உதைபந்து

Tuesday, August 28, 2012

எண்ணி அரைமணி நேரத்தில் இலங்கை வல்லரசாகும்! ஐ.நா அவரசர அறிக்கை!





இந்த பதிவை படிக்கும் முன்னர் இந்த பதிவை படித்துவிட்டு வரவும், அந்த பதிவுக்கான எனது பின்னூட்டமே இந்த பதிவு!

என்ன இல்லை இலங்கையில்? மூடிவிட்ட பல்கலைக்கழகங்கள், கல்வியில் குளறுபடிகள் , இன்னமும் அபிவிருத்தியே காணாத வடக்கின் பிரதேசங்கள் என்று எல்லாமே இருக்கிறது என்று விசமிகள் சில விஷ கருத்துக்களை பரப்பிவருகிறார்கள்.  ஆனால் இலங்கை ஆசியாவின் அதிசயம்... கல்வியும் , வாழ்க்கைத்தரமுமா ஒரு நாட்டின் வளத்தை தீர்மானிக்கிறது.


இந்த ஆண்டுக்கான ஐ.நாவின் அறிக்கையில் இலங்கை தான் உலகின் தலைசிறந்த நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. அட! இலங்கையில் இத்தனை குளறுபடிகள் இருப்பதாக ஜனநாயக விரோதிகள் வதந்திகளை பரப்பியுமா இந்த இடம் கிடைத்திருக்கிறது என அந்த அறிக்கையை விரிவாக வாசித்தேன். அதாவது இலங்கையில் நல்ல காடு இருப்பதாலும், குளிரத்து கிறங்கடிக்கும் மலைகள் இருப்பதாலும், குளிர் பிரதேசமான மத்திய மலைநாட்டில் இருந்து குளிருக்கு இதமாக ரெண்டு பெக் விஸ்கி அடித்துவிட்டு, ரெண்டே மணத்தியாலத்தில் சூடான பீச்கள் இருக்கும் தென்பகுதிக்கு போய் ஜில் என்று பீர் அடித்துவிடும் வசதி இருப்பதாலும். எட்டு ஒன்பது மணிநேரங்களில் இலங்கை முழுவதையும் சும்மா சொழட்டி சொழட்டி சுற்றிப்பார்த்து , அந்தந்த பிரதேசத்துக்கு ஏற்ப உற்சாக பானம் உள்ளே இறக்கும் வசதி இருப்பதால் , இலங்கையை அபிவிருத்தி அடைந்த நாடுகலின் பட்டியலில் அவசர அவசரமாக சேர்த்திருக்கிறது.


ஐயா ராசா ! ஒரு நாட்டின் அதியுயர் கல்வி பீடங்களாக இருக்கக்கூடிய பல்கலைகழகங்களை இரண்டு மாதகாலமாக மூடி வைத்திருப்பது சின்ன பிரச்சினை தானே? நாட்டில் பார் திறக்கிறது, டிஸ்கோ கிளப் திறக்கிறது, கொல்லைப்புறத்தில் விபச்சாரவிடுதியும் திறந்து கிடக்கிறது. இவற்றைவிட வேறு முக்கியமாக என்ன வேண்டும்? இவை போதாதா இலங்கை ஆசியாவின் அதிசயம் என்று ஆவதற்கு?


இந்த மயிரைப்புடுங்கும் ஐ.நாவும் சில விசமி நாடுகளும் சேர்ந்து ஒரு நாட்டின் அபிவிருத்தியை கணக்கிலெடுக்க சில அடிப்படை கோட்பாடுகளை வைத்திருக்கின்றனவாம். அதாவது "பொருளாதார அபிவிருத்தி" மற்றது "வாழ்க்கை சுட்டெண்". இந்த வாழ்க்கை சுட்டெண்ணின் கீழ் கல்வி அறிவு, ஆயுள் எதிர்பார்ப்பு, அடிப்படை வசதிகள் இன்னும் சில இத்யாதிகளை சேர்த்து இருக்கின்றார்கள். அவையெல்லாம் இருந்தால் தானாம் அந்த நாடு ஒரு அபிவிருத்தியடைந்த , உலகின் வளம் மிக்க நாடாம். அந்த அடிப்படையில் அமெரிக்கா, பிரிட்டன், டென்மார்க், மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆப்ரிக்காவில் தென்னாபிரிக்கா மட்டும், ஆசியாவில் ஜப்பான், மற்றும் சிங்கபூர் ஆகிய ஆடுகள் மட்டும் தான் அபிவிருத்தி அடைந்த நாடுகளாம். போங்கடா.. போங்கடா போக்கத்த பயலுகளா.... எந்த ஒரு நாட்டில் இயற்கை வலம் இருக்கிறதோ அந்த நாடுதான் சிறந்த வளமான நாடு... கம்பஸ் பூட்டியிருப்பது எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது என்று நான் ஒரு அறிக்கை விடவும் ஆடிப்போய் இலங்கையை அபிவிருத்தி அடைந்த நாடுகள் பட்டியலுல் சேர்த்து, ஆசியாவின் அதிசயம் என்று அங்கீகாரமும் கொடுத்திருக்கிறது ஐ.நா. அதனை தொடர்ந்து சிங்கம், புலி, ஒட்டகச்சிவிங்கி, செங்குரங்கு போன்ற மிருக வளத்தையும், தங்கம் உட்பட்ட கனிமங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் எத்தியோப்பியா, நைஜீரியா, உகண்டா போன்ற நாடுகளையும் அவற்றின் வளத்தை கருத்தில் கொண்டு அபிவிருத்தி அடைந்த நாடுகள் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எலேய் ! இலங்கை ஆரம்பம் முதலே ஆசியாவின் அதிசயம் தான்டே.. காடு, மலை, குளம், கால்வாய், கம்மா கரை, அதில் குளிக்கும் பெண்கள் என்று எங்களிடம் நிறைய வளம் இருக்கிறது.  கருமம்.. நாட்ல கல்வி கெட்டுப்போனா நாங்க ஆசியாவின் அதிசயம் இல்லேன்னு ஆகிடுவமா? கொக்கா மக்கா.....


ஆங்... அப்புறம் சகோதரத்துவம்! எனக்கு  ஒரு சிங்கள அல்லது முஸ்லிம் குடும்பம் மண்னாய்ப் போவதில்  துளியளவு சம்மதமில்லை தான், சந்தோசமும் இல்லை. ஆனால் தமிழரது ஆதங்கம் எல்லாம் போரில் ராணுவத்தோடு எமது மக்களும் கொல்லப்பட்டிருக்கையில் , அழிவு தொடர்பான உதவிகள் மட்டும் ராணுவ குடும்பங்களுக்கு மட்டுமே போகிறதே! அப்போ தமிழர்கள் யாரும் இந்த நாட்டின் பிரஜைகள் கிடையாதா? என்று நான் கேட்கவில்லை இதோ வாழ வழியில்லாமல் யுத்தத்தில் அனைத்தையும் இழந்து இன்னும் சாகாமல் கிடக்கும் சில தரித்திரங்கள் கேட்கின்றன. அவர்களிடம் போய் சொல்லுவோம் "இலங்கை வள‌மான நாடு வாழுங்கள் என்று". அப்பால இன்னொன்று சொல்லியாவணும்... சண்டைன்னா சட்ட கிழியத்தான் செய்யும், அதனால என்ன இப்போ? இப்ப கூட சண்டைஅல செத்துப்போன ராணுவ சகோதரர்களுக்கு துரித கதியில் வீடு கட்டி குடுத்துக்கிட்டு இருக்கோம். எல்லாம் சும்மா அல்ரா மார்டன் வீடுகள். அதுக்கு பணம் சேர்க்க உள் நாட்டில் உள்ள அனைத்து சகோதரர்களிடமும் இருந்து ஏதோ ஒரு வகையில் நிதி திரட்டப்படுகிறது. எங்களது வெற்றி வீரர்களுக்கு நாங்களும் பணம் கொடுக்கிறோம்.யுத்தத்தில் எல்லோரும் பாதிக்கப்பட்டார்கள், அனைவரும் சமமான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டுமென்பதற்கு இத விட வேற என்ன உதாரணம் வேண்டும்.



அப்புறம் இந்த தமிழ் சகோதரர்கள்! என்னப்பா உங்களோட பெரிய ரோதனையா போச்சி... எப்போ பாரு வீட்ட இழந்தோம், அம்மாவ இழந்தோம், அப்பாவ இழந்தோம், தங்கச்சிய கெடுத்துட்டானுக, தம்பிய வெட்டிட்டானுக, உயிர கைல புடிச்சிக்கிட்டு வந்தோம், அநாதையா போயிட்டொம்னு பொலம்பிக்கிட்டு அலையுறீக? ஏன் நீங்க மட்டும் தான் பாதிக்கப்பட்டீங்களா ? நம்ம ராணுவம் சாகல? சும்ம எப்போ பாரு நொய்..நொய்ன்னு..... இந்தா பாருங்கோ நாமெல்லாம் சகோதரங்கோ.. நம்மாண்ட சண்ட கூடாது.. அப்பன் செத்தா என்ன .. அது போகட்டும் அழகா பரந்து விரிஞ்சி இருக்கிற இலங்கையோட அழகை பாருங்கோ.... ஜாலியா லைஃப எஞாய் பண்ணுங்கோ.... அட ! உங்களுக்கும் வீடு வேணுமா? இருங்கப்பா.. ஏதுனாச்சும் வெளிநாடுகள் நிதி கிதி குடுத்தா பாத்துக்கலாம். அதுவரைக்கும் இப்போ இருக்கிறாப்ல மரத்துக்கு கீழேயே இருந்து மண் சோறு தின்னுங்கோ....


சகோதரத்துவத்துக்கு ஒரு சமீபத்தைய உதாரணம் சொல்லணும் மச்சி உங்கிட்ட..... இந்த கம்பஸ் மூடி கிடக்கிறதால நான் அப்பா கூட கடல் தொழிலுக்கு போவது வழமை. அன்னிக்கு ஒரு நாள் நானும் அப்பாவும் தொழிலுக்கு போய்ட்டு ஒன்னுமே இல்லாம கெடந்த வலையை இழுத்து போட்டுக்கிட்டு கரைக்கு வந்தோம். அப்போ ஒரு ராணுவ சகோதரன் கரையில நின்னு என்னோட அப்பாக்கிட்ட "சிகரட் இருக்கா"ன்னு கேட்டாரு , அப்பாவும் இல்ல சார் பீடி தான் இருக்குன்னார். அதுக்கு அந்த சகோதரர் சொன்னார் "போய் வாங்கி கொண்டு வா" என்றார், அப்பா சொன்னார் " சேர் வலைய பாருங்க சேர் ஒண்டுமே இல்ல, அதோட என்னட்ட சுத்தமா காசு இல்லன்னு" அப்போ "சொன்னத செய்டா நாயேன்னு" எங்க அப்பா கன்னத்தில "பளார் பளார்" என்று ரெண்டு அறை விட்டார் அந்த ராணுவ சகோதரர். எனது முகமும் கை முஷ்டியும் மாறுவதை கவனித்த எனது மாமா என்னை வேறு பக்கமாக தள்ளிக்கொண்டு போய்விட அந்த சம்பவம் முடிந்தது.


வீட்டுக்கு வந்ததும் அப்பா சொன்னார் "தம்பி .. நீ இனி வர வேணாம், நீ இளம் பொடியன் வேற! ஏதாவது நடந்து போயிடும் வேணாம்" நான் எதுவும் சொல்லவில்லை. ஆனால் நாளை காலை மொதோ வேலையாக அப்பாவிடம் சொல்லுவேன் " அப்பா அதெல்லாம் சகோதரத்துவத்துக்குள்ள சகஜம், அடிச்சா என்ன அவன் உங்க தம்பி தானே ( அடித்த சகோதரருக்கு என்னை விட வயது குறைவாகவே இருக்கும்) அடியை வாங்குங்க, அண்ணன் தம்பிக்குள்ள இதெல்லாம் சகஜமப்பா!" என்ன சகோதரத்தும் சரி தானே!


அப்புறம்...... தனி நாடா? வேணாமய்யா.... இத்தனை காலமும் இந்த பெயரால் பட்டது போதும், ஆனால் ஒரு சமஷ்டி முறைக்காவது தயாராக இருக்கிறதா நம்ம  சகோதரம்? உங்களுக்கொன்று தெரியுமா ? அமேரிக்காவில் நடைமுறையில் இருக்கும் சமஸ்டி முறையானது அந்தந்த மாநிலங்களை தாம் விரும்பினால் தனி நாடுகளாக பிரிந்து போகும் அதிகாரத்தை வழங்குகிறது. ஆனாலும் இன்னமும் அத்தகைய ஒரு முடிவை எந்தவொரு மாநிலமும் எடுத்ததாக தெரியவில்லை. காரணம் மத்திய ஆட்சி அந்த மாதிரியான ஒரு சுத்தந்திரமான ஆட்சியை நடாத்துகிறது. சிங்களவரே இல்லாத மன்னார் பகுதியில், சகோதர மொழி பேசும் ஒருவரை நீதிபதியாகவும், பிரதேச செயலாளராகவும் , அரச அதிபராகவும் நியமித்து அழகு பார்த்த எமது மத்திய அரசு , சமஸ்டி என்றால் என்ன விலை என்று கேட்பார்கள். அது சரி இத்தனை காலமும் பொலிஸ் அதிகாரமாவது தாருங்கள் என்று இந்த வாழ வழியில்லாத தமிழர்கள் கத்தி தானே பார்த்தார்கள். அது சரி அடி முட்டாள்களின் கைகளில் எதற்கு ஆராட்சி புத்தகத்தை கொடுப்பானேன்! அதனால் தான் வடக்கில் பாராளுமன்ற உறுப்பினர் தொகையும் குறைக்கப்படுகிறது போலும். இவர்கள் என்ன ஆணியா புடுங்குவார்கள். தமிழர் தரப்பில் ஒரு சிங்கள சகோதரர் பாராளுமன்றத்துக்கு போனார் என்ன குடியா முழுகிவிடும்? ஆனால் என்ன யாழ்ப்பாண மக்கள் சொல்வது அவருக்கு புரியாது. அதனால் என்ன ? அவர் தனது சிங்கள சகோதரர்களுக்கு ஏதாவது நல்லது செய்துவிட்டு போகட்டுமே! யார் நன்மை அடைந்தால் என்ன அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகளே!


ஆங்.. அப்புறம் கருத்து சுதந்திரம்...... அமேரிக்காவின் வெள்ளை மாளிகையில் முன்பு அமைக்கப்பட்டிருக்கும் பேச்சு மேடையில் ஏறி நின்று "ஒபாமா நீ ஒரு அடி முட்டாள் " என கத்தி அவரது அரசை விமர்சிக்கும் உரிமை அவர்களுக்கு இருகிறது. உங்களால் முடிந்தால் நமது ஜனாதிபதியின் அலரி மாளிகையின் முன்பு நின்று ஏதும் கத்தக்கூட வேண்டாம். "ஐ ஆம் ஃபிறம் யாழ்ப்பாணம்" என்று சொல்லிவிட்டு சில நிமிடங்கள் உங்களால் அந்த கதவருகில் நிற்கமுடிந்தால் அதுவே சாதனை தான்.



ஆமா! ஆமா ! தமிழர் யாருமே அழிந்துவிட மாட்டோம்.... காரணம் முல்லைத்தீவில் நாயாறு கழிமுகத்தில் இருந்த தமிழர் அப்புறப்படுத்தப்பட்டு , தென்னிலங்கயில் வாழ வழியில்லாமல் இருந்த 150 சிங்கள சகோதர குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டிருக்கின்றன. அங்கு வாழ்ந்த மீன்பிடி குடும்பங்கள் இப்போது ரோட்டு வேலை செய்கின்றன. ஆமா! ஆமா! நாம் எல்லோரும் சகோதரர்கள். இப்புடி பகிர்ந்து கொண்டு தான் வாழவேண்டும். நாம் அழிந்து போக மாட்டோம். இப்போ அந்த 53 குடும்பங்களுக்கு ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தில் இடம் கொடுத்து மீன் பிடிக்க விடுங்கள் என்று நான் கேட்கப்போனால் சகோதரங்களுக்கு இடையில் சண்டை மூட்டிகிறான் என்று என்னை பலி கடாவாக்கி விடுவீர்கள் என்பதால் , அந்த  தமிழ் குடும்பங்கள்   ரோட்டில் கல்லுடைத்து வாழுவதே இலங்கை இறையாண்மைக்கு பொருத்தமானதாக இருக்கும். யார் மீன் பிடித்தால் என்ன அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகளே! அப்ப்டியே ஒரு எட்டு காலி துறைமுகத்துக்கு போய் நானும் இலங்கை தாயின் பிள்ளை தான் , எனக்கும் இந்த மீன்பிடி துறைமுகத்தில் இடமிருக்கிறது என்று கூறி, அந்த அனுமதியை வாங்கி வந்து யாரெல்லாம் தமிழ், தமிழர், தமிழீழம் என்று அலைகிறார்களோ அத்தனை பிரிவினை வாதத்தின் பிள்ளைகளுக்கும் , இலங்கையின் இறையாண்மைக்கும் சுபீட்ச ஆட்சிக்கும் எதிரான கலகக்காரர்களின் முகத்தின் மேல் விட்டெறியுங்கள். அது தான் இலங்கை ஒரு இறையாண்மை பொருந்திய நாடு என்பதற்கு தக்க ஆதாரமாய் இருக்கும்.


அப்படியே கொத்தலாவை ராணுவ பல்கலைகழகத்துக்கு  போய் நான் தமிழன் தான், நானும் இலங்கை தாயின் புத்திரன் தான் நானும் ராணுவத்தில் சேருவேன் என்று அடம்பிடித்து ( அடம்பிடிக்க தேவை இருக்காது, காரணம் ஒவ்வொரு தமிழனும் இலங்கை தாயின் பிள்ளைகள் என்று ராணுவமும் கருதுவதால் இலகுவாக உங்களுக்கு இடம் கிடைக்கும்) நான்குவருட பயிற்சியை முடித்து , ராணுவ உயரதிகாரியாக உயர்ந்து காட்டியும் விடுங்கள். இந்த தமிழீழ கோஷம் போடுபவர்களின் காலிடுக்கில் நான் நெருப்பு வைக்கிறேன். யாரு கிட்ட? நாங்கெல்லாம் ஒரு தாயின் பிள்ளைகள், நாங்கெல்லாம் சகோதரர்கள்....... யாரு வேணும்னாலும் ராணுவத்தில் சேரலாம் எங்கள் நாட்டில்...... அதானே பிறந்த அனைவருக்கும் வாழ தெரியும்.. சர்வதேசமோ , ஐ.நாவோ எந்த ஆணியையும் புடுங்க வேண்டியதில்லை. மரங்களுக்கு கீழும், பற்ரை மறைவில் மலசலம் கழித்தும், மறைவிடங்களில் நடாத்தப்ப்டும் சில பல கற்பழிப்புகளோடும் தமிழினமும் இலங்கையில் தெருநாய்கள் போல், அல்லது காட்டு சிங்கங்கள் போல் தலை நிமிர்ந்து வாழும்! வாழ்க ஜனநாயகம்!


அப்புறம் இந்த இஸட் ஸ்கோர் . சிலருக்கு   ஒன்று மட்டும் புரிவதே இல்லை. அதாவது இந்த இஸட் ஸ்கோர் பிரச்சினையை இப்போது மட்டுமல்ல அது ஆரம்பகாலம் தொட்டே  கடும் சூடாக விவாதிக்கப்படுகிறது என்று. அது போக இலங்கையில் தமிழர் போராட்டம் ஆரம்பமவதற்கு இந்த இஸட் ஸ்கோர் முறை ஒரு பாரிய பங்களிப்பு செய்தது என்று. அதாவது இலங்கையில் இஸட் புள்ளி முறையில் பல்கலைகழகங்களுக்கு மாணவர்களை உள்ளெடுப்பதற்கு முன்னர் , நாடாளாவிய ரீதியில் தான் மாணவர் உள்வாங்கல் இடம்பெற்றது. அதாவது உதாரணமாக கணித பிரிவில் 200 பேர் பல்கலைகழகங்களுக்கு உள்வாங்கப்படுவார்களானால் , இலங்கையில் கணிதப்பிரிவில் முதல் 200 இடங்களுக்குள் வந்தோர் உள்வாங்கப்பட்டனர். இப்படித்தான் ஒவ்வொரு பிரிவுக்கும் உள்வாங்கல் இடம்பெற்றது. சில காலம் கழித்து பார்த்தார்கள், பல்கலைக்கழகங்களில் சகோதரத்துவ சமநிலை குழம்பி இருந்தது. அதாவது பல்கலைக்கழகங்களில் தமிழ் சகோதர்களின் எண்ணிக்கை அதிகமாக ஆரம்பித்தது. அடடே! இது இலங்கையின் இறையாண்மைக்கு புறம்பாக தெரிகிறதே, பல்கலைக்கழகங்களில் அனைத்து சகோதரர்களும் சமமாக இருக்கவேண்டுமென்ற "ஒரே" நல்ல நோக்கத்தில் இந்த இஸட் ஸ்கோர் முறைமை கொண்டுவரப்பட்டு, தமிழ் சகோதரர்களின் உள்வாங்கலும் குறைக்கப்பட்டது. அப்புறம் கணிசமான சிங்கள சகோதரர்கள் அதிகளவில் உள்வாங்கப்பட்டார்கள். அவர்கள் தானே இலங்கை திருநாட்டில் அதிகம் வாழ்கிறார்கள், அதிகமானோருக்கு மதிப்பு கொடுப்பது தானே ஜனநாயகம்? அந்த வகையில் ஆசியாவிலேயே மிகச்சிறந்த ஜனநாயக நாடு இலங்கைஎன்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன்.


அப்புறம் சமீபத்தைய பிரச்சினை, அதாவது இந்த வினாத்தாள் திருத்தும் குளறுபடி ,  முதல் பெறுபேறின் அடிப்படையில் வைத்திய துறைக்கு தெரிவாகியவன் , மீள்திருத்தப்பட்ட இரண்டாம் பெறுபேற்றின் அடிப்படையில் வைத்தியசாலையின் வெளிவாசல் திறப்பதற்கு கூட தகுதி பெறாமல் போனது எல்லாம் சின்ன விசயம். முதுகு சொறிய நல்ல சொர சொரப்பான சுவர் இல்லாதவர்களும் , முனை மழுங்கிய கத்தி இல்லாதவர்கள் மட்டுமே இந்த விடையங்களை முதுகு சொறிய பயன் படுத்துகிறார்கள். இந்த சின்ன விடயத்தை எல்லாம் பெரிது படுத்தாமல் , இலங்கை ஆசியாவின் அதிசயம் என்பதிலும், ஹிக்கடுவையில் நல்ல மணலுடன் கூடி பீச் உள்ளது என்பதிலும், நுவரெலியாவில் நல்ல குளிரில் , ரெண்டு பெக் விஸ்கி அடிப்பது போன்ற அதிமுக்கியமான, இலங்கையை உலகின் அதிசயமாக மாற்றக்கூடிய விடயத்தில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்.

அடுத்து ஆடி வாங்கலாமா இல்ல லம்போகினி வாங்கலாமா?

எவன்டா சொன்னது இலங்கை வங்கிகளில் காசு இல்லை என்று? இலங்கை ஒரு கடன் கார நாடு என்று? சொகுசு மாளிகைகள் இல்லையா?  இங்கே கார் இல்லையா?

"ஆடி", "ஆவணி",
"ஜக்குவார்", "ஜக்குவார் தங்கம்" "தளபதி தினேஷ்"
"பி.எம்.டபிள்யூ", "எம்.பி.பி.எஸ்"
" பென்ஸ்" , "கலர் பென்ஸில்ஸ்"
"லம்போகினி" ," அம்சவர்தினி", "திலகாவதி" ,
 "புகர்டி", " அன்டேட்டேகர்",
 "அஸ்டர் மாட்டின்", "பொஸ்டன் சீனி டின்"

போன்று எவளவு அதிநவீன கார்கள் இலங்கையில் உலா வருகின்றன. மன்னாரில் பெட்டிக்கடையில் மீன் விற்கும் அந்தோனி "லம்போகினியில்" தான் கருவாடு சுமந்து சந்தைக்கு போகிறார். மட்டக்களப்பில் ஆட்டிறைச்சி விற்கும் கரீம் பாய் "அஸ்டன் மார்டின்' காரில் தான் அடுத்த தெரு போகிறார். ஹம்பாந்தோட்டையில் பேரிக்காய் விற்கும் மன்கலிகா வீட்டில் நான்கைந்து "டொட்ஜ் சேலேஞ்சர்" கார்கள் அணிவகுக்கின்றன. ஆக இலங்கையில் "பிராடோ " ரக சொகுசு கார்களை வைத்திருப்பது, பாராளுமன்றத்தில் இருக்கின்ற ஒரு சில ஃபிராடுகள் மாத்திரம் அல்ல. சாதாரண குடிமகனும் வைத்திருக்கிறான் என்பது தான் எமது தாய்த்திருநாட்டின் பெருமை. எமது நாட்டைப் போலவே ஆபிரிக்காவின் உகண்டா, கம்போடியா, சோமாலியா, நைஜீரியா போன்ற வளம்மிக்க நாட்டின் தலைநகரங்களிலும் சொகுசு கார்களும் அடுக்குமாடி குடிமனைகளும் உள்ளன. எனவே இலங்கை போல அந்த நாடுகளும் செல்வம் கொழித்து இருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சியே! ஆனாலும் எமது "இலங்கை உலகின் அதிசயம்" நோக்கத்தில் அந்த நாடுகள் போட்டிக்கு நிற்பதால் சீக்கிரம் அந்த நாடுகளை பின்னுக்கு தள்ள பாடுபடவேண்டும். பொருளாதாரத்தைப் பற்றி வாய் கிழிய கத்தும் அற்ப பதர்களே உங்களுக்கு ஒரு உண்மையை உரைக்க விரும்புகிறேன். அமேரிக்கன் ஒரு டாலர் தான் கொண்டுவருவான் ஆனால் நாங்கள் அதுக்கு இணையாக அவனுக்கு 130 ரூபாய்களை கொடுப்போம். இனி வரும் நாட்களில் நாங்கள் கொடுக்கும் தொகை அதிகரிக்குமே ஒழிய குறையாது. இப்போது சொல்லுங்கள் பொறாமை பிடித்தவர்களே ஒரு அமேரிக்கன் கொடுக்கும் ஒத்தை டாலருக்கு 129 ரூபா பேலதிகமாக செலுத்தும் எங்களது செல்வ கொழிப்பையா ஏள‌னம் செய்கிறீர்கள்? ஒன்று பெரிதா 130 பெரிதா?


யுத்தம் நிறைவடைந்த பின்னர் மிச்சம் மீதி இருக்கும் தமிழர்களுக்கு கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளை பார்த்தீர்களா? சும்மா கண்ணை பறிக்குதுல்ல...... நானும் சில சர்வதேச பிரமுகர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில  வீடுகளை பார்வையிட சென்றோம், உண்மையில் அழகாக நேர்த்தியாக இருந்தது. அப்போது நான் கேட்டேன் "முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு, அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், யாழின் சில பகுதிகள் , மன்னாரின் பல பகுதிகள்" இங்கெல்லாம் எங்களை கூட்டிப்போங்கள் என்று , அப்போது "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்று பதில் வந்தது. ஆகவே அந்த பகுதிகளில் மக்கள் நீச்சல் குளித்தில் குளித்து, சன் கிறீம் தடவி , சூரியக்குளியலும் செய்து பின்னர் வீட்டில் நீராவி குளியல் எடுத்துக்கொண்டிருப்பார்கள் என்று எனக்கு நன்றாகவே புரிந்தது. இதிலிருந்து என்ன தெரிகிறது.. தெற்கின் சகோதரர்களை போலவே வடக்கின் சகோதரர்களும் சமமாக கவனிக்கப்படுகிறார்கள். அப்புறம் இந்த கொள்ளை அடிக்கிற பயலுக எல்லாம் கொஞ்சம் தாங்கப்பா! அதாங்க... கல்விக்கு 6% பட்ஜெட்டில் ஒதுக்கினால் அங்கு கைவைத்து காசு அடிக்க முடியாது என்பதால் ( காரணம் அங்கு புத்தி ஜீவிகளது பார்வை அதிகம்), சண்டையே இல்லை என்றாலும் பாதுகாப்புக்கு மட்டும் பல கோடிகள் ஒதுக்கி அங்கே லவட்டும் ஜாம்பவான்களே கொள்லையடிப்பதில் கொஞ்சம் இங்கே குடுங்கப்பா.... அப்புறம் பாருங்க ஒபாமா வீட்லயே ஒண்ணுக்கு அடிக்கிற அளவுக்கு வளந்துரலாம்.

கார்களை நிறுத்த இடம் தர கோரி ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள்!

இறுதியாக இலங்கை ஒரு வளமிக்க நாடு. நாட்டின் வளர்ச்சியை அந்த வீணா போனா ஐ.நா கல்வியை வைத்துக்கொண்டு அளவிட்டாலும் அது கிடக்கட்டும் ஒரு பாட்டில். நாங்கள் வளம்மிக்கவர்கள் , அதனால் நாட்டின் புத்திஜீவிகளில் கணிசமானோர் குடியிருக்கும் பல்கலைக்கழகங்கள் பூட்டியே இருக்கும். தமிழர்கள் கொல்லப்பட்டதெலாம் அண்ணன் தம்பி சண்டையப்பா... அதுக்கு எதுக்கு ஐ.நாவும் அமேரிக்காவும், அத நாங்களே பாத்துக்கிறோம், எல்லா பொடி பசங்களும் தள்ளி நில்லுங்கோ! மரத்துக்கு கீழே மண்சோறு தின்னும் ஈனப்பட்ட தமிழருக்கு , மற்ற சகோதரங்கள் நாங்களா பாத்து ஏதாவது பண்ணுவோம் அது நல்லதோ கெட்டதோ, எவனும் உள்ளவராத! அப்புறம் தமிழ் நாட்ல இருந்துக்கிட்டு " எங்கள் உறவுகள், எங்கள் ரத்தம்" என்று குதிப்பதையும் நிறுத்திக்கோங்கோ. யாருய்யா நீங்க? தமிழ் நாட்டில் இருந்தால், தமிழ் கதைத்தால் நீங்கல் எங்கள் சகோதரர்கள் என்று ஆகிவிடுமா? என்னதான் அடித்தாலும், எங்கள் கழுத்தை அறுத்தாலும் , என் கண்முன்னே எனது அக்காவை கற்பழித்தாலும் சிங்களவெர்களே எங்களது சகோதரர்கள். அது மாற்ற முடியாதது.


நான் கொழும்பில் இருந்துகொண்டு, காலை மெக்டொனால்ட்ஸ் போய் தின்று , மதியம் கே.எஃப்.சியில் ஆகாரம் அருந்தி, பின்னேரம் தாஜ் சமுத்திராவில் டீ குடித்து இரவு கிளப்பில் ஆடிவிட்டு இப்போது ஏ.சி ரூமில் இருந்து இந்த பதிவை போடுகிறேன். இன்னமும் வடக்கில் கரண்டே காணாத சகோதரர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் இலங்கை ஆசியாவின் அதிசயம்! வாழ்க ஜனநாயகம்!


டிஸ்கி: விளையாட்டு வீரர்களையும், கலைஞர்களையும் சங்ககாலம் முதற்கொண்டே தூதுவர்களாகவே நமது பண்பாடு பார்க்க பழகியுள்லதால், நண்பரின் கிரிக்கட் ரசனை தொடர்பான கூற்றோடு நானும் ஒத்துப்போகிறேன்.

டிஸ்கி : அந்த பதிவுக்குரியவன் எனது நண்பனே! தயவு செய்து  அவது பிளாக்கில் காரமான பின்னூட்டங்கள் ஏதும் இடவேண்டாம்!

டிஸ்கி: அவசர அவசரமா எழுதப்பட்ட பதிவு! ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு மன்னிக்கவும்!


Thursday, August 16, 2012

கிஸ் அடிச்சது பதினெட்டு மாசத்துக்கு முன்னாடி! அதுக்கு அப்புறம் நடந்தது எவளவோ இருக்கு! ஹெஹ்.. ஹேய்!!




பதிவர்கள், மூத்த பதிவர்கள், பிரபல பதிவர்கள் , ஃபேஸ்புக் போராளிகள், ஃபேஸ்புக் & டுவிட்டர் இலக்கிய குடும்பத்தை சேந்த எல்லாரும் ஒன்னா சேந்து நின்னு கைகொட்டி தங்களுக்கு தாங்களே வாழ்த்து தெரிவிச்சுகிட்டாய்ங்க! ஆம்பள பொம்பள பாரபட்சம் பாக்காம மாறி மாறி கட்டிப்பிடிச்சுக்கிட்டாய்ங்க! சில பேரு பட்டாசு கொழுத்தி வானத்தில விட்டாய்ங்க!  சில பேரு பக்கத்து வீட்ட கொழுத்தி விட்டாய்ங்க! நாங்கெல்லாம் அப்பவே அப்புடி! இப்ப கேக்கவா வேணும்னு டாகுடருக்கு மேல போயி "பஞ்ச்" வுட்டானுக! அதிலும் சில பேரு "யுரேகா .. யுரேகா.."ன்னு அம்மணக்கட்டையா மூத்திர சந்தெல்லாம் ஓடித்திரிஞ்சாய்ங்க... தமிழ் கூறும் நல்லுலகமே ஒரெ குதூகலமா இருந்திச்சி... அவனவன் கண்டுபிடிப்புக்கான அடுத்த நோபல் பரிசு தனக்கு தான்னு பேச ஆரம்பிச்சுட்டான். " விக்கிலீக்ஸே உனக்கு சவால் விடுகிறேன்னு" ஸ்டேடஸும் போட்டாய்ங்க...... என்ன தாம்பா நடந்திச்சி?


சில்லா பட்டி செல்லத்தாயும் அந்த சின்னப்பய செவலக்காளையும் வாய் மேல வாயி வச்சி கெணறு தோண்ட்றாப்ல ஒரு போட்டாவ நம்ம பயலுக இன்டர்நெட்டில வுட்டு பெரிய தொழினுட்ப புரட்சிய உண்டுபண்ணிட்டாய்ங்கல்ல. ஆமா! இல்லையா பின்ன !!! இதெல்லாம் எம்மாம் பெரிய சாதனை? பெரிய பெரிய பதிவருங்க.... சமூக வலைத்தள போராளிங்க எல்லாருமே இந்த போட்டாவ தங்க பம்க்குக்கு போட்டு , ஷெயார் பண்ணி சமூகத்து மேல தங்களுக்கு இருக்கிற அக்கறைய காட்டிப்புட்டாய்ங்க... அதனால தான் இம்புட்டு கோலாகலம்! 


அதில பாருங்க , ஃபேஸ்புக்ல செலது இருக்குங்க... .. ஒலகத்தில எந்த மூலைல அநியாயம் நடந்தாலும் , மூக்கு பொடச்சு 'கொக்கரக்கோன்னு" கொக்கரிச்சு அத்த போயி ஒரு பெரிய இது மாதிரி .... " டோன்ட் லைக் திச் பிக்சர், பிளீஸ் ஷெயார்" அப்டீன்னு போட்டுவைப்பாய்ங்க. அந்த மாதிரி லூசு பயலுக போடுற போட்டக்களை கூட கண்டுகொள்ளாம, அசால்டா போறவய்ங்க நம்ம போராளிங்க..... ஒருத்தன் அக்ஸிடன்டாயி மண்ட பொளந்து கெடப்பான். அதுக்கு ஒரு லைக் போட்டிட்டு அடுத்த வேலைய பாக்க கெளம்புற பிரபல ஃபேஸ்புக் போராளிங்க எல்லாரும் , இந்த மேட்டர விழுந்து விழுந்து ஷேர் பண்ணி சமூக சேவ பண்ணிக்கிட்டாய்ங்க! அதிலையும் போட்டோ ஷொப்ல போட்டு , பெரிய பெரிய எஃபக்டு எல்லாம் குடுத்து , பிக்ஸார் மூவிசுக்கே சவால் விடுறாப்ல போட்டால்லாம் போட்டானுக!


அதுலையும் தங்களோட வாய்க்கு எட்டாம போன செல்லத்தாயியோட வாயி நாற வாயின்னு ஐநா சபைக்கு அறிவிச்சுட்டடில நம்மளுகலுக்கு  ஏதோ காவிரி தமிழ்  நாட்டுக்குள்ளாற பாயிறத விட மேலான ஆனந்தம் பாயுது. இன்னும் சில 40+பதின்ம வயது வலைத்தள போராளிகள், செல்லத்தாயிக்கு 30 வயசு ஆகிட்டதால அவள ஆன்டி லிஸ்டில சேர்த்து ஆனந்தப்பட்டுகிட்டு இருக்காய்ங்க.


ஆறாம் வகுப்பில அல்ஜீபிரா ஒழுங்கா தெரியாதவன் கூட இந்த மேட்டர வச்சி.... ஆறேழு பதிவு போட்டுட்டானுக! ஒடனே பிரபல பதிவருக்கு மூக்கு வேர்த்திடுச்சி... காலேல சரியா மோஷன் போகலன்னா கூட அத பத்தி மூணு பதிவு போடுறவரு.. இந்த ஒலக மகா கண்டுபிடிப்பு நடந்திருக்கிறப்ப , தானும் பதிவு போடலன்னா தன்னோட கெவ்ரவம் கெட்டுடும்னு பதிவெழுத கெளம்பினாரு.


மத்த எல்லரையும்விட வித்தியாசமா தான் எழுதுவேன்னு மரண மொக்கை போடுற அந்த பதிவரு இந்த மேட்டரையும் வித்தியாசமா டீல் பண்ண முடிவு பண்ணி செல்லத்தாயி & செவலக்காளை ஊருக்கு கெளம்பி போயி தகவல் சேகரிக்க பொடி நடையா பொறப்பட்டாரு.


தன்னோட என்குவாரிய செல்லத்தாயி கிட்டேர்ந்து ஆரம்பிச்சாரு..... யாரிந்த செல்லத்தாயி.....வேலூர் மாவட்டம் .... மொக்க குளம் தாலுகா... அங்கே ஒரு அடர்ந்த காடு ...... அப்டீன்னு ஸீ தமிழ் நம்பினால் நம்புங்கள் ரேஞ்சுக்கு அடித்தொண்டைல ஆராச்சி பண்ணினாரு. செல்லத்தாயி யாருன்னா , எழவு வூட்ல ஒப்பாரி, தாலாட்டு, கொலவ எல்லாம் பாடுற ஒரு அல்ரா மார்டன் பிகரு. சும்மா செவ செவன்னு ....... பாண்ஸ் வெளம்பரத்தில வர்ர ஜிகிலிஸ் மாதிரி இருப்பா. 


அப்புறம் இந்த செவலகளை யாருன்னா... அவனும் ஒரு மியூசிக்கல் ஃபிகரு தான். ஊர்ல எழவு விழுந்தா அவன் தான் மியூசிக் கம்போஸ் பண்ணுவான். ஆள பாத்தாக்கா ... சீவி விட்ட பென்சிலுக்கு ஆட்டு தாடி ஒட்டி வச்சாப்ல தழ‌தழன்னு இருப்பாப்ல. அப்புடித்தான் ஆரம்பிச்சிருக்கு ரெண்டு பேருக்கும் சங்காத்தம். இப்போ அவுங்க ஊருக்காரய்ங்க எல்லாம் " எலேய் செல்லத்தாயி வாய செவலக்காள கடிச்சு வச்சிட்டாம்பா "ன்னு பேசிக்கிற அளவுக்கு போயிருக்கு.


இந்த ரெண்டுபேர பத்தியும் நம்ம பிரபல பதிவரு ஊருக்குள்ள விசாரிச்சு பாத்தாரு. திண்ணைல செவனேன்னு படுத்திருந்த ஒரு பெருச எழுப்பி விசாரிச்சாரு நம்ம பதிவரு. அதுவரைக்கும் அக்குள்ள கைய வச்சி ஆராட்சி பண்ணிக்கிட்டு இருந்த அந்த பெரியவரு , கடைசியா கடஞ்சு.. கடஞ்சு எண்ணை எடுத்திட்டாப்ல... அப்புடியே அக்குள்ள விட்ட கைய வாயில விட்டு , அதக்கியிருந்த வெத்திலைய , வாய் ஓரமா பார்க் பண்ணிக்கிட்டு பதில் சொல்ல ஆரம்பிக்கிறாரு.




"தம்பி இந்த செல்லத்தாயி இப்போ தான் இப்புடீன்னு இல்லப்பா..... " புள்ளீச்"ன்னு வெத்தலைய வாசல்ல துப்பிக்கிட்டே ஆரம்பிச்சாரு.

"முன்னாடி இவோ செல்வதம்பின்னு ஒரு கூத்துகட்டுற பயலு கூட இருந்தவ. இவன் செவலக்காளையும் ஆளுதான் பாக்க அடிபட்ட கோழி மாதிரி இருக்கான், ஆனா மகா கேடி. மூணு அப்டீன்னு ஒரு கூத்து, அந்த கூத்துக்கு இவன் தான் தார , தப்பட்ட எல்லாமே, அப்புறம் தான் விசயமே தெரியும் , அந்த கூத்து கட்டின பொண்ணு கூடயும் இவன் வானசாஸ்திர ஆராட்சி எல்லாம் பண்ணி இருக்கான்னு"

"புளீச்"

"அந்த பொண்ணு பேரு கூட ஏதோ.... அதாம்பா கொஞ்ச நாளா இந்த் சொம்புத்தேவன் கூட சுத்திச்சே... ஆங்... அசுவதாத்தா!" "அந்த பொண்ணு கூடவும் இவன் கொஞ்சம் அப்புடி இப்புடின்னு அரசல் புரசலா கத வந்திச்சு"

பிரபல பதிவர் எல்லாத்தையும் நோட் பண்ணிக்கிட்டார். "ஐயா பேரு என்னங்க?"

"என்னையா கேட்டிங்க ? எம் பேரு கமலகாந்தன்"

"ஐயா கூட பொஸ்பரூபம் அப்டீன்னு ஒரு கூத்து கட்டுறீங்களாமே? அதுலயும் இந்த செல்லாத்தா இருக்காங்களாமே! அப்போ ஐயா கூடவும் , செல்லாத்தா அப்புடித்தானா?"

"புளீச்" "போடா நானே கடுப்பில இருக்கேன்"

முகத்தில வழிஞ்ச வெத்தில எச்சிய தொடச்சுகொண்டே பிரபல பதிவர், பஞ்சாயத்து ஆபிசுக்கு போனாரு. அங்கதான் பெருசுங்க எல்லாம் கூடி செல்லாத்தாளையும், செவலகாளையையும் விசாரண பண்ணுறாய்ங்களாம். பதிவரு உள்ள போறப்ப செவலக்காள பேசிக்கிட்டு இருந்தான்.

"அது வந்துங்க ஐயா, இந்த வாயி இருக்கில்ல வாயி! அதுக்குள்ளாற தேனு, கருப்பட்டி, மொளகா, எலிமருந்து, பால்ட்டாயில், அதிமதுரம், பெவிக்கால் அப்புறம் கொஞ்சம் மொளகா தூள் எல்லாம் போட்டு கொப்புளிச்சுக்கிட்டே பாட்ட்டு பாடினா கொரலு நல்லா வரும்னு ஒரு யோசனை வந்துச்சுங்க. அது தான் அப்புடி மொயற்சி பண்ணி பாத்தோமுங்க"

"எலேய் மூதேவி, அப்புடி பண்ணுறதா இருந்தா நீயி பண்ண வேண்டியது தானே, அதுக்கு ஏண்டா செல்லாத்தாயி வாய கடிச்சு வச்ச?"

"அது வந்துங்... அடு ஒரு டூயட்டு பாட்டுங்... அதான்"

இப்போ செல்லத்தாயி குறுக்க பேசினா...

"மாக்கானுவளா.. அது நடந்தது பதினெட்டு மாசமாச்சு. அத்தையே இப்போ தான் கண்டுபிடிச்சிருக்கீங்களே. அந்த பதினெட்டு மாச கேப்புல நடந்த்தெல்லாம் நீங்க எப்போ கண்டுபிடிச்சு? எப்போ ஃபேஸ்புக்ல போட்டு? ஹெஹ்.. ஹேய்..ஹேய்....."



செல்லத்தாயி இப்புடி சொன்னது தான் தாமதம். அங்க கூடி நின்ன பிரபல பதிவருங்க எல்லாருக்கும் பயங்கர கோவமாயிரிச்சி.... ஆளாளுக்கு அடிடா புடிடான்னு கொழுந்துவிட்டு எரிஞ்சானுக. ஃபேஸ்புக் போராளிங்க கூட பயங்கர காண்டாயிட்டாய்ங்க... "இப்போ பாரு கலாசாரா சீரழிவு.. அப்பூடி இப்பூடின்னு ஸ்டேடஸ் போட்டு உண்டு இல்லன்னு ஆக்கிடறோம் பாருன்னு"பெரிய்ய பூகம்பமே வெடிச்சிரும் போல இருந்திச்சி....  "என்னா துணிவு உனக்கு ? பண்றதையும் பண்ணிட்டு பதினெட்டு மாச க‌ணக்குன்னு பல்ல இழிச்சிக்கிட்டு சொல்றியே? இருடி பிரபல பதிவரகள்ன்னா யார்னு காட்டுறோம்னு " ஆளாளுக்கு லேப் டாப்பையும் , மொபைலயும் தட்டி தொறந்தானுக. அப்போ செல்லத்தாயி வாய ததொறந்தா...


"என்னாங்கடா? என்ன விளாடுறீங்களா? நித்தியானந்தா ரஞ்சிதா வீடியோ போட்டீங்க , அது ஓக்கே... ஏன்னா அந்தாளு மதத்தோட பேர்ல உல்டா பண்ணீட்டு இருந்தான் , அது சட்ட விரோதம். அத்த ஆளாளுக்கு ஓட்டு ஓட்டுன்னு ஓட்னீங்க ஆக்கே... இது என்னோட பர்சனல் மேட்டர்! நான் ஒரு நடிகைன்னா எது வேணும்னாலும் போட்ருவீங்களா? என்னோட அனுமதி இல்லாம , என்னோட வயக்காட்டுக்குள்ள வந்ததே தப்பு, அதுவும் இல்லாம என்னோட பர்சனல் போட்டாவ ஆளாளுக்கு ஷேரா பண்றீங்க....? இருங்கடா உங்க அவ்ளோ பேரையும் போலீசில புடிச்சு குடுக்குறேன்"


சொல்லி முடிக்கல அத்தனை போராளிகளும் அவனவன் வூட்ல பெட்ஷீட்டுக்குள்ள பொத்தீன்னு படுத்திருக்கான். இன்னும் கொஞ்சம் பேரு ஏழெட்டு ஆன்மீக பதிவா போட ஆரம்பிச்சான். நம்ம பிரபல பதிவர் என்ன பண்ணினாரு? ஃபேஸ்புக்ல தான் போட்ட செல்லத்தாயி செவலக்காள போட்டாவ எப்புடி ரிமூவ் பண்ரதுன்னு ஆளுங்க கிட்ட ரகசியமா ஐடியா கேட்டுக்கிட்டு இருக்காரு!

Sunday, August 12, 2012

முகமூடி சினிமா விமர்சனம் - பிரீமியர் ஷோ!




அப்பிடி இப்பிடி என்று ஒரு மாதிரியாக நேற்று முகமூடி திரைப்படத்தை பிரீமியர் ஷோவுக்காக திரையிட்டார்கள். படத்தின் பிரீமியர் ஷோவுக்கான அழைப்பிதழ் ஒரு மாதத்துக்கு முன்னமே அனுப்பபட்டிருந்தாலும் போஸ்ட் புரட்க்க்ஷன் வேலைகளில் ஏற்பட்ட தாமதத்தால் தான் இந்த தாமதம் என்று, படத்தின் பிரீமியர் ஷோவுக்கு வ‌ந்திருந்த இயக்குனர் மிஸ்கினின் உதவி இயக்குனர் ஒருவர் தெரிவித்திருந்தார். படம் தொடங்கிச்சு... பாத்தும் முடிச்சாச்சு... இப்போ ஏற்பாட்டு குழு கேட்டுக்கொண்டதுக்கு இணங்க படத்துக்கான விமர்சனம் போடும் நேரம்......


முதலில் எத்தனை எதிர்மறை கருத்துக்கள், தாமதங்கள் இன்ன பிற இத்யாதிகள் இருந்தாலும் , தமிழில் ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்டுடன் துணிவாக களமிறங்கிய மிஸ்கினுக்கும் ஒரு சல்யூட். நமது நாயகர்கள் எந்த வித பவரும் இல்லாமல் பறந்து பறந்து அடிக்கையில் , அதே வேலையை சுப்பர் பவருடன் ஒருவன் செய்கிறார் என லாஜிக்குடன் சொல்கிறார் இயக்குனர். தமிழ் படங்களில் லாஜிக் கேப்பவனுக எல்லாம் , இந்த படத்தை பொறுத்த வரை மூடிக்கிட்டு பின்னால வாங்கப்பா.....

சரி படம் என்னதான் சொல்கிறது என்று பார்த்து விடலாம்.........


நண்பர்கள் சொந்தம் பந்தம் என்று சந்தோஷமாக இருக்கிறது ஜீவாவின் கால்கள். ஜீவாவின் கால்களுக்கு கராத்தே கற்பது என்றால் அலாதி பிரியம். அட !அது ஜீவாவின் கால்கள் தான் என்று எப்படி தெரியும் என்கிறீர்களா ரொம்ப ஸ்மார்ட்டா டெனிம் போட்டிருப்பதிலும், அழகாக  நடப்பதிலுமிருந்தே அது குறீயீடாக தெரிறது. ஜீவாவுக்கும் மொத்தமாய் மூன்று நண்பர்கள். அந்த எட்டுகால்களும் மிக சந்தோஷமாக சுற்றி திரிகின்றன. அடிக்கடி ஜீவாவின் கால்கள் கராத்தேவும் கற்கின்றன. கால்களில் ஸ்போர்ஸ் ஷீ, மற்றும் ஹா... ஹூ... ஹையா போன்ற சத்தங்களை வைத்து இதனை ஊகித்து கொள்ள முடிகிறது.


இந்த இடத்தில் தான் ஹீரோயின் பூஜாவின் கால்களை சந்திக்கிறது , ஜீவாவின் கால்கள். பூஜாவின் கால்களை கணுபிடிப்பதிலும் பெரிய சிரமம் இருக்காது, ஆடை ஏதும் இல்லாது ( யோவ் ! அந்த பொண்ணு முழங்காலுக்கு மேல ஏதுனாச்சும் போட்டிருக்குமய்யா!) , வழ வழவென்று இருப்பதிலேயே அது ஹீரோயின் கால் தான் என்று கண்டுகொள்ள முடிகிறது. அத்தோடு ஹீரோயினின் கால்களை காட்டும் போது, தூரத்தில் மங்கலாக ஹீரோ மற்றும் சகாக்களின் உருவங்களை காமிரா காட்டும். ஆக ஹீரோ ..ஹீரோயின் சந்திப்பும் முடிந்தது. சில பல காட்சிகள் , ரெண்டு மூன்று பாடல்களோடு காதலும்  ஓக்கேயாக , படம் பிரதான சாலையில் பயணிக்க தொடங்குகின்றது.


இங்குதான் அறிமுகமாகிற‌து வில்லன் நரேனின் கால்கள். மெதுவான நடை, இருண்ட பகுதிகளில் அடிக்கடி நிற்பது, முகம் காட்டப்படாமல் கீழே விழுந்து கிடக்கும் பிணத்தில் இருக்கும் ரத்தம் தோய்ந்த கத்தியை எடுத்துக்கொண்டு நகர்வது, போன்ற காட்சிகளில் அது வில்லனது கால் தான் என்று புலனாகிற‌து. தமிழ்நாடு முழுவதும் நின்று, நின்று நடந்தே சில பல அட்டூழியங்களை செய்கிறது நரேனின் கால்கள். களோபரமாகும் தமிழ்நாட்டில் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பு , நாஸரின் சி.பி.ஐ கால்களுக்கு கொடுக்கப்பட அறிமுகமாகிறது நாஸரின் கால்கள். சாதாரண காட்டன் ஜீன்ஸ் போட்ட கால்கள், அப்புறம் தூரத்தில் மங்கலாய் காட்டும் போது நாஸர் கட்டம் போட்ட சட்டை அணிந்திருப்பது ( யுத்தம் செய் படத்தில் சேரனுக்கு தைத்ததாக இருக்க வேண்டும்) , அப்புறம் நாஸரின் நிழல் விழுகையில் அவருக்கு முன் விழும் அவரது மூக்கின் நிழல் போற குறியீடுகளின் மூலம் , அது சி.பி.ஐ நாஸர் தான் என புரிந்து கொள்ள‌ முடிகிறது.


ஜீவாவின் கால்களும், பூஜாவின் கால்களும் ஜாலியா இருந்து வருகையில், நரேனின் கால்கள்  செய்யும் நாச வேலைகளுக்கான பழியில் ஜீவாவின் கால்கள் சிக்கவைக்கப்பட, நாஸர் கால்கள் இன்னும் சில பல பொலிஸ் கால்களால் துரத்தப்பட்டு கொஞ்சநேரம்  ஓடிக்கொண்டே இருக்கிறது ஜீவாவின் கால்கள். இந்த துரத்தல்களின் போது , தன்னையும் அறியாமல் சில அசாதாரண வேலைகளை தனது கால்கள் செய்வதை உணருகிறார் ஜீவா. முதலில் தான் கற்ற கராத்தேயால் தான் இப்படி நடக்கிறது என சிந்திக்கும் ஜீவாவின் கால்கள், பின்பு கராத்தேயையும் தாண்டிய ஒரு அசாதாரணம் தனக்குள் ஒழிந்திருப்பதை உணருகிறது.



ஒரு கட்டத்தில் தனக்குள் இருக்கும் சக்தியையும், அதோடு எவரோ செய்யும் நாச வேலைகளுக்கு தான் சிக்குவதையும் ஜீவாவின் கால்கள் உணரும் போது தான் ஒரு சூப்பர் மேன் ஆகவேண்டிய அவசியத்துக்கு தள்ள‌ப்படுகின்றன‌ ஜீவாவின் கால்கள். சூப்பர் ஹீரோவானால் ஒரு பிரத்தியேக ஆடை வடிவமைக்க வேண்டுமென்ற , எழுதப்படாத உலக சினிமா விதிகளுக்கமைய ஜீவாவின் கால்கள் ஆடைத்தயாரிப்பில் இறங்குகின்றன. மோர்கன் ஃபிரீமென் ஆட்கள் எல்லோரும் அமெரிக்காவில் இருந்து வந்து வடிவமைத்து கொடுக்கும்வரைக்கும் பொறுமைஇல்லாத ஜீவாவின் கால்கள் , தாமே சுயமாக , கைநெசவு செய்து ஆடைகள் தயாரிக்கின்றன. கால்களே இந்த வேலையையும் செய்வது போல காட்டினால் , நாங்கள் கல்லாஇ எறிவோம் என தெரிந்து கொண்ட இயக்குனர், ஆடை தைப்பதை கைகள் எய்வது போலவே காட்டி இருக்கிறார். # மறுபடி மீறப்படாத லாஜிக்.


சரி... சக்தி இருக்கிரது, அதைவிட முக்கியமான பிரத்தியேக ஆடை தைத்து முடிந்தது. இனி என்ன ஆட்டம் ஆரம்பம்! நரேனின் கால்களை நாசரின் சி.பி.ஐ கால்கள் ஒரு பக்கத்தால் தேட, ஜீவாவின் சூப்பர் கால்கள் பறந்து பறந்து தேடுகின்றன். பிறகு என்ன ? ஆளுக்காள் கட்டிடம் தாவிக்கொண்டே இருக்கிறார்கள். நாம் தான் ஓசியில் வந்துவிட்டோமே , எந்திரிச்சும் போக முடியாதேன்னு பெடக்சில் பெவிக்கால் போட்டது போல உக்காந்தே இருக்கவேண்டியதாக இருக்கிறது. கடைசியில் நரேனின் காலும், நாசரின் காலும், ஜீவாவின் சூப்பர் காலும் என்னானது என்பதே மீதிக்கதை. உங்களுக்கு அதிச்க்டம் கிடைக்கும் போது பார்த்தறிக.....

சரி படம் எப்படியிருக்கிறது?

உண்மையை சொல்லியே ஆகவேண்டும் தமிழ் சினிமாவுக்கு சூப்பர் ஹீரோ கதையை துணிவுடன் சொன்ன மிஸ்கினுக்கு முதலில் பாராட்டுக‌ள் போயே சேரவேண்டும்.

அப்புறம் ஒளிப்பதிவு எப்படியிருக்கிறது? படம் பூரா இரவிலேயே நடப்பதால் ஒளிப்பதிவு பத்தி சொல்ல ஒண்ணுமேயில்லை. படம் பூரா இருட்டு மயம். அப்புறம் படத்தொகுப்பு , குகனின் படத்தொகுப்பில் கால்கள் மிகவேகமாக நகருகின்றன. 


படம் பூரா நிறைந்திருப்பது இசை தான். தியேட்டரை விட்டு வெளியில் வந்தும் கூட பின்னணி இசை இன்னும் காதிலேயே ஒலிக்கிறது. அதிலும் அந்த மூன்று பாடல்கள் . இந்த வருடத்தின் இளைஞர்கள் ஹிட்டுக்களில் இடம்பெறும் என்பது மட்டும் நிச்சயம். "வாயை மூடி சும்மா இருடா" பாடல் புதுசா எளசா நல்லா இருக்கு. மதன்கார்க்கியின் வரிகளுக்காகவே அந்த பாடலை எத்தனை தடவையும் கேட்கலாம். அந்த மெலோடி மெட்டு , விடுதலைப் புலிகளின் கேணல் கிட்டுவின் மறைவுக்கான பாடலை ஞாபகப்படுத்தினாலும் கூட ரசிக்கும் படியாக இருக்கிரது. இன்னும் முணுமுணுக்கிறேன். 

"கடிகாரம் தலைகீழாய் ஓடும்
இவன் வரலாறு எதுவென்று தேடும்
அடிவானம் பணியாது போகும்
இவன் கடிவாளம் இல்லாத மேகம்
பல நிலவொளிகளில் தலை குளித்திடும் போதும்
இவன் மனவெளிகளில் கனவுகள் இல்லை ஏதும்"

ஆகா! என்ன வரிகள்? பாடல் முழுக்க கவிதை மழை! மறக்காமல் ஓடியோவாவது கேளுங்கள்.



அடுத்து "மாயாவி " பாடல் மெலோடி ரசம்.... இதமாக இருக்கிறது. அந்த குடிகாரர்கள் கீதம் தான் இனி பார்களிலும் , நம்ம குடிமகன்கள் வாயிலும் தேசிய கீதமாய் இருக்கப்போகிறது. மிஸ்கின் பாடியிருக்கும் அந்த பாடலில் வரும் "அன்னக்கிளி உன்ன தேடுது.." என்ற இளைய ராஜாவின் இசையும், இடைநடுவில் மிஸ்கினின் குரலில் ஒலிக்கும் வசனங்களும் தூக்கல். அந்த பாருக்குள்ளும்  "கண்ணதாசன் காரைக்குடி" பாடலின் வாசம் அடிப்பதை மறைக்கமுடியவில்லை.  #அந்த பாடலின் வெற்றியின் பிரதிபலிப்பு????



அப்புறம் ஆங்... நடிகர்கள் பத்தி சொல்லியாகணுமே.


ஜீவாவின் கால்களின் நடிப்பு வழமைபோலவே பிரம்மாதம். தனக்கு அசாதாரண சக்திவந்திருக்கிரது என உணருமிடத்தில் ஆஸ்காருக்கும் மேல் நடித்திருக்கிறார். இந்த படம் ஜீவாவின் கால்களுக்கு ஒரு மைல்கல்லாக இல்லாவிட்டாலும் ஒரு எல்லைக்கல்லாகவாவது இருக்கும் என நம்பலாம்.


அப்புறம் நாயகி பூஜா ஹெட்ஜ், இந்திய அழகியாக வலம் வந்தவர்  , இப்போது முகமூடியில் நமது மூடுகளை கெடுக்க வருகிறார். சம்பளத்துக்கு ஏற்ப நடைத்திருக்கிறார். சும்மா காட்டு காட்டுன்னு காட்டுகிறார் காலை!! வழமை போல நாஸரின் கால்கள் மிடுக்கான நடிப்பு, ரோடுகளில் மட்டுமல்ல நமது மனதிலும் நிக்கிறது.


அடுத்து நம்ம நரேன் கால்கள். "யுத்தம் செய்" என்ற மொக்கை படத்தில் நடிக்க மறுத்துவிட்டு , "தம்பிக்கோட்டை" என்ற அவார்டு வின்னிங் படத்தில் நடித்தவர், இப்போது மறுபடி "முகமூடி "யில் என்னமோ மூடில் கள‌மிறங்கியிருக்கிறார். அஞ்சாதே பிரசன்னாவின் காலை பிரதிசெய்ய முற்பட்டிருந்தாலும், நரேனின் சுயமான கால்கள் ஆங்காங்கே தெரியாமலில்லை. நரேன் தனது சொந்தகாலிலேயே நடந்திருக்கலாம். தமிழ் சினிமாவுக்கு இன்னுமொரு ஆரோக்கியமான வில்லன் கால்கள்.


அப்புறம் படத்தில் எனக்கு பிடித்தது பாடல்கள் படமாகப்பட்ட விதம் தான். முகமூடி பாடல் வழமை போலவே ஒரு ஸ்லோமோஷன் பாடல், அப்புற‌ம் அந்த பார் பாடல் ( அஞ்சாதே எஃபக்டு) . அட! இவ்ளோ பண்றீங்களே , அந்த இந்திய அழகியை கொஞ்சம் "காட்டுங்கப்பா" என்று நாம் ஏங்கிய வேளையில் வந்தது அந்த ஐட்டம் சாங்!


பாடல் தொடங்கும் போதே கால்களிலேயே ஆரம்பிக்க , அட போங்கப்பா என நாம் சலித்து கொள்ள கேமிரா கொஞ்சம் கொஞ்சம் மேலே போகிறது. "ஆங்..ஆங்... அதே தான்... அப்பிடி அப்பிடி கொஞ்சம் மேல... கொஞ்சம் சைட்ல எடப்பா... இந்த இடத்தில கொஞ்சமா ஸ்லோவா போ ( ஸ்பீட் பிரேக்கர்) , அப்பா கழுத்து .. இன்னும் கொஞ்சம் ... மூஞ்சி தெரியப்போது... அந்தா.. இந்தா..."ன்னு நாங்க பாத்துக்கிட்டு இருக்க , கமிரா வேறு பக்கம் திரும்ப, அங்கே ஹீரோவும் ஹீரோயினும் ஆட்டுக்கால் பாயா சாப்பிட்டுக்கொண்டிருக்க, இங்க வேற ஒரு ஜில்பான்ஸ் ஆடிக்கிட்டு இருக்கு, எட்டுமுழம் பொடவையோட.... அந்த எடமே டெசோ மாநாடு போல மஞ்ச மஞ்ச தோரணமா தொங்குது. பொண்ணுங்க எல்லாம் மண்ட வளத்து ....... மண்ட மேல ஒரு கொண்ட வளத்து... கொண்ட மேல ஒரு பு.... ஏய்யா? பூவு வச்சு... முடியல! நல்லவேள தானைத்தலைவன் இல்லாததால தப்பிச்சோம்!




தொடர்ப்பாடல் வெற்றிகளால் அதே போல பாடல்களை அடுத்தடுத்த படங்களில் வைப்பதை மிஸ்கின் தவிர்க்கலாம். ஆனாலும் எல்லாம் நல்லாவே இருக்கு.

அப்புறம் இன்னொரு டவுட்டு. இந்த முகமூடி தொடக்கம் ஆங்கில படங்களின் ஆரம்பகால சூப்பர் மேன் வரைக்கும் , அந்த கெட்டப்பு எல்லாம் ஓக்கே. ஆனா அது என்னங்கடா தோளுக்கு கீழ கருப்பா ஒரு எட்டுமுழ வேட்டி தொங்குது? என்ன ரோட்டு கூட்டவா? சுப்பர் மேன் ஆளுங்க தான் ஒரு மூளையே இல்லாம சூப்பர் மேன் முதுகில துணி காய போட்டிருக்காய்ங்கன்னா மிஸ்கின் சார் நீங்களுமா? அப்புறம் ஜீவாவுக்கு அப்புடியெல்லாம் ஒரு அடுக்கான உடம்பு கிடையாது, பிறகு எப்புடி சூப்பர் டிரெஸ் தைத்ததும் செங்கல்லும் சல்லிகல்லும் வச்சு கட்டின மாதிரி கட்டி கட்டியா பாடி பில்டப்பு!

சில சில குறைகள் இருந்தாலும் மொத்தத்தில் தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியை கொண்டுவந்த மிஸ்கினை பாராட்டலாம். முன்னணி நடிகர்களையும் வில்லனாக, வித்தியாசமாக காட்டுவது, திரைக்கதை, அது சொல்லப்படும் விதத்தை வித்தியாசமாக சொல்லுவது என மிஸ்கின் சிக்ஸர் அடிக்கிறார். ஆக மொத்தம் அனைவரும் பார்க்கவேண்டிய கால்கள் சே..... படம் தான் இந்த முகமூடி!

படம் முடியும் போது , இந்த படத்தை காப்பியடித்து இந்த வருடம் அமேரிக்காவில் வெளியிட்ட கிறிஸ்தோப்பர் நோலனை கண்டிக்கும் விதமாக ஆயிரம் தந்தி அடிக்கும் அறப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் அழைப்புவிடுக்கப்பட்டது.

க்கும்..... நந்தலாலாவை காப்பியடித்த "கிகுஜொரோ"படத்தின் டைரக்டர் டகிஷி கிடானோக்கு எதிரா அனுப்பின ரெண்டாயிரம் எஸ்.எம்.எஸ்சுக்கே இன்னும் பதில காணம். அதுக்குள்ள ஆயிரம் தந்தியா? வெள்ளைக்காரனின் கொடூர களவாணி புத்தியை நொந்துகொண்டே வெளியேறினேன்.







Friday, August 10, 2012

விபச்சார வழக்கில் சிக்குமா சன் டி.வி குழுமம்?





இன்னிக்கும் மணி சரியா 6 மணித்துளிகள் 21 நிமிடங்கள் 49வது செக்கனகள் , துலா வருடம், கப்பி மாதம் சரியாக எம கண்ட நேரத்தில் சன் தொலைக்காட்சியின் பிரத்தியேக பிரம்மாண்டமான கன்டெய்னர் லாரி ஒன்று விருதம்பாக்கம் அருகே உள்ள மூத்திர சந்து ஒன்றில் வைத்து சென்னை மாநகர போக்குவரத்து பொலிஸ் அதிகாரி வசூல் ராஜவினால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. சென்னை மாநகர காவல் துறைக்கு வந்த ரகசியமான தொலைபேசி அழைப்பை தொடர்ந்தே , இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரி சுற்றிவளைத்து கைதுசெய்யும் படியாக அப்படி என்னதான் இருந்தது அந்த கன்டெய்னர் லாரியில். கைது செய்து அந்த கன்டெய்னரை திறந்தது தான் தாமதம், அந்த கன்டெய்னருக்குள் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அழகான இளம் பெண்கள் இருப்பதை கண்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடமை உணர்வு பொங்கிய போக்குவரத்து பொலிசார், தாம் போக்குவரத்து பொலிசார் என்பதையும் மறந்து சன் டி.வி மீது விபச்சார வழக்கு பதிவு செய்துள்ளனர். "ஐயா நீங்கள் போக்குவரத்து பொலிஸ் ஆயிற்றே, எங்களை நீங்கள் காவல் நிலையத்தில் அல்லவா ஒப்படைத்து வழக்கு போடவேண்டும் "? என்று அந்த கன்டெய்னரின் பைலட் கேட்டதுக்கு "கடமைய செய்ய காவலாளி கூட போதுமிடா " என்று பஞ்ச் அடித்ததாகவும் தெரிகிறது.

நீதிமன்றம் மூடிவிட்டதால் , பெஞ்சு கோட்டு டவாலி தலைமையில் சற்று முன் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள‌ப்பட்டது. சன் டி.வி சார்பில் ஆஜரான வக்கீல் வண்டுமுருகன் இந்த மூவாயிரம் பெண்கள் தொடர்பான மர்மத்தை விளக்கினார்.

அதாவது "சில மணிநேரங்களாக எமது சன் தொலைக்காட்சியானது, ஒரு விளம்பரத்தை ஒளிபரப்பி வருகின்றது. எங்களது வித்தியாசமான அடுத்த நிகழ்ச்சிக்கான விளம்பரம் அதுவாகும். அதன் சாராம்சம் என்னவெனில் , உங்க்ளது வீட்டில் ஏதாவது பழைபொருள் இருந்தாலோ, அல்லது ஏதாவது பொருளை மாற்ற விரும்பினாலோ , சன்.டி.விக்கு அறியத்தாருங்கள் , நாங்கள் அதற்கு மாற்றீடாக புதிய ஒன்ற தருவோம், இது தான் அந்த விளம்பரம். விளம்பரம் ஒளிபரப்பப்பட்டு சில மணித்துளிகளில் தமிழ் நாடு முழுதும் இருந்து லட்சக்கணக்கான எஸ்.எம்.எஸ் க்கள் குவிந்துள்ளன. அத்தனையும் ஐயா ! எங்களது மனைவியை மாற்றி தாருங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளன. அது தான் முதற்கட்டமாக மூவாயிரம் பேரை சப்ளை செய்ய போய்க்கிட்டு இருக்கோம்" என்று விளக்கமளித்தார்.

பிரதிவாதியின் வாதத்தை கேட்ட நீதிபதி ( டவாலி) 2999 பெண்களை கொண்டு செல்லும்படியும் ,மீதமுள்ள ஒருவர் தொடர்பில் ,தான் ரீ-சார்ஜ் போடதும் சன் குழுமத்துக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவதாகவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து முதல் டெலிவரிக்காக கன்ட்ய்னர் மதுரை நோக்கி பயணமானதாக தெரிகிறது.

**********************************************************************************



இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவை எழுதிக்கிட்டு இருக்கேன். என் தொலை பேசி அலறுகிறது.

நான் : ஹலோ....

எதிர் முனை : ( ஹொரர் குரலில்) உங்களுக்கு 21 கோடி ரூபாய் கிடச்சா என்ன பண்ணுவீங்க?

"யோவ் என்ன விளையாடுறியா? யாருடா நீ?

"நாங்க கலைஞர் டி.வில இருந்து பேசுறோம், சொல்லுங்க உங்களுக்கு 21 கோடி கிடச்சா என்ன பண்ணுவீங்க?"

"ஆங்! கலைஞர் என்ன பண்ணுறார்? அவரை நல்லா பாத்துக்கங்க, அப்புறம் டெசோ மாநாட்டு உரை எழுதிட்டாரா? ஆங்! ஏதோ கேட்டிங்களே, ம்ம்ம்ம்... 21 கோடிய வச்சு என்ன பண்ணலாம்? ஹும்ம்ம்ம் ... சென்னைல நல்ல எடமா ஒரு நாலு கிரவுண்டு வாங்கி போடுவேன்"

"வெரி சார்.. இருந்த இடத்தெயெல்லாம் எங்காளுகளே வளச்சு போட்டுட்டாங்க, சொந்த வீடு வச்சிருந்தவனே இப்போ தெருவில நிக்கிறான், உங்களுக்கு நாலு கிரவுண்டு எல்லாம் சரிப்படாது , வேற என்ன பண்ணுவீங்க?"

"அப்புடியா? வேற என்ன பண்ணலா? ம்ம்ம்ம்...... ஆங் ! டெசோ மாநாட்டுக்கு டிக்கட்டு போட்டு வந்து என்னோட தானை தலைவனை பாத்துக்கலாம்ன்னு இருக்கேன்"

"சாரி... டெசோ மாநாடு உண்மை தமிழர்களுக்கு மட்டும் தான், தமிழரளின் விடி வெள்ளிகள் மட்டுமே கலந்து கொளலாம். உங்களால முடியாது. வேற என்ன பண்ணுவீங்க?"

"அதுவும் உண்மை தான், ஈழத்தமிழர்கள் நாங்கெல்லாம் சாகும் வரை போராட்டம் நடத்தும் அய்யா தானே விடிவெள்ளி. அப்புறம் என்ன செய்யலாம்"? ஆங்.... தமிழ் நாட்டுக்கு வந்து ஒரு நல்ல படமா புரடியூஸ் பண்ணுவேன்"

"அதுமட்டும் முடியாது.... எந்த படம் எடுக்கிறதா இருந்தாலும் அது எங்க கிளவுட் நைன், ரெட் ஜெயன்ட் மட்டும் தான் எடுக்கும் . உங்களால அவளவு ஈசியா எடுத்திர முடியாது"

"அட என்ன சார்... வேற என்ன பண்ணலாம்? சரி நமக்கு தான் ஏதும் பண்ண முடியல, சரி சமூகத்து ஏதாவது பண்ணிட்டு போவமே, ! சார்.. என் சொந்த செலவில ரோடு எல்லாம் சுத்தம் பண்ணுவேன், ஒரு சின்ன கிளினிக் ஆரம்பிச்சு இலவச மருத்துவம் பண்ணுவேன்"

"இது தான் ரொம்ப தப்பு, ரோட்டு யாரு கிளீன் பண்ரதுன்னு காப்ரேஷனுக்கும், விஜய காந்து ஆளுங்களுக்கும் பெரிய பட்டிமன்றமே நடக்குது, அப்புறம் நீங்க கிளினிக் ஆரம்பிக்கணும்னா எங்க கட்சி ஆளுங்களுக்கு கமிஷன் வெட்டணும், கமிஷன் போக உங்களுக்கு வெறும் 21 ரூவா தான் குடுப்போம், அதனால அந்த ஐடியாவ விட்டுபுட்டு வேற ஏதாவது சொல்லுங்க? சொல்லுங்க உங்களுக்கு 21 கோடி கெடச்சா என்ன பண்ணுவீங்க?

"ட்ச்க்ஹ்ச்ஃப்க  கொய்யாலே !!!!!  என்னடா எங்கள பாத்தா உங்களுக்கு எப்புடிடா இருக்கு? தக்காளி கைல கெடச்சா சாவடிப்பன்டா பன்னாட ...... ஹ்க்த்க்ஹ்க்   ஹ் ஹ்வ்கு   க்ஹ்க்ன்ஹ்யெஉ  .. இன்னொரு தடவ இந்த கேள்விய கேட்டா உங்குடும்பத்தில உள்ள ஒருத்தன் விடாம திட்டுவன்டா..... எனக்கு அழுக அழுகையா வருதுடா.. போடா..... மரியாதையா ஃபோனை வையி! இல்லனா என்னோட சாவுக்கு நீதான் காரணம்னு எழுதி வச்சிட்டு செத்து போயிருவன்டா"!!!

ஆமா உங்களுக்கு 21 கோடி கெடச்சா நீங்க என்ன பண்ணுவீங்க?

**********************************************************************************



படவா கோபி ஒரு நாள் தெருவில் நடந்து போய்க்கொண்டிருந்தார். அப்போது ஒரு குடும்பபெண்பணி அவரை அழைத்தார்.

'என்ன சார்.. விம் வெளம்பரத்தில மட்டும் வந்து எல்லா வீட்டு சட்டி, பானை, பண்ட பாத்திரம் எல்லாம் கழுவி குடுக்குறீங்க, எங்க வீட்டையும் வந்து கொஞ்சம் கழுவி குடுங்களேன்"

படவா கோபி செம காண்டாயிட்டாரு.

"ஏன் அப்பிடியே வந்து உங்க வீட்டு டாய்லெட்டையும் கழுவி விட்டிர்றேனே?"

அந்த பெண்மணி கூலாக சொன்னாள்.

"அதுக்கு அப்பாஸும், விஜய் ஆதிராஜும் வந்துக்கிட்டு இருக்காங்க"


டிஸ்கி: சும்மாசிரிப்புக்காக‌ எழுதினது, எவனுக்காவது ஏதாவது சிந்திக்கணும் போல இருந்தா சிந்திச்சுக்கோ, நான் ஒன்னும் ஃபீல் பண்ண மாட்டேன்


Wednesday, August 8, 2012

அவளும்! என்னோடு சேர்த்து நாலைந்து நாய்களும்!



"உன்ட அண்ணனுக்கு இப்ப தான்டா இருபத்தொரு வயசாகுது.... அதுக்குள்ள கலியாணமா?"

" என்னடா செய்யிறது? அந்த பண்ணயாரிட ஆளுகளுக்கு , இவன் மேல ஒரு கண் விழுந்து போச்சு. இவன் வேற சும்மா இருக்கேலாம , உந்த கல்லெறி காற பொடியளோட கொஞ்சம் பழக்கமா இருந்திட்டான். அதான் , ஒரு கலியாணம் செய்திட்டால் , பண்ணையார் ஆக்களிட்ட இருந்து கொஞ்சம் கரச்சல் குறையும் எண்டு அம்மா யோசிக்கிறாடா..அதான், அவசர அவசரமா உந்த ஏற்பாடு"

"டேய்.. உன்ட அண்ணன் தருமிலிங்கத்தாருட மகள் .. அவள் தானடா அந்த சிவல பொட்ட இலக்கியாவெல்லோ பாத்தவன், அது என்னடா நடந்தது?"

"அவவ தான்டா இப்போ அண்ணன் கட்ட போறார்"

"உன்ர கொம்மா தானே அவயள்ர சாதி சரியில்ல எண்டு, உன்ட‌ அண்ணனோட பெரிய பிரச்சினப்பட்டாவே?"

"படிச்ச நமக்கு விளங்குது, நம்மட பெருசுகளுக்கு ஒண்டும் விளங்கிறதில்ல மச்சான், சாதியாவது, கத்தரிக்காயாவது... ஓமடா முதல் மேலையும் கீழையும் குதிச்சவ தான், இப்ப தன்ட மகனிட உயிருக்கு ஆபத்து எண்டோண அவசர அவசரமா கலியாணம். இப்ப போய் சாதிய பாத்துக்கொண்டு இருந்தா , தன்ட மகன்ர உயிர் போயிடும் எண்டோண சாதியெல்லாம் கண்ணுக்கு தெரியேல.... இப்ப சம்மந்தி சமந்தி எண்டு தருமரோட ஒரே உறவு.... எனக்கு நம்மட சனங்கள நினச்சா சிரிப்பு தான் வாறது. எல்லாம் நல்லா நடக்குது, அது வரைக்கும் நல்லம் தானே! "

"அதெண்ண்டால் உண்மை தான் மச்சான்"

"டேய் வாய பாத்துக்கொண்டு இருக்காம கலியாணத்துக்கு நாலஞ்சு நாளுக்கு முதலே வீட்ட வந்திரு, பிறகு ஏதும் சாட்டு சொன்னியெண்டால் எனக்கு விசர் வந்திரும்"

"ஓமிடா.. ஓமிடா..... நீ வெளிக்கிடு பஸ் வர போகுது, அத விட்டா உனக்கு வேற பஸ்ஸும் இண்டைக்கு கிடையாது, நான் உன்ன பஸ் ஸ்டாண்டில விட்டிற்று, அய்யாட தோட்டத்துக்கும் ஒருக்கா போகோணும், வெளிக்கிடு"

'டேய்... நான் என்ன சின்ன் பொடியனா? எனக்கு போக தெரியும், நீ தோட்டத்துக்கு போடா, பஸ் ஸ்டாண்ட் உதுல தானே , நான் போயிருவன்"

"டேய் நான் விட்டிற்று போறனடா"

"லூசு கத கதைக்காம நீ போ, நான் போடிருவன் , இந்தா பக்கத்தில தானே"

"சரி மச்சான் ,கவனம் , நான் வாறன் போற்று, நீ பாத்து போடா, போற வழியில கவனம் , பண்ணையார் ஆக்கள் நிப்பினம்! நீ சும்மா சாதாரணமா  போற மாதிரி போ.... உன்னட்ட உன்ர ஸ்கூல் ஐ.சி இருக்கு தானே! ஒண்டும் பிரச்சின இல்லை. எதுக்கும் கவனம்"

"ஓமடா .. நீ கலியாணத்துக்கு வெள்ளனவே வந்திடு" 

"ஓம் மச்சான், நான் வாறன் போட்டு, நீ கவனம்"

விடைபெற்றுக்கொண்டு நண்பன் புறப்பட, நான் பஸ் ஸ்டாண்டை தேடி நடக்க தொடங்கினேன்.

"எங்கட  ஊரில் கொஞ்ச நாளாவே பொடியளுக்கும் , இந்த பரதன் பண்னயாரோட ஆக்களுக்கும் இடையில நிலம கொஞ்சம் நல்லாயில்ல! உந்த கல்லெறி காற பொடியளுக்கு பிரச்சின எங்கட ஊர் பண்னையார் சிலோத்தாரோட தான் எண்டாலும் , இட நடுவில மத்தியஸ்தம் பண்ணுறன் எண்டு வந்த உந்த பரதன் பண்ணையாரோட ஆக்களோட தான் இப்ப ஒரே அடி புடியா கிடக்கு!"


"எனக்கு உந்த பிரச்சினையோட ஆதி மூலம் எல்லாம் தெரியாது எண்டாலும் , என்ர அம்மா சொன்னதில இருந்து நடக்கிறது என்ன எண்டு நல்லாவே தெரியும். எங்கட ஊர் பண்ணையார் சிலோத்தார் கொஞ்சம் அடாவடி தனமான ஆள். அவருக்கு எப்பவும் தன்ர சாதி சனம் நல்லா இருக்கவேணும், தன்ர சாதி சனம் தான் எங்கன்ர  ஊரில இருக்கவேணும் எண்டு பிரசங்கம் பண்ணிற ஆள். உண்மேல அவற்ற  ஆக்கள்  தான் எங்கன்ர‌ ஊரில கனக்க பேர் இருக்கினம் எண்டாலும் , எங்கன்ர  ஆக்களும் கன காலமா அந்த ஊரில இருக்கிறம். என்ர ஆச்சி சொல்லுவா, அவயளுக்கு முந்தியே , எங்கன்ர ஆக்கள் அந்த ஊரில இருந்தவயளாம் எண்டு. ஆனா இப்ப எங்கன்ர ஆக்கள் கொஞ்ச பேரா இருக்கிறதால , எங்கள அவையள் , வந்தான் வரத்தான் எண்டு சொல்லினம். இஞ்ச தான் முதல் பிரச்சினையே!"


"அதுக்கு பிறகு ....  கொஞ்சம் கொஞ்சமா பிரச்சின பெருசாகி எங்கன்ர சனத்தோட பண்ணியார்ர ஆக்கள் பிரச்சின பண்ண தொடங்கிச்சினம். எங்கன்ர  ஆக்களுக்கு அடிக்கிறது, எங்கன்ர பொட்டையள் ரோட்டில போனா தேவையில்லாம சொறிச்சேட்ட விடுறது எண்டு சும்மா சும்மா பிரச்சினைக்கு வந்திச்சினம். கொஞ்ச வருசமா , எங்கன்ர‌ சனம் உதுகள கண்டும் காணாம இருந்தினம். அதுக்கு பிறகு எங்கன்ர படிச்ச சில பெரியாக்கள் , சிலோத்தரோட கதச்சும் பாத்தினம், ஒண்டும் சரியா வரேல, கொஞ்ச நாள்ள சிலோத்தரோட அட்டகாசம் கூடிப்போச்சு."


" உத பொறுக்காத எங்கன்ர சில இளம் பொடியள் சிலோத்தருக்கு எதிரா பிரச்சின பண்ண தொடங்கினாங்கள். அவரிட அடியாக்களுக்கு நல்ல அடி விழுந்துது, சிலோத்தரோட பண்ணை வீடு, தோட்டம், சொத்து பத்து எல்லாத்துக்கும் கல் எறிஞ்சு உடைக்கிறது, நெருப்பு வச்சு விடுறது எண்டு இவங்களும் தங்கட பாட்டுக்கு சிலோத்தருக்கு அடிக்க தொடங்கினாங்கள். எங்கன்ர சனங்களும் , தங்களுக்கு பாதுகாப்பா இருந்ததால இந்த கல்லெறிகாற பொடியங்களுக்கு நல்ல சப்போட் பண்ணினம். பொடியள் எண்டு நாங்க சொன்னாலும் , கல்லெறிகாரங்கட குறுப்பில நிரைய பொட்டையளும் இருக்கிறாங்கள்."


"இஞ்ச எங்கட ஊரில பிரச்சின நடக்கிறத கண்ட பக்கத்து ஊர் பண்ணையார் பரதருக்கு மூக்கு வேர்த்து , சமாதானம் பண்ணிவிடுறன் எண்டு , எங்கன்ர ஊருக்கு தன்ர அடியாளுகள அனுப்பி வச்சார். பரதரோட ஊர் எங்கன்ர  ஊர விட பெரிய ஊர். தன்னை , சுத்தி இருக்கிற எல்ல கிராமத்துக்கும் , பெரிய சண்டியர் எண்டு காட்டுறதுக்கு பரதருக்கு சரியான விருப்பம். அந்த ஒரு காரணத்துக்காகவே எங்கன்ர‌ சுத்து வட்டாரத்தில எங்க பிரச்சின எண்டாலும் , உடன போய் மூக்க குடுப்பார். ஆனா இங்க, எங்கன்ர ஊரில அவற்ற மூக்கு உடஞ்சது தான் மிச்சம். எங்கன்ர கல்லெறி காற பொடியங்கள் அவருக்கு நல்ல அடி போட்டாங்கள்.


"சமாதானம் பேசுறன் எண்டு முதல் அவர் வரேக்க, எங்கன்ர பொடியளும் , ஓம்பட்டு தான் அவர வரவேற்றவங்கள். ஆனா காலப்போக்கில அவரிட நடவடிக்க எல்லாம் பிழையா போனதால , எங்கன்ட பொடியளிட்ட நல்லா வாங்கி கட்டினார். அந்த கோவத்துக்காகவே , எங்கன்ர பொடியள ஒண்டும் செய்ய ஏலாததால , எங்கன்ர அப்பாவி சனத்தோட சொறிய தொடங்கினார்.  அவருட அடியாக்களுக்கு எங்கன்ர பொட்டையள் எண்டா காணும், நாக்க தொங்க போட்டுக்கொண்டு , விழுங்கிறது மாதிரியே பாப்பினம். எங்கன்ர பொட்டையள் நிறைய பேர கெடுத்து சாவக்கொண்டவையள் எண்டு அடிக்கடி கேள்விப்படுவன். அதால இப்ப பரதரோட ஆக்களுக்கும் எங்கன்ர பொடியளுக்கும் தான் ஒரே பிரச்சினையா கிடக்கு!"



இதெயெல்லாம் யோசித்துக்கொண்டே பஸ் ஸ்டான்டுக்கு வந்துவிட்டேன். என்னை தவிர இன்னும் சிலர் அங்கே பஸ்ஸை எதிர்பார்த்துக்கொண்டு காத்திருந்தார்கள். ரெண்டு மூன்று சிறுவர்களும் , அவர்களது தாயும் நின்றிருந்தார்கள்.  அவர்களிலிருந்து இரண்டொரு அடிகள் தள்ளி பேரழகி என்று சொல்லமுடியாவிட்டாலும், கண்வெட்டாமல் பார்க்க கூடிய அழகுடன் ஒருத்தி நின்றிருந்தாள். என் வயது அல்லது , என்னைவிட ஓரிரு வயது குறைவாக இருக்கலாம். மஞ்சள் பூசி கழுவிய முகம், நெற்றியில் சின்னதாய் ஒரு கறுத்த ஸ்டிக்கர் பொட்டு, அதன் கீழ் மெல்லிய இரு கோடுகளாய் திருநீறும், குங்குமமும் தெரிந்தது. இரண்டாய் வகிடெடுத்து பின்னிய தலை முடி, நேர்த்தியான சல்வார் ஆடையென , என் வாலிபத்துகு சவால் விடும் அத்தனை அம்சங்களையும் தன்னகத்தெ கொண்டிருந்தாள்.


என் மனசு பட்டாம்பூச்சியல்ல, சில பல பருந்துகளே பறக்கும் அளவுக்கு படபடப்பாக இருந்தது. எப்படியாவது அவளை என் பக்கம் திரும்பவைத்து விடவேண்டும். இதோ உன் ராஜகுமாரன் உன்னோடு தான் பஸ்ஸை பார்த்துக்கொண்டு நிற்கிறான் என உணரவைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தேன். உனக்காக பிறந்தவன், பத்தொன்பது வருடத்துக்கு முதலே பிறந்து, இப்போது உனது பக்கத்தில் நிற்கிறானடி , பார்த்து விடு கண்ணே என வேண்டாத கவிதையெல்லாம் வந்து தொலைத்தது. அவள் என்னை பார்த்தாலே போதும் என்று இருந்தது. நான் தொண்டையை செருமியும், "உந்த பஸ்ஸ இன்னும் காணேலேயே" என்று நானே பேசியும், ஓடி விளையாடி திரிந்த அந்த சிறு வண்டுகளுக்கு விளையாட்டு காட்டியும் திரும்பாத தலை, அப்போது திரும்பியது.


நாங்கள் நின்றுகொண்டிருந்த இடத்துக்கு பின்னால் நாலைந்து நாய்கள் , உருண்டு பிரண்டு சண்டைபோட்டுக்கொண்டிருந்தன. ஒரு இளம் நாயை இரன்டுமூன்று நாய்கள் சேர்ந்து பிரட்டி எடுத்துக்கொண்டு இருந்தன. எல்லைச் சண்டையா ?அல்லது அடுத்தவன் மனைவியை அபகரிக்க போனதில் வந்த போரா ?என நான் தீர்மானித்து முடிக்கும் முன்னமே அடிபட்ட அந்த நாய் , வாலை சுருட்டிக்கொண்டு எங்கல் பக்கமாக உறுமிக்கொன்டே ஓடி வந்தது. எதிர் பாராமல் நாய் எங்கள் பக்கம் ஓடிவரவும், அவள் பயந்தே போய்விட்டாள், "அக்கா நாய் கடிக்க போகுது" என்று துள்ளிக்கொண்டே ஓடிவந்து, அந்த வாண்டுகளின் தாயின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.


உறுமிக்கொண்டு வந்த நாய் எங்களுக்கு சற்று தொலைவில் நின்று கொண்டு, உறுமலை நிறுத்தி , தனக்கு விழுந்த கடி பலமோ என்று தனது உடலை பரிசோதித்துகொண்டிருந்தது. எனது வீரத்தை காட்ட இது தான் சமயம் என்று முடிவெடுத்தேன். காலுக்கு கீழே கிடந்ததில் கொஞ்சம் பெரிய கல்லாக பார்த்து எடுத்துக்கொண்டு, அதே நேரம் எனது வீர பிரதாப செயலை அவளும் பார்க்கிறாளா என உறுதி செய்துகொண்டு, அந்த அடிபட்ட நாயை நோக்கி நடக்க தொடங்கினேன்.


"அடி...அடி... ச்சூ..." என்று அந்த நாயை நோக்கி குரல் கொடுத்தேன், அந்த நாயோ என்னை ஏன் நாயே என்று கூட சட்டை செய்யாமல் , தனது அங்கத்தை சோதிப்பதிலேயே குறியாக இருந்தது. எனது சொல்லுக்கு மரியாதை இல்லை என்றதும், கையில் இருந்தகல்லை தூதனுப்பினேன். கிரிக்கட் ஆடும் போது , எனது துரோ எல்லாம் சுத்தமாக தேறாது என நண்பர்கள் சொன்ன போதே நான் கொஞ்சம் பிரக்டிஸ் எடுத்திருக்க வேண்டும். நான் எறிந்த கல் , நாயின் வாசனை கூட படாத தூரத்தில் போய் விழுந்தது. அந்த கல் உருண்டு ஓயும் வரை அந்த கல்லையே கண்வெட்டாமல் பார்த்திருந்த அந்த நாய், "உவ்ள்' என்று வாயை பிளந்து, நாக்கை ஒரு தடவை வெளிநீட்டி உள்ளிழுத்து, தடதடவென்று உடலை ஆட்டி உதறி, தனது சோம்பல் முரித்துக்கொண்டு, தான் மிகவும் சந்தோசமாக இருப்பதாக காட்டியது. அடிபட்ட அந்த நாய்க்கு நான் ஒரு என்டெர்டெயின்மென்டாக ஆகிப்போனது நன்றாக புரிந்தது எனக்கு. அந்த நாயும் எனது செய்கைகளை சந்தோசமாக அனுபவித்துக்கொண்டிருந்தது.


அந்த பெண்ணுக்கு முன்னால் இதுக்கும் மேல் அவமானப்பட முடியாது என்பதற்காக ,  பொறுக்க முடியாமல் , ஒரு தடியை எடுத்து அந்த நாயை நோக்கி வீசினேன். அந்த தடி போய் நாய்க்கு பகத்தில் விழவும், அந்த அதிர்வினால் நாலைந்து மணல் துகள்கள் அந்த நாயை முட்டி, சீண்டிவிட , கால்களுக்கு இடையில் சுருட்டி  வைத்திருந்த தந்து வாலை நிமிர்த்திக்கொண்டு, வாயை திறந்து , அத்தனை பற்களும் தெரியும்படியாக "உர்" என்றபடி என்னை நோக்கி இரண்டு காலடிகள் வைத்தது. என்னையுமறியாமல் நான் பின்னோக்கி சில பல காலடிகளை வைத்து விட்டு பார்கிறேன், அந்த பெண்ணின் பின்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன்.


"விசர் நாய் போல கிடக்கு, அது தான் கொஞ்சம் கோவமா இருக்கு, பாத்தியளோ ? அதுட வாலும் சுருண்டு காலிடுக்கில இருந்திச்சு, சும்மா நாய் எண்டா இத்தறிக்கு ஓடிருக்கும் , இது விசர் நாய் அதான்.....  பக்கத்தில ஆஸ்பத்திரியும் இல்ல, கடிச்சா நல்ல ஊசியும் இருக்கோ தெரியாது"


அரும்பு மீசை தானே ! அதனால் நிறைய மண் ஒட்டவில்லை. ஒட்டிய கொஞ்சம் தூசியையும், விசர் நாய் ஊசியை காரணம் காட்டி லாவகமாக துடைத்துக்கொண்டேன்.

" ஓம்.. விசர் நாய் போல தான் கிடக்குது"

இது அவள். என்னிடம் நேரடியாக  சொல்லா விட்டாலும் , எனக்கு பதில் தந்தாள். அதுவே எனக்கு அவள் காதலைச் சொன்னது போல இருந்தது. மனசு பூரா பரவசம் பரவி கிடந்தது.

"அது விசர் நாயே தான்.. வீணீரும் வடியுது பாருங்கோ"

நல்ல வேளை நாய்க்கு தமிழ் தெரியாது, இல்லையென்றால் எனது காதலுக்காக, சும்மா நின்ற‌ அதனை விசர் பட்டியலில் சேர்த்ததற்கு கண்ட இடத்தில் எல்லாம் கடித்தே வைத்திருக்கும்.

ஆனாலும் நல்லா இரு நாயே என்று வாழ்த்திக்கொண்டேன். அந்த சம்பவத்துக்கு பிறகு சில பல பார்வைகளை இருவரும் பரிமாறிக்கொண்டோம். கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் சிரித்தும் கொண்டோம், நான் காதலாகவும் , அவள் நாணமாகவும்!


பேரூந்தின் வருகைக்கான நேரம் பிந்திக்கொண்டு போகப் போக எங்களுக்கிடையான தூரம் குறுகுவதாய் உணர்ந்தேன், உணர்ந்தேன் என்பதை விட உணர்ந்தோம் என்பதே பொருந்தும். அந்த அரை மணிநேர கால அவகாசத்தில் , அவளுக்கு என் மேல் காதல் வந்துவிட்டது என்பது அபத்தம். ஆனால் காதல் வருவதற்கான அறிகுறி அவளிடம் வந்திருக்கிறது என்பது மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடிந்தது.

"தமயனுக்கு கலியாண யோகம் கூடிவரும் நேரம், தம்பிக்கும் வரன் வரும் வாய்ப்பு இருக்கு"

எங்கள் ஊர் ஜோசியர் சொல்லியதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லாத போதும், ஊருக்கு போனதும் முதல் வேலையாக ஜோசியரை பார்த்து விடவேண்டும் என்பதில் இப்போது உறுதியாய் இருக்கின்றேன்


மீண்டும் நாய்களின் குரைப்பு சத்தம், மூன்று நாய்கள் எங்கள் அருகில் வந்து நின்ற படி ஒரே திசையைப்பார்த்து பயங்கரமாக குரைக்கின்றன. இப்போது அனைவருக்கும் பயம் தொற்றிக்கொள்ளும் படியான ஒரு சம்பவத்துக்கு அடிக்கல் நட்டப்படுகிறது. நாய் குரைத்த திசையை பார்க்கிறோம், பரதன் பண்ணியாரின் ஆட்கள் வரிசையாக எங்களைத்தேடி வந்து கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட இருபது பேருக்குமேல் இருந்தார்கள்.




எங்களுக்கு அருகில் வந்ததும் என்னை சந்தேகமாக பார்த்தார்கள், எங்கே வந்தாய்? எதுக்கு வந்தாய்? ஏன் இங்கே நிற்கிறாய்? உட்பட்ட இதர கேள்விகளையெல்லாம் கேட்டார்கள். அவர்களது மொழி எனக்கும் , எங்கன்ர மக்களுக்கும் புதிது என்றாலும் , அடிக்கடி கேட்கப்ப்டும் கேள்விகள் என்பதால், பழகிப்போனது. எனது பாடசாலை ஐ.சி யை பார்த்தவர்கள் , என்னால் ஆபத்து இல்லை என்றதும் நகர்ந்தார்கள். அவர்கள் கொண்டுவந்த அல்லது யாரவது கடைக்காரனிடம் அடித்து பிடுங்கிய இனிப்புக்கள் சிலவற்றை , எங்களோடு நின்றுகொண்டிருந்த அந்த வாண்டுகளுக்கு கொடுத்து, தாங்களும் மனிதநேயமுள்ள‌வர்கள்  என்று காட்டுவதற்கு கடும் முயற்சியும் செய்தார்கள்.

அந்த கழுகுகளின் கண்கள் இப்போது என்னவளை நோக்கி திரும்பியது. அறுபது வயது மூதாட்டியை கூட , இந்த பாரதனின் ஆட்கள் கபளீகரம் செய்துள்ளதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியிருக்க , அத்தனை பருவ வனப்பையும் சுமந்து கொண்டிருக்கும் அவளை??? மனம் ஏதேதோவெல்லாம் கற்பனை செய்துகொண்டிருக்க , அவர்கள் அவளை நெருங்கிவிட்டார்கள். மீண்டும் அதே சம்பிரதாயமான கேள்விகள்.

வாய்கள் கேள்வி கேட்கையில் அவர்கள் கண்கள் அவளை கற்பழித்ததை நான் கவனிக்காமலில்லை. அவர்களது மொழி புரியாமல், அவர்களது கேள்விக்கு , எழுந்தமானமாக அவள் தமிழில் பதில் சொல்லிக்கொண்டிருக்க, அதை ஏளனம் செய்து , அவளது அங்கங்களை பற்றி , பச்சைபச்சையாக அவர்களது மொழியில் மிக ஆபாசமாக வர்ணித்தார்கள். இந்த வார்த்தைகள் கூட அடிக்கடி "செக் பொயிண்டுகளில்" பழகிப்பொயிருந்த படியால் , எனக்கு அர்த்தம் நன்றாகவே தெரிந்திருந்தது. அவர்கள் தன்னை வார்த்தைகளால் துகிலுரிவது புரியாமல் , தப்பித்தால் போதும் என்று 'தான் கொப்பிகள் வாங்க தோழியின் வீட்டுக்கு வந்ததை" தமிழில் அப்பாவியாக விளக்கிக்கொண்டிருந்தாள்.



பார்வை, வார்த்தை என்று வன்புணர்வு முடிய ஒரு மிருகம் , தன் அரிப்பெடுத்த கைகளுக்கு விருந்து கொடுக்கும் நோக்கில் பொடி செக் பண்ணனும் என்று கூறிக்கொண்டே உள்ளங்கால் தொடங்கி மேலாக அவளது அங்கத்தை வருட ஆரம்பித்தது. நெளிந்தாள்... துடித்தாள்.... தட்டி விட கை எடுத்தாள்... மேலும் இரண்டு மிருகங்கள் அவளது கையை பிடித்துக்கொள்ள , அந்த மனித மிருகமோ அவளது அங்கத்தை தடவுவதிலேயே குறியாக இருந்தது. ஒரு கட்டத்தில் அவலது காலிடுக்கில் கையைவிட்டு "துப்பாக்கி மறைத்து வைத்திருக்கிறயா? என்று கேட்டு கையை அங்கேயே வைத்திருந்தது அந்த மிருகம். அவள் "வீச்"சென்று கத்தினாள், பொறுக்கமுடியாத அந்த நடுத்தர வயது பெண் அவர்களை தடுக்க போக "பளார் "என்று அறந்தான், அந்த குழுவின் தலைவன் என மதிக்கத்தக்க ஒருவன். "உன்னோட புடவைய உருவணுமா"? அன்று கொச்சை தமிழில் கேட்கவும் , அந்த பெண் அழுதுகொண்டே மௌனமாக, அவன் இப்போது என்னை பார்த்தான். பார்த்து "என்ன பாக்குற? என்று முறைப்பாய் என்னிடம் ஒரு கேள்வி, அவர்களை  ஏதாவது செய்ய வேண்டும் என்று மனது துடித்தது. வழமையா பஸ் பயணங்களில் இதுபோன்ற காட்சிகளை காண நேருவது தான் என்றாலும், சற்று முன் என் மனதுக்குள் வந்தவளுக்கு இப்படி, அதுவும் என் கண் முன்னே நடக்கையில், எனக்கு என்னவோ போல் இருந்தது.


எனக்கு பாரதன் பண்ணையார் ஆட்களது கையில் இருக்கும் அந்த தீப்பந்தத்துக்கு தான் பயமாக இருந்தது. நொடியில் ஒருவனை சுட்டு பொசுக்கி விடும் கொடூரமான பந்தம் அது. அவர்களை கண்டபோது வீரமாக குலைத்த அந்த மூன்று நாய்கள் கூட, அந்த பந்தங்களின் வீரியம் கண்டு , வாயை மூடிக்கொண்டு, வாலை சுருட்டி காலிடுக்கில் வைத்தபடி சும்மா இருந்தன. அவைகளின் நாக்கு கூட வெளியில் வரவில்லை. அப்போது என்னோடு சேர்த்து நாலு நாய்கள் அங்கே மௌனமாக நின்றிருந்தன.


அவளது சல்வாருக்குள் இருந்து கையை எடுத்த அந்த விலங்கு , இது வெடிகுண்டு தானே என்று அவளை மிக மோசமாக பற்றியது. அவள் நிலை குலைந்தாள், கிட்டத்தட்ட மயக்கமான நிலை, ஆனாலும் அந்த வேட்டை விலங்குகள் விடுபதாக இல்லை, "ஹாங்................................................." தூரத்தே பஸ் வருவது தெரியவும், அந்த வேட்டை நாய் கூட்டம் , அவளை விட்டு மெல்ல தள்ளி நின்று கொள்ள , அந்த நடுத்தர வயது பெண்மணி , அவளை தாங்கி பிடித்துக்கொண்டாள். அருகில பஸ் வர எல்லோரும் ஏறிக்கொண்டோம். எனக்கு முன் பக்கத்து சீட்டில் , அந்த நடுத்தர வயது பெண்ணின் அணைப்பில் அவள் குலுங்கி , குலுங்கி அழுது கொண்டே வந்தாள்.



எனக்கு தெரிந்து , அந்த மனித மிருகம் "வெடிகுண்டு தானே?" என்று பிடித்தது மட்டும் வெடிகுண்டாக இருக்கும் பட்சத்தில், இந்த உலகத்தில் பெண்கள் எல்லோரும் , பிறந்த தமது குழந்தைகளுக்கு வெடிகுண்டின் மூலமே தாய்ப்பால் ஊட்டுகிறார்கள். அவள் இன்னமும் அழுதுகொண்டு இருந்தாள். கொஞ்ச நேரத்துக்கு பரபரப்பான அந்த பஸ், சம்பவம் அறிந்ததும் வழமையாக நடப்பது தானே என்ற தோரணையில் இயல்புக்கு திரும்பியது.


அந்த நேரத்தில் எனது மனநிலையை எப்படி இருந்தது விபரிக்க முடியாமல் இருந்தது. ஒவ்வொரு நாளும் , பேரூந்தில் , பாரதன் ஆட்களின் இரண்டு செக் பொயின்டுகளை கடந்து வேலைக்கு போய்வரும் எனது அக்காவையும் நினைத்து பார்த்தேன். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.........



நான் இறங்க வேன்டிய இடம் வந்தது, அவள் நிமிர்ந்து பார்க்க திராணி இல்லாதவளாய் இன்னமும் அழுதுகொண்டே இருந்தாள். ஆறுதல் சொல்ல மனது சொன்னாலும், அந்த நிமிடத்தில் நான் ஆறுதல் சொல்வது முறையாக இருக்காது என்பதாலும் , மௌனமாய் நான் இறங்கிவிட , பேருந்து கரும்புகையுடன் கடந்து போனது.


அந்த சம்பவம் நிகழ்ந்து வருடங்கள் இரண்டு கடந்து போனது. இந்த இரண்டு வருடங்களில் பாரதன் ஆட்கலால் நூற்றுக்கணக்கான கற்பழிப்புக்கள் நிகழ்ந்தேறி இருந்தது. ஒரு நாள்  எனது அண்னனுக்கு குழந்தை பிறந்ததாக வந்த செய்தி கேள்விப்பட்டு, அவன் இருந்த ஊருக்கு போயிருந்தேன்.


மதிய சாப்பாட்டுக்கு பின்னே , ஊருக்கு வெளியே கொஞ்சம் உலாத்த போனேன். யாரது? அவளே தான் கட்டுக்குலையாத அதே உடல், அவளது நிறம் கொஞ்சம் குறைந்து இருந்தது. ஆனால் குறையாத அதே அழகு! மென் பஞ்சு போன்று இருந்த அந்த உடல் கொஞ்சம் வலிமையேறி இருப்பது போல் இருந்தது. மனதும் அதே வைமையுடன் இருப்பதாக அவளது முகம் சொல்லியது. கல்லெறிகார பொடியன்களின் சீருடையை அணிந்திருந்தாள். அவளது கையில் , பாரதன் ஆட்களது கைகளில் இருந்தது போலவே ஒரு தீப்பந்தம் , ஏதோ ஒரு விடியலுக்காய் எரிவது போல எரிந்துகொண்டிருந்தது. அருகே வந்துவிட்டாள். ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியாக இருந்தது, வேறு திசை பார்த்தவாறு அவளை கடந்து நடக்க முற்பட்டேன்.


" சுகமா இருக்கிறீங்களா?"

இரண்டு வருடங்களுக்கு முன்னர் கேட்ட அதே கணீரென்ற நாண‌ம் கலந்த குரல், இந்த தடவை தன்னம்பிக்கையில் குழைந்து காற்றில் வந்தது.

"ஓம்! நான் நல்ல சுகம்! நீங்க எப்பிடி இருக்கிறீங்க?

'நான் நல்லா இருக்கிறன். எங்க இஞ்சால பக்கம்?"

"அண்ணனையும் அண்ணியையும் பாத்திட்டு போக வந்தனான்"

'நீங்க பயப்பிடாம போங்கோ, நாங்க இஞ்ச தான் இருக்கிறம், இஞ்ச வந்து ஒருத்தரும் செக் பண்ண ஏலாது. நீங்க நிம்மதியா போங்கோ"

"..................................."

"அப்ப சரி ! நான் வாறன் என்ன, எனக்கு இன்சால கொஞ்சம் வேல கிடக்கு"

பிரம்மை பிடித்தவன் போல‌ அவளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன். போனவள் திரும்பினாள்

"இனி விசர் நாயெண்டாலும் பயப்பிடாதேங்கோ என"

சொல்லிவிட்டு சிரித்தாள். அந்த சிரிப்பு சுதந்திரமான சிரிப்பு, உண்மையான சிரிப்பு, கட்டுப்பாடுகளை உடைத்த ஒரு சிரிப்பு. பதிலுக்கு சிரிக்க முடியாமல் அவளையே பார்த்துக்கொண்டு நின்றேன். அவள் நடந்து கொன்டிருந்தாள்.

அவளது பாதையில் சில நாய்கள் நின்று அவளை பார்த்து குரைத்தன. அவளோ அதே பாதையில் அச்சு விலகாமல் நடந்துகொண்டேயிருந்தாள்.

அவளுக்கு இப்போது நாய்களுக்கும் பயமில்லை போலும்!!!!!



"போராளிகள் உருவாவதில்லை உருவாக்கப்படுகிறார்கள்"

அமைதிப்படை என்ற பேரில் எண்பதுகளில்  இலங்கைக்குள் நுழைந்த இந்திய ராணுவம், தமிழ் பெண்களின் மீது கட்டவிழ்த்துவிட்ட பாலியல் வன்முறைகளையும், கற்பழிப்பு மற்றும் கொலைகளையும் புரிந்தது.

Saturday, August 4, 2012

கம்பஸ்ஸ தொறங்கப்பா.. கல்யாணம் பண்ணணும்!



அது என்னான்னா இலங்கையில் இப்போ அடிக்கடி ஒரே மின்வெட்டு தொல்லையாக இருக்கிறது, இலங்கைன்னா சொன்னேன்? ஆங் திருத்தம்... ( இலங்கையிலா இருக்கு அப்டீன்னு ஒரே சந்தேகம் என்பதால் சின்ன கன்பியூசன்) அதாவது இலங்கையின் வடக்கு மாகாணத்தில் சுமாரா ஒரு மாதமாகவே சீரில்லாத காலநிலை...சாரி.. சீரில்லாத மின்சார விநியோகம். மன்னார், வவுனியா, முல்லைத்தீவு,கிளிநொச்சின்னு எந்த் எடமும் பாக்கி கெடையாதாம்.


நான் விடுமுறையில் மன்னாருக்கு வந்த போது, நைட்டு ஆனா போதும், ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு வாட்டி கரண்டு வந்து வந்து போகும். அந்த களோபரத்திலேயே நெறைய பேரோட வீட்ல இருந்த டி.வி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெசின், பல்பு எல்லாமே சேந்து பல்பு வாங்க ஆரம்பிச்சிரிச்சி...... எனக்கு என்ன காண்டுன்னா அந்த நேரம் , யூரோ கப் ஃபுட்பால் வேற போய்க்கிட்டு இருந்திச்சா, ஒவ்வொரு வாட்டியும் கோல் போஸ்டுக்குள்ள பந்து போற நேரமா பாத்து , கரண்டு வாய பொளந்திடும். செம காண்டயிடுவேன். " இந்த மாதிரி கரண்டு தார்றதுக்கு, பேசாம தராமலே இருக்கலாம்னு " கோவமா நாலு வார்த்த பேசிப்புட்டேன். அது நம்ம ஈ.பி காரய்ங்களுக்கு கேட்டிரிச்சோ என்னமோ? ரோஷத்துக்கு பொறந்த பயபுள்ள ரெண்டு மூணு நாளைக்கு சுத்தமா கரண்டையே கட் பண்ணி விட்டாய்ங்க! நான் வேற பிரபல பதிவரா இருந்தேனா, அதுவும் யூரோ கப்பு பத்தி பதிவு வேற போட்டாகணும்ங்கிறதுக்காக , வேற வழியே இல்லாம மொழுகுதிரி கொழுத்தி டி.வி பாத்து பதிவு போட வேண்டியதா போச்சு! அதில சிக்கல் என்னான்னா பதிவு போடும் போது , என்னோட லேப் டாப்புக்கு பவரு கொஞ்சம் ஜாஸ்தியா தேவ பட்டிச்சி... பெரிய சைஸ் மொழுகு திரி வாங்க நான் அலைஞ்சது எனக்கு மட்டுமே தெரியும்! கலைத் தாய்க்கு எப்புடியெல்லாம் சேவை செய்ய வேண்டி இருக்கு!


இந்த பவர் கட்டு பிரச்சினையை ஆரம்பத்தில் நானும் பெருசா எடுத்துக்கல, தமிழ் நாட்டுக்கு பக்கத்தில இருக்கிற படியால அந்த வியாதி தொத்திரிச்சுன்னு தான் நெனச்சேன். ஆனா பாருங்க , எப்போ எங்களோட அமைச்சர் " இலங்கைல போதுமான அளவு மின்சாரம் இருக்கு, தமிழர் பகுதிகளுக்கு தங்கு தடையற்ற மின்சாரம் குடுக்குறோம். தேவைன்னா கருணாநிதி வீட்டு கக்கூசுக்கும் ஃபிரீயா லைட்டு போடுறோம்"னு சொன்னாரோ , அப்பவே புரிஞ்சிரிச்சு, அதாவது எங்களோட அமைச்சர் , எங்களுக்கு கொழும்புலேர்ந்து அனுப்புற கரண்ட , எவனோ பாதி வழில வச்சி ஆட்டைய போடுறான்னு. எனக்கு என்னமோ இக்கிரிகொலாவையில் இளநீர்  விக்கும் அந்த ஐயா மேல செமையான சந்தேகம். ஏன்னா அவருதான் , அவரோட கடையில நெறைய எண்ணை விளக்கு வச்சிருந்தார். எண்ண இருந்தாலும் கரண்டு இல்லாம அந்த விளக்கில எப்புடி லைட்டு எரியும்? சந்தேகம் வலுக்கவே , மன்னார் மின்சார சபைக்கு ஃபோன் போட்டேன், நான் ஃபோன் பண்ணும் போது கரண்டு இருந்திச்சு , எனக்கு ஒரே கோவமா போச்சு "அண்ணே ! கரண்டு எப்போ போகும்னு " ஒரு கேள்வி தான் கேட்டேன். மறுமுனையில் " ச்த்க்ஃப்க் ஜ்ஹ்த்க்க்ஃப்ஜ் ஹ்ஜ்க்ஃப்க் டூஹ்ஃப் க்ஹ் க்ஃப்ய்ஹ்ஃப்க் , வைடா ஃபோனை" , காதும் மனசும் குளிர்ந்து போச்சு.


அவரை இதுக்காக பாராட்டியே ஆகணும்ங்கிறதுக்காக , மறுநாள் காலையில் ஒரு கும்பலோடு கிளம்பினேன், அதாவது சிங்கம் தான் கூட்டமா போகும் , பண்ணி சிங்கிளா தான் போகும் . அட! கோவப்படாதீக! உண்மை தானே? நீங்க டிஸ்கவரி பாத்ததில்ல? சரி... மேட்டருக்கு வாரேன்.. நாங்க கூட்டமா போனதும் , அந்த ஈ.பி அதிகாரி , நேத்தைய ஃபோன் மேட்டருக்காக , நாங்க ஏதோ அவரை செமத்தியா உதைக்க போறோம்னு , எங்களோட பவரை "அண்ட எஸ்டிமேட்" பண்ணி ஒரு உண்மையை தொறந்து விட்டாரு!



அதாவது வருகிற பத்தாம் மாதம் இலங்கையில் நடக்கப்போற வேர்ல்ட் டி20 சம்பியன் ஷிப் கிரிக்கட் போட்டிகளுக்காக அரசாங்கம் , இப்பவே மின்சாரத்தை சேமிக்கிறதாம். எனக்கு அப்பிடியே புல்லரிச்சிரிச்சி.... அட! என்ன சிக்கனமான, திட்டமிடக்கூடிய அரசாங்கம் எனது அரசாங்கம்? இப்படியாகப்பட்ட அரசாங்கத்தின் கீழ் ஒரு குடிமகனாக வாழுவதற்கு குடுத்து வச்சிருக்கணும்.


அதிலும் பாருங்கோ.... கிரிக்கட் மேட்சுக்காக மின்சாரம் சேமிக்கும் போது தமிழர் பகுதி மின்சாரம் தான் , சேமிக்கிறதுக்கு சூப்பரா இருக்குமாம். அவங்க மின்சாரம் சேமிச்சு வச்சிருக்கிற சுவிஸ் பேங்க்லயும் அத தான் சொன்னாங்களாம். கண்டி , கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை , அனுராதபுரம் போன்ற எடங்களில் இருக்கிற மின்சாரங்களிக்கு வட்டி வீதம் கொறைவாக‌ இருக்கிறதால , தமிழர் பகுதிகளில் மட்டும் மின்சாரத்தை மட்டுப்படுத்தி , சேமிக்க சொல்லி மேலிட உத்தரவாம். அதனால கொழும்பு மற்றும் தென் பகுதி முழுக்க 24 ஹவர்ஸ் மின்சாரம் இருக்குமாம். தமிழர் பகுதியான வட மாகாண  மின்சாரத்தை தான் தடை பண்ணி சேமிக்க சொல்லி இருக்காங்களாம் மேலிடம்! எனக்கு ஒரே பெருமையா போச்சு, வட்டி வீதம் கூடினது எங்க பகுதி மின்சாரம் தான் அப்டீங்கிறது பெருமை இல்லையா? அதனால தானே எங்களோட மின்சாரத்தை தடை பண்ணி , கிரிக்கட்டுக்காக சேமிக்கிறாங்கோ!


இன்னொரு மேட்டர் என்னான்னா , நாளை  மறுநாள் உயர் தர பரீட்சைகள் ஸ்ராட் ஆகுது, ஆனா பாருங்க , எங்களோட மின்சாரம் , இப்போ சுவிஸ் பாங்ல சேமிக்க படுறதால , புள்ளைங்க எல்லாம் படிக்க முடியாம திண்டாடுறதா சில பெத்தவங்க எங்கிட்ட சொன்னாங்க! அதில காமடி என்னான்னா , ப‌டிக்கணுமின்னா நீங்க வட்டி வீதம் கொறைவா உள்ல தென்பகுதில பொறந்திருக்கணும், நல்ல விலைக்கு கரண்டு விக்கிற எடத்தில பொறந்திட்டு படிக்கணுமின்னா எப்புடி? இன்னிக்கு கிரிக்கட்டுக்கு சேமிப்பு, நாளைக்கு கார் ரேசுக்கு சேமிப்பு , அடுத்த நாள் கலைவிழாவுக்கு சேமிப்புன்னு , நம்ம மின்சாரத்த தான் கொழும்பில பயன்படுத்த போறாய்ங்க, அத நெனச்சு நாம பெருமை படணுமே ஒழிய கவலை பட கூடாது! தென் பகுதில உள்ளவன் படிச்சிட்டு போறான், நமக்கு படிப்பு ஒரு கேடா என்ன?


சரி.. இந்த கரண்டு சிக்கலால என்ன ஆவப்போது? நாளைக்கு வடக்கு மாகணத்திலேர்ந்து பல்கலை கழகம் போகும் மாணவர் தொகை குறையும், கொறஞ்சிட்டு போகட்டுமே , அந்த இடத்துக்கு யாராவது தென்பகுதி மாணவன் போய்ட்டு போவான் தானே, அதனால என்ன இப்போ? ஏன் வடக்கு மாகாணத்தில மாடுங்க இல்லையா? உங்க புள்ளைங்க மேச்சா மாடு ஒண்ணும் கோவிக்காது போயி மேய்க்க சொல்லுங்க!


அப்புறம் வடக்கில் கல்விமுறை சரிவு, கல்வி தரம் குறைந்தது அப்டீன்னு , ஆராட்சி பண்ணி, நம்ம வடக்கு மாகாணத்தில நாலஞ்சு சிங்கள ஸ்கூல் கட்டுவாய்ங்க , நெறைய சிங்கள் குடியேற்றம் வரும் . நமக்கு தானே நன்மை? நம்மோட எடத்தையெல்லாம் அவய்ங்களுக்கு குடுத்திட்டு , அவய்ங்க எப்புடி வாழுறாய்ங்கன்னு தூர நின்னு வேடிக்க பாக்கிறது எவளவு சுகம்? இந்த பின்நவீனத்துவங்கள் உங்களில் யாருக்காச்சும் புரியுதா மரமண்டைகளா? நம்மோட அரசாங்கம் நமக்கு வச்சிருகிற இந்த மாதிரி நல்ல திட்டங்கள பத்தி யாருக்காச்சும் தோணுதா பாரு! எதுக்கெடுத்தாலும் நொட்ட சொல்லுறது! வந்திட்டானுக .. எக்ஸாம் நேரத்தில பவரு கட்டு ஆகுதுன்னு கம்பிளையிண்டு குடுக்க! போயி டி.வி கனக்க்ஷன் எடுங்கடா! அப்பாலிக்கா கிரிக்கட்டு பாக்க உதவும்!



அப்புறம் இன்னோன்னு , மக்களே பவரு கட்டு ஆனா பரவாயில்ல, லாம்பு வெளிச்சத்தில படிச்சுக்கிறோம்னு வழமை போலவே படிச்சு , உயர் தர பரீட்சையில் இலங்கையிலேயே மொதலாவது ரெண்டாவது அப்டீன்னு ஒவ்வொரு வருஷம் வாறது போல எவனாச்சும் வந்தீங்க, அப்புறம் என்னய மனுசனா பாக்க மாட்டீங்கடா! சொல்லிட்டேன்!!! மருவாதையா போயி மாடு மேய்க்கிற வழிய பாருங்க!

ஆங்! கடைசியா......  இலங்கை அரசாங்கமானது தனியார் பல்கலைக்கழகங்களை இலங்கையில் ஆரம்பித்து , இலங்கையின் தரமான கல்விமுறையை கெடுக்கவே இந்த , இசட் ஸ்கோர் பிரச்சினையில் இழுத்தடிப்பு, பல்கலை கழக ஸ்ரைக் பிரச்சினையில் பாராமுகம் என்று அசட்டையாக இருக்கிறது என்று கம்பிளைண்டு பண்ணுறவன் எல்லாம் கேட்டுக்கோ!!! உனக்கு அவசரமா இருந்தா கம்பஸ் தொடங்க முன்னமே கல்யாணம் பண்ணிக்கோ! மறுபடி கம்பஸ் தொடங்கும் போது , முதலாம் ஆண்டு படிக்கிற உன்னோட புள்ளையோட நீ வந்தா , நாங்க ஒண்ணும் உன்னய கம்பஸ் வராதேன்னு சொல்ல மாட்டோம்!


புரிஞ்சவன் பொழச்சுக்கோ!!!

Wednesday, August 1, 2012

மாற்றான் திரைவிமர்சனம்! பிரீமியர் ஷோ பாத்திட்டோமில்ல!!!




முகமூடி வி.ஐ.பி ஷோவுக்கு அழைத்த அதே குழு சூர்யாவின் "மாற்றான்" திரைப்படத்துக்கான வி.ஐ.பி ஷோவுக்கும் அழைத்திருந்தது! முகமூடி சற்று தாமதமாகி வரும் நிலையில் , மாற்றான் குழுவோ அழைத்த அடுத்த நாளே பிரிமியர் ஷோவுக்கு ஏற்பாடு செய்தது. ஷோவுக்கு மொத்தமே கிட்டத்தட்ட இருபது பேர் தான் வந்திருப்பார்கள். அனேகரது முகங்கள் பரிட்சயமில்லாதது. இலங்கை பதிவர்களில் எனக்கு பரிட்சையமான மைந்தன் சிவா, லோஷன் ஆகியோர் மிஸ்ஸிங். பாவம் அவிய்ங்களுக்கு என்ன வேலையோ? ஓக்கே படம் தொடங்கிடிச்சு! ட்ரெய்லரில் காட்டப்பட்டதற்கும் , படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாகவே பட்டது. அதை பற்றி பின்னால் விரிவாக பார்க்கலாம்.


ஒட்டிப்பிறந்த இரண்டு சூர்யாவும் அமேரிக்காவின் ஒரு சிறிய நகரத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இரண்டு பேருக்கும் அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமமே இருக்காது. ஒருவர் தலையை ஒட்ட வெட்டி இருப்பார், இன்னொருவர் புசு புசு வென்று தலைமுடி வளர்த்து இருப்பார். இந்த இருவரும் தமது சிறிய நகரத்தில் சொந்தமாக ஒரு பர்கர்  கடை நடாத்தி வருகிறார்கள். சுறுசுறுப்பு + டைமிங் + சிறப்பு தேர்ச்சி என்பனவற்றால் இவர்களது கடை ஆஹா ஓஹோவென்று புகழோடு ஓடுகின்றது. சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஐஸ் ஹாக்கி ஆடுவதிலும் நேரம் சிலவிடுகிறார்கள். ஒட்டியிருப்பதால் கோல் காப்பில் சிறந்து விளங்குகின்றார்கள். சமயத்தில் பப், கிளப், டிஸ்கோதே என்று பட்டையை கிளப்பவும் செய்கிறார்கள்.


இந்த இரண்டு சூர்யாக்களில் தலைமுடியை ஒட்ட நறுக்கி இருக்கும் சூர்யா கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்லவராக இருக்க , தலைமுடி வளர்த்த சூர்யாவோ வாய் ஜாலங்களில் புகுந்து விளையாடுகிறார். கல கலவென பேசியே பெண்களை உஷார் செய்து மேட்டர் முடிப்பதிலும் வல்லராக இருக்கிறார். உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால் முடிவளர்த்த சூர்யா பெண்களை உசார் பண்ணி "சம்பவம் " பண்ணிக்கொண்டு இருக்கையில் , மற்ற சூர்யா  பக்கத்திலேயே இருந்து லேப் டாப்பை நோண்டிக்கொண்டு இருப்பார். ஒட்டி பிறந்தவர்களாயிற்றே! வேறு வழி???? அட ! ரொம்ப நேரமா இந்த இரண்டு பேரோட பெயரையும் சொல்லாமலே எழுதிக்கிட்டு இருக்கேனே! ஷோர்ட்டா முடி வெட்டின சூர்யா பேரு "பப்பு சாமி" சுருக்கமா "பாப்", முடிவளத்த சூர்யா பேரு "வால்ட்டர்" சுருக்கமா "வால்ட்". இந்த கதையியில் சத்தமில்லாம ஒரு காதலும் ஓடிகொண்டு இருக்கிறது. பாப், பேனா நண்பர் பகுதி மூலமாக ஒரு "மேய்" ( காஜல்) என்ற பெண்ணுடன் மூன்றுவருடமாக காதலில் இருக்கிறார். இருவரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தது கிடையாது! அப்போ ஃபேஸ்புக் இல்லை, கதை நடப்பது 2003இல்!

சூர்யாவோட மேக் அப் எப்பூடி?

இந்த நிலையில் வால்டருக்கு இயல்பிலேயே நடிப்பின் மீது இருக்கும் ஆர்வம் காரணமாக ஹாலிவுட் போய் ஒரு சிறந்த நடிகனாக ஆவதற்கு விரும்புகிறார் ( தமிழ் சினிமாவை இங்கு தான் ஹாலிவுட் தரத்துக்கு கொண்டு போகிறார் கே.வி ஆனந்த்) . இதற்கு முதலில் மறுப்பு தெரிவிக்கும் பாப், பின்னர் தனது சகோதரனுக்காக இணங்குகிறார். சொந்தபந்தங்களிடம் விடைபெற்று தமது சிறிய நகரத்தை விட்டு கலிபோர்னியாவில் ஒரு அப்பார்ட்மென்டில் குடியேறுகின்றனர். அங்கு நடிகையாக ஆசைப்பட்டு ஏற்கனவே குடியிருக்கும் சமந்தாவின் நட்பு கிடைக்கிறது. சமந்தா மூலமாக ஒரு நடிப்பு ஏஜென்டின் தொடர்பும் கிடைக்கிறது. ஆனாலும் தனது பங்குக்கு வால்டரும் திரைப்ப்ட துறையில் புகுவதற்கு முயற்சி செய்தவண்ணம் உள்ளார்.


இதற்கிடையில் பாப்பிற்கு பேனா நண்பியாக இருக்கும் மேயை ,பாப்பிற்கு தெரியாமல் கலிபோர்னியா வரவழைக்கிறார் வால்டர். சில பல சந்திப்புக்களின் பின்னர் பாப்புக்கும் மேய்க்கும் காதல் மலர்கிறது. பாப்பும் வால்டரும் ஒட்டிய இரட்டையர்கள் என்று தெரியாமலேயே பாப்புக்கும் , மேய்க்கும் காதல் மலர்கிறது. சில பல உத்திகளின் மூலம் அந்த உண்மையை இருவரும் மறைப்பார்கள். ( உதாரணம் : ஒரு இடத்தில் பாப்பிற்கு பக்கத்தில் பிரம்மாண்ட டெடி பெயர் போல வேடமிட்டு படுத்திருப்பார் வால்டர்).


இந்த நேரத்தில் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகையான செயரின் ( தாப்சி பானு) அறிமுகம் கிடைக்கிறது. தான் நடித்துக்கொண்டு இருக்கும் "ஹனி அன்ட் தெ பீஸ் " நிகழ்ச்சியிலிருந்து ஒதுங்கிக்கொள்ள நினைக்கும் தாப்ஸி , இந்த வித்தியாசமான இரட்டையரில் ஒருவரான வால்டரை தனக்கு ஜோடியாக நடிக்க வைப்பதன் மூலம், அந்த நிகழ்ச்சியின் மார்கட்டை குறைத்து , அந்த நிகழ்ச்சியிலிருந்து கழன்றுகொள்ள திட்டம் தீட்டி , நினைத்தபடி வார்டரை அந்த நிகழ்சியில் நடிக்கவும் வைத்துவிடுகிறார்.



செயரின் திட்டத்தை உணர்ந்துகொள்ளும் தயாரிப்பு தரப்பு , தொழிநுட்பம் மற்றும் கமிரா உத்திகளின் மூலம் வார்டர் கூட பாப் ஒட்டியிருப்பதை மறைத்து, படமாக்கி படப்பிடிப்பு செய்கிறார்கள். செயரின் எண்ணத்துக்கு மாறாக அந்த நிகழ்ச்சி செம கல்லா கட்டுகிறது, பட்டி தொட்டியெங்கும் பரபரப்பாக ஓடுகிறது. அந்த பிரபலத்தின் காரணமாக இந்த இரண்டு சூர்யாக்களும் "டாக் ஷோ", "விளம்பரங்கள்" என வேல்ட் பேமஸ் ஆகிறார்கள்.

இப்படியாக அவர்களது வாழ்க்கை பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒரு நாள் இந்த இரண்டு சூர்யாக்களும் படுக்கையில் ஒன்றாக இருப்பதை தற்செயலாக காஜல் அகர்வால் கண்டு விடுகிறார். அவருக்குத்தான் இவர்கள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் என்ற கதை தெரியாதே! உடனே இவர்களை "ஓரினச்சேர்க்கையாளர்கள்" என நினைத்துவிடுகிறார். அப்போதுதான் தாங்கள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் என்ற உண்மையை போட்டுடைகிறார் பாப். "மூன்று வருடங்களாக இந்த உண்மையை ஏன் மறைத்தாய்?" என்ற எக்ஸ்ரா கோபத்துடன் கிளம்பி போகிறார்.


ஓ! சமந்தா.. சமந்தா.. சமந்தா!

இதுவரை காலமும் ஒன்றாக , ஒட்டி இருந்தபோது சிரமமாக இல்லாத உணர்வு , ஒரு பெண் வந்ததும் வந்துவிடுகிறது. பாப் சூர்யா , காஜலின் நினைவாகவே அலைகிறார். இதை உணர்ந்துகொள்ளும் வால்டர் சூர்யா, பல்வேறு யோசனைகளின் பின்னர், இணைந்துள்ள தங்கள் இருவரையும் சத்திரசிகிச்சையின் மூலம் பிரித்துக்கொள்வது என்ற முடிவுக்கு வருகிறார் . இவர்கள் இருவரையும் பிரிப்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால் , இவர்கள் இருவரும் பாப் சூர்யாவின் கல்லீரலையே பகிர்ந்து கொண்டுள்ளார்கள். அது சத்திரைகிச்சையின் போது பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடலாம். முதலில் வால்டரின் யோசனைக்கு மறுப்பு தெரிவிக்கிறார் பாப். இந்த இடத்தில் காஜலும் வந்து , "நீங்கள் ஒட்டியிருப்பது எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது.நான் உன்னை இப்படியே என் காதலனாக ஏற்றுக்கொள்கிறேன்" என்று டயலாக்கும் விட்டுவிட, பிரிவது என்ற எண்ணத்துக்கு சுத்தமாக மறுப்பு தெரிவிக்கிறார் பாப். ஆனாலும் பிரிந்துவிடுவது என்ற எண்ணத்தில் உறுதியாக இருக்கும் வால்டர் , தான் குடித்துவிட்டு பாப்பை பொலிசிடம் மாட்டிவிட்டு, இன்னும் பிற தொல்லைகள் பண்ணி , பாப்பை சத்திர சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள வைத்து விடுகிறார். வெற்றிகரமான சத்திர சிகிச்சையின் பின்னர் இருவரும் பிரிந்தும் விடுகின்றனர்.


இப்போது ஆரம்பிக்கிறது சனி! பிறப்பிலிருந்தே ஒட்டியிருந்தன் பலன், ஒருவர் இல்லாமல் ஒருவருக்கு பேலன்ஸ் தவறுகிறது. அதைக் கூட சமாளிக்கும் இருவருக்கும் , தனிமை பெரும் சவாலாக இருக்கிறது. பாப் சூர்யா , காஜலை அழைத்துக்கொண்டு தனது சொந்த கிராமத்துக்கு சென்று மீண்டும் , பர்கர் கடையை ஆரம்பிக்கிறார். வால்டர் இல்லாமல் அவரால் அந்த கடையை சமாளிக்க முடியாமல் திணறுகிறார். அதோடு ஹாக்கியிலும் , கோட்டைவிடுகிறார். இங்கு கலிபோர்னியாவில் பாப் இல்லாத சென்டிமென்டோ என்னமோ, வார்டரின் டி.வி ஷோ காத்து வாங்குகிறது. அத்தோடு தனிமை துயர் வேறு! இந்நிலையில் செயரின் ஆலோசனையின் பேரில் , பாப்பை சந்திக்க கிளம்புகிறார் வால்டர். இருவரும் மீண்டும் இணைகிறார்கள். எப்படி என்கிறீர்களா? தமது ஆடைகளை இணைப்பதன் மூலம் ,பழையபடி இருவரும் இணைந்து பட்டையை கிளப்புகிறார்கள். தேவையான போது பிரிந்தும், தேவையின் போது இணைந்தும் கொள்கிறார்கள்.  பாப் சூர்யா காஜலை மணமுடித்து , அவரை கர்ப்பமும் ஆக்குகிறார். வால்டர் சூர்யா, உள்ளூர் நாடக சபாவில் பெரிய ஆர்டிஸ்டாக ஆகிவிட சுபம் போட்டு படத்தை முடிக்கிறார் இயக்குனர் கே.வி ஆனந்த்.


மாற்றான் ட்ரெய்லரில் காட்டுவது போல படம் அவளவு சீரியசாக இல்லை, ஆரம்பத்தில் இருந்து முடிவுவரை செம காமடியாகவே போகிறது ( விளம்பர யுக்தியோ என்னமோ?) . சைகைகளால் காமடி, குறியீட்டு காமடி, வார்த்தைகளால் காமடி என அனைத்தையும் கலந்து தந்திருக்கிறார் கே.வி. ஆனந்த்.ன்படம் முழுக்க சிரிச்சு முடியல.......... 
உதாரணத்துக்கு சில காட்சிகள்......

* தங்களது பர்கர் கடையில் ரகளை பண்ணும் ஆசாமியுடன் பேசும் வசனங்கள்.

* அடிபட்டு அடிபட்டே உடைந்து போன அந்த ஐஸ் ஹாக்கி மைதானத்தின் கண்ணாடியை காட்டுவதும், காட்டிக்கொண்டு இருக்கும் போதே "மடார்" என ஒருவர் வந்து அந்த கண்ணாடியில் மோதுவதும்.

* வார்டர் சூர்யா மேட்டர் பண்ணிக்கொண்டிருக்கும்  போது திரையொன்றை போட்டுவிட்டு , இந்தப்பக்கம் அசால்டாக இருந்து அப்பிளை நோண்டும் பாப் சூர்யா. 


* கலிஃபோர்னியாவில் அந்த அப்பர்ட்மெண்ட் ரிசப்ஷனிஸ்டாக வரும் ஆசாமியும், தான் விழித்திருப்பதாக காட்டிக்கொள்ள அந்த மனிதர் அடிக்கும் ரகளையும்.

* கலிஃபோர்னியா கிளப் ஒன்றில் , எல்லோரும் மெலோடி பாடல் ஒன்றுக்கு ரம்மியமாக ஆடிக்கொண்டிருக்க, பாப் சூர்யாவும், காஜலும் என்ன பேசுவது என்று தெரியாமல் "எனக்கு பனி பிடிக்கும்" " எனக்கு நிலநடுக்கம் என்றால் பயம்" என்று பேசிக்கொண்டிருப்பதும், அதற்கு வால்டர் சூர்யா காட்டும் முகபாவனையும் செம! அதிலும் "எனக்கு வீட்டின் பின்புறம் பக் யார்ட் இருப்பது ரொம்ப பிடிக்கும் என மேய் சொல்ல, 'ஆமாம் பக் யார்டில் தான் நாய் வளர்க்கலாம்" என்று பாப் சொல்லிவிட்டு முழிவாரே!!! வயிறு வலிக்க சிரித்தேன்! 

* வியட்னாம் போரில் காலை இழந்ததாக பிச்சையெடுக்கும் நபர்

* வார்டரின் ஏஜென்டு

* பஸ்ஸில் வார்டர் ஜொள்ளு விட்டுக்கொண்டிருக்க, கதவுக்கு வெளியே தொங்கும் பாப்

சூர்யாக்கள் மற்றும் காஜல்


இப்படியாக படத்தில் எங்கேயுமே காமடிக்கு குறைவே இல்லை. சீரியசான நேரங்களில் கூட காமடி தஒவிரித்தாடுகிறது. ஆனாலும் எந்த இடத்திலும் காமடியானது அந்த காட்சியின் போக்கையோ, கனாகனத்தையோ கெடுத்துவிடாமல் பார்த்திருக்கிறார் கே.வி ஆனந்த். அதற்கே நாலைந்து அவர்டு கொடுக்கலாம். கலகலப்பான நேரத்தில் அமர்க்களமான காமடி, சோகமான அல்லது நெகிழ்வாம நேரத்தில் குறியீட்டு அல்லது சைலண்டான காமடி என்று காட்சிக்கேற்ப காமடியை அள்ளி தூவியிருக்கிறார் இயக்குனர் கே.வி . ஆனந்த்.

நடிப்பை பொறுத்தவரை இரண்டுமே சூர்யாவாக இருந்தபோதிலும் வால்டராக வரும் சூர்யாவே எல்லோரையும் கவர்கிறார். பாப் சூர்யா கூச்ச சுபாவமுடையவராக காட்டப்படுவதால் அடக்கி வாசித்தாரோ என்னமோ? ஆனாலும் தனது கதாபாத்திரத்துக்கு உரிய நடிப்பை வெளிக்காட்ட பாப் சூர்யாவும் தவறவில்லை என்றே கூற வேண்டும். ஏப்ரில் ஆக வரும் சமந்தாவும் கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பு, சமந்தா அதி உச்ச கவர்ச்சி காட்டிய படம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். அனேக நேரங்களில் பிகினியுடன் தான் அலைகிறார். ( ஆபாசம் என்று சரவணா சொல்வாரே என்பதற்காக , டீசெண்டான ஒரு படம் தேடியும் கிடைக்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்). செயராக வரும் தாப்ஸி , பந்தாவோடு கூடிய பாந்தமான நடிப்பு, காஜலின் நடிப்பும் கவனிக்கத்தக்கது.

தமிழ் சினிமாவை ஹாலிவுட்டுக்கு கொண்டுபோன கே.வி ஆனந்த்!

என்னதான் பாலா, வசந்தபாலன், பாலாஜி சக்திவேல்,பிரபு சாலமோன் ,கமல்ஹாசன் போன்றோர் தமிழ் சினிமாவை அடுத்த பரிமாணத்துக்கு கொண்டு போவதற்கு பிராயத்தனப் பட்டாலும், சத்தமேயில்லாமல் தமிழ் சினிமாவை ஒரு உலக சினிமா ரேஞ்சுக்கு கொண்டுபோயிருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த்.


* முதலில் கதை , ஒட்டிய இரட்டயரை வைத்து உலகில் இதுவரை யாரும் யோசிக்காத அளவுக்கு ஒரு படம் பண்னியிருப்பது. ( கே.வி சார் இந்த கதையை முதலில் ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோவில் கொடுத்து உலக பாரம்பரிய சொத்துக்களில் ஒன்றாக பதிவு செய்து விடுங்கள். அப்புறம் எவனாச்சும் வெள்ளைக்காரன் வந்து என்னோட கதை என்று கேஸ் போட்டுட போறான். சொந்தமாய் யோசிக்கிறது மட்டுமல்ல, அதை பாதுகாக்கவும் தெரியணும்)

சொல்லித்தெரிய வேண்டி இருக்கு இது தாப்ஸீன்னு! எல்லாம் மேக் அப்!

* அடுத்து ட்ரெய்லரிலும் படத்திலும் வேறுபட்ட கதை போல காட்டியிருப்பது. ட்ரெய்லரை பார்க்கும் போது ஏதோ ஆக்க்ஷன் படம் போல தோன்றினாலும் படம் தியேட்டரில் காமடி பீஸாகியிருப்பது. ஆனாலும் ட்ரெய்லரில் காட்டப்படும் அந்த சண்டைக்காட்சி அப்படியே அப்பட்டமாய் , படத்தில்  கிளப்பில் இரண்டு சூர்யாவும் சண்டை போடுவது போல் அமைந்துள்ளதானது வேறு படத்தின் ட்ரெய்லரை நான் பார்க்கவில்லை, சரியான படத்தை தான் பார்க்க வந்திருக்கிறேன் என்று உறுதிப்படுத்தியது.


* அடுத்து மேக் அப் தொழிநுட்பம்! என்னதான் ட்ரெய்லரில் நடிக நடிகைகளது முகங்கள் அப்படியே காட்டப்பட்டாலும் , படத்தில் அடையாளமே தெரியாத அளவுக்கு மேக் அப் போட்டிருக்கிறார்கள். இரட்டை சூர்யா என்ற போதும், இருவரது முகத்துக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. ஹாலிவூட் தரத்துக்கு இருக்க வேண்டும் என்பதற்காக , சூர்யாவை வெள்ளைக்காரன் போலவே மேக் அப் போட்டுவிட்டிருகிறார் கே.வி! பார்வைக்கு ஒரு சூர்யா மற் டாமன் போலவும், இன்னொரு சூர்யா கிரேக் கினியர் போலவும் இருக்கிறார்கள். அது போல் சமந்தா, காஜல், தாப்ஸி ( இவர் ஒஸ்கார் விருதுவென்ற செயர் போலவே மேக் அப் செய்து இருக்கிறார்) என எவரையுமே அடையாளம் தெரியவில்லை. அந்தளவுக்கு மேக் அப் இருக்கிறது. கமல் ஹாசன் எல்லாம் பிச்சை எடுக்கணும்!


* ஹாலிவூட் தரத்தில் படத்தை எடுத்திருப்பதாலோ என்னமோ நடிகர்கள் , டெக்னீஷியன்கள், இயக்குனர் ஆகியோரின் பெயர்களை கூட மாற்றியிருக்கிறார்கள். இசை ஹாரிஸ் என்பதற்கு பதிலாக சார்லி கார்ட்னர் என வருகிறது. தயரிப்பி கல்பாத்தி அகோரத்துக்கு பதில் டுவன்டியத் சென்சுவரி ஃபொக்ஸ் என வருகிறது. இயக்குனர் கே.வி . ஆனந்த் என்பதற்கு பதில் ஃபெயர்லி என்று வருகிறது. படத்தின் பெயர் கூட "மாற்றான்" என்பதற்கு பதில் "ஸ்ரக் ஒன் யூ" என்று வருகிறது. மேக் அப் தொழிநுட்பத்தை போலவே இந்த பெயர் மாற்றும் தொழிநுட்பமும் தமிழ் சினிமாவுக்கு புதிது. ( ஆனாலும் ஏற்கனவே இந்த தொழிநுட்பத்தை விஜய் மில்டன், கௌதம் மேனன், மிஸ்கின், ஷங்கர் ( காட்சிகளில்), முருகதாஸ் ஆகியோர் பயன்படுத்தியிருப்பதாக அறிகிறேன்) . ஒரு வேளை தமிழில் ஒரிஜினல் பெயர்களுடன் படம் வெளியாகலாம்.

இந்த உலக தரமான சினிமாவை காணும் பாக்கியம் உங்களுக்கு எப்போது கிடைக்கப்போகிறதோ? ஒரு பிரபல பதிவராக இருந்த படியால் , பிரீமியம் ஷோ பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எல்லோருக்கும் அது வாய்க்குமா? 

டிஸ்கி : ஜாகி சானின் "டுவின் டிராகன்" படத்துக்கும் மாற்றானுக்கும் எந்தவித சம்மந்ததும் கிடையாதாம். பிரீமியர் ஷோவில், இடைவேளையின் போது  கன்டீன் டீ மாஸ்டர் சொன்னார்.

டிஸ்கி : நேற்று நான் பிரீமியர் ஷோ பார்த்துக்கொண்டிருக்கும் போது, ஃபேஸ்புக்கில் பின்னூட்டம் போட்டு தொல்லை செய்த பாலா கணேசனையும், தினகரன் ரேணுகாவையும் பதிவுலகம் வன்மையாக கண்டிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...