உதைபந்து

Monday, July 30, 2012

பெத்த மகளை விற்கும் அப்பன்கள்!



சில நாட்களுக்கு முன்னர் சொந்த வேலையாக வவுனியாவுக்கு போயிருந்தேன். மதிய உணவுக்கு பின்னர் பல்லு குத்திக்கொண்டே ஒரு மரநிழலில் எனது நண்பனின்  வரவுக்காய் காத்துக்கொண்டிருந்தேன். அந்த மரத்தையொட்டி ஒரு தனியார் மருத்துவமனை. மருத்துவமனை என்பதைவிட ஒரு பெரிய சைஸ் கிளினிக் என்பது பொருத்தமானதாக இருக்கும். அது அரச மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவரின் சொந்த கிளினிக் தான் என்பதை அந்த மருத்துவரின் பெயருக்கு பின்னாலிருந்த பட்டங்ளும், அவரது தொழில் முறைக்கான பதாகைகளும் காட்டிக்கொடுத்தன. பொது வைத்தியசாலையில் இருக்க வேண்டிய நேரத்தில் , தனது  பிரத்தியேக கிளினிக்கில் கல்லா கட்டிகொன்டிருந்தார் அந்த வைத்தியர். நமக்கு ஏன் அந்த விவகாரம் எல்லாம்? முதல்வன் அர்ஜுன் வந்து அவருக்கு சஸ்பெண்ட் ஃபக்ஸ் அனுப்புவார் தானே? நான் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்? மீண்டும் சுகமாய் பல்குத்த தொடங்கினேன்.நான் நின்ற இடத்திலிருந்து அந்த கிளினிக்கின் வரவேற்பறைக்கு பெரிய தூரம் கிடையாது, துப்பினால் எச்சில் விழும் தூரம் தான். ஆக என்ன சொல்ல வருகிறேன் என்றால் அந்த அறைக்குள் நடக்கும் அத்தனையும் எனக்கு அப்பட்டமாய் தெரிகிறது! 


 பாடசாலை முடிந்து அத்தனை பேரும் வீடு போய்விட்டதால் எனது பார்வையை வீதியில் இருந்து ஒவ்வொரு கடைகடையாக உலாவ விடுகிறேன். கடைசியில் அந்த கிளினிக்கில் எனது கண் ஸ்தம்பித்து நிற்கிறது. அழகி! அழகி! பேரழகி! நாலைந்து பதிவுகளில் இறக்கி வைத்தாலும் தீர்ந்து போகாத  பேரழகை சுமக்கும் அழகோ அழகி! பத்தொன்பதில் இருந்து இருபத்தொரு வயதுக்குள் ஊசலாடும் வயது. பின்னிக் கட்டிய தலைமுடி, நீளமாய் நீலமாய் ஒரு பாவாடை , அதன் வர்ணத்துக்கு பொருந்தும் ஒரு டீ-ஷேர்ட் , கழுத்தில் ஒரு ஒற்றைவடச் சங்கிலி கையில் ஒரு மோதிரம் கூடவே  ஒரு கடிகாரம், காலில் ஒரு தோல் செருப்பு! மொத்தமாய் அளந்து முடித்தேன். அத்தனையும் கச்சிதமாய் அவளுக்காகவே தயாரிக்கப்பட்டது போல் இருந்தது. 


ஒரு ஐந்தாறு நிமிடங்கள் ஒரு தலையாய் எனது பார்வைகள் நீண்டுகொண்டே இருந்தது. "அடச்சே!என்ன ரெஸ்போன்ஸே கிடைக்கல" என்று சலித்துக்கூட பார்வையை வேறு பக்கம் திருப்பிவிட முடியாத அழகி! நாகரீகம் மாறாத பவ்வியமான அழகாக இருந்தாள். குடும்ப குத்துவிளக்கு என்பார்களே ! அதே தான்!! நெற்றியில் ஒரு பிளாஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அந்த காயத்துக்காகத்தான் கிளினிக் வந்திருக்க வேண்டும். முதன் முறையாக விக்கிலீக்ஸ் சொல்லாமல் நானாக உண்மையை ஊகித்துக்கொண்டேன். சில கணங்கள் கடந்து திடீரென ஒரு ஒளி ! மின்னல் கீற்றாய் என் கண்ணை ஊடறுத்தது! அத்தனை பெரிய ஒரு சோதி பிரவாகம், ஒளி கீற்று! கண்களை கூசியது! என்ன ? அவளும் என்னை பார்க்கிறாளா ? அது தான் இந்த ஒளியியல் மாற்றமா?? கண்ணை ஊடறுத்த ஒளியை கைகளை வைத்து மறைத்துக்கொண்டே சுற்றிவர பார்க்கிறேன். புதிதாய் ஒரு பல்சர் பைக், எவனோ அருகில் நிறுத்தியிருக்கிறான், அந்த கண்ணாடியில் சூரிய ஒளி பட்டுத் தான் என் கண் கூசியிருக்கிறது. சினிமாத்தனங்கள் அந்த இடத்திலேயே பொய்த்துப் போக மீண்டும் அவள் இருந்த இடம் பார்க்கிறேன். இப்போது அவள் என்னை பார்த்துக்கொண்டிருந்தாள்.


மீண்டும் ஒளி! சுற்றிப் பார்க்கிறேன். ஆனால் அந்த பல்சர் இப்போது அங்கே இல்லை! தொடர்ந்து என் முகத்தை நானே கண்ணாடியில் பார்க்க பலமுறை யோசிப்பேன். அப்படியாகப்பட்ட "அழகன்" என்னை ஒரு பேரழகி பார்க்கிறாளா? கனவா ?நிஜமா ? என்று அறிய கையை கிள்ளிப்பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை. என் கையில் விழுந்த காகத்தின் எச்சம்மும் அதன் மணமும் நான் இன்னமும் சொர்க்கம் போய்விடவில்லை என்பதை உறுதி செய்தது. நான் அந்த காக்கா எச்சம் துடைத்த தோரணைகண்டு "களுக்" என்று சிரித்தாள், காகத்துக்கு நன்றி சொல்லிக்கொண்டேன்! என்னை பார்த்து சிரித்த நேரத்தில் அவளது கையில் இருந்த குடை தவறி கீழே விழ , குடை எடுக்க அவள் குனிந்தாள், அப்போது தான் நான் இதுவரையில் வர்ணித்தும், கவனிக்காத ஒன்ற கவனித்தேன், அவளது கழுத்தின் கீழே தொங்கிக்கொண்டிருந்தது ஒற்றை வட சங்கிலி கிடையாது , அது அவளது தாலி! அதிர்ந்தே போனேன்! கிட்டத்தட்ட நெஞ்சிடி வந்து போனது!  எனது தவணைமுறை காதல் கருகிப்போனதால் மட்டும் அல்ல , இவளவு நேரமும் அடுத்தவன் மனைவியையா பார்த்துக்கொண்டிருந்தேன் என்று குறைப்பட்டு கொண்டது நெஞ்சம்!



அவளை மீண்டும் ஒரு முறை சரியாக உற்று கவனித்தேன்! நெற்றியில் ஒட்டியிருந்த பிளாஸ்ரருக்கு பின்னால் குங்குமம் ஒளிந்திருந்து எனக்கு சிவப்பாய் எரிந்து எச்சரிக்கை செய்தது.  ஏன் இந்த சிறுவயது திருமணம்? ( இப்போது இலங்கையின் வ்டக்கு சமூகங்களை பொறுத்தவரை பெண்களின் திருமணவயது சராசரியாக 23 அல்லது அதற்கு மேல் என்ற ரீதியில் மாறிவருவது குறிப்பிடத்தக்கது) என்று ஒரு கேள்வி வேறு என்மனதில்! அவளதுன்  கையை அப்போது தான் கவனித்தேன்! எழெட்டு வெட்டு காயங்கள், தளும்பாய் இருக்கின்றன! லேசாக புரிந்தது ! காதல் -> பெற்றோரின் எதிர்ப்பு ->  பிளேடால் கையறுத்து எதிர்ப்பு - > மசியாத பெற்றோர் -> காதலுடன் ஓடிப்போய் கல்யாணம்!! வரிவரியாக ஊகித்துக்கொண்டேன், மறுபடி விக்கிலீக்ஸ் துணையின்றி ஒரு உண்மை புரிந்தது. அப்படியானால் கல்யாணமான அந்த குடும்ப குத்துவிளக்கு என்னை பார்க்க காரணம் என்ன? அது அந்த காகம் செய்த வேலையால் தான் இருக்க வேண்டும். கண்ணை அவளிடம் இருந்து அகற்றி வேறிடம் பார்க்க முயற்சி செய்தேன்!


சிறிது நேரத்தின் பின் என் முதுக்குக்கு பின்னார் பார்வை ஒன்று ஊடுருவுவது போல ஒரு உள்ளுணர்வு. ( அல்லது அந்த அழகை மீண்டும் பார்க்கச் சொல்லி எனது மனது தானாகவே கிளப்பிய போலியான உள்ளுணர்வாகவும் இருக்கலாம் # சைக்காலஜி தெரிஞ்ச யாராச்சும் ... பிளீஸ்..........) உண்மை தான் அவள் என்னையே பார்க்கிறாள் ! அந்த பார்வை சாதாரண பார்வை, காதல் பார்வை என்ற எல்லைகளை தாண்டி ஒரு விரசம் கலந்த பார்வையாக என் மேல் படருகிறது. அவள் என்னை மேய்ந்த விதத்தில் நானே கூசிப்போனேன். ஒரு அழகி என்னை அப்படி விரசத்தோடு மேய்வதை என் வாலிபம் வரவேற்றாலும், எனக்குள் எப்போதும் இருக்கக்கூடிய கலாசார உணர்வாளனும், எம் குல பெண்களின் கற்பு நெறி தவறா நடத்தையின் மீது நம்பிக்கை கொண்ட ஒருவனும் , அந்த பெண்ணை குற்றவாளி கூண்டில் ஏற்றி விட்டார்கள். 


ஓடுகாலி என்று தொடங்கி சங்ககாலம் தொடக்கம் இந்த காலம் வரை இப்படியான பெண்களுக்கு உலகு வழங்கி வந்த அத்தனை வசைமொழிகளையும் அவர்கள் பாடி தீர்த்தார்கள். இத்தனைக்கும் என் வாலிபம் ஒன்றும் உத்தமனாய் நடந்து கொள்ளவில்லை, அவள் மீதே என் பார்வை இருந்தது. சிந்தனை என்னவென்னவெல்லாம் சிந்திக்க தொடங்கியது. பண்பாட்டை மீறிய அந்த பார்வையை என் உள்மனது வரவேற்பதாய் இல்லை!


சில நிமிட இடைவெளியில் அந்த கிளினிக்கில் மருத்துவர் அறையிலிருந்து ஒரு பெரியவர் வெளியே வந்தார் , அவளது தந்தையாக இருக்க வேண்டும். இவளும் "என்னப்பா சொன்னார்?"  என்றே எழுந்தாள் , பொய்யாகாத என் கணிப்புகள்தொடர்கிறது. அதே அறையிலிருந்து அவளது அப்பாவைவிட வயதில் மூத்த ஒருவர் வெளியே வந்தார், அவளது பெரியப்பாவாக இருக்க வேண்டும். செல்வச்செழிப்பாக இருந்தார், வந்ததும் வராததுமாக இவளது நெற்றியில் முத்தமிட்டார், இவள் வெறுப்பாய் நெழிந்தாள், எனக்கு தூக்கி வாரி போட்டது. "என்ன மானங்கெட்ட குடும்பம்டா இது?" பெரியப்பன் மகளை பொதுஇடத்தில் வைத்து இப்படி அணைத்து முத்தமிடுகிறானே" நான் சிந்தித்து முடிக்க முன்னமே முத்தமிட்டவன் , அவளது அப்பாவை "மாமா, வேன் வந்திட்டா, இவவுக்கு சாப்பாடு ஒத்துக்கலயாம் அது தான் சத்தியாம் ( வாந்தி) , உதுக்கு போய் அந்த கிழவி பேரனா, பேத்தியா எண்டு செக் பண்ணிட்டு வா மோனே எண்டு விசர்க் கதையெல்லாம் கதைக்குது, எங்களுக்கு வாழுறதுக்கு இன்னும் காலம் கிடக்கு அதுக்குள்ள கிழவிக்கு அவசரம், இல்லையா யாழி?" சொல்லிக்கொண்டே ஒரு சிரிப்புடன் மறுபடி முத்தம். 


எனக்கு அந்த மரமே முறிந்து தலையில் விழுந்துவிடும் போல் இருந்தது. மறுபடி அந்த காகம் பீச்சி நான் நரகத்தில் இல்லை என்று சொல்லக்கூடாத என்று இருந்தது. அந்த நாய்க்கு அவளது ( இப்போது யாழி!! அவன் பெயர் சொல்லித்தான் தெரியும்) அப்பாவைவிட வயது இரண்டு மூன்று அதிகம் இருக்கலாம். "எவ்ர்மார்டீனுக்கு " விளம்பரத்துக்கு வருபவன் போல் ஒரு தலை, அவனுக்கு இருந்தது தொப்பை என்று சொன்னால் தொப்பை வைத்திருப்பவர்கல் எல்லோரும் என்னோடு சண்டைக்கு வருவார்கள். அப்படியொரு வயிறு! தார் பூசிய  பவர்ஸ்ரார் போல் இருந்தான். இந்த பூதத்துடன் அவள் வாழப்போகும் காலப்பகுதியில் "ஃபூட் பொய்சன்" ஆனால் ஒழிய அவள் வாந்தி எடுக்க வேறு வழியே கிடையாது. இந்த லட்சணத்தில் அந்த அண்டா வாழுவதற்கு இன்னமும் காலம் இருப்பதாக கணக்கு போடுகிறது. அவளது விரசப்பார்வைக்கான அர்த்தம் லேசாய் எனக்கு புரிந்தது. பணத்தை அடித்து ஒரு இளம் பெண்ணின் வாழ்வை சூறையாடி இருக்கிறது அந்த கிழப் பெருச்சாளி!



எனக்கு அவன் மீது கூட அந்தளவு கோபம் இல்லை , காசைப்பார்த்ததும் வாயை பொளந்து கொண்டு பெத்த பெண்களை இப்படி பாழும் கிணத்தில் தள்ளும் அவளது அப்பன் போன்ற ஆட்களை ,நடு ரோட்டில் வைத்து அறுக்க மனது துடித்தது. "நீயெல்லாம் அவளுக்கு அப்பன் கிடையாதுடா.. நீ...." என்று நான் இழுக்கவும் , அந்த மாப்பிள்ளை பெருச்சாளி "மாமா" என்று கூப்பாடு போட்டது ! அதே .....  அதே தான் ..... ஃபிக்ஸ் பண்ணிக்கோங்க! எனது ஊகத்தில் இடையில் ஒரு மாற்றம்  காதல் -> பெற்றோரின் எதிர்ப்பு ->  பிளேடால் கையறுத்து எதிர்ப்பு - > மசியாத பெற்றோர் -> பணத்தால் அடித்த பெருச்சாளிக்கு பலவந்த கல்யாணம்! வாழ்கை வெறுத்தது! 


பார்த்துக்கொண்டேயிருக்கையில் ஒரு டொல்ஃபின் ரக வேன் வந்து நின்றது. எல்லோரும் ஏறினார்கள், புறப்பட்டு போக முன் இதுவரை பார்க்காத ஒரு புத் பார்வையை என் மீது எறிந்துவிட்டு மறைந்தாள், அந்த பார்வையில்  கலந்திருந்தது  சோகமா?  விரக்தியா?  வாழ்வியலோடு உள்ள கோபமா? எதுவும் புரியவில்லை. அந்த பார்வையில் இழையோடிய சோகம் என்னை என்னமோ செய்தது. எனக்குள் இருந்த அந்த கலாசார காவலனும், சமூக ஆர்வலனும் ஆளுக்கொரு ஐந்தடி கயிற்றை எடுத்துக்கொண்டு தூக்கில் தொங்க மரத்தை தேடி ஓடிப்போனார்கள். எப்போதும் நான் சரி என்று நம்பும் யதர்த்த மனிதன், அவளோடு பிணைந்துகிடக்கும் சோகத்தை நினைத்து அவனும் கவலைப்பட ஆரம்பித்தான். மனித உணர்வுகள் என்று வரும் போது பண்பாடு, நாகரீகம் , பழக்கவழக்கம் எல்லாம் எல்லை மீறுகிறது! மறுபடி அதை ஒப்புக்கொள்கிறேன்! 

டிஸ்கி : வெளிநாட்டு மாப்பிள்ளை என்பதற்காக அறுபது வயது கிழவனுக்கு இருபது வயது மகளை தாரை வார்த்தது, காணிக்காக நாளை சாகப்போறவனை மாப்பிள்ளையாக்கியது  என்று எத்தனையோ கதைகள் கேட்டறிந்து இருந்தாலும் , அந்த கதைகள் தராத சோகத்தை நான் கண்ணால் கண்ட அந்த சம்பவம் உணர்த்திவிட்டு சென்றது. இப்படியும் இருக்காங்கப்பா என்று கவலைப்பட மட்டுமே முடிந்தது!

Friday, July 27, 2012

சரவணன் மீனாட்சி சாந்திமுகூர்த்தமும் விஜய் டி.வியில் நேரடி ஒளிபரப்பாம்!




அப்புறம் கண்ணுங்களா! எல்லாரும் ரெடி ஆகியாச்சா, அதில பாருங்க இந்த சரவணன் மீனாட்சி கல்யாணத்துக்கு வாங்கன்னு எனக்கு இன்விஸ்டேஷன் குடுத்தாலும் குடுத்தாய்ங்க ஒரெ பரபரப்பா இருக்கு! என்ன பண்ரதுண்ணே தெரியல! பெரிய எடத்து கல்யாணம் ஆச்சே! அதனால ரொம்ப டீசெண்டா வேற உடுத்துக்கிட்டு போகணும், அது வேற இந்த விஜய் டி.வி காரய்ங்க எப்ப பாரு ஒரே புதுமையா புகுத்துவானுக. அதுலயும் இந்த தமிழ் தொலைக்காட்சிகளிலேயே அவனுக தான் முன்னோடிகள்னா பாத்துக்கோங்களேன். அமேரிக்கன் டி.வி ஷோக்களை பாத்துப்புட்டு இவனுக அப்புடியே பச்சையா கொப்பி அடிக்கிறானுகன்னு எவனாச்சும் சொன்னிங்கன்னா அப்புறம் காண்டயிருவன் ஆமா...... பொறாம புடிச்சவனுக! கொப்பி அடிக்கிறதும் எவ்ளோ கஷ்டம்னு இவய்ங்களுக்கு தெரியுமா என்ன? அது முக்கியம் கெடையாது, நாதாரித்தனம் பண்ணிக்கிட்டு இருந்தாலும் நாம தான் இப்போ நம்பர் வன்! புதுமை புயல்கள்! அந்த பட்டம் தான் முக்கியம் பாருங்க!

சரி !மேட்டருக்கு வந்திருவோம், நம்ம மாமன் மையன் சரவணாக்கும், அத்தை பொண்ணு மீனாட்சிக்கும் இன்னிக்கு கல்யாணம், அதுவும் மூணு மணிநேரமா நடக்கபோவுது. அதுலயும் பாருங்க டி.வில , பத்திரிக்கைல, அப்புறம் முட்டுசந்து, மூத்திர சந்து எல்லாத்திலயும் ஒட்டின போஸ்டர்களிலயும் "திருமணம் நடாத்த மக்கள் தீர்மானித்து இருப்பதால்"ன்னு  போட்டு எங்கள கௌவ்ரவ படுத்திட்டாய்ங்க‌, அதனால என்னதான் உயிர் போற‌ வேலயா இருந்தாலும் இந்த கல்யாணத்த முன் நின்னு நடத்திரதுன்ன முடிவில இருக்கேன். அதில பாருங்க இந்த சரவணன் மீனாட்சி சமாச்சாரம் இவ்ளோ நாளா டி.வில போய்க்கிட்டு இருந்திச்சில்லே , அந்த நிகழ்ச்சில வந்த பணத்தில அந்த நாடகம் பாத்த ஒவ்வொருத்தனோட வீட்டுக்கும் இலவச குடிநீர், பாடப்புஸ்தகம், அப்புறம் கொழந்தைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ், மருத்துவ செலவுக்கு பணம், அப்புறம் கஸ்டப்படுறவங்களுக்கு இலவச மளிகை சாமான்க‌ எல்லாம் வாங்கி குடுத்தாய்ங்க பாருங்க , அதனால தான் இந்த கல்யாணத்த எங்களோட அமோக ஆதரவில நடாத்திக் காட்டணும்கிற முடிவுக்கு வந்திருக்கோம்.

சில பேரு சொல்றாய்ங்க தங்களுக்கு அப்பிடி ஏதும் தரலன்னு சொல்லி, ஆனாலும் கூட‌ வீட்ல பண்டபாத்திரம் கழுவாம கெடந்தாலும், கொழந்தையோட மூத்திர துணி தொவைய்க்காம கெடந்தாலும் , வேலையால வந்த புருஷன் பட்டினி கெடந்தாலும் , கூரையே இடிஞ்சு பொடனில விழுந்தாலும் கூட , எட்டரலேர்ந்து பத்தர மணிவரைக்கும் எதயும் கணக்கே எடுக்காம கல்யாண வேலை செஞ்சே ஆகுவோம்னு ஜனங்கெல்லாம் ஆர்வமா நிக்குறத பாக்கும் போது அப்டியே எனக்கு கொமட்டீன்னு ......... சே..... ஆனந்த கண்ணீரா வருது!

சில பொறாமை புடிச்ச பதிவர்கள் மற்றும் மீடியாக்கள் சொல்லக்கூடும் , "விஜய் டி.வி ஜனங்களை புதுமை செய்கிறேம் என்ற‌ பெயரில் ஏமாற்றுகிறது " அப்டீன்னு. எங்களுக்கு அதுபத்தியெல்லாம் கவலயே கிடையாது, கண்ணுக்கு முன்னால கொலையே விழுந்தாலும் கல்யாணத்துக்கு போயே ஆகுவோம். இன்னொன்னும் சொன்னாய்ங்க , ஏதோ டி.ஆர்.பி ரேட்டிங் உயர்ந்தால் விஜய் டி.விக்கு நெறைய வருமானம் வருமாமே, அட வருமானம் வந்தா அவய்ங்க என்ன சுவிஸ் பாங்க்லயா போடப்போறாய்ங்க ? இலவச மின்சாரம், பள்ளிக்கூடம், மருத்துவமனைன்னு நமக்குத் தானே நல்லது செய்வாய்ங்க!?அட ! செய்யக்கூட வேணாமப்பா அந்த புள்ளைங்க நல்லா இருகட்டுமப்பா, போயி நாலு அட்சதைய போட்டுபுட்டு வந்திருவோம் ! அது தானே மொற!!!



கல்யாணம் என்னும் போது தான் நெனப்புக்கு வருது என்னோட மாமா ஒருத்தருக்கும் எனக்கும் ஆகவே ஆகாது , அவரோட மகளோட கல்யாணத்துக்கு நான் வரணும்னு அவரே என்னோட வீடு தேடிவந்து பத்திரிக்கை வச்சாரு, என்னய‌ விட இருபத்தி ஏழு வயசு மூத்தவரு, நான் செஞ்ச பிழைக்கு அவரே மன்னிப்பும் கேட்டாரு , அதுக்காக அவரோட வீட்டு கல்யாணத்துக்கு போயிர முடியுமா? என்னோட கெவ்ரவம் என்னாவுறது? ஆனாலும் பாருங்க சரவணன் மீனாட்சி கல்யாணம் ரொம்ப முக்கியம்! இத்தன பப்ளிசிட்டி பண்ணி கூப்பிட்டும் போகலன்னா என்னய அவய்ங்க மதிப்பாய்ங்களா?  இலங்கைல தமிழன் செத்துக்கிட்டு இருக்கும் போது மக்கள் தொலைக்காட்சி அதை கடுமையா எதிர்த்துக்கிட்டு இருந்தப்போ, எங்களோட புதுமைப்புயல் விஜய் டி.வி ஜோடி நெம்பர் வன் போட்டுக்கிட்டு இருந்திச்சி.... அத ஏதோ கொல குத்தமா இந்த பசங்க எல்லாரும் திட்டுறானுக, சரிப்பா ... என்ன தான் இருந்தாலும் "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னெயம் செய்துவிடுதல்" அப்டீங்கிறது தானே தமிழர் பண்பாடு! அதனால கட்டாயமா இந்த கல்யாணத்துக்கு போயே ஆவணும்!

நேத்தைக்கு துணிக்கடை போயிருந்தேன், வேற எதுக்கு எல்லாம் கல்யாணத்துக்கு துணி மணி வாங்கத்தான், அப்புடியே வர்ர வழியலதான் பாத்தேன் இந்த விடுதலை சிறுத்தை கட்சி காரய்ங்க ஒரு ஏழெட்டு பேரு எதுக்காகவோ சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கானுகளாம். நேத்தையோட ஏழாவது நாளாம், அவய்ங்கள பாக்கவே பாவமா இருந்திச்சி.... இவனுகளையும் பேசாம கல்யாணத்துக்கு கூப்பிட்டிருக்கலாம், பாவம் ஏழு நாளா சாப்பிடல இல்ல! வந்து கறிகஞ்சியோட சாப்பிடலாம் இல்ல! வீட்டுக்கு வந்தது வராததுமா எல்லா பேப்பரையும் பொரட்டினேன் , அந்த உண்ணா விரதம் பத்தி ஒரு பிட் நோட்டீஸ் கூட கெடையாது, எந்த பேப்பரை பாத்தாலும் நம்ம வீட்டு கல்யாணத்தபத்தி தான் இரே நியூசு போங்கள்! இணையத்தில் கூட பாத்துட்டேன், பிரபலமான சில இணையளங்களில் கூட இன்னிக்கு நடக்கப்போகும் கல்யாணத்த பத்தி தான் ஒரே பேச்சு, மனசு குளிர்ந்து போச்சு! என்ன இருந்தாலும் எங்க வீட்டு கல்யாணம் இல்லையா? இந்த மாதிரி  கல்யாணம் , மங்களகரமான  , முக்கியமான விசயங்கள பத்தி தான் மொதல்ல பேப்பரில போடணும், உண்ணாவிரதம், போராட்டம்ன்னு போட்டா நல்லாவா இருக்கும்? அவய்ங்க செத்துப்போனா ஒரு மூலைல‌ அப்புறமா போட்டுக்கலாம். நாம கூட  அப்புறமா போயி ஒரு மாலய வாங்கி போட்டுட்டு வரலாம். அட! அதுக்கும் இந்த கட்சிக்காரங்க அடங்கலன்னா நம்ம அண்ணன் கோபிநாத்த விட்டு "அநியாயமாக செத்துப்போன அப்பாவிகள்!!! யாருடைய அசமந்த போக்கு காரணம்? மீடியாவினதா இல்லை அரசாங்கதினுடையதா?ன்னு அடித்தொண்டைல கத்த வச்சி நீயா நானாவில் ஒரு புரோக்கிராம் பண்ணி சமூக அக்கறையை காட்டமுடியும் என்பதால், பேசாமல் வந்துவிட்டேன்.

இந்த கல்யாணத்துக்கு மாலை வாங்குறதுக்காக இன்னிக்கு பூக்கடைக்கு போயிருந்தேன். அப்பொ ரெண்டு பேரு பேசிக்கிட்டிருந்தானுக , யாரோ பள்ளிக்கூட கொழந்தையாம் பேரு ஸ்ருதியாம். ஸ்கூல் பஸ் ஓட்டையா இருந்ததனால கீழே விழுந்து செத்திருச்சாம், ஆபாச போஸ்டரை கண்டா கிழிக்கிறதுக்கு அணிதிரளும் இந்த சமூக அமைப்புகளும் , மாதர் சங்கங்களும் தாயுள்ளத்தோடு இந்த மேட்டருக்கு ஆர்ப்பாட்டம் நடத்தலன்னு " ரொம்ப கொதிப்பா பேசிக்கிட்டு இருந்தாய்ங்க ,  "அட போங்கட, மாதர் சங்க தலமைகள் எல்லாம் இப்போ நம்ம வீட்டு கல்யாணத்து ரிஷப்ஷன், அப்புறம் இன்னிக்கு நடக்கப்போற கல்யாணத்தில ரொம்ப பிஸியா இருக்காய்ங்க! கல்யாணம் முடிஞ்சு அப்புறம் சாந்தி முகூர்த்தமும் ஆனதுக்கு அப்புறமும், எங்களுக்கு அந்த கொழந்த ஞாபகம் வந்தா ஆர்ப்பாட்டம் பண்றத பத்தி யோசிக்கிறோம்"ன்னு சொல்ல தான் வாயெடுத்தேன், அப்புறம் ஏற்கனவே என்னோட ரெண்டு பல்லு ஆடிக்கிட்டு இருந்திச்சு, அவிய்ங்களோட முஷ்டி வேற பல்க்கா இருந்திச்சு மாலைய மட்டும் வாங்கிட்டு வீடு வந்துட்டேன்!



அது போக அந்த பஸ்ஸுக்கு அனுமதி குடுத்த ஆபிசருங்களுக்கு தண்டணை குடுக்கணுனெல்லாம் பேசிக்கிட்டு அலையிறாய்ங்க, இந்தியன் தாத்தா வந்து செய்ய வேண்டிய வேலை எல்லாம் எங்கள பண்ண சொன்னா நாங்க என்ன பண்றது? மொதல்ல எங்க வீட்டு பிரச்சினைய பாக்கலாம், நமக்கு இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கணும்! அம்புட்டுதேன், அதுக்கு தான் மாரியாத்தாவுக்கு நேத்தி வச்சிருக்கேன்.


எப்பவும் புதுமை பண்ணுற விஜய் டி.வி கல்யாணத்துக்கு அப்புறமா சாந்திமுகூர்த்தம் நடக்கிறதையும் லை டெலிகாஸ்ட் பண்ணுவாய்ங்களாம், அது போக சாந்தி முகூர்த்தம் நடக்கும் ரூமில் முதல் ரோவில் இருபது சீட்டு போட்டிருக்காம். வி.வி.ஐ.பி க்கள் நேரடியாக கண்டுகளிக்க இந்த ஏற்பாடாம். இந்த பதிவுக்ககவே எனக்கும் ஒரு சீட்டு தருவாய்ங்கன்னு நம்புறேன். விஜய். டி.வின்னாலே ஒரே புதுமை தான் போங்க,,,........


நேத்து வட நாட்லே ஒரு வெவசாயி 200 ரூபா கட்டாததனாலே , பொறந்து ஐஞ்சு நாளேயான அவரோட கொழந்தைய ஐ.சி.யூ விலேர்ந்து அப்புறப்படுத்தியிருக்காய்ங்க அந்த ஆஸ்பத்திரியோட டாக்டருங்க!  கொழந்த செத்து போச்சி!!!  கல்யாணத்துக்கு வேட்டி வாங்கின கடையில ஒருத்தர் சொல்லிக்கிட்டு இருந்தாரு. 200 ரூவா கட்ட வழி இல்லாதவன் எல்லாம் ஏன் புள்ள பெக்குறான்? எங்க விஜய் டி.வி கிட்ட காசு இருக்கு அவிய்ங்க  இப்புடி புரட்சிகரமா கல்யாணம் பண்ணுவாய்ங்க! இப்புடி பண்ணியே நாங்க தமிழ் தொலைக்காட்சிகளில் முதன்மையானவைய்ங்க ஆயிடுவோம்! இந்த இடத்தில் ஒன்றை சொல்லிக்கொள்ள ஆசப்படுறேன், அதாவது இந்த புதிய தலைமுறை டி.வி தான் தமிழ் டி.வி களில் முதன்மையா இருக்குன்னு சில பேரு பொரளிய கெளப்பின்னு அலையுறான், அதை நான் வன்மையா கண்டிக்கிறேன். இப்பிடியாக புரட்சிகரமாக கல்யாணம் நடாத்தும் எங்க விஜய் டி.வி தான் தமிழ் நாட்டின் உயர்ந்த டி.வி என்பதை எந்த கோயிலிலும் கற்பூரம் அடித்து சத்தியம் செய்ய நான் தயார்! 



சமுதாயத்தை பத்தி எங்களுக்கு கவல கெடையாது அதை பாலிமர் டி.வியும் , புதிய தலைமுறை டி.வி யும், மக்கள் தொலைக்காட்சியும் பாத்துக்கும், ஆனா விஜய் டி.வி தான் எப்பவும் நெம்பர் வன்! ஆமா.... பக்கத்து வீட்ல பிரச்சின, நாட்ல கொழப்பம்ன்னா அத இந்தியன் தாத்தா இல்லாங்காட்டி அந்நியன்னு எவனாவது வந்து தீர்த்து வச்சிடுவான், ஜனங்களாகிய எங்களுக்கு நாங்க வேல வெட்டிய விட்டிட்டு நடாத்துற எங்க வீட்டு கல்யாணம் தான் ரொம்ப முக்கியம்!

என்னோட கெட்டப்பு எப்புடி? பெனியன்+ஜட்டி+ சப்பாத்து + கழுத்தில டை!!! விஜய் டீவிக்கு ஈக்குவலா நானும் புதுமை செய்தாகணும் இல்ல! அது தான் அந்த கெட்டப்பு!!! விஜய் டி.வின்னா லே சும்மா அதிருதில்ல! சரிப்பா கல்யாணத்துக்கு எவ்ளோ மொய் வைக்கலாம்?


Thursday, July 26, 2012

மாசம் பூரா மனுச இறைச்சி! உண்மைச் சம்பவம்! Alive - சினிமா விமர்சனம்!






நான் பொதுவாக எந்த சினிமாக்களுக்கும் விமர்சனம் எழுதுவது கிடையாது, அந்த சினிமா எனது வாழ்வியலை பிரதிபலிக்கும் வரையில் அல்லது எனது மனதையோ எவ்விதத்திலேனும் பாதிக்காத வகையில். அப்படி பார்க்கப்போனால் இதுவரை நான்கு ஆங்கில படங்களுக்கு மட்டுமே விமர்சனம் எழுதியிருந்தேன். அது பதிவுலகம் கிட்டத்தட்ட ஏற்றுக்கொண்ட ஒரு விமர்சனமாக இருந்தது. கடைசியாக "பேட் மேன்" பார்த்து ,அது என்னை வேறு மாதிரி பாதித்துவிட்டதால் விமர்சனமும் வேறு மாதிரி ஆகிப் போனது சொந்தக் கதை சோகக்கதை! ஆனாலும் எனது "பேட் மேன்"  விமர்சனம் கண்டு, எனது விமர்சனத்தின் தரம் கண்டு , பதிவுலகில் ஆங்கிலப்படங்களுக்கு விமர்சனம் எழுதும் அப்பாட்டாக்கர்களான JZ ,"சினிமா சினிமா ராஜ்", ஹாலிவுட் ரசிகன்","உலக சினிமா ரசிகன்", டோஹா டாக்கீஸ் ஓனரு " எல்லாம் பயந்து போய் இருக்காங்களாம்,அடடா போட்டிக்கு ஒருத்தன் வந்துட்டானேன்னு! பயப்படாதிங்க பசங்களா! உங்க பொழப்ப கெடுத்துர மாட்டேன்! # நல்ல மனசு!! 

சரி இப்போ மேட்டருக்கு வாரேன்! அப்போ எனக்கு ஒரு பதினஞ்சு வயசு இருக்கும். எச்.பி.ஓ'ல (H.B.O) மிட் நைட்ல "அந்த" மாதிரி படங்கள் போடுவாங்க என்று ப்ள்ளிக்கூடத்தில மதியான பிரேயர் நேரத்தில் நண்பன் ஒருவன் சொன்னான் என்பதற்காக சாமம் சாமமாக "ஓம்! எச்.பி.ஓ சுவாகா " என்று கிடக்க ஆரம்பித்த காலம். # இன்னிக்கு வரைக்கும் "அந்த" மாதிரி ஒரு காட்சி வரவில்லை என்பதால் நண்பனுடன் ஏழு வருஷமா அன்னம் தண்ணி பொழங்கிறது இல்லங்கிறது வேற கதை!

அப்படி நாளொரு எச்.பி.ஓவும் பொழுதொரு எச்.பி.ஓ வுமாக போய்க்கொண்டிருந்த எனது கலைபயணத்தில் ஒரு நாள் "அலைவ் (Alive)"என்ற சினிமாவை பார்க்க நேர்ந்தது. குளிரும், மலையும், பனியும் பனி சார்ந்த இடமும் என்பதால் , நண்பன் சொன்ன "அந்த" படமாக இருக்கலாம் என்று அந்த அர்த்த சாமத்திலும் விழித்திருந்து பார்க்க தொடங்கினேன். படம் பாதிகூட முடியாத நிலை , என்னையறியாமல் தூங்கி போனேன். விடிய எழுந்தால் படத்தில் ஒரு காட்சி கூட ஞாபகம் இல்லை. .... அப்புறம் சைக்கிளை எடுத்து சுற்றினேன் எனக்கு இருபத்தியிரண்டு வயசாகிவிட்டது!

இப்போ இருபத்தியிரண்டு வயசான நான் , எச்.பி.ஓ தேவைப்படாத நான் சில நாட்களுக்கு முன்னர் மறுபடி இந்த படத்தை பார்க்க நேர்ந்தது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது என்பதால் இந்த படத்தை பார்க்கவில்லை! ஏழு வருஷத்துக்கு முன்னர் தவறவிட்ட படம் என்பதால் பார்க்க ஆரம்பித்தேன். படம் ! தொடங்கியது! ஓடியது! முடிந்தது! இந்த படம் தொடர்பில் இந்த விமர்சனத்தை நான் எழுத பிரதான காரணம் என்னவெனில் "மனிதன் ஒரு விலங்கு" என்று நான் உறுதியாக நம்புவதையும், தனது வாழ்க்கை என்று வரும் போது மனித குலம் , பாசம், நாகரீகம், பண்பாடு, பழக்கவழக்கம் என்பனவற்றை மறந்துவிட்டு தனது உயிர்வாழ்தலில் மட்டும் கவனம் கொள்ளும் ஒரு கற்கால வாழ்க்கை முறைக்கு போகும் என்று நான் விசுவசிப்பதையும் இந்த படம் உறுதி செய்திருப்பது தான். நான் இப்படி எழுதியதை பார்த்ததும் "இந்த படம் ஏதோ ஹனிபல் ஹொலோகாஸ்ட்  ( Cannibal Holocaust)" ரேஞ்சில் , மனிதை ஒரு மிருக ரேஞ்சில் வர்ணனை செய்திருக்கிறது என எண்ணிவிடாதீர்கள். படத்தில் எதுவும் தப்பாக காட்டப்படவில்லை, நாம் ஏற்க தயங்கும் யதார்த்தை காட்டியிருக்கிறார்கள். மேலதிக அலசலுக்கு முன்னர் படத்தின் கதையை பார்த்துவிடலாம்! 

உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாக கொண்டு 1974இல் வெளியான பியர்ஸ் போல் றீட் எழுதிய "அலைவ்: த ஸ்டோரி ஒஃப் த அந்தீஸ் செவைவர்ஸ்" என்ற நூலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு 1993இல் வெளியான படம் தான் "அலைவ்".

1972 ஒக்டோபர் 13 !  உருகுவே விமானப்படை விமானம் 571 ,  உருகுவே  றக்பி வீரர்களை சுமந்து கொண்டு பறக்கிறது, அந்தீஸ் மலைத்தொடரை நெருங்குகையில் சீரற்ற காலைநிலை காரணமாக விமானம் அந்த மலைத்தொடரிலேயே விழுந்து நொருங்கிவிடுகின்றது. ஆரம்ப கட்ட பதறல்கள், கூச்சல் ,குழப்பம், உடனடியாக மீட்டப்படுவோம் என்ற நம்பிக்கை எல்லாம் முடிந்து ஓய்ந்து போன பிறகு வாழ்க்கை போராட்டம் ஆரம்பிக்கிறது. எப்போது வீடு போவோம் என்று தெரியாது , தெரியாத அந்த நாள் வரைக்கும் உயிரோடு இருந்தாக வேண்டும். தலைவர்கள் உருவாவதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் என்பார்கள். அந்த சூழ் நிலையில் கதாநாயகன் என சொல்லப்படக்கூடிய ஒருவன் ( எதன் ஹவ்க் #ஹீரோயிசம் என்று இல்லாததால் அப்படி சொல்கிறேன்) அந்த இக்கட்டான சூழ்நிலையில் அந்த குழுவுக்கு தலைமையேற்கின்றான்.



உடைந்து போன விமானத்தின் எச்சங்களையும், உடமைகளையும் கொண்டு ஒரு தங்குமிடம் அமைக்கப்படுகிறது, மீதமாக இருந்த சில சொக்லேட் துண்டுகளையும், ஒரு வைன் போத்தலையும் கொண்டு , ஒரு நாளைக்கு ஒருவருக்கு ஒரு துண்டு சொக்லேட்டும் ஒரு மூடி வைனும் என்ற விகிதத்தில் உணவு வழங்கப்படுகிறது. உணவுக்கு தட்டுப்பாடான நிலை, சீரற்ற காலநிலை, நாளுக்கு ஒருவராக சாகும் காயப்பட்டவர்கள் என நிலைமை உக்கிரமாகிறது. இந்த நிலையில் அவர்கள் விபத்துக்கு உள்ளான இடத்துக்கு மேலே ஒரு மீட்பு விமானம் பறப்பதை பாதிக்கப்பட்ட குழு பார்க்கிறது , மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறது. ஆனால் பனிமூட்டம் காரணமாக அந்த மீட்பு விமானத்துக்கு இவர்கள் இருப்பது தெரியாமல் போய்விடவே அவர்கள் திரும்பிச்செல்கிறார்கள். இது தெரியாத அந்த குழுவில் இருந்த கோபிநாத் போன்ற ஒரு சாப்பாட்டு ராமனும் , JZ போன்ற ஒரு குடிகாரனும் சேர்ந்து வெற்றியை கொண்டாடுகிறோம் பேர்வழியென்று மீதமிருந்த சொக்லேட்டையும், வைனையும் தீர்த்துவிடுகிறார்கள். இருந்த ஒரேயொரு நம்பிக்கையும் காலி!



மேலும் சாவு, பசி, பட்டினி! இந்த நிலையில் தான் உயிர் வாழ போராடும் அந்த குழு, இறந்தவர்களின் உடலை தின்று பசியாற முடிவுசெய்கிறது. சிலரின் எதிர்ப்போடும் பசித்திருந்த பலரின் ஒப்புதலோடும் அந்த குழுவில் உயிருடன் இருக்கும் ஒரிவரின் , இறந்து போன தங்கையின் உடலை உண்கிறார்கள் குழுவினர். முதலில் ஒத்துழைக்காத ஹீரோ உள்ளிட்ட சிலரும் நிலமை உணர்ந்து ஒப்புக்கொள்கிறார்கள். சில நாட்களின் பின் நான் இறந்தால் எனது உடலையும் நீங்கள் உண்ணலாம் என்ற இறுதிமொழியோடு ஹீரோவும் இறந்து போகிறார்.


 மீண்டும் சில காலநிலை சீரின்மை, மீண்டும் போராட்டம் என அல்லல்படும் குழு மூன்று பேரை தப்பித்து போகும் வழி அறிந்துவர அனுப்பி வைக்கின்றது. பல போராட்டங்கள் ,தோல்விகளுக்கு பின்னர் அவர்கள் புறப்பட்ட பனிரெண்டாம் நாள் அந்த இரண்டு பேருக்கு ( மூன்று பேரில் ஒருவர் இடையில் திரும்பிவிடுவார்) வெளிஉலக தொடர்பு கிடைக்கிறது. பின் என்ன ? மீட்பு குழு வருகிறது , எஞ்சியிருந்தோரை மீட்கிறது. விமானம் விபத்துக்குளாகி கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பின்னர் அந்த குழு மீட்கப்படுகிறது. இந்த விபத்திலும் , பின் தொடர் நிகழ்வுகளிலும் 29பேர் இறந்திருக்கிறார்கள், பதினாறு பேர் மீட்கப்பட்டார்கள். அவர்கள் ஞாபகமாக சம்பவ‌ இட‌த்திலிருந்து அரைமைல் தொலைவில் ஒரு சிலுவை நாட்டப்படு இருக்கிறது.


முதலில் படத்தில் எனக்கு பிடித்த விடயங்கள், முதல் விடையமே ஒரு "செவைவல் மூவி ( Survival Movie ) என்பது தான். போராட்டங்களுக்கு மத்தியில் ஒரு மனிதன் ஜெயிப்பது என்பது எப்போதும் சுவாரசியமே! அது போக சில காட்சிகள் என் மனதில் இன்னமும் இருக்கிறது........



* முதன் முதலாக மனித இறச்சியை அனைவரும் உண்ண தயங்கி நிற்கையில் , அந்த திட்டத்தை முன்மொழிந்தவர் முதல் ஆளாய் சென்று , ஒரு தயக்கத்தோடு தசையை வெட்டி , வெறுப்போடு, உயிர் வாழவேண்டுமே என்ற நிர்ப்பந்தத்தில் அருவருப்பாய் அந்த இறைச்சியை உண்ணும் காட்சி!

* தனது தங்கையின் உடலை தின்று விட்டார்கள் என்று கோபப்படும் அண்ணன், பின்னர் நிலைமையை உணர்ந்து அழுகையுடன் சமாதானம் ஆவது.

* மனித தசை உண்ணத்தொடங்கிய முதல் சில நாட்களில் அனைவரது கைகளிலும் சிறு சிறு துண்டுகளாய் இருக்கும் மனித தசை, நாட்கள் கடந்ததும் பெரிய துண்டங்களாய் அவர்கள் கைகளிலும் , பயணப்பைகளிலும் இருக்கும். அந்த குழுவில் உள்லவர்கள் மனித தசை உண்பதற்கு பழக்கப்பட்டு போனார்கள் என்பதை இந்த காட்சி அழகாக காட்டியிருக்கும்.

* அடுக்கப்பட்டிருக்கும்  பிணங்கள் முதலில் ( தசை உண்ணப்படுவதற்கு முன்பு) ஒழுங்காக இருக்கும், அவர்கள் தசையை உண்ண ஆரம்பித்த பிறகு படிப்படியாக அந்த உடலம் குறைவடைவது காட்சிகளின் பின்புலத்தில் காட்டப்படும். நாட்கள் நகர்ந்து போவதையும், அந்த குழுவினர் மனித இறைச்சி உண்பதற்கு பழக்கப்பட்டு போனதையும் காட்ட சிறந்த ஒரு காட்சியமைப்பு!

* வசந்தகாலம் வந்ததையுணர்த்த விமானத்தின் ஓட்டைவழி ஊடுரும் வெளிச்சமும் , அதனைத்தொடர்ந்த காட்சியமைப்பும்.

நெஞ்சையுலுக்கும் இப்படியான ஒரு உண்மைக்கதையை கதையை வைத்துக்கொண்டு இயக்குனர் சிக்சர் அடிக்கவேண்டிய இடத்தில் தட்டுத்தடுமாறி சிங்கிள் தான் எடுத்திருக்கிறார் என்று தான் சொல்லுவேன். படத்தின் இயக்குனர் "ஃபிராங் மார்ஷல்" !!! உலகபுகழ் வாய்ந்த "இண்டியானா ஜோன்ஸ்", த கியுரியஸ் கேஸ் ஒஃப் பெஞ்ஞ‌மின் பட்டன்", "த சிக்ஸ்த் சென்ஸ்", "பக் ரூ த ஃபியூச்சர்", "த கலர் பேர்பிள்" ஆகிய திரைப்படங்களின் தயாரிப்பாளர் ஆவார்.



1968இலிருந்து பதினேழு படங்களை தயாரித்த பிறகு 1990இல் "அரக்னோஃபோபியா"  என்ற காமடி திரில்லர் படத்தை எடுத்து அது கொஞ்சம் வரவேற்பை பெற்றதும், இந்த படத்தை கையில் எடுத்திருக்கிறார் என நினைக்கின்றேன். இப்படியொரு பதறவைக்கும் உண்மைக்கதையானது பார்வையாளன் மனதில் அதே உணர்வோடு ஒட்டமறுப்பதற்கு முழுப்பொறுப்பு இயக்குனரே கூற வேண்டும். ஒரு உண்மைச்சம்பவத்தை யாரோ சொல்ல , அதை ஒரு சம்பவமாக கேட்டறியும் மனநிலை தான் இந்த படத்தை பார்க்கும் போது வருகிறதே ஒழிய , அந்த விபத்துக்குள்ளான மாந்தரின் மனநிலைக்கு எம்மை இழுத்து செல்ல இயக்குனர் ஏதோ தவறியிருக்கிறார்.


மனிதன் மனைதனின் இறைச்சியை உண்டு ,உயிர் வாழ்வது தான் உயிர் வாழும் போராட்டத்தில் உச்சக்கட்ட அவலமாக இருக்க வேண்டும், ஆனால் அப்படியான ஒரு கதை கிடைத்தும் அந்த அழுத்தத்தை எமது மனதில் பதிய வைக்கும் முயற்சியில் இயக்குனர் தோற்றுவிட்டர் என்றே சொல்வேன். முதன் முதலில் அந்த குழு மனித இறைச்சி உண்ண தொடங்கும் போது , ஒரு அழுத்தத்தோடு அந்த காட்சியும் , படமும் பயணிக்கப்போகிறது என்று நாம் கணக்கு பண்ணினால், அடுத்த சில நிமிடங்களில் அந்த அழுத்தம் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......... !!! விமானம் விபத்துக்குளாகி சொக்லேட் காலியாகும் வரை விறுவிறுப்பாகவும் , படக்...படக்... மனதுடனும் நகரும் திரைக்கதை , அதன் பிறகு மகா மட்டம்... !!! பின்பாதியில் படத்தொகுப்பு  யப்பா...... நத்தை வேகம்! அந்த உயிர் வழும் நிமிடங்களை பதபதைப்போடு காட்டவேண்டிய படத்தொகுப்பு , சில வாரங்கள் கழிந்துபோன பிறகு அவர்கள் ஏதோ பிக்னிக் வந்தவர்கள் போல ஒரு உணர்வை தரும்படி இருக்கிறது.

ஃபிளைட்ட கெளப்பியாச்சு, விழுத்தியாச்சு, சாக்லெட் தீர்ந்து போச்சு, நரமாமிசம் தின்னாச்சு! அப்புறம் என்ன செய்றது? என்று யோசித்துவிட்டு இயக்குனர் படத்தை இழுத்திருக்கிறாரோ தெரியவில்லை! தனி மனிதானக , சுற்றவர உணவு இருக்கின்ற , மோசமான காலநிலை இல்லாத ஒரு இடத்தில் மாட்டிக்கொள்ளும் ஒருவனது போராட்டத்தை கூட‌ "காஸ்ட் எவே" திரைப்படம் மிக அழகாக பதிவு செய்து இருக்கும். அந்த பாத்திரமாகவே நாம் வாழ்ந்த ஒரு உணர்வையும் அந்த திரைப்படம் தந்திருக்கும், இவளவு ஏன்? அந்த 'வில்சன்" பந்து தொலைந்தபோது ஒரு நெருங்கிய நண்பனை தொலைத்ததாக நான் பதறியதும் உண்மை! அப்படியிருக்கையில் , நரமாமிசம் உண்டு உயிர் வாழ்தல் என்பதை எப்படி ஒரு அழுத்தத்தோடு காட்டியிருக்க வேண்டும்???? 


மெல்கிப்சன், கம்ரூன் கூட வேண்டாம், நம்ம பிரபு சாலமன், பாலா, வசந்தபாலன் வகையறாக்களிடம் கொடுத்திருந்தால் கூட பின்னி பெடல் எடுத்திருப்பார்கள் என்பது எனது கருத்து! ஃபிராங்க் மார்ஷலது இயக்கத்தை விட டிஸ்கவரியின் சர்வைவல் நிகழ்ச்சியான "ஐ ஷுடுண்ட் பீ அலைவ்" நிகழ்ச்சியின் இயக்கம் பரபரப்பாக இருக்கும். நான் பார்த்த சர்வைவல் படங்களில் மிக மோசமானது "127 ஹவர்ஸ்" , அடுத்து மோசமான ஒரு இயக்கத்தால், நல்ல கதையை கொண்ட இந்த படமும் அந்த லிஸ்டில் சேர்ந்திருக்கிறது.

சரி ! இந்த படத்தின் இயக்கத்தை இவளவு கழுவி ஊத்தியும் ஏன் அதை பற்றியே எழுதுகிறேன் என்றால், இந்த படத்தின் கதையும் அதன் அடக்கமும் தான்! இனி தனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று தெரிந்துவிட்டால், மனிதனின் மனம் நாகரீகங்களையும், பண்பாட்டையும் , பாசத்தையும், பழக்கவழக்கங்களையும் மீறுகிறது. அது பிழை சொல்லமுடியாதது, அது தான் இயற்கையின் நியதி. என்னதான் மனித குலம் ஆடை உடுத்துக்கொன்டு , செவ்வாயின் கதவுகளுக்கு சாவி தேடினாலும் தனக்கென்று ஆபத்தொன்று வரும் போது மனிதன் என்ற விலங்கு எல்லைகளை தாண்டுவதற்கு பயப்படாது, தயங்காது. அதுவே இயற்கையின் நியதியும் கூட ! அதில் பிழை ஏதும் இல்லை! அது நியதியும் கூட! அந்த கருத்தோடு நான் ஒத்துப்போவதால் தான் இந்த படம் கூட என்னை பாதித்தது, நான் உணர்ந்த உண்மையை மீண்டும் உணர்த்தியதால் சில பலகீனங்கள் இருந்தும் படம் எனது மனதில் ஆழமாக பதிந்துவிட்டது!



நீ இதை அமோதிக்கிறாயா? என்னடா! உனக்கு இப்படியொரு நிலை வந்தால் நீ மனித இறைச்சி உண்பாயா என்று கேட்கிறீர்களா? நீங்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை "ஆம்" என்பதே எனது பதில், அதுவே யதார்த்தமும். "உவ்வே" என்கிறீர்களா? கைகளில் பீட்சா இருக்கையில் பழையசோறு "உவ்வே" தான்! எனது கூற்றுத்தான் யதார்த்தம் என நீங்கள் உணர்ந்து கொள்ள இப்படியொரு சந்தர்ப்பம் உங்களுக்கு வராமல் இருக்கவே பிரார்த்திக்கிறேன், உங்களைப் பொறுத்தவரை நான் "உவ்வே"யாக இருந்துவிட்டு போனாலும் பரவாயில்லை!

டிஸ்கி: பதிவு நீளம்! மன்னிச்சூ! நண்பா JZ! ராஜ் அண்ணா, டோஹா ஓனரு, குமரன் தம்பி, ஹாலிவூட் ரசிகரே, உலக சினிமா ரசிகரே! உங்கள் அளவுக்கு என்னால் உலக சினிமா விமர்சனம் பண்ண முடியாது தான், ஏதோ உளறியிருக்கிறேன், ஏதும் பிழையிருந்தால் மன்னிச்சூ!


குறிப்பு : இந்த பதிவை பதிவிட்ட போது "உருகுவே" என்ற வார்த்தைக்கு பதில் "உக்ரேன்" என்று பதிவிட்டிருந்தேன். தவறை சுட்டிக்காட்டிய திரு . யோகன் ( பாரிஸ்) அவர்களுக்கு எனது நன்றிகள். அவர் சுட்டிக்காட்டிய தவறு சரிசெய்யப்பட்டதன் பின் இந்த பதிவு ( 31/07/2012) மீள் பதிவு செய்யப்பட்டுள்ளது.



Monday, July 23, 2012

வெள்ளைக்காரனுக்கு மட்டுமே பல்லக்கு தூக்கும் தமிழ் பதிவர்கள்! "பேட் மேன்" விமர்சனம்!


படத்தில் பேட் மேன்!





இப்போ எந்த தமிழ் திரட்டியை திருப்பினாலும் ஆளாளுக்கு பேட் மேன் விமர்சனம் போட்டு அசத்துறாய்ங்க! அவனவன் ஹிட்ஸ் சும்மா எகிறுது! ஹிட்ஸ் எல்லாம் நமக்கு ஒரு பெரிய பொருட்டே கிடையாது என்றாலும் , ஃபேஸ்புக்கில் நண்பர் தினகரன் ரேணுகா ஒரு வேண்டு கோளை முன்வைத்தார்! அதாவது எனது பாணியில் பேட் மேன் விமர்சனம் எழுத வேண்டுமென்று. ஐம்பது பதிவு தான் எழுதியிருக்கேன், ஆனாலும் இன்னும் எனது பாணி என்னவென்று எனக்கே தெரியாது ! இருந்தாலும் கொழந்தை ( அண்ணே தினகரன் அண்ணே! இப்போ சந்தோசமா?) ஆசப்பட்டுச்சேன்னு நானும் பேட் மேன் விமர்சனம் போட்டுடலாம்ன்னு களத்தில குதிச்சிட்டேன்!

எமது மக்களாகட்டும் சரி , பதிவர்களாகட்டும் சரி ஆங்கில மோகத்துக்கு கொஞ்சம் அடிமையானவர்கள் என்பது அனைவரும் அறிந்த விடயமே! அதனால தான் இந்த வெள்ளைக்கார பேட் மேன் பற்றிய விமர்சனம் எங்கும் வியாபித்து இருக்கிறது. யாரோ கிறிஸ்டோப்பர் நோலனாம் ! பெரிய அப்பாட்டாக்கராம்! அவரது இயக்கத்தில் கிறிஸ்டியன் பேல் பேட் மேனாக நடித்து   வெளியாகி இருக்கிறது இந்த பேட் மேன்!

பிரம்மாண்டம், தொழிநுட்பம், அசத்தும் இசை, நேர்த்தியான ஒளிப்பதிவு , கிறிஸ்டியன் பேலின் அர்பணிப்பான நடிப்பு ஆகியவற்றால் இந்த பேட் மேன் அனைவரது வரவேற்பையும் பெற்றிருப்பதாக பலரும் தங்களது பதிவுகளில் வண்டி வண்டியாக எழுதி தள்ளுகிறார்கள். ஆனாலும் பேட் மேன் எதிர் பார்த்த அளவு இல்லை என்றும், சுமார் தான் என்றும் கிறிஸ்டோப்பர் நோலன் ஆதரவாளர்களே கூறியிருப்பதாகவும் படிக்கிறேன். சரி ! பாக்கலாம் எத்தனை கொம்பன்கள் பதிவு எழுதினாலும் , எனக்கு  அடுத்தவர் ஒரு ஆங்கில படத்தை சிபாரிசு செய்து ,அதை நான் பார்ப்பதாக இருந்தால் அது நம்ம JZ பதிவுல போட்ட படங்கள் மட்டுமே! ( நானாக சில நல்ல படங்களையும் பார்ப்பதுண்டு) . எனக்கு என்னமோ JZஇன் பதிவுகளில் அவ்ளோ நம்பிக்கை! பயலுக்கும் என்னோட டேஸ்டு!

எல்லோரும் பதிவு போடுறாய்ங்க என்பதாலும் , அபிமானிகள் விரும்பி கேட்டதாலும் JZ பதிவு போடுறதுக்கு முன்னமே பேட் மேனை பார்த்து தொலைத்து விட்டேன். பார்த்த பின்பு தான் புரிந்தது கிறிஸ்தோபர் நோலனின் ஆதரவாளர்கள் கூட ஏன் படத்தை மொக்கை என்கிறார்கள் என்று! சுத்தமாய் நேர்த்தியில்லாத திரைக்கதை , என்ன சொல்ல வருகிறார் என்று இயக்குனருக்கே தெரியாது போல! சொதப்பலோ சொதப்பல் மகா சொதப்பல்!

பேட் மேன் குறித்து மேலதிகமாக விமர்சிக்க முன்பு வெள்ளைக்காரன் என்ன எடுத்தாலும் காவடி எடுத்து அலகு குத்தி "ஆஹா ஓஹோ பிரம்மாதம்" என்று பதிவு போட்டுத்துலைக்கும் தமிழ் பதிவர்களே! இந்த நோலனின் பேட் மேன் தரத்துக்கு, தொழினுட்பத்திலும் சரி கிராபிக்ஸிலும் சரி ஒரு படத்தை எடுப்பதற்கு தமிழ் சினிமா இன்னமும் பக்குவப்படவில்லை என்பது உண்மை தான் . அதற்காக கதை என்னவென்று தனக்கே தெரியாமல் படமெடுத்திருக்கும் நோலனின் இந்த நொந்துபோன படத்தை நீங்கள் பிரபஞ்ச ஹிட் ரீதியில் பேசுவதை வன்மையாக கண்டிகிறேன்

படத்தின் கதை என்னவென்பதை விட படத்தின் மகா சொதப்பலை சொல்லிவிடுகிறேன் முதலில்! பகலில் கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு சுத்தும் ஒருவன் இரவில் நம்ம முகமூடி ஜீவா ரேஞ்சில் முகத்தை எல்லாம் மூடி கட்டிக்கொண்டு அநியாயத்துக்கு எதிராக போராடுகிறான். வில்லன்கள், காதல், ரொமாண்டிக், ஆக்க்ஷன், சேசிங், பிரம்மாண்டம், வெடிக்கும் கட்டடங்கள், எரியும் கார்கள், இணையும் காதலர்கள் !! கடைசிலில் அந்த முகமூடி போட்டவன் ஜெயிக்கிறான், அந்த வாய் வெந்தவன் தோற்கிறான்! பிரம்மாண்டம், பிரம்மிப்பு எல்லாம் ஓக்கே!! ஆனால் அடிப்படையே இங்கு தப்பால்ல இருக்கு! எல்லோரும் அந்த முகமூடி போட்டவனைத்தான் பேட் மேன் என்கிறார்கள் , ஆனால் உண்மையில் வாயை கட்டிக்கொண்டு அலைகிறானே ஒருவன் அவன் தான் பேட் மேன்! கெட்ட வேலைகள் சகலமும் செய்வது அவன் தான்!! அப்படியிருக்க அந்த கறுப்பு உடை போட்டுக்கொண்டு சுத்துறவன் எப்படி பேட் மேன் ஆக முடியும்? இந்தப் பெரிய  லாஜிக் ஓட்டை ஒன்று இருப்பதை மறந்து நீங்களெல்லாம் அந்த மொக்கை படத்தை ஆஹா... ஓஹோ... என்று புகழ்ந்து தள்ளுகிறீர்கள்!! என்ன ஒரு மட்டமான ரசனை!

நிஜத்தில் பேட் மேன்!

ஆக மொத்தம் இந்த பேட் மேன் கதை என்னவென்றால், நல்லது செய்து எந்தவிதமான சத்திகளோ, தொழினுட்பமோ, பக்கபலமோ , துணையுமோ இல்லாமல் பறந்து பறந்து அடித்து எதிரிகளை தூள் தூளாக்கும் தமிழ் நாயகர்களை நாம் ஹீரோக்கள் என்போம். அவனுக்கு எதிராக நின்று கட்டப்பஞ்சாயத்து , கற்பழிப்பு , ஆள்கடத்தல் பண்ணிப்புட்டு கடைசில ஹீரோ கைல அடிவாங்கி சாவுறவன பேட் மேன் என்போம்! இங்கே அதை உல்டா பண்ணி பெயர்களை மட்டும் மாத்திவிட்டு நல்லது பண்றவன பேட் மேனாக சித்தரித்து தமிழ் சினிமாவை உல்டா பண்ணி அந்த நோலன் பயபுள்ள படமெடுத்திருக்கு, அத்த போயி நம்மாளுகளே அபாரம் ... அருமையின்னு புழுகுறீங்களேப்பா!

ஆனால் தமிழ் படங்களை பொறுத்தவரை எப்போதும் பேட் மேன்கள் வாயை இழுத்துக் கட்டி கொண்டு அலைவதில்லை! டாட்டா சியராவில் இடம் இருந்தாலும் வெளியே தலையை நீட்டிக்கொண்டு கையில் உள்ள பொருளை ஆட்டிக்கொண்டு "ஏய்... ஏய் .... ஏய்... " என்று உறுமிக்கொண்டு வருவதிலேயே பேட் மேன்களை பற்றி தெரியவந்துவிடும். ஆனால் இந்த படத்தில் நல்ல‌து செய்பவனை பேட் மேன் என்று சொல்கிறார்கள். தமிழ் சினிமாவில் அசோகன் முதல் லேட்டஸ்டாக மங்காத்தா அஜித் வரை எத்தனையோ பேட் மேன் கதைகள் சொல்லப்பட்டிருந்தும் கூட நாங்கள் இந்தளவுக்கு ஆர்ப்பாட்டம் பண்ணியதில்லை. ஆனா ஏதோ மூணு நாலு பாகம் பேட் மேன் கதைய எடுத்துப்புட்டு நீங்க பண்ற அலப்பர தாங்க முடியலட அய்ய்யா.... இத தான் எங்க ஊர்ல " ஆமை ஆயிரம் முட்டை போட்டிட்டு அமைதியா போகுமாம் , கோழி ஒத்த முட்டைய போட்டிட்டு கொக்கரிக்குமாம்" எம்பாய்ங்க!


இந்த திரைப்படத்தில் நல்லவன் ஒருவனை பேட் மேன் என்கிறார்கள் அதை ஆஹா.. ஒஹோவென்று எழுத எத்தனையோ பதிவர்கள் இருக்கிறார்கள். அது போல் தமிழ் படங்களில் வரும் பேட் மேன்களை பற்றி எழுதவும் அவர்களை விட அதிகம் பேர் இருக்கிறார்கள். ஆனால் நமது கண்முன்னே அலையும் பேட் மேன்களை பற்றி யாருமே கண்டுகொள்வதில்லை. எனக்கு தெரிந்து எனது தெருவிலேயே நிறைய பேட் மேன்கள் குடியிருக்கிறார்கள். அது போக வேறு தெருவிலிருந்தும் , வேறு ஏரியாக்களிலிருந்தும் கூட பேட் மேன்கள் எங்களது தெருவுக்கு வருவதுண்டு.  அவர்கள் வயது வித்தியாசமின்றி இருப்பார்கள். முகங்களை மூடியெல்லாம் கட்டியிருக்க மாட்டார்கள், துணிஞ்ச பய புள்ளைங்க அவைங்க! 

பேட் மேன்களில் நெறைய வகைகள் உண்டு! பெரிய பேட் மேன், மீடியம் , பேட் மேன், சிமோல் பேட் மேன், அப்புறம் காமடி பேட் மேன் என்று நீட்டிக்கொண்டே செல்லலாம்! பெரிய பேட் மேன்கள் கொலை ,கொள்ளை மற்றும் கற்பழிப்புக்களில் டிகிரி முடித்தவர்களாக இருப்பார்கள் ஆனால் போலீசில் மாட்ட மாட்டார்கள். மீடியம் பேட் மேன்கள் அடிக்கடி ஜெயிலுக்கு போய் வருவார்கள். சிமோல் பேட் மேன்கள் தன் எனது தெருக்களில் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் இந்த காமடி பேட் மேன்கள் யாரென்றால் இடி இடிச்சு மழையே பெய்ஞ்சாலும் நடு ரோட்டில் நின்னு சிகரட் புடிக்கிறவன், "செருப்பால அடிப்பன்டா நாயே"ன்னு ஒரு பொண்ணு சொன்னதுக்கு அப்புறமும் " மச்சி அவ செருப்பால அடிப்பேன்னு சொல்லும் போது அவளோட கண்ணை கவனிச்சியா ? அதில காதல் தெரியுதுடான்னு" அநியாயத்துக்கு அப்பாவியா இருப்பவனும்,  எங்கேயோ போயி ஃபிரண்டுங்க கூட நல்லா தண்ணி அடிச்சுப்புட்டு , சரியா வீட்டுக்கு வந்ததும் அப்பா முன்னாடி வாந்தி எடுக்கிறவன் எல்லாம் காமடி பேட் மேன் லிஸ்டுக்குள் வருவார்கள்.

என்னய இந்த பதிவு போட சொன்ன பேட் மேன்! அண்ணன் தினகரன் ரேணுகா தன் குழந்தையோடு!

எனது தெருவில் திரியும் பேட் மேன்கள் எல்லாம் இரவில் மட்டும் வருவது கிடையாது. காலாங்காத்தால பல்லு வெளக்காம கடைக்கு வர்ரது ( நைட்டியோடு நிக்கும் எதிர்த்த வீட்டு ஃபிகர் லுக்கிங்) , அப்புறம் மத்தியானம் கறியோடு சோறு தின்னுட்டு முச்சந்தில உக்காந்து பல்லு குத்துறது, சாயுங்காலம் இவனுக தொல்ல தாங்க முடியாம ஆத்தாகாரி கூட அடுத்த தெரு போய்வரும் பொண்ணெயெல்லாம் ஜொள் ஒழுக பாத்து , அப்புறம் ஆத்தாக்காரி சுடுதண்ணிய மூஞ்சில ஊத்தினதுக்கு அப்புறமா சங்கத்தை கலைக்கிறதுன்னு பகலிலும் பந்தாடுவார்கள் இந்த பேட் மேன்கள்.

இரவில் அந்த வெள்ளைக்கார பேட் மேன் போலவே இவர்களது நடமாட்டமும் அதிகமாக இருக்கும் , ஆனால் அந்த வெள்ளைக்காரன் வருவது போல் கொள்ளைக்காரன் கெட்டப்பில் எல்லாம் வந்து பயமுறுத்த மாட்டார்கள்.  வெள்ளைக்காரனிடம் நிறைய பணம் இருக்கிறது அதனால் அவன் பேட் மேனுக்காக தனியான ஃபிளைட்டு, அப்பாச்சி அத்தாச்சி ரேஞ்சில் ஒரு பைக்கு, நவீன கருவி எல்லாம் குடுத்து இருக்கான். ஆனால் எங்கள் ஏரியா பேட் மேன்கள் அனேகமாக சைக்கிளில் தான் அலைவார்கள், கொஞ்சம் வசதி கொறஞ்ச பேட் மேன்கள் நடந்தும் தங்கள் கடமைக்கு போவார்கள்.

பதிவு போட்ட பேட் மேன் ! 

அடுக்குமாடி கட்டிடம் உடைதல், ஃபிளைட்டு கிராஷ், தீப்பிடித்து எரியும் டேங்கர் லாரி என்றில்லாமல் ஏதோ தங்களால் முடிஞ்ச அளவுக்கு சோடா பாட்டில் உடைக்கிறது, தீக்குச்சிய கொளுத்தி காரணமே இல்லாம தெருவில எறியிறது, முச்சந்தியில் ஃபிகர பாத்துக்கிட்டே வந்து ஆட்டோவில் மோதுவது என்று பிரம்மாண்டம் காட்டுவார்கள்இப்படி உங்கள் தெரிவிலும் நெறைய பேட் மேன்கள் இருப்பார்களே!!!

அடுக்கு பெட்டியில் அம்மா வச்ச அஞ்சு ரூபாவ திருடினப்பவே நானும் பேட் மேன் ஆயிட்டேன்! இனிமே எனக்கு சூப்பர் ஹீர்ரொ டிரஸ் தைக்கணும்ன்னா ரொம்ப செலவாகும் என்பதால், இப்போதைக்கு அழுக்கு லுங்கியோடு அலைவதே உலக பொருளாதாரத்துக்கு நன்மை பயக்கும்! ஆமா! உங்கள்ள எத்தின பேரு பேட் மேன்?

டிஸ்கி : அது வந்துங்க , பாத்தீங்கன்னாக்கா இந்த டார்க் நைற் ரைசஸ் படத்த பாத்தவனுகள விட , அத பத்தி பதிவெளுதினவய்ங்க தொகை தான் அதிகமா இருக்கு! நான் மட்டும் என்ன புதுசா சொல்லிட போறேன்! அது தான் கொஞ்சம் வித்தியாசமா ஹி...ஹி...ஹி...

டிஸ்கி : என்ன தினகரன் அண்ணே! பேட் மேன் விமர்சனம் ஓக்கேவா? இப்போ சந்தோசமா? என்னோட பாணி வழிஞ்சு ஓடுதில்ல!!!!  இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

எனக்கு ஒண்ணுமே தெரியாது ! நான் அப்பாவி ! எல்லாத்துக்கும் காரணம் அண்ணன் தினகரன் தான்!

Tuesday, July 17, 2012

நயந்தாராவுக்கு வலிக்கவும் கூடாது! சிம்புக்கு சொகமாவும் இருக்கணும்னா எப்புடி?



மசாலா , பழிதீர்த்தல் எல்லாவற்றையும் தாண்டி இன்று வியக்கத்தக்கதாக வளர்ந்துவரும் தமிழ் சினிமாவில் சில காட்சிகளை அல்லது வேறேதும் சம்பவங்களை  பார்க்க நேருகையில் எனக்கு சில சமயம் சிரிப்பாகவும் , சில சமயம் "கொய்யாலே" என்றும் , சில சமயம் "தக்காளி டேய்" என்று எண்ணத்தோன்றும். 

தமிழ் சினிமாவில் சில இடங்களில் ஒரு காட்சியை விளங்கச் செய்வதற்கு அல்லது ஒரு காட்சியின் கனத்தை காட்டுவதற்கு இயக்குனர் குட்டிக்கரணம் எல்லாம் அடிக்க வேண்டி இருக்கும். சிலர் "ஐயையோ ! அது ஆபாசமாக போய் விடும் " என்று தேவையான இடத்தில் தேவையான காட்சியை வைக்காது போய்விடுவார்கள், கடைசியில் அந்த காட்சி பார்வையாளனை தொட்டுவிடாமலே போய்விடும் , காட்சியும் படமும் சப்பென்று ஆகிவிடும். இன்னொரு சாரார் கதைக்கு "சதை" தேவையென்று எடுத்தேன் என்று உலகத்தில் உள்ள அத்தனை மீடியாக்களுக்கும் "பப்பரப்பி" ( தமிழில் புது வார்த்தை # தம்பட்டம் அடித்தல்) ப‌டம் முழுவது ஒரே அசைவமாக இருக்கும், விரசம் நிரம்பி வழிவதால் , காட்சியும் படமும் ஊத்திக்கொள்ளும். இன்னொரு சாரார் இருக்கிறார்கள், இவர்கள் மகா காமடியான ஆட்கள்! கதைப்படி ஏதாவது காட்டியும் ஆகவேண்டும், ஆபாசமாகிவிடுமோ என்ற பயமும் வேறு, ஆனாலும் காட்டவேண்டும்! எனவே இவர்கள் என்ன செய்வார்கள் என்றால் சிம்பாலிக்கா காட்டுகிறேன் பம்பாலி என்று காமடி பண்ணியிருப்பார்கள்.

ஒருசிலர் இருக்கிறார்கள் ஆபாசமாகவே இருந்தாலும் விரசம் தெரியாமல் ரசனையோடு படமாக்குப‌வர்கள். அந்த டெக்னிக் எல்லாருக்கும் தெரிவதுமில்லை, தெரிந்தவன் அதை சரியாக செய்துவிடுவதுமில்லை. ஆக இப்படியான இக்கட்டான நிலைகளில் என்ன செய்யலாம் என்று நான் இப்போது பாடம் எடுக்கப் போகிறேன். அதன் மூலம் தெளிவான ஒரு அறிவை தமிழ் இயக்குனர்களுக்கு வழங்கி தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோய் விடுவது என்ற தீர்க்கமான முடிவில் இருக்கின்றேன். ஆகவே தமிழ் சினிமாவில் எனக்கு தெரிந்த சில இடங்களில் தமிழ் சினிமா எவ்வாறு நடந்துகொண்டது, எவ்வாறு நடந்து கொண்டால் சர்வதேச தரத்துக்கு போகலாம் என்று விளக்கம் தரலாம் என்று நினைக்கின்றேன் ( இயக்குனர்களுக்கு பாடநெறி இலவசம்). 



அதற்காக தமிழ் சினிமா கையாளும் சில மரபுகளை தூசு தட்டி , அதனை அலசி ஆராய்ந்து அதன் ஊடாக ஹாலிவுட் தரத்துக்கு தமிழ் சினிமாவை கொண்டுபோய் விடலாம். "ஓ மக ஸீயா" பாடலுக்காக உரையெழுதியதைத் தொடர்ந்து நான் செய்யப்போகும் இன்னுமொரு கலைச்சேவை இது என்பதால் இந்த தடவையாவது எனக்கு முனைவர் பட்டம் கிடைக்கும் என எதிர் பார்க்கிறேன்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த முத்தக்காட்சி என்பது அன்று முதல் இன்று வரை ஒரு சர்ச்சையான சமாச்சாரமாகவே இருந்து வருகின்றது. நான் ஏற்கனவே சொன்னது போல் இந்த முத்தக்காட்சியை பொறுத்தவரை அதனை படமாக்கும் விதத்தை வைத்துக்கொண்டு இயக்குனர்களை நான்கு வகையாக பிரித்துவிடலாம்.

1. ஆபாசமாகுமோ என்று பயந்து , தேவையான இடத்திலும் கூட முத்தக்காட்சியை தவிர்த்து விடுவோர்.

2. தேவையோ இல்லையோ, பச்சை பச்சையாக முத்தக்காட்சி உட்பட "மொத்தக் காட்சியையும்" வைத்துவிடுவோர்.

3.ரெண்டும் கெட்டான் நிலையில் "சிம்பாலிக்கா" (symbolic)  காட்டுபவர்கள். ( தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்று வரை இவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள்)

4. காட்சிக்கும் தேவையாயின் ஆபாசம் இல்லாமல் , முத்தக்காட்சிகளை பக்காவாக படமாக்குபவர்கள்.


இந்த கட்டுரை இதுவரை நான் பார்த்த சினிமாக்களின் அடிப்படையிலேயே எழுதப்படுகின்றது. எனது குறுகிய அறிவு வட்டத்துக்கு அப்பால் பரந்து விரிந்த தமிழ் சினிமாவை நான் தவறவிட்டிருப்பின் மன்னிச்சூ...........  இப்போது தமிழ் சினிமாவில் இந்த முத்தக்காட்சிகளின் பரிமாணத்தை பார்த்துவிடலாம்.

நான் அறிந்து, அல்லது நான் பார்த்து தியாகராஜர் பாகவதர் காலத்தில் முத்தக்காட்சி இடம்பெற்றதை இதுவரை பார்த்திருக்கவில்லை. நான் அறிய சிவாஜி, எம்.ஜி.ஆர் கால சினிமாவில் தான் இந்த முத்தக்காட்சிகளை பார்த்திருகிறேன். அதை இப்போது பார்த்தாலும் செம காமடியாக இருக்கும்.

நாயகனும் நாயகியும் டூயட் பாடிக்கொண்டு இருப்பார்கள் , திடீரென்று நாயகன் "அரை" அடித்த மப்பில் கண்களை சொருகுவது போல சொருகிக்கொண்டு நாயகியை பார்ப்பார். உடனே இந்தம்மா ஒத்தை கையால் முகத்தை பொத்திக்கொண்டு , வாயை ஒரு பக்கமாக கெழித்து வைத்துக்கொண்டு ( வெக்கப் படுறாங்களாமா) தலையை வேண்டாம் என்ற பாணியில் அங்கும் இங்கும் ஆட்டும். அதுக்கு பிறகு என்ன சொல்லி நாயகியை நாயகன் "அமைத்தார்" என்ற வாதத்துக்கு இடமில்லாமல் உடனே கமிரா வானத்தை நோக்கி திரும்பும் . ரெண்டு செக்கனுக்கு பிறகு முதலில் நாயகன் எழுவார். எழுந்த கையோடு "என்ன கப்புடா யப்பா...... நாலஞ்சு நாளா பல்லுவெளக்காம இருந்திருப்பா போல......" என்ற தோரணையில் தனது உதட்டை ஒருகையால் வழித்து "தொலஞ்சு போ சனியனே" என்று பக்கத்து வரப்புக்குள் எறிவார். அந்த கண் இன்னமும் "அரை" அடித்த போதையில் சொருகியபடியே இருக்கும். அதன் பின்னர் அந்த அம்மா எழும்பும் , அதே ஒத்தை கை, அதே கோணல் வாய், அதே தலையாட்டு ! தான் கொடுத்த முத்தத்தை வழித்து நாயகன் எறிந்து விட்டார் என தெரிந்தும் வெட்கமே இல்லாமல் வெட்கப்பட்டு சிரிக்கும்.


அதன் பிறகு இந்த முத்தக்காட்சியை காட்டுவதற்கு புதரை ஆட்டுவது, பூக்களை கசக்குவது, புல்லுவெட்டுவது, மரம் அரிவது என்று புதுசு புதுசாக யோசித்தார்கள். அதிலும் இந்த இடைக்கால படங்களில் நாயகனும் நாயகியும் பாலைவனத்திலே நின்று டூயட் பாடினாலும் , இந்த முத்தக்காட்சி என்று ஆகிவிட்டால் எங்கு தான் ஒரு புதரை கண்டு பிடிக்கிறார்களோ? இது செம காமடியாக இருக்கும், நாயகன் நாயகியை தர தரவென்று இழுத்துக்கொண்டு காலையில் எதுக்கோ செம்புடன் ஓடுவது போல் ஓடுவார். ஒரு புதரை கண்டால் போதும், சடார் என்று உள்ளே போவார்கள் , புதர் எவளவு சிறிதாகவே இருந்தாலும்! அதன் பின்பு அந்த புதர் அருள் வந்த சாமியார் போல் பரபரவென்று ஆடும். அதன் ஆணி வேர் பெயர்ந்து போகும் படி ஆட்டிவிட்டால் முத்தம் முடிந்துவிட்டாதாக அர்த்தமாம்! தக்காளி டேய் !!!!

இந்த புதர் ஆட்டு படலத்தை நான் ஆரம்பகாலத்தில் பார்க்கும் போது பலத்த சந்தேகங்களுக்கு ஆளானதுண்டு. ஒரு வேள அந்தம்மாவ இவன் கூட்டிக்கொண்டு போயி "வாயில கடிச்சு வச்சிர்ரானோ? அது தான் வலி அதிகமாயி அந்தம்மா ஒரு பிடிமானத்துக்கு பொதர ஆட்டுது போல " என்று நினைத்தது உண்டு. அது போக முத்தம் போட போனால் மக்களே ஏன்டா பொதர புடிச்சு ஆட்டுறீக? ஒரு ஆணும் பெண்ணும் முத்தமிடும் போது தழுவிக்கொள்வதற்கு உடலில் இத்தனை பாகங்களை இயற்கை சிருஷ்டித்திருக்கிறதே, அத்த விட்டிட்டு எதுக்குடா சிவனேன்னு மொள‌சிருக்கிற அந்த பொதரோட  பஞ்சாயத்துக்கு போறீக? கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் நாயகனும் நாயகியும் ஒருவர் உதட்டை ஒருவர் கவ்வியபடி, தங்களது இரண்டு கைகளாலும் அருகில் இருக்கும் புதரை பிடித்து சர சரவென ஆட்டிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும் என்று? சுத்தம், வெளங்கிரும்!!!!!



அதன் பின்பு எண்பதுகளிலும் இதே நுட்பமுறைதான் தொடர்ந்தது ( சில இடங்களில் கமலஹாசன் விதிவிலக்கு). தொடர்ந்து வந்த காலப்பகுதிகளில் வேறு ஒரு நுட்பமுறையை கையாண்டார்கள். அதாவது நாயகனது அல்லது நாயகனது "பொடனியை ( பிடரி) " காட்டி இருவரும் முத்தமிடுவது போல் காட்டுவது. இது இன்னும் செம காமடியாக இருக்கும்.


நாயகனோ நாயகியோ முத்தமிடவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் , தனது துணை எந்த நிலையில் நின்றாலும் சரி , தலையை சூரத்தேங்காயை பிடிப்பது போல ஒரு ம‌ரணப்பிடி பிடிப்பார்கள் பாருங்கள், அந்த பிடியிலேயே பாதி சீவன் போயிரும் அந்த அம்மாவுக்கு. அதை பார்த்தால் அன்பாக முத்தமிடுவதற்கு பிடித்தது போல இருக்காது, ஏதோ நாலணாவை திருடியவனுக்கு ரெண்டு கையாலும் செவிளைப் பொத்தி "சளார்" என்று அறைவதைப் போல இருக்கும். பிடித்தது தான் அப்படி கொடூரமாக இருக்கும் என்று பார்த்தால் முத்தமிடுவது இன்னமும் கர்ணகொடூரமக இருக்கும். அந்தம்மாவின் தலையை அய்யனார் கோயிலில் பலிகொடுக்கும் கோழியின் தலையை திருகுவது போல் "சடக்கென்று" ஒரு முறி முறித்து இடது பக்கமாக திருகி , காய்ஞ்ச மாடு கம்பில பாயிறது போல அந்தம்மா வாயி மேல பாய்ஞ்சு , மூணந்தெரு பூசாரி சேவலோட கொரவளய கடிச்சு ரத்தம் குடிப்பது போல் அந்தம்மா வாய கடிச்சு வைப்பான் பாருங்க , அந்த காட்சியை பார்த்தால் அன்பான ஒரு முத்தக்காட்சி கொடுப்பது போல் இருக்காது , ஏதோ நரபலி கொடுப்பது போல் இருக்கும். இந்த காட்சி பெரும்பாலும் நாயகனின் பொடனி பக்கத்தால் தான் காட்டப்படும்.


சரி நாயகன் இந்த ரத்தக்குடிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்க நாயகியின் ரியாக்க்ஷ‌ன் எப்படி இருக்கும், அந்தம்மா கண்ணுக்குள் ஏதோ தூசி விழுந்ததை போல படபடவென்று கண்ணை அடிக்கும், அல்லது அது ஒரு எதிர் பாராத முத்தமாக இருந்தால் , அறுக்கப்போகிறார்கள் என்று தெரிந்து விட்டால் மாடு முழியுமே ஒரு முழி அப்புடி ஒரு முழி முழியும் அந்தம்மா, சில வேளை நாயகனும் இதே நவரசத்தை தான் வெளிப்படுத்துவார் !


இந்த மாதிரியான முத்தக்காட்சிகளை பார்த்தால் அது காதலர்கள் கொடுத்துக்கொள்ளும் பரஸ்பர அன்பு முத்தமாகவே இருந்தாலும் , இவர்கள் கொடுக்கின்ற ரியாக்க்ஷனில் அது ஏதோ கற்பழிப்பு காட்சி ரேஞ்சுக்கு இருக்கும். "கண்ணே ! மணியே !முத்தாரமே ! உன்னை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டு இருக்கணும் போல இருக்கென்று " வசனமெல்லாம் பேசி காதலிப்பார்கள்.  ஆனால் முத்தம் போடுகையில் " என்னடா மூஞ்சி இது , தேஞ்சி போன டயராட்டம் இருக்கு" என்ற ரேஞ்சில் கண்களை அந்த மாதிரி இறுக்கி மூடிக்கொள்வார்கள். சாதாரணமாக ஆங்கிலப் படங்களில் கூட அனேகமாக முத்தமிடும் போது லேசாக கண்களை மூடிக்கொள்வார்கள், ஆனால் அதை பார்த்தால் ஒரு காதலாக , ஒரு கவிதையாக , அந்த முத்தத்தை அனுபவித்து அந்த ரசனையில் கண்களை மூடி இருப்பது போல் தெரியும் . ஆனால் நம்மாளுக கண்ணமூடியிருக்கிற தோரணைய பாத்தா முத்தமிடும் போது கால்ல ஆணி பாய்ஞ்ச மாதிரி ஒரு ரியாக்க்ஷன் குடுப்பாய்ங்க. நம்ம ஹீரோ முத்தம் குடுக்கும் போது அந்தமா குடுக்கிற ரியாக்க்ஷன் இருக்கே !!எதோ ரெண்டுவாரம் பழைய அண்டாவில் இருந்து கெட்டுப்போன சோத்த தின்ன மாதிரி ஒரு எஃபக்டு குடுக்கும்.


அது போக முத்தக்காட்சிகளில் நாயகி கண்ணையும் , முகத்தையும் வைத்திருக்கின்ற தோரணையை பார்த்தால் ஏதோ அந்த நாயகன் அந்த நாயகியின் வாய்க்குள் தனது வாயினால் வேல்கம்பை நுழைப்பது போன்ற ஒரு மாயையை உண்டாக்கும். இவளவு வில்லங்கப்பட்டு ஒரு முத்தம் தேவையா மக்களே?


சில படங்களில் பார்த்திருக்கிறேன், நாயகன் அல்லது நாயகியின் பிடரியூடாக முத்தக்காட்சியை பதிவு செய்திருப்பார்கள். ஆனால் நாயகனின் உதடு நாயகியின் உதட்டுக்கு நேராக இருக்காது, நாயகியின் மூக்குக்கு நேரே இருக்கும். "எலேய் ! நீ என்ன முத்தம் போட வந்தியா இல்லாங்காட்டி அவளோட மூக்க நக்க வந்தியா?ன்னு கேள்வி கேக்கிற மாதிரி இருக்கும் அந்த காட்சியமைப்பு. அது போதாதென்று நாயகன் பகீரத பிராயனத்தனப்பட்டு முத்தம் இட்டுக்கொண்டு இருக்கையில் , அந்தம்மா வேற நாயகனோட பொடனி மயிர புடிச்சு இழு இழுன்னு இழுத்து  பிச்சு எடுத்திரும். பிரபு தேவா, ராஜ்கிரண் போன்று சுருளாக தலை முடி வளர்த்திருக்கும் நாயகர்களுக்கு உயிரே போகும்.அங்க என்ன முத்தம் போடுறாய்ங்களா இல்ல மொளகா பஜ்ஜி தின்னுறானுகளான்னு ஒரே குழப்பமாயிரும்!

தம்பி கிஸ் ஒதட்டுல குடுக்கணும், மூக்கில இல்ல!

இதே போன்று கிராமத்து திரைப்படங்களில் ஒரு முத்தக்காட்சி இருந்தால் , அது இதைவிட படு பயங்கரமாக இருக்கும். நாயகன் நாயகியை அவளது வீட்டில் வைத்து அட்டாக் பண்ணிருவார். என்னென்னமோ பேசி கடைசியில் முத்தமிடுவார். அந்தமாவும் ஏதோ வெந்தபுண்ணில் வேல் பாய்ஞ்ச மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு அந்த முத்தததை அனுபவித்துக்கொண்டு இருக்கும். அதில் நடக்கும் அதியுச்ச காமடி என்னவென்றால் நன்றாக கட்டப்பட்டிருக்கும் அந்தம்மா வீட்டு சுவத்துக்கு ஹீரோ முத்தமிடும் போது , தன்னோட ஒரு காலை தூக்கி முட்டுக்கொடுக்கும் பாருங்க, அங்க நிப்பாருய்யா டைரக்டரு! முத்தம் போட வந்தானா இல்ல கொத்தனாரு வேலைக்கு ஆளெடுக்க வந்தானான்னு எனக்கு நானே கேட்டுப்பேன்!


சரி முத்தமிடும் லட்சணம் அல்லது முத்தக்காட்சியை எடுக்கும் வாவண்யம் தான் இந்த நிலையில் இருக்கிறது என்றால் , முத்தமிட்டு (?????) முடிந்தவுடன் நம்ம ஹீரோக்கள் கொடுக்கும் முக பாவங்கள் இருக்கிறதே , ஐயோ நாமெல்லாம் பாவம் என்று நமக்கு நாமே அனுதாபப்படும் படி ஆகிவிடும். புரட்சி தலைவர் முத்தமிட்டு முடிந்தவுடன் , அப்படியே எழுந்திருந்து தனது வலது கையின் இரண்டு விரல்களையும் ஒரு சுழட்டு சுழட்டி தானே மணந்து கொள்வார். நம்ம நடிகர் திலகம் முத்தம் முடிந்ததும் கண்னை கஞ்சா அடித்தவன் போல் வைத்துக்கொண்டு வாயை வழித்து வாய்க்காலுக்குள் எறிவார், ரஜினி முத்தம் முடிந்ததும் காலையில் எழுந்ததும் கடவாய் துடைப்பது போன்ற ஒரு ரியாக்க்ஷன் கொடுப்பார், விஜய் கொஞ்சம் வித்தியாசம் நம்ம சரோஜா தேவி அம்மா பண்ணுற மாதிரி ஒத்தை கையால் முகத்தை பொத்திக்கொண்டு , வாயை ஒரு பக்கமாக கெழித்து வைத்துக்கொண்டு அரவாணி ரேஞ்சுக்கு நின்று நெளிவார், சிம்பு !!! யப்பா சொல்லவே வேண்டாம் , இவன் பாவியை முத்தம் கொடுடா என்றால் வாயை கடித்து துப்பி வாய்க்கால் தகராறாக்கி விடுவான். தனுஷ்...! ஹீம்......... கொவ்வைப்பழம் போல அந்த சுருதிப்பொணோட உதடு இருக்க , மூக்கை நக்கினவன் தானே இவன்!!

முத்தம் முடிந்ததும் இவர்கள் நவரசங்களை காட்டுகையில் , ஏதோ செய்ய கூடாத  தப்பை செய்துவிட்டு கோர்ட்டுக்கும் கேஸுக்கும் பயப்படுபவர்கள் போல் தோன்றும். அட ! முத்தம் என்பது நல்ல விசயம்பா! முத்தமிடும் போது உடலுக்கு தேவையான நெறைய அமிலங்கள் சுரக்கின்றது என்று எங்கயோ படிச்சிருக்கேன். அது போக கன்னத்தில் அனுமதிக்கப்படுகின்ற முத்தம் உதடு என்று வரும் போது ஏன் தடைசெய்யப்படுகிறது என்பது எனக்கு இன்னமும் விடை தெரியாத  ஒரு கேள்வியாகவே இருக்கிறது! ஒரு வேளை தமிழ் கலாசாரத்துக்கு ஒவ்வாதது என்று நினைக்கிறார்களோ? ஆனாலும் தமிழ் இலக்கியங்களில் கூட உதட்டு முத்தம் என்பது நிறைய இடங்களில் செய்யுள்களாக கொட்டிக்கிடக்கின்றதே!

சில நேரங்களில் உதட்டு முத்தம் என்பது நூறு காட்சிகளில் காட்டியும் சொல்லமுடியாத நாயகன் நாயகி அன்பை சொல்லிவிடக்கூடியது. உதரணமாக "சத்யா" படத்தில் வரும் "வளையோசை கல கலவென...." பாடலில் ஒரு கட்டத்தில் அமலாவின் உதட்டின் மேல் கமல்ஹாசன் முத்தமிடுவார் , அந்த முத்தம் ஆயிரம் கவிதைகள் சொல்லும், அந்த முத்தத்தில் எந்த விரசமும் இருக்காது. அதே போல் "ஹேராமில்" ராணிமுகர்ஜியை சேம் கமல் முத்தமிடுவார், அப்போது அந்தம்மா கமல் ஹாசனின் வாய் மணப்பது போலவோ அல்லது அக்குளில் குளவி குத்தியது போலவோ வழமையாக‌ ஹீரோயின்கள் காட்டுகின்ற எந்த ரியாக்சனையும் காட்டாது. அந்த முத்தத்தை அனுபவித்து புன்சிரிப்போடு கூடிய  ஒரு உணர்வை முகத்தில் காட்டும். அத்தோடு கமலின் பொடனி மயிரையும் பிய்த்து எடுக்காமல் , கமலின் கையோடு கைகோர்த்து அந்த காட்சி கவிதையாய் மாறும் படி செய்திருக்கும். (ஆனா நெறைய ஹீரோயினுங்க இந்த மாதிரி சீனில் கையில் உள்ள ஏதாவது ஒரு பொருளை 'சடார்ன்னு" ஒடைப்பாளுக! ( எங்க ஊரில் வலிப்பு வருபவர்கள் தான் இந்த மாதிரி எஃபக்டு குடுப்பார்கள்) , கிராமத்து ஹீரோயின் என்றால் கையில் இருக்கும் தக்காளியை பிதுக்கும்). ஆனால் ஹேராமில் கமல் முத்தத்தோடு பியானோ வாசிப்பது அந்த முத்ததை ஒரு இனிய இசைக்கு ஒப்பிடுவது போல இருக்கும்.



அதற்காக முத்தக்காட்சி எப்படியிருந்தாலும் அதை தமிழ் சினிமாவில் அனுமதித்துவிட வேண்டும் என்று நான் சொல்லவரவில்லை. காரணம் ஒரு காதலின் ஆழத்தை வெளிப்படுத்த ஒரு சிறந்த ஊடகமாக  இருக்கக்கூடிய உதட்டு முத்தக்காட்சி , எல்லை மீறிப்போனால் ஆபாசமாகவும் முடிந்துவிடும். சத்யா, ஹேராம் ரக முத்தங்கள் ஓக்கே! ஆனால் சில  ஆங்கில படங்களில் வருவது போல் நாயகனும் நாயகியும் ஒருவர் உதட்டை ஒருவர் கவ்விக்கொண்டு அவளது வாய்க்குள் தனது நாக்கை விட்டு, எண்ணை எடுக்கலாமா, யுரேனியம் இருக்கிறதா என்று நாயகனும், நாயகனின் வாய்க்குள் தனது நாக்கை விட்டு எரிவாயு கிடைக்குமா? தைத்தேனியம் தோண்டலாமா என்று நாயகியும் ஆய்வு செய்யும் வகையறா முத்தங்கள் நமக்கு சரிப்பட்டு வராது. அது போல "சும்மா தானே இருக்கு , பொறு கடிச்சு இழுத்து தூர துப்பிடறேன்னு"  நயந்தாரா உதடுகடிக்கும் சிம்பு வகை முத்தங்களும் தேவையே இல்லை. 

கதைக்கு தேவைப்பட்டால் விரசம் இல்லாத முத்தக்காட்சிகள் எடுப்பது தப்பேயில்லை. ஆனால் அது கத்தி மேல் நடக்கும் வேலை, சிறிது சறுக்கினாலும் ஒன்றில் சென்சார் கத்திரி போடுவார்கள், அல்லது சென்சாரில் தப்பித்தால் மக்கள் நம்மை டைரக்டர் சாமி லிஸ்டில் சேர்த்து விடுவார்கள். ரொம்ப சூதனாமா இருக்கணும்! எல்லாவற்றுக்கும் மேல் இயக்குனர் கேட்பதற்கு முன்னமே நான் முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன் என சனல் 4 'க்கு பேட்டி கொடுக்காத ஹீரோயின் படத்தில் இருக்க வேண்டும்.


ஆரம்ப காலங்களில் வந்த "சிம்பாலிக்கல் பம்பாலி" மூலம் முத்தக்காட்சிகளை காட்டி வந்தார்கள், இப்போதும் தமிழ் சினிமாவில் அநேகமாக குறியீடுகள் மூலமே முத்தங்களை காட்டி வருகிறார்கள். இன்றைய இயக்குனர்களில் அனேகமானோர் முத்தக்காட்சி எடுப்பதற்காக வாய்கழுவ வாய்க்கால் பக்கமோ அல்லது எங்காவது கள்ளிப் புதரைத்தேடியோ அல்லது தக்காளிகளையோ கசக்குவது கிடையாது. சுவாரசியமாக முத்தக்காட்சிகளை காட்டிவிட்டு போகிறார்கள். "நான் மகானல்ல" திரைப்படத்தில் வரும் "கண்ணோரம் காதல் வந்தால்..." பாடலில் கார்த்தியும் காஜலும் ஷொப்பிங்க் போவார்கள், அப்போது லிஃப்ட்டுக்குள் இருந்து இருவரும் வெளியே வருகையில் காஜல் தனது உதட்டை தூக்கி பார்த்தவண்ணம் வருவார், அந்த காட்சி இருவரும் முத்தமிட்டுக்கொண்டதை அழகாக காட்டும். ( காஜல் தனது உதட்டை தூக்கி பார்க்கும் தோரணையை பார்த்தால் ஏதோ , கார்த்தி உதட்டை கடித்து வைத்த மாதிரி ஒரு எஃபக்ட் வந்தாலும் கூட  , அந்த காட்சி முத்தத்துக்கு ஒரு சிறந்த ஒரு குறியீட்டு காட்சி எனலாம்) இப்படியான சுவாரசியமான குறியீட்டு காட்சிகள் இந்த கால சினிமாவில் வருவதற்கும் , அந்த கால சினிமாக்களில் பயன்படுத்தப்படாததற்கும் இப்போது எமது கலாச்சாரம் மாறிவிட்டது தான் காரணம் எனலாமா? ( "டேய்! இது ஒண்ணும் தமிழ் பற்று பதிவோ, கலாசார காவல் பதிவோ கெடையாது, ஜாலியான பதிவு !! வில்லங்கம் பண்ணாம அடுத்த பந்திக்கு தாவுடா""ன்னு யாரோ பொடனில அடிக்கிறாப்ல இருக்கு யார்ரா அது?)

நடிகைகளின் சம்மதம், சிம்பாலிக்கல் பம்பாலி, சென்சார் போன்ற தடைகளையெல்லாம் தாண்டி வந்த சில நேரடி உதட்டு முத்த காட்சிகளும் தமிழ் சினிமாவில் இருக்கத்தான் செய்கிறன. எனக்கு தெரிந்து கமல் படங்களில் தான் நான் ஆரம்ப காலங்களில் இந்த நேரடி முத்தக்காட்சிகளை பார்த்தேன். ( தியாகராஜ பாகவரது படங்களில் எதிலாவது முத்தக்காட்சி இருந்தால் தயவுசெய்து எனக்கும் சொல்லுங்கப்பா...). கமல் படத்து முத்தக்காட்சிகள் பெரும்பாலும் விரசம், மொக்கை, ஆபாசம், நேர்த்தியின்மை , போலி என்ற தடைகளை தாண்டியதாகவே இருக்கும். ( அதனால் தான் முத்த மன்னன் என்று பெயர் வந்ததோ?) ஆனாலும் (சிம்பாலிக்)  முத்தம் ஒன்றை பெற்றபிறகு பிறகு , குமட்டில் குத்து வாங்கியது போல் ஒரு ரியாக்க்ஷனை கமல் கொடுத்த வரலாறும் உண்டு. படம் :- வசூல் ராஜா, பாடல் : பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு....



கமலுக்கு பின்பு நான் பார்த்த இன்னொரு நேரடி முத்தக்காட்சி "காதல் சடு குடு" படத்தில் விக்ரம் + பிரியங்கா ! இங்கு முத்தம் என்னமோ நேரடியாக கொடுக்கப்பட்டாலும் , அந்த முத்தம் கொடுக்கப்படுகையில் அந்த பொண்ணு காட்டும் ரியாக்ஷன்கள் தான் ஹைலைட்! கையை மடக்கும், கண்ணை "டப....டப.." என்று அடிக்கும், புளியங்காயை கடித்தது போல் முகபாவம் காட்டும் ( விக்ரம் !! யூ டூ நோ பல்லு வெளக்கிங்????)  பின்னர் , பாக்ஸர் கிருஸ்ணனாட்டம் முஸ்டியை மடக்கி ஏதேதோ வித்தையெல்லாம் காட்டும் அந்த பொண்ணு! அது கூட பரவாயில்லை, ஆனால் முத்தப்படலம் போய்க்கொண்டு இருக்கையில் இடையில் கணுக்காலில் முண்டுகொடுத்து மேலே எழும்பும் அந்த பொண்ணு! எதுக்கு என்றெல்லாம்  எனக்கு தெரியாது ....... பட்... ஒரு சிமோல் டவுட்.....  அப்புடி எழும்பும் போது ரெண்டு பேரோட வாயும் வெலகிப்போய் அந்த கன்டினியூவிட்டி மிஸ் ஆகிடாது??????? 

அதுக்கு பின்னர் இன்னொரு உலகத்தரமான முத்தக்காட்சி பார்க்ககிடைத்தது, தமிழ் சினிமாவின் ரொம்ப மரியாதயான குடும்பமான கஸ்தூரிராஜாவின் குடும்ப வாரிசுகள் தான் அந்த வில்வித்தைக்கு சொந்தக்காரர்கள். காதல் கொண்டேன் படத்தில் வருகின்ற "தேவதையை கண்டேன் ..." பாடலில் சோனியா அகர்வாலும் அந்த செக்கண்ட் ஹீரோவும் ஒரு டெலிபோன் பூத்துக்குள் முத்தக்காட்சியில் நடிப்பதற்கு சோனியா அகர்வாலின் காதலனும் அந்தபடத்தின் இயக்குனருமாகிய செல்வராகவன் "ஏற்பாடு " செய்திருப்பார். நான் பார்த்த முத்தக்காட்சியிலேயே மிகக்காமடியானதும், மரண மொக்கையான முத்தக்காட்சி இதுதான். " 3 " படத்தை ரெண்டு தரம் பார்த்தவனை கூட நான் மன்னிப்பேன் . ஆனால் இந்த முத்தக்காட்சியை பார்த்து எவனாவது "ஜொள்" ஊத்தினால் அப்புறம் "துப்பாக்கி" படத்தின் முதல் ஷோ பார்க்கும் நெருக்கடிக்கு ஆளாக வேண்டிவரும் ஜாக்கிறதை!

ஃபெவிக்கோல் விளம்பரத்துக்கு வாயை வாடகைக்கு விட்டது போல சோனியா பொண்ணு வாயை "உம்முன்னு " மூடி வைத்திருக்கும், அந்த பையன் வேற பிஞ்சுபோன செருப்பை தச்சு விட்டா மாதிரி வாயை வைத்துக்கொண்டு அடிப்பான் பாருங்கள் ஒரு கிஸ்ஸு... யப்பா.... ஜேம்ஸ் பாண்ட் எல்லாம் பிச்சை வாங்கணும்....!  ரெணு பேரு ஒதடுமே மூடி இருக்கும் , அதில அந்த பையன் என்னமோ ஏசியன் பெயின்ஸ் ரோயல் பிளே வெளப்பரத்துல சயிப் அலிகான் குட்ட சொவத்தில சொழட்டி சொழட்டி பெயிண்ட் அடிப்பது போல ஒரு கிஸ்ஸு அடிப்பான் பாருங்க ......... ஐயையோ நல்ல சான்ஸ மண்ணாக்கிட்டியேடா பாவி என்று என்னால் கத்த மட்டுமே முடிந்தது!  ஆனாலும் அவிய்ங்க கிஸ் அடிக்கும் போது மூக்கும் மூக்கும் முட்டும்! நன்றாக கவனித்து பாருங்கள்!

அதுக்கு அப்புறம் இன்னும் இரண்டு முத்தக்காட்சிகள் ஒன்று கந்தசாமியில் விக்ரம்+ ஸ்ரேயா, இன்னொன்று நண்பனில் விஜய் + இலியான்ஸ் ! கந்த சாமியில் "ஆமாய்யா அவிய்ங்க நெசமாலுமே லிப்டு ..லிப்டு கிஸ்ஸு தான் அடிக்கிறாய்ங்க"ன்னு காட்டுவதற்காக கமிராவை சொழற்றி சொழட்டி எடுத்தும், நண்பனில் உலகத்தரமான தொழிநுட்பங்களையெல்லாம் பயன்படுத்தி , பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்  "கிஸ் அடிக்கும் போது மூக்கு முட்டுமா முட்டாதா" என்று நிறுவப்போயும் அந்த இரண்டு முத்தங்களுக்கான உண்மையான மதிப்பையும், கனத்தையும் குறைத்திருப்பார்கள். 

முத்தம் என்பது திரைப்படங்களில் ஆபாசத்துக்காக பயன்படுத்தப்படும் ஒரு வஸ்தாக இந்தக்காலத்தில் ஆகிவிட்ட போதும் , நேர்த்தியாக எடுக்கப்படும் ஒரு முத்தக்காட்சி ஆயிரம் ஃபிரேமில் சொல்லவேண்டிய அன்னியோனியத்தை ஒரே காட்சியில் சொல்லிவிடக்கூடியது. சினிமாவை பொறுத்தவரை முத்தக்காட்சி மட்டுமல்ல , எந்த காட்சியுமே சரியான பொறிமுறையுடன் நேர்த்தியாக செய்யப்பட வேண்டியது! சற்று தவறினாலும் பார்வையாளனுக்கு வேறொரு அர்த்தத்தை கற்பித்து விடும். அதுவும் என் போன்ற ஆட்களுக்கு மொக்கையாய் ஒரு பதிவு போடும் வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்துவிடும்.

அது போக முத்தம் என்பது ஒரு அன்பின் மொழி  அது விரசமாகாத வரையில்!

"கற்பூரம் நாறுமோ
கமலப்பூ நாறுமோ
செம்பவள திருவாய் தான் தித்திக்குமோ?"

சடுதியாக எனக்கு நினைவில் வந்த உதட்டு முத்தத்தை நினைவுபடுத்தும் ஒரு ஆன்டாள் பாடல், தமிழ் இலக்கியத்தில் இருந்து!

ஆகவே நான் என்ன சொல்ல வாறேன்னா... ஐயய்யோ இந்தோ களோபரத்துல எதுக்கு இந்த பதிவு எழுதினேன், எப்புடி முடிச்சிருக்கேன்னு ஒன்னுமே புரியலயே!  ஐயா ! புண்ணியவானுகளா, இதுவரை என்னோட பதிவுகளை ஏதுனாச்சும் புரிஞ்சா படிச்சீக ? அது போல இதையும் ஒரு குத்து மதிப்பா படிச்சிட்டு கெளம்புங்க!



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...