் ரோந்து போகும்
கோட்டானுக்கும் குருவிக்கும்
அருவியாய் பெய்யும் மவள்
அருங்கத ஆயிரம் சொல்லி
ஆனந்தப்படும் சங்கதி சொல்ல
சந்தர்ப்பம் ஏதும் நீ
தரலியே தாயி!

விடிஞ்சா பொழுதுபட்டா
வீடெல்லாம் நெறஞ்சிருக்கா...!
இரும்பு நெஞ்சுக்குள்ளும்
கரும்பு நட்டும் சேதி தாறா....!
கம்மலும் வளவியுமாய்
உலவு வரும் எளயவளே!
(ன்) தூக்கப் பானைக்குள்
நீ கல் விட்டு எறிஞ்ச கத
இப்போ சொல்லி தீராதம்மா!

சொட்டமுதம் சிந்தும் வாயில்
சொக்குபொடி போடும் தாயி!
சொன்னது போல்! நீ சொன்னது போல்!
மாமன் மனசு பாழும் கெணறு தாயி!

சத்தியமா நாள்முழுதும்
உன்னய நெனச்சேன்னு
பொய்யாய் ஒரு பொரளி பண்ண‌
மனசுக்கு சொல்லிப்பாத்தேன்!
பிஞ்சுப் புள்ள நீயி
நெறஞ்சிருக்கும் நெஞ்சு தாயி
அதனால உள்ளுக்குள்
வஞ்சம் வந்து சேருதில்ல!

நொடி வெடிக்கும் நேரமெல்லாம்
புழுதி மவன் பொகழ் நெனைக்கும்
உன் காதல் பெருசு தாயி!

நாள் பொறந்து நடைபழகி
ரா நெறஞ்சு சரிவதற்குள்
அப்பப்போ ஒன நெனைக்கும்
என் காதல் சிறுசு தாயி !



தூங்கி எந்திரிச்சி
தூணைப் பாக்கயிலே
கண்ணாடி பக்கமாய்
களவாய் நான் ஒட்டிவைத்த
உன் ஸ்டிக்கர் பொட்டை பாத்துக்குவேன்!

வாய்க்கா வரப்போரம்
பல் தேச்சி நடக்கயிலே
என் கூட நீ வந்து
வேப்பங்குச்சி வெட்டி தந்த
இனிப்பயெல்லாம் நெனச்சுக்குவேன்!

கம்மா கரயோரம்
மொகம் கழுவ போகயிலே
ஐயோ! பாம்பு என்னு
பொய்யாய் பொரளி பண்ணி
பொசுக்குன்னு ஓடிவிட்ட
பொன்மான நெனச்சு பாப்பேன்!

காத்தால ஆத்த
கஞ்சி ஊத்தயிலே
அன்றொருநாள் வீடு வந்து
ஆளரவம் சுத்தி பாத்து
மோர்மொளகா தாரேன்னு
மோகம் தந்து போன
மேனகைய நெனச்சுக்கிறேன்!

ஆடு மேய்க்க போகயிலும்
ஆடிக்காத்தாய் ஞாபகங்கள்!
அன்றொருநாள் ஆடு ஓட்டி
சரட்டுக்கல்லில் சம்மணமாய் உக்காந்து
சொகமாய் நான் சொர்க்கத்து காத்து வாங்க.......
அந்த வழி அப்பனுக்கு
கஞ்சி கொண்டு போன நீயி
காதலாகி கனிந்து விழ
கள்ளிப் பொதர் மறைவில் நீயும் நானும்
அடிச்ச கூத்த நெனச்சுக்குவேன்!

ஆடு மேச்சு திரும்புகையில்
ஆத்தாடி (ன்) வீடு!
காத்தாடி போல
சொழலுதம்மா ஞாபகங்கள்!

கள்ளிப்பொதர் மறைவில்
காதல் செஞ்ச அப்புறமா,
தெருவழி வந்த என்ன
குறுகுறுன்னு மொறச்சுப் பாத்து
"முத்தம் போடத்தெரியா மொரட்டு மாமான்னு"
தடிச்சு போன ஒதடு பிதுக்கி
ஒத்த கையால் இழுத்து பாத்து
ரத்த தடம் சோதிச்சு
என் மார்பில் குத்துவதாய்
உன் வீட்டு தேக்கு தூணில் குத்தியது
தெனம் தெனம் உன் வீடு
கடந்து நான் போகயில
செல்லமாய் இன்னும் கூட
வலிக்கவே செய்யுதடி!

ராத்திரியானாலே ஒன்னோட
ராகம் தான் தாயி!
ஆத்தாக்கு தெரியாம
திருவிழா அன்னிக்கு
திருட்டுத்தனமா வீடு வந்து
பொரண்டு கெடந்த என எழுப்பி
போர்வைக்குள் புகுந்து
நித்தியிலே நீறும்....
வாயிலே வெல்லமுமாய்...
பொட்டுன்னு போட்டுவிட்டு
சட்டுன்னு மறஞ்சியே.......
கரஞ்சிச்சா.....?  கரஞ்சிச்சா......?
அந்த வெல்லம் தான் கரஞ்சிச்சா?
அடிமனசு ஆழத்தில
இன்னமும் கெடந்து இனிக்குதடி!

இத்தனையு ஒனக்கு சொல்லி
செல்லமாய் சிரிகணும் என்னு
கோடி மொற நெனச்சிருப்பேன்!
பேசவந்த நேரம் எல்லாம்
போக்கத்த மாமனுக்கு
சீக்கு வந்த கோழியாட்டம்
வெக்கம் வந்து விக்கிடறென்!

மொரட்டு சீவன் என்னு
நீ அறிஞ்ச (ன்) மாமன்
பலாப்பழ பயலு தாயி!
முள்ளு முள்ளா எத்தனையோ
மொரட்டுத்தனம் கெடந்தாலும்
உள்ளுக்குளே வெல்லச்சாறாய்
சேத்து வச்சு கெடப்பதெல்லாம்
நெனச்சாலே நாவூறும்
செல்லமே (ன்) நெனைப்பு தாயி!

ஆனாலும் ஒன்னு தாயி.....
நாள் பொறந்து நடைபழகி
ரா நெறஞ்சு சரிவதற்குள்
அப்பப்போ ஒன நெனைக்கும்
என் காதல் சிறுசு தாயி !


டிஸ்கி : எத்தனையோ கெட்ட பழக்கங்களுக்குள் எனக்கு இருக்கும் கெட்ட பழக்கம் கவிதை என்ற பெயரில் ஏதாவது கிறுக்கி வைத்து விடுவது. படிச்சுகிட்டு இவளோ தூரம் உயிரோட வந்திருக்கீங்கன்னா உங்களுக்கு ஆயுசு ரொம்ப கெட்டி தான். ஏதனாச்சும் கெட்ட வார்த்தயில திட்டணும் போல இருந்த ஒரு பிரச்சினையும் கிடையாது, பின்னூட்ட பெட்டியில் தாராளமாக திட்டி கொட்டிவிட்டு போகலாம்.

Tuesday, June 26, 2012

நாலுலேர்ந்து ரெண்டு போனா மிச்சம் ரெண்டு! இது எங்களுக்கு தெரியாதா?



என்னதான் பிரகாஸ்ராஜ் பெரிய வில்லனா இருந்தாலும் பவர்ஸ்டார் படத்தில நடிச்சா பவரு கைல அடி வாங்கியே ஆகணும். என்னதான் ரஜினி சுப்பர்ஸ்டாரா இருந்தாலும் படத்தில டுவிஸ்டு வேணும்னா சந்தர்ப்பத்தில சப்ப வில்லனுககிட்ட நாலு சாத்து வேண்டித்தான் தீரணும். மறுபடி என்னடா கொழப்புறேன்னு பாக்குறீங்களா? அதுசரி நான் எப்போ தெளிவா எழுதியிருக்கேன்? உங்களோட குழப்பம் நியாயமானது. ஆனாலும் மொக்க உதாரணம் சொன்னாலும் பக்கா மேட்டர் இல்லாம நான் சொல்ல மாட்டேன்னு பச்ச கொழந்தைக்கு கூட தெரியும். # முடியல படுத்தாம மேட்டருக்கு வாடா!

இங்க பிரகாஸ்ராஜ் யாரு , பவரு யாரு , சுப்பர்ஸ்டார் யாருன்னு எல்லாம் பஞ்சாயத்துக்கு வரப்படாது. அது தானா வாரது மெயின் மேட்டர் எதுவோ அத பட்டும் "பக்"ன்னு புடிச்சுகிட்டு "கப்"ன்னு போயிடனும். யூரோ கிண்னத்தின் பரபரப்பான தருணங்கள் தொடங்கி இப்போ பப்பரப்பான தருணங்கள் ஆரம்பமாகி இருக்கு.# அது தாங்க காலிறுதி முடிஞ்சு, நாளேலேர்ந்து ( 27/06/2012) அரையிறுதிக்கான போட்டிகள் ஆரம்பமாக இருக்கிறது.

அந்த அரையிறுதிக்குள் போவதற்கு முன்னம் , நாற வாயாக இருந்து இப்போது கிட்டத்தட்ட கணிப்புகள் சரியாகி வருவதால் சாதா வாயாக புரமோஷன் அடைந்திருக்கும் எனது வாய் சொன்ன காலிறுதி முடிவுகள் எப்படி சரியாக இருக்கிறது என்று பார்ப்போம். # யார் செய்த புண்ணியமோ, இந்த வாட்டி தப்பிச்சுட்டேன்.


முதல் காலிறுதி 

போர்த்துக்கல் எதிர் செக் குடியரசு

நான் சொன்னது : போர்த்துக்கல் வெற்றி , முடிவு : போர்த்துக்கல் வெற்றி ###எலேய் ரொனால்டோ! தாங்க்ஸ்சுப்பா....

நான் சொன்ன கோல் கணக்கு : 2-1 , போட்டி முடிவு : 1-0 ### லைட்டா மிஸ் ஆச்சு, டேய் செக்கு பசங்களா இருக்குடா உங்களுக்கு அப்புறமா!

இரண்டாம் காலிறுதி 

ஜேர்மனி எதிர் கிரீஸ்

நான் சொன்னது : ஜேர்மனி வெற்றி , முடிவு : ஜேர்மனி வெற்றி
எனது கோல் கணக்கு : (2-0), ( 3-1) , போட்டி முடிவில் : 4-2 ### இந்த ஜேர்மன் பயலுக ஜமாய்ச்சுட்டாங்க போ!


மூன்றாவது காலிறுதி.

பிரான்ஸ் எதிர் ஸ்பெயின்

நான் சொன்னது :ஸ்பெயின் வெற்றி , முடிவு : ஸ்பெயின் வெற்றி ### எலேய் JZ! சாரிப்பா ! நான் அப்பவே சொன்னேன்ல, நாம பிரார்த்தன பண்ணி என்ன பிரயோசனம் அந்த பக்கி பய புள்ளைக ஆடின ஆட்டம் அப்புடி!

எனது கோல் கணக்கு: (2-1), (1-0), போட்டி முடிவில் : 2-0 ### போடா பென்ஸமா ! நீயும் உன்னோட மண்டையும்! 


நான்காவது காலிறுதி 

இங்கிலாந்து எதிர் இத்தாலி

நான் சொன்னது : இங்கிலாந்து வெற்றி , முடிவு :இத்தாலி வெற்றி

# "ஐ! அசிங்கப்பட்டியா ...அசிங்கப்பட்டியா..." அப்டீன்னு எவன்டா ரொம்ப சந்தோஷத்தில துள்ளுறது ? மவனே மருவாதயா நான் முன்னாடி போட்ட பதிவ போய் பாரு  "பெனால்டி வரக்கூடும்னு" முன்னாடியே கணிச்சு போட்டிருக்கேன்டா! யாருக்கிட்ட ??? ஹெஹ்...ஹேய்........!! 

"கோபிநாத்து கோர்ட்டு போடுற மறந்தாலும் , சரியா கணிச்சு சொல்லுற தெறமைய மறந்திட மாட்டான்டா இந்த கிஷோகரு!"
 ### அப்பனே முருகா ஞானபண்டிதா! ஏதோ ரெண்டு மேட்சில நான் சொன்னது சரியா போனத வச்சி ஆணவத்தில என்னோட "டங்கு" (Tongue)  "டிங்கு...டிங்கு"ன்னு ஆடுது ஏழுகொண்டலவாடா! இந்த வாட்டியும் ஏதும் அசம்பாவிதம் நடந்திராம , நான் சொல்லப்போற குறி எல்லாம் சரியா போச்சுன்னா நம்ம "குருஷேத்திரம்" கோபிநாத்துக்கு அலகு குத்தி, டாக்டர் டூலிட்டிலுக்கு மொட்ட போடுறன்டா வெங்கட்ரமணா! 

எனக்காக இத கூட பண்ணமாட்டியா கோபிநாத்?


இப்போ மனசுக்குள் ஒரு கேள்வி , ஆகா ஓகோன்னு வந்து இப்போ புஸ்ஸுன்னு ஆகியிருக்கும் சகுனி பத்தி பேசுறதா ?இல்லாங்காட்டி வரப்போற பில்லா பத்தி பேசுறதான்னு? மறுபடியும் பப்படிச்சவன் போல பேசுறன் எண்டு தப்பா நினைக்காதிங்கோ, அதாவது காலிறுதியில் கழுத்தறுபட்ட அணிகள் எப்படி அறுபட்டது அப்டீன்னு பேசுறதா இல்லாங்காட்டி அரையிறுதியில் ஆடப்போகும் அணிகளை பத்தி பேசுறதான்னு! பல்பு வாங்கின அணிகளை பத்தி பேசுறத விட இப்போதைக்கு பிறைட்டா எரியும் அணிகளை பாத்துடலாம்.


ஆனாலும் காலிறுதியில் வெளியேறிய அணிகள் பத்தி ஒரு ஹைக்கூ வடிவில் சொல்லி பிரியா "வடை" குடுத்து அனுப்பலாம்ன்னு நினைக்கிறேன்.

செக் குடியரசு : நெனச்சமாதிரியே ஆடின! நான் நெனச்சமாதிரியே நடந்திச்சு, சோ........ குட் பை!

கிரீஸ் : நீ ஆடின ஆட்டத்துக்கு காலிறுதியே ரொம்ப ஓவர்! ஓடிப் போயிர்...........!



பிரான்ஸ் : ஓ! நீங்க புட்பால் தான் ஆடினிகளா? நானும் ஏதோ ஸ்பெயினுக்கு பிராக்டிஸ் குடுக்க வந்திருக்கியன்னு நெனச்சேன். றிபரி, பென்ஸமா, மலுடா, ரமி மகா சொதப்பல். போங்கடா போய் புள்ள குட்டிங்களுக்காவது எப்பிடி ஃபுட்போல் ஆடுறதுன்னு சொல்லிக்குடுங்கடா!

இங்கிலாந்து : இந்த சுத்துபோட்டிலயே முந்தநாளுதான் ஒழுங்கா ஆடுனிக.....அதிலயும் பெனால்டி அடிக்கதெரியாம கோட்டவிட்டுட்டிகளே பக்கிகளா.......... ! எலெய் அஷ்லே யங், அஷ்லே கோல் இவளவு வெளிச்சத்தில இந்த பெரிய ஓட்டயா இருக்கிற கோல்போஸ்டுக்குள்ளாறயே கோல் அடிக்க முடியாம வெளிய அடிக்கிறிகளே.... நீங்க எல்லாம் எப்புடித்தான் அந்த இருட்டில....... ஹெஹ் ஹேய்....... ஹேய்........ யாரப்பா இவனோட பக்கத்து வீட்ல குடியிருக்கிறது? மச்சக்காரனப்பா நீ....... ரொம்ப சீக்கிரமே உனக்கு அதிஷ்டம் அடிக்கும் போ...........


இப்போ நேரடியா நாளை ஆரம்பமாகவிருக்கின்ற அரையிறுதிப் போட்டிகளுக்குள் போயிடலாம். முதலில் முதலாவது அரையிறுதியான போர்த்துக்கல் எதிர் ஸ்பெயின் போட்டியை ( 27/06/2012) பார்க்கலாம்.

செக்குக்கு செக் வைத்துவிட்டு போர்த்துக்கல்லும், பிரான்ஸை ஃபிரை பண்ணிவிட்டு ஸ்பெயினும் அரையிறுதியில் மோத தயாராக உள்ளன. ஸ்பெயினை பொறுத்தவரையில் குழுநிலை ஆட்டத்தின் போது முதலிரு போட்டிகளிலும் வியா, புயோல் இல்லாத குறை தெரிந்தாலும் அடுத்துவந்த அத்தனை போட்டிகளிலும் இவர்களது ஆட்டம் பின்னி பெடலெடுக்கிறது. லாலீகாவில் சொதப்பிய ஃபப்ப்ரிகாஸ் உட்பட இனியஸ்டா, சாவி, சாவி மர்டீனஸ், ஜோர்டி அல்பா, அலன்சோ என்று ஒரு பட்டாளமே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது.

ஸ்பெயினின் பொதுவான பலமே அவர்களது டிகி-டக்கா பாணியிலான ஆட்டமுறைதான். இந்த டிகி-டக்கா ஆட்டமுறை போர்த்துக்கல்லுடன் ஆடும் போது மேலும் பலமான ஒரு முறையாக இருக்கிறது. எப்படியென்றால் டிகி-டக்கா ஆட்டமுறையில் கோலுக்கான வேர் உருவாவது பெரும்பாலும் மிட்ஃபீல்டில் தான், அல்லது மிட்ஃபீல்டர்களே இந்த வேரினை உருவாக்குவபர்களாக இருப்பார்கள்.  டிகி-டக்கா ஆட்டமுறையில் முக்கோண வடிவில் அமைந்து மூன்று மிட்ஃபீல்டர்கள் தங்களுக்கிடையில் பந்தை பரிமாறி எதிரணியின் பின்கள வீரர்களை சற்று மிட்ஃபீல்ட் நோக்கி நகர்த்துவார்கள்.

இவ்வாறு இவர்கள் பந்தை பரிமாறுகையில் ஒருகட்டத்தில் மிட்ஃபீல்டில் பந்த தடுக்கும் நோக்கில் கவனத்தை எதிரணியின் பின்கள வீரர்கள் மிட்ஃபீல்ட் நோக்கி திருப்புகையில் எதிரணியின் பின்களத்தில் உருவாகும் வெற்றிடத்தை பயன்படுத்தி ஸ்பெயினின் "விங்குகள்" (wingers) இரண்டு பக்கத்தாலும் சிட்டாக பறப்பார்கள். உடனே பந்து மிட்ஃபீல்டிலிருந்து மைதானத்தின் இடது அல்லது வலது விங்குக்கு அனுப்பப்படும். எதிரணியின் பின்கள வீரர்கள் அசரும் கணப்பொழுதில் இது நடந்துமுடிந்துவிடும்.உடனே பந்தை கொண்டு மைதானத்தின் ஓரத்தை பிடித்து எதிரணி கோல் கம்பத்தை நோக்கி துப்பாக்கி சன்னமாய் பறக்கும் விங்குகள் ஒரு கட்டத்தில் எதிரணியின் கம்பத்துக்கு முன்னால் காத்திருக்கும் தமது அணியின் முன்கள வீரர்களுக்கு "கிராஸ் பாஸ்" (cross pass)  செய்வார்கள். அப்புறமென்ன எதிரணி வீரர்களுக்கு சோதனை தான்.

நேர்த்திகடனுக்கு பின்னர் டாக்டர் டூலிட்டில்!

ஒரு வேளை இரண்டு விங்குகளும் (இடது விங்க், வலது விங்க்) தடுக்கப்பட்டால் அல்லது குறிவைக்கப்பட்டு அவர்களது நகர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டால் இருக்கவே இருக்கிறது டிகி-டக்காவில் இன்னொரு முறை அதாவது பந்தை மிட்ஃபீல்டிலிருந்து தங்களுக்கிடையே பரிமாறி பரிமாறி எதிரணியின் கோல் கம்பத்துக்கருகில் வந்து இடைநடுவால் முன்கள வீரருக்கு பந்தை அனுப்புவது ( Break through passing method). இந்த முறையில் கோல்காப்பாளர் மிகக்க‌வனமாய் இருக்க வேண்டும். இந்த சீசனில் மெஸ்ஸி அடித்த 73 கோல்களில் பெரும்பாலானவை இம்முறையில் தான். மெஸ்ஸிக்கு இந்த முறையில் பந்த அனுப்பிய எமகாதகர்கள் இப்போது ஸ்பெயினில் இருக்கிறார்கள். இனியெஸ்டாவும் , சாபியும்!

இப்போது இந்த டிகி-டக்கா முறைதான் போர்த்துக்கல்லுக்கு பெரும் சவாலாய் இருக்கப்போகிறது. டி-டக்கா முறையின் முக்கிய தேவைகளான மிட்ஃபீல்டர்கள், விங்குகள், சிறந்த முன்கள வீரர்கள் அனைவரும் ஸ்பெயினின் கைவசம் இருக்கிறார்கள்.

இந்த டிகி-டக்கா முறையை எதிர்த்து அல்லது முறியடித்து ஆடவேண்டுமானால் இந்த முறையை மிட்ஃபீல்டிலிருந்து தடுத்தாகவேண்டும். இதற்கு சிறந்த டிஃபன்சிவ் மிட்ஃபீல்டர்கள் இருப்பது அவசியம். ஆனால் போர்த்துக்கல்லிடம் இனியஸ்டாவினதும் சாபியினதும் ஆட்டத்தை முறியடித்து ஆடக்கூடிய டிஃபன்சிவ் மிட்ஃபீடர்கள் இருக்கிறார்களா என்றால் விடை அவளவு சுவாரசியமாக‌ இருக்காது. சரி பின்கள வீரர்களை சற்று முன்நகர்த்தி இந்த மிட்ஃபீல்டர்களை கட்டுப்படுத்தலாம் என்று யோசனை அந்த யோசனை செய்யும் கணப்பொழுதை பயன்படுத்தி   கூட டேவிட் சில்வாவும்,ஃபப்ரிகாசும் , டொரைசும் கோல் அடித்துவிடுவார்கள்.

போர்த்துக்கல்லின் பின்கள வரிசை சற்று பலம் தான் என்ற போதிலும் ஜோஸ் மொரின்ஹோவின் வளர்ப்பான பெபேவும், ஃபபியோ கொயின்ராவோவும் சரியான சுடு தண்ணிகள். எந்த நேரத்தில் சிவப்பு மஞ்சள் அட்டைகள் வாங்கி ரொனால்டோவின் கழுத்தறுப்பார்கள் என்று சொல்லமுடியாது. ஆக மொத்தத்தில் பார்க்கா வேகமாகவோ , அதிரடியாகவோ , சுவாரசியமாகவோ இல்லாதபோதும், நுணுக்கத்தை பிரதானமாக கொண்ட  ஸ்பெயினின் டிகி-டக்கா ஆட்ட முறை போர்த்துக்கல்லுக்கு தலையிடியாக இருக்கப்போகிறது.



ஆனாலும் இந்த முறைமையில் போர்த்துக்கல் பெற்றுக்கொள்ளக்கூடிய அனுகூலங்களும் இல்லாமல் இல்லை. டிகி-டக்கா முறையில் மிட்ஃபீல்டர்களால் முன்கள வீரர்களுக்கு அனுப்பப்படும் பந்து எதிரணியால் சரியான தருணத்தில் தடுக்கப்பட்டால் ஸ்பெயினின் பின்கள வரிசைக்கும் மிட்ஃபீல்டுக்கும் நடுவில் பெரியதொரு வெற்றிடம் உருவாகும். காரணம் முறையில் பந்த அனுப்புவதற்காக ஸ்பெயினின் அத்தனை மிட்ஃபீல்டர்களும் போர்த்துக்கல்லின் கோல் கம்பத்தை மொய்த்திருப்பார்கள். எனவே ஸ்பெயினின் பின்களத்துக்கும் மிட்ஃபீல்டுக்கும் இடையில் இருக்கும் வெற்றிடத்தை பயன்படுத்தி கோல் போட வாய்ப்பு அதிகம். ரொனால்டோ, நானி ஆகிய சிறந்த வீரர்கள் முன்களத்தில் இருப்பதால் இந்த வாய்ப்பை சாதகமாக பயன் படுத்திக்கொள்ளலாம். புயோல் இல்லாத ஸ்பெயின் பின்கலம் கூட கொஞ்சம் பல்கீனம் தான். ஆனாலும் சாபி அலன்சோவை தாண்டுவது அவசியம். அது போக கடினமான பந்துகளை கோலாக்கும் ரொனால்டோ இலகுவான பந்துகளை கோட்டை விடாமலும் இருக்கவேண்டும்.

இரண்டு அணிகளின் ஆட்டமுறை மற்றும் திறமையான வீரர்கள் என்ற அடிப்படையில் பார்க்கும் போது இந்த போட்டியில் ஸ்பெயின் அணிவெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் அதிகம். வெற்றிவிகிதம் 70% ஆக இருக்கின்றது. # மூலம்  விக்கிலீக்ஸ்.

எதிர் பார்க்கும் கோல்கள் : ( 2-1) அல்லது ( 1-0) ஸ்பெயின் வெற்றி.


ஸ்பெயினுடனான போட்டிக்கு பின்னர் அண்ணன் JZ!


அடுத்து  ஜேர்மனி எதிர் இத்தாலி மோதவிருக்கும்இரண்டாவது அரையிறுதி போட்டியை (28/06/2012) பார்க்கலாம்.

காலிறுதியில் நான் எதிர்பார்த்ததைவிட மிரட்டலாக ஆடியது இத்தாலி அணி. நான் எனது முன்னைய பதிவில் இத்தாலி இன்னமும் தனது முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று கூறியிருந்தேன். அது அவர்களுக்கு புரிந்து விட்டதோ என்னமோ ?  # யாருப்பா அது என்னோட பதிவுகள இத்தாலி மொழில மொழிபேர்த்து வெளியிடுறது?. காலிறுதியில் இத்தாலியின் ஆட்டம் விறுவிறுப்பாக அதே நேரம் சிறப்பாகவும் இருந்தது. "கசானா, பிர்லோ, பொலேட்டலி , இகான்ஸியோ அபாற்டே ஆகியொரது ஆட்டம் பிரம்மிப்பு. இங்கிலாந்துடனான ஆட்டத்தின் போது பொலேட்டலிக்கு வந்த இலகுவான இரண்டு வாய்ப்புக்களை பொலேட்டலி தவறவிட்டாலும் அந்த பிழையை ஜேர்மனுடன் விடுவார் என்று எதிர்பார்க்க முடியாது. காரணம் மனிதர் மிரட்டுகிறார், வேகம் + லாவகம்! # தம்பி லாம் + போடெங் உங்களுக்கு நெறைய வேல இருக்குப்பா!

அதுபோல் ஜேர்மனது ஆட்டம் இன்னமும் குறைசொல்லமுடியாத ஆட்டம். மத்திய களத்தில் ஸ்டீன்ஸ்னேகர், ஓர்ஸில் ஆகியோரது ஆட்டம் கனகச்சிதம். லாம் தலைமையிலான பின்களம் கூடுதல் பலம். சமயத்தில் லாம் மற்றும் போட்டெங் ஆகியோர் விங்குகளாக வேலை செய்து முன்களவீரர்களுக்கு உதவி செய்கிறார்கள். அது ஜேர்மன் அணியின் சிறந்த ஒரு ஆட்டமுறை என்று சொல்லலாம்.

எனது ரசனைக்குரியது ஜேர்மனின் முன்களம் தான். கோமஸ், முல்லர், இப்போ புதுசா ஒரு பயல் செமத்தயா ஆடுறாம்பா மார்கோ றியூஸ்ன்னு ! பய ரொம்ப நல்லா வருவான். என்னம ஷொர்ட் அடிக்கிறான். கிரீஸ் கூட அவன் ஆடின ஆட்டம் கண்ணுக்குள்ளயே நிக்குது. அதிலும் அந்த நாலாவது கோல்!!! உலகத்தரம்!!!



லார்ஸ் பென்டர், லூகாஸ் பொடலொஸ்கி, சமி கதீரா , ஹும்மல்ஸ் ஆகியோரது ஆட்டம் இத்தாலிக்கு பெரும் சோதனை தான். இத்தாலி இஙிலாந்துடன் காலிறுதியில் ஆடிய ஆட்டம் ஆடினால் மட்டுமே ஜேர்மனுக்கு அழுத்தம் கொடுக்கமுடியும். காரணம் அசந்தால் ஆப்படிக்கும் பயலுகள் எல்லாம் ஜேர்மன் பக்கம் இருக்கானுவ. அட ! முப்பத்துநாலு வயசாகியும் இந்த கிளோஸ் பயல் என்னாமா ஆடுறாம்பா?

நான்கு காலிறுதிகளிலும் நான் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்தது பிரான்ஸ் எதிர் ஸ்பெயின் ஆட்டத்தை தான். ஆனால் அந்த போட்டியில் பிரான்ஸ் பல்ப்பு வாங்கியதால் ஸ்பெயின் இலகுவாக வென்றுவிட போட்டி புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..... என்று ஆகிப்போனது. ஆனால் மகா ரம்பமாக இருக்கும் என நான் நினைத்த இங்கிலாந்து எதிர் இத்தாலி போட்டி தான் காலிறுதிகளிலேயே பெஸ்ட் என்று சொல்வேன். அது போல் நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டிகளிலும் இத்தாலி எதிர் ஜேர்மனி போட்டிதான் சிறந்த , விறுவிறுப்பான போடியாக இருக்கும். # ஜேர்மன் செமயா ஆடுவாய்ங்கன்னு தெரியும், இங்கிலாந்துகூட நீங்க ஆடின ஆட்டத்த வச்சி , இப்பிடியொரு வார்த்தையை இந்த பயலுக முன்னாடி வார்த்தைய விட்டுட்டேன். எலேய்! இத்தாலி பயலுகளா கால வாரீடாதிங்கப்பா!



என்னதான் இருந்தாலும் இந்த நிமிடம் வரை இத்தாலி அணியைவிட ஜேர்மன் அணிபலமாகவே இருக்கிறது. அரையிறுதிய்ல் இத்தாலி அதிசயிக்கத்தக்கவகையில் ஆடினால் ஒழிய வெற்றி ஜேர்மனிக்கு தான்.

எதிர் பார்க்கும் கோல் : (2-1) , ( 3-1) ஜேர்மனி வெற்றி.

மார்கோ றியூஸ் !!!இவன் நல்லா வருவான்டா!


டிஸ்கி: போட்டியில் அணிகள் ஆடும் ஆட்டமுறைமை தொடர்பான ( டிகி-டக்கா வகையானது) அலசல்கள் எனது பார்வையில் மட்டுமே. நான் ஒன்றும் உதைபந்து ஆட்டமுறைமை அலசலில் நிபுணன் கிடையாது. நான் பார்பதை வைத்துக்கொண்டு , எனக்கு ஒவ்வொரு ஆட்ட முறையிலும் சாதகமாக , பாதகமாக படும் விடயங்களின் அடிப்படையில் எழுதுகிறேன். ஆக இது எனது அலசலே .

டிஸ்கி: தலைப்புக்கு பதிவுக்கும் என்ன நம்மந்தம்ன்னு பாகுறீங்களா? மறுபடியும் சொல்றேன் சம்மந்தம் இல்லம எதையும் சொல்லமாட்டான் இந்த பம்பல் உவ்வே சம்மந்தம்! அதாவது அரையிறுதியில் ஆடப்போகும் நாலு அணியிலிருந்து ரெண்டு அணி வெளியேறப்போவுது இல்ல! அது தான்.

Saturday, June 23, 2012

அமலா பால் ! அஞ்சலி தேவி ! எந்த ஃபிகர் ஒஸ்தி?

உன்னய போயி யாரென்னு கேட்டுட்டாரே எங்க தாத்தா!


எனக்கு இந்த அமலா பாலை ரொம்ப பிடிக்கும் என்பதைவிட , ஒரு ஈர்ப்பு என்று சொல்லலாம். அந்த காந்த கண்களும் , அவித்த இறால் போல் இல்லாமல் நம்மில் ஒருத்தி போல் அந்நியமில்லாமல் இருக்கும் அந்ததோலின் நிறமும் , பக்கத்துவீட்டு ஃபாரின் ஃபிகர்போல அந்த பரிட்சையமான முகமும் ரொம்பவே அழகு. அன்று ஒருநாள் நானும் எனது தாத்தாவும் உட்கார்ந்து டி.வி பார்த்துக்கொண்டு இருந்தோம். அப்போது "வேட்டை" படத்தில் வரும் "பப்பரப்பா..." பாடல் போய்க்கொண்டிருந்தது. பாடல் முடியும்வரைக்கும் பேசாமல் இருந்த தாத்தா பாடல் முடிந்ததும் "கடைசிவரைக்கும் ஹீரோயினை காட்டாமல் கூட ஆடுற பொண்னை காட்டியே பாட்ட முடிச்சிட்டானேப்பா" என்றார். எனக்கு வந்ததே கோபம், "தாத்தா அவர் தான் ஹீரோயின் " என்று அமலா பாலை சுட்டிக்காட்டி சொன்னேன். அவர் அதை ஏற்கும் படியாய் இல்லை. திருவள்ளுவர் முப்பாலில் அமலா பாலைப்பற்றி பாடாதது ஒன்றைத் தவிர வேறு என்ன குறை காணமுடியும் அமலா பாலிடம். நானும் முடிந்தளவு வாதிட்டு பார்த்தேன் , முடியல!


ஆனால் தாத்தாவின் பார்வை வேறுமாதிரி இருந்தது. அவருக்கு அவரது காலத்து கனவுக்கன்னியான அஞ்சலி தேவிதான் அழகி, பேரழகி , உலகழகி எல்லாமே. அஞ்சலா தேவியிலிருந்து அங்குலம் நகரவில்லை தாத்தா. யோசித்துப் பார்த்தேன், என்னதான் காஜல் அகர்வால், அமலா பால் என தேவைதைகளாக வலம் வந்தாலும் எமது தாத்தாவின் தலைமுறை அவர்களை அழகிகளாகஏற்க தயாராகவே இல்லை.


அதுபோல என்னதான் பேரழகிகளாகவே இருந்தாலும் அந்த கறுப்பு வெள்ளை திரையைத்தாண்டி எனது தாத்தா காலத்து கனவுக்கன்னிகளை என்னாலோ அல்லது எமது தலைமுறையாலோ ரசிக்கமுடிவதில்லை. ரசிக்க விருப்பமும் இல்லை! எமது தலைமுறை சமகாலத்தில் நிகழ்கின்ற மாற்றங்களை ஏற்றுக்கொண்டு பயணிக்க தயாராய் இருக்கின்றது, அது எமக்கு தேவையாகவும் விருப்பமாகவும் இருக்கிறது. ஆனால் எனது தாத்தாவின் தலைமுறையில் பலருக்கு தமது காலமே பொற்காலம்! அந்தக் காலத்திலிருந்து வெளிவர விருப்பமில்லை, இப்போதைய நடிகர்களோ அல்லது சினிமாவோ அவர்களது பார்வையில் வெறும் ஆடம்பரத்தையும், திறமையற்ற நடிக நடிகைகளைக் கொண்டிருக்கிறது என்பதே அவர்களது அனுமானம்.


இந்த நிலையில் நான் அஞ்சலி தேவியைப்பார்த்து "வாவ்வ்வ்வ்வ்வ்வ்.......... வட் எ ஃபிகர்?" என்று வாயைப்பொளந்தாலோ, அல்லது எனது தாத்தா தலைமுறை அமலா பாலைப்பார்த்து "என்ன பொண்ணுடா" என்று மெய்மறந்தாலோ எப்படி இருக்கும்? இந்த ஒரு தலைமுறை தாண்டிய ரசனையுணர்வை தந்தது சமீபத்தில் நான் பார்த்த "தி ஆர்டிஸ்ட்" திரைப்படம். பொதுவாக நான் எந்த படத்தின் விமர்சனமும் எழுதுவது கிடையாது. ( ஏன்னா எழுதத்தெரியாது) . ஏதாவது ஒரு படம் என்னை எந்தவகையிலாவது பாதித்தாலோ அல்லது எனது உணர்வுகளை தூண்டினாலோ ஒழிய ஒரு திரைப்படம் பற்றி நான் எழுதுவது கிடையாது. அந்தவகையில் நான் கடைசியும் முதலுமாக எழுதிய ஆங்கில பட விமர்சனம் "தி ரைற்". நம்ம JZ, குமரன் தம்பி (????) எல்லோரும் உலாவருகிற‌ இடத்தில நான் ஆங்கில படத்துக்கு விமர்சனம் எழுதினால் அப்புறம் அவய்ங்களுக்கு என்ன மரியாதை? ஆனாலும் இந்த படம் பாத்ததுக்கு அப்புறம் நானும் ஏதாவது இந்த படத்தை பத்தி விமர்சனம் சாரி... நாலு வரி வாந்தி எடுக்கலாம்னு நினைக்கிறேன். ஏம்பா JZ! கோவிச்சுகாத என்ன? உன் ரேஞ்சுக்கு என்னால முடியாதுன்னு எனக்கு தெரியும், ஆனாலும் நானும் ஏதாச்சும் ட்ரை பண்ணிட்டு போறனே!



எனக்கு தமிழில் கறுப்பு வெள்ளை படம் பார்க்கவே பிடிக்காது. அதிலும் பாதி புரியாத ஆங்கிலப்படத்தில் கறுப்பு வெள்ளையென்றால் பொண்ணு சிரிச்சிடும் என்பதற்காகவே அந்த பக்கமே போவது கிடையாது. எனது ஆங்கில ரசனை இப்படியிருக்க எதுவுமே பேசாத படம் என்றால் அந்தப் பக்கம் போவேன்னு நெனைக்கிறீங்க? சத்தம் வராது என்ற காரணத்துக்காகவே உலகப்புகழ் "சார்ளி சாப்ளின்" வீடியோக்களை பார்ப்பதே கிடையாது. இந்த நிலையில் தான் எனது நண்பன் விக்கியின் உபயத்தில் அவனது வீட்டில் இந்த "தி ஆர்டிஸ்" பார்க்ககிடைத்தது. இப்போது படத்துக்குள் போகலாம்.

எல்லாரும் சீட் பெல்ட்டை போடுங்கப்பா.........


பிரஞ்சு திரைப்படமான இந்த படத்தி இயக்குனர்  ஹசானாவிசியஸ், வார்னர் பிரதர்ஸ் இந்த படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். 2011 வெளியான இந்த திரைப்படம் அந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளில் பத்துபிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு ஐந்து விருதுகளை அதுவும் மிக முக்கியமான ஐந்து விருதுகளை வென்றிருக்கிறது. சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த ஆடைவடிவமைப்பாளர், சிறந்த பின்னணி இசை ஆகிய அதிமுக்கிய விருதுகளை அள்ளியிருக்கிறது இந்த ஆர்டிஸ்ட்.  இந்த "தி ஆர்டிஸ்ட் " படம் தான் சிறந்த படம் என்ற ஒஸ்கார் விருதை வெல்லும் முதலாவது பிரஞ்சு படம். அது போல் இந்த படத்தின் நாயகனான ஜேன் துயர்டன் தான் சிரந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதை வெல்லும் முதலாவது பிரஞ்சு நடிகராக இருக்கிறார். எனக்கொரு கவலை என்னவெனில் சிறந்த நடிகை விருதைக்கூட இந்த படத்தின் நாயகியான பெரனீஸ் பெஜோவுக்கு கொடுத்திருக்கலாம். தேர்ந்த நடிப்பு.


முதலில் படத்தின் பின்னணி பற்றி பார்த்துவிடலாம் . 1927க்கு முந்தைய காலகட்டத்தில் "பேசும் படங்கள்"  (சைலண்ட் மூவீஸ்) என்ற திரைப்படங்கள் தான் நடைமுறையில் இருந்தன. அதாவது கதாபாத்திரங்கள் பேசாது. தங்களது முகபாவனை, உடல் அசைவிகளின் மூலமே தங்களது உணர்வுகளை, தாங்கள் சொல்லவந்த விடயத்தை சொல்லியாகவேண்டும் என்ற சவாலான பணியை செய்துவந்த திரைப்படங்கள். இசை கூட எந்த திரையரங்கில் திரயிடுகிறார்களோ அந்த திரையரங்குகளில் நேரடியாக ( லைவ்வாக) வாசிப்பார்கள். இந்த விடயம் இந்த படத்தை பார்த்து தான் எனக்கு தெரியும்.

படத்தின் கதை இது தான் 1920களில் பிரபலமான ஹீரோவாக வலம் வருகிறார் ஜோர்ஜ் வலன்ரைன் ( ஜேன் துயர்டன்). கிட்டத்தட்ட தனிக்காட்டு ராஜாவாக புகழுடனும் செல்வத்துடனும் வலம் வருகிறார். செல்லுமிடமெல்லாம் விசிறிகள் கூட்டம், செல்வாக்கு. நம்ம சுப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு அண்ணனுக்கு புகழ். பொது இடமொன்றில் பேட்டி கொடுத்துக்கொன்டிருகையில் ஹீரோயின் பெப்பி மில்லரின் ( பெரனீஸ் பெஜோ) அறிமுகம் கிடைக்கிறது. அந்த இடத்தில் கொஞ்சம் கில்மாத்தனமாக ஒரு சம்பவம் நடந்துவிட ( ரொம்ப ஜோசிக்காதிங்க , ஜஸ்ட்டு ஒரு கிஸ்ஸு) மீட்டியாக்களில் இருவரும் கிசுகிசுக்கப்படுகின்றனர்.  சில நாட்களின் பின்னர் துணைநடிகையாக சினிமாவுக்குள் நுழையும் பெப்பி மில்லரோடு நம்ம ஹீரோ ஜோர்ஜுக்கு நட்பு மலர்கிறது. இருவரும் சேர்ந்து படங்களில் நடிக்கிறார்கள். நம்ம பசங்க சொல்லவது போல் ஜஸ்ட் நட்பாக இருந்த நட்பு காதலாக கனிந்து சிவந்து , வெடித்து, பழுத்து , பஞ்சாமிர்தமாகிறது. மில்லருக்கு ஜோர்ஜ் சினிமாவில் நடிக்க டிப்ஸ் எல்லாம் கொடுக்கிறார். அதிலும் பின்னாளில் பெப்பி மில்லர் பிரபலமாக காரணமாகவிருக்கும் "பியூட்டி டொட்" என்கின்ற உதட்டுக்கு மேல் ஒரு மச்சம் என்பதை செயற்கையாக வைத்துவிடுகிறார். ( போடா...! இதெல்லாம் நாங்க எங்க சிம்ரன் அக்கா கிட்டவே பாத்துட்டோம்)



பின் 1927இல் சினிமாவிலும் ஜோர்ஜ் வலன்டைன் வாழ்விலும் பெரும் மாற்றம் ஒன்று நடக்கிறது. தொழினுட்ப வளர்ச்சியால் சினிமாவில் ஒலியையும் சேர்த்து படம் தயாரிக்க படத்தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிபோட ஆரம்பிக்கின்றன. கிட்டத்தட்ட சைலண்ட் மூவிகளின் ஆட்டம் ஒரு முடிவுக்கு வருகின்ற காலப்பகுதி. வலன்டைனின் ஆஸ்தான படத்தயாரிப்பு நிறுவனமான கினோகிராஃப் ( கார்த்திக்கு ஸ்டூடியோ கிறீன் போல) இனிமேல் தாங்கள் சைலண்ட் மூவிகளை தயாரிப்பதில்லை என அறிவிக்கிறது. இதை ஏற்றுக்கொள்ளாத ஜோர்ஜ் "மக்கள் அதை விருப்ம மாட்டார்கள், அவர்களது விருப்பம் சைலண்ட் மூவிகள் தான்" என்று அதிருப்தியாகி கூறி அந்த நிறுவனத்தைவிட்டு வெளியேறுகிறார். அத்தோடு நிற்காமல் தனது சொந்த செலவில் ஒரு சைலண்ட் திரைப்படம் ஒன்றை தயாரிக்கவும் செய்கிறார். இந்த நிலையில் 1929களில் உலகில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு வலன்டைனும் பலியாகிறார். அவரது சொந்த தயாரிப்பு படம் வென்றால் மட்டுமே அவரது பொருளாதாரம் நிலைத்து இருக்கும். இல்லாவிட்டால் சோத்துக்கு சிங்கி என்ற நிலை! வலன்டைன் தனது தயாரிப்பில், தான் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் , பெப்பி மில்லர் நடிக்க கினொகிராஃப் தயாரிக்கும் முதலாவது ஒலி, ஒளி படம் வெளியாகும் நாளன்று வெளியாக இருக்கிறது.

இரண்டு படங்களும் வெளியாகின்றது. வலன்டைனுக்கு நமது மக்களை பற்றிய அறிவு குறைவு, பழைய ரொட்டி மேல் மிஞ்சிய மரக்கறிகளை போட்டு புதிய உணவு பிட்ஸா என்று கொடுத்தாலே பாய்ந்து பாய்ந்து வாய்க்குள் தள்ளுபவர்கள். உண்மையிலேயே புதிதாக ஒரு மாற்ற‌ம் வந்தால் விடுவார்களா என்ன? பெப்பி மில்லரின் படம் பிய்த்துக் கொண்டு போக வலன்டைனின் படம் "சகுனி" போல் காற்று வாங்க ஆரம்பிக்கிறது. ஒத்த படத்தில் தான் இதுவரை சேர்த்துவைத்திருந்த செல்வங்கள் புகழ் அத்தனையும் இழக்கிறார் வலன்டைன். உலகம் மாறி விட்டது என்று உணர்ந்தாலும் அந்த மாற்ரத்துக்குள் போகவிடாமல் அவரது பழமை விரும்பும் மனதும், சமுதாயத்தின் மேல் உள்ள கோபமும் தோற்று விட்டோமே என்ற தாழ்வு மனப்பான்மையும் தடுக்கின்றன. இந்நிலையில் வலன்டைனின் மனைவியும் அவரைவிட்டு பிரிந்து போய்விடுகிறார்.

சைலண்ட் மூவி என்ற வட்டத்தில் இருந்து வெளிவரமுடியாமல் தவிக்கிறார் வலன்டைன். 1927களில் படங்களில் ஒலி புகுத்தப்பட்டபோது சார்லி சாப்ளின் கூட " மௌனம் என்பது அழகானது , அதை உங்கள் ஒலிகளால் கெடுத்துவிடாதீர்கள்" என்று தனது பங்குக்கு புலம்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே மனநிலையில் தான் இருக்கிறார் வலன்டைனும்.

இந்த உலக மாற்றங்களாலும், தனது தோல்வியாலும் உடைந்து போகும் வலன்டைன் ரொம்பவே நொந்துபோகிறார். தனது ஆடைகள் உட்பட தனது சொத்துக்கள் அத்தனையும் விற்கிறார்.கிட்டத்தட்ட ஓட்டாண்டியாகிறார். தனது கடைசிபடம் வெளியாகி ஐந்துவருடங்களாகியும் சினிமாவிலிருந்து ஒதுங்கியே இருக்கிறார். இந்த காலப்பகுதியில் பெப்பி மில்லர் "மச்சக்கன்னியாக" உலகப்பிரபலம் ஆகிறார். அதாவது ஜோர் வலன்டைன் எந்தளவு பிரபலமாக இருந்தாரோ அந்தளவு பிரபலமடைகிறார் மில்லர். நம்ம ஏஞ்சலினா ஜீலி போல்!  அத்தனையோ சோதனைகளுக்கு மத்தியில் போராடிய வலன்டைன் ஒருகட்டத்தில் தற்கொலைக்கு முயன்று காப்பாற்ற‌ப்படுகிறார். பின்னர் மில்லரால் அவர் சீர்திருத்தப்பட்டாரா? புதிய மாற்றத்தை ஏற்றுக்கொண்டு ஒலி ஒளி கொண்ட நவீன படத்தில் நடித்தாரா என்பதே மீதி கதை.



1.       1. முதலில் இந்த 21ம் நூற்றாண்டில் , கிட்டத்தட்ட அழிந்துவிட்ட "பேசும் படம்" ஒன்றை கையில் எடுத்ததற்காகவே இயக்குனர் ஹசானாவிசியசுக்கு ஒரு சிலையே வைக்கலாம். காட்சிக்கு காட்சி இயக்குனர் கைவண்ணம். அந்தக்கால உடை, கட்டடங்கள், நடைஉடை பாவனை, வசன உச்சரிப்புக்கள் என்று மனிதர் ரொம்பவே மினக்கட்டிருக்கிறார். பாத்திரப்படைப்பு , காட்சியமைப்பு என்பன முதல் தரம். விருதுக்கு கேள்வியே இல்லாமல் தகுதியானவர்.



2. அடுத்து பாத்திர தெரிவுகள்!  ஜோர்ஜ் வலன்டைன் பாத்திரத்துகென்றே பிறந்தவர் போல துயர்டன், பெப்பி மில்லர் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் பெரனீஸ் பெஜோவும் கண்ணுக்குள் நிற்கிறார்கள். துயர்டனுடன் வரும் அவரது நாய் கூட "அடடே" போட வைக்கிறது. அந்த வாகன ஓட்டுனர், துயர்டனின் ஆஸ்தான இயக்குனராக வருபவர் என அத்தனை பேரும் பாத்திரங்களுடன் கன கச்சிதமாக பொருந்துகிறார்கள்.

3. ஒளிப்பதிவாளர் கியுலோம் ஷிஃப்மன் விருது கிடைக்காவிட்டாலும் தன் கமிரா மூலம் நம் கண்களுக்கு விருந்து வைக்கிறார். கறுப்பு வெள்ளை படத்தை கூட கலர் கலராய் காட்டியிருக்கிறார். அன்னி சோஃபி பியான், மிஷேல் ஆகியோரது படத்தொகுப்பு படத்தின் ஓட்டத்துக்கு பக்கபலம். இயக்குனர் ஹசானவிசியஸ் கூட படத்தொகுப்பில் பங்காற்றியிருக்கிறார் ( டைரக்டர் டச் என்றது இது தானா?) . இசையமைப்பாளர் லூடோவிச் போர்ஸ் நிச்சயம் விருதுக்கு உரியவர். 1927களில் வாழ்ந்த அனுபவத்தை தருகிறது இசை.


4. படத்தை தூக்கி நிறுத்துவது  துயர்டன், பெஜோ ஆகியோரது நடிப்பு. முதலில் துயர்டன்..........

* பேசமுடியாது, கத்தமுடியாது, பஞ்ச் அடிக்க முடியாது ஆனால் சொல்லவந்ததை சொல்லியாகவேண்டும், சிவாஜிகணேசனையும், கமலஹாசனையும் தவிர எமது நடிகர்களில் எவருக்காவது இந்த நிபந்தனைகளை சொன்னால் அடுத்த ஃபிளைட்டில் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். ஆனால் துயர்டன் மிரட்டியிருக்கிறார். ஆச்சரியமாகட்டும் சரி, நக்கலாகட்டும் சரி, குழப்பநிலையாகட்டும் சரி அவரது உணர்வுகளை முகம் பேசுகிறது. இமைகளை தூக்கி , வாயை ஒரு பக்கமாக சுழித்து அவர் காட்டும் முகபாவனைகளுக்கே நாலைந்து ஆஸ்கார் குடுங்கப்பா.......

*அறிமுக காட்சியில் மேடையில் தோன்றி அட்டகாசம் பண்ணும் காட்சிகள் அற்புதம், திரையரங்குக்கு வெளியே பேட்டி கொடுக்கும் போது காட்டும் நகைச்சுவை முகபாவம் பழுத்த நடிப்பு. 

* ஒரு காட்சியில் திரைக்கு பின்னாலிருந்து பெப்பி  மில்லர் ஆடுவார் , அவரது கால்கள் மட்டுமே வெளியே தெரியும் . அந்த கால்களின் நடன அசைவுகளை பின்பற்றி துயர்டன் ஆடும் இடமும், துயர்டனை கண்டவுடன் பெஜோ காட்டும் அதிசயம் கலந்த முகபாவமும் கவிதை. அதோடு இவற்றை கவனித்த இயக்குனர் , துயர்டனோடு இணைத்து கிசுகிசுக்கப்பட்ட பெண் இவள் தான் என் தெளிந்து காட்டு முகபாவம் செம...செம...செம......


* தனது படம் தோல்வியானவுடன் தொடர்ந்து வரும்காட்சிகளில் காட்டும் சோகமும், ஒரு கட்டத்தில் தனது வீடு தீப்பிடிக்கையில் தானும் மில்லரும் சேர்ந்து நடித்த படத்தின் பிரதியை தேடி அதை அடைந்ததும் , கட்டிப்பிடித்துக்கொண்டு சாயும் காட்சியும் அற்புதம்.

* அது போக துயர்டன் வரும் ஒவ்வொரு காட்சியும் நடிப்பு...நடிப்பு...நடிப்பு மட்டுமே......!


5.அடுத்து நாயகி பெஜோ! அந்த குறும்புத்தனமான நடிப்புக்கு எவளவும் கொடுக்கலாம். ( நீ சொல்லுவ, பணம் குடுக்கிறது தயாரிப்பளர், அவர் சொல்லணுமிடா). கதாபாத்திரத்துகு கனகச்சிதமான நடிப்பு.

*அறிமுக காட்சியில் துயர்டனை இடித்துவிட்டு மிரளும் போதும் சரி , தன்னையும் துயர்டனையும் இணைத்து பத்திரிக்கையில் கிசு கிசு வந்த பொழுது அதை படப்பிடிப்பு தளத்தின் காவலாளியிடம் பெருமையாக காட்டுகையில் அதை அவன் கவனிக்காமல் நகரும் போது தனது மூக்கு உடைந்துபோனதை சமாளிக்கும் போது காட்டும் முகபாவமாகட்டும் சரி அம்மணி வரும் காட்சி எங்கும் வியபித்து இருகிறார்.


நான் ரசித்து , படம் சோகமாக போனாலும் சிரித்த காட்சிகள்........

* தனது ஆஸ்தான படப்பிடிப்பு தளம் மூடப்பட்டதும் மில்லரின் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வரும் துயர்டனை வழியில் கண்டு பேசும் பெஜோ, துயர்டன் விடபெற்று செல்லும் போது விசில் அடித்து கூப்பிட்டு ஒரு நடனம் ஆடி காட்டுவார், அழகு...அழகு...அப்படியொரு அழகு!

*தனது வாகன சாரதியிடம் துயர்டன் கேட்பார் "உனக்கு நான் எத்தனை மாதங்கள் சம்பளம் தரவில்லை?" அதற்கு சாரதி "சுமார் ஒரு வருடம்" என்று சொல்லிவிட்டு அசால்டாக தனது வேலைகளை செய்துகொண்டிருப்பார். எதிர்பார்த்திராத அதே நேரம் துயர்டன் மீது அந்த சாரதி கொண்டிருக்கும் விசுவாசத்தை காட்டும் காட்சியமைப்பு , பிரமாதம்.




* பெஜோவின் கால்களை கவனித்து துயர்டன் ஆடும் காட்சி!

* துயர்டனுக்கு வாய்ப்பு தராவிட்டால் நான் உங்களது படத்தில் நடிக்க மாட்டேன் என்ற தொனியில் தனது பட இயக்குனரிடம் கூறுவார் பெஜோ! இயக்குனர் மௌனமாக இருக்க தொடர்ந்து சில பேசும் பெஜோ ஒரு கட்டத்தில் முகத்தையும் சிறு பிள்ளைகள் கோவிப்பது போல் வைத்துக்கொண்டு 'நான் உன்னை மிரட்டுகிறேன், அது உனக்கு புரிகிறதா" என்பாரே ! சிரித்து களைத்துவிட்டேன்.

ஒரு காட்சியில் துயர்டனின் மேலங்கிக்குள் தனது ஒரு கையை விட்டு ( மேலங்கி மட்டும் தனியாக மாட்டியிருக்கும், நோ துயர்டன்) தன்னை துயர்டன் அணைப்பது போல் பெஜோ ஃபீல் பண்ணும் ஒரு காட்சி, செம ரொமான்டிக்.

இப்படியாக படத்தில் நான் ரசித்த காட்சிகள் ஏராளம். படத்தை பார்த்து முடித்ததும் ஒரு கறுப்பு வெள்லை படத்தை , அதுவும் வசனமே இல்லாத படத்தை நேரம் போவதே தெரிமாமல் நான் பார்த்துக்கொண்டு இருந்தேனா என்று எனக்கெ ஆச்சரியம். இங்கு தான் நான் ஆரம்பத்தில் சொன்ன "அஞ்சலி தேவியை பார்த்து வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....." என்கிற சம்பவம் ஒத்துப் போகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்றொரு பழமொழி சொல்வார்கள். பழமைய கழித்து விட முடியாத நாயகனின் மனப்போராட்டத்தை தெள்ளத்தெளிவாக சொல்லியிருக்கிறது படம்.

என்னைக் கேட்டால் புதியன புகுதல் என்பதை ஏற்றுக்கொள்வேன் ஆனால் பழையன கழிதல் என்ற கருத்துக்கு சம்மதமாய் சாயமாட்டேன். காரணம் இந்த "தி ஆர்டிஸ்ட்" என்ற திரைப்படத்தை பொறுத்தவரை படத்தின் பாணி பழையது, படத்தின் போக்கு பழைய திரைப்படங்களின் போக்கை ஒத்தது ஆனாலும் அவற்றை கைவிடாமல் புதியனவற்றை புகுத்தி அதாவது புதிய தொழிநுட்பம், புதிய தொழிநுட்ப கருவிகள் என்பனவற்றை பயன்படுத்தி இதோ ஐந்து விருதுகளும் வென்று விட்டார்கள். ஆக நான் சொன்னது சரிதானே? புதியன புகுதல் நன்று பழையன கழிதல் நன்றன்று, காரணம் பழமைகள் எமது அடையாளம்.



டிஸ்கி 1 : டேய் ! வெள்ளக்காரன் புதுமையை புகுத்தி பழமையை மீழ கொண்டுவந்தான் அப்டீன்றதுக்காக தமிழ்நாட்டுல  யாராச்சும் "1960 காலத்து நடிகைக்கு பிகினி போட்டு துபாயில சாங் எடுக்கிறேன் சார்ன்னு" கெளம்பிடாதிங்கடா.....


டிஸ்கி 2 : எனக்கொரு சந்தேகம் இப்போதும் இதே பேசும் படம் தான் நடைமுறையில் இருந்திருந்தால் இந்த பஞ்ச் அடிப்பவர்கள், ஏய்...ஏய்...ஏய்..ஏய்.... என்று ரயில் விடுபவர்கள் எல்லோரும் எப்படி பொழப்பு பார்த்திருப்பார்கள்?


டிஸ்கி 3 : நண்பா JZ!  நீயி இந்த படத்துக்கு பதிவு போட்டுருப்பன்னு தெரியும், ஆனாலும் எனக்கு புடிச்சிருந்து அது தான் நானும் போட்டேன். தப்பா ஏதாச்சும் இருந்தா கால வாரிவுட்டிராத  நட்பு!




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...