ஏழாம் அறிவு என்று ஆரம்பித்தவுடனேயே எழுந்து ஓடிவிடாதீர்கள். படம் வந்த நாளிலிருந்து முருகதாசையும் , சூர்யாவையும் ,போதிதர்மனையும் அத்தனை வலைப்பதிவர்களும், தமிழ் ஆர்வலர்களும் அடித்து, துவைத்து, காயவிட்டு இஸ்திரி போட்டு தொங்கவிட்டாயிற்று. முருகதாசும் இப்போது டாக்டருடன் பிஸியாகி விட்டார். சூர்யாவும் அடுத்த வேலை பார்க்க கிளம்பிவிட்டார்.
இந்த நேரத்தில் நான்கு அறிவே இல்லாமல் வந்த இந்த ஏழாம் அறிவை நான் வம்புக்கு இழுக்க வேண்டியதன் அவசியம் என்ன என்று தானே கேட்கிறீர்கள்? காரணம் இருக்கிறது. இப்போது எனது பிரச்சினை எல்லாம் , தமிழின கொழுந்து முருகதாசுடனோ அல்லது தமிழின விடிவெள்ளி சூர்யவுடனோ இல்லை. எனது பிரச்சினை எல்லாம் எம்மவரோடு தான்.
வெட்கத்தை விட்டு சில விடயங்களை சொல்லியே ஆக வேண்டும். "தமிழன்,தமிழ், தமிழின உணர்வு" என்று யாராவது பேசினாலே மெய்சிலிர்த்து உணர்ச்சிவசப்படும் எனக்கு, ஏழாம் அறிவைப் பார்த்தவுடன் அதன் உள்நோக்கமோ , தார்ப்பரியமோ புரியாமல் கொஞ்சம் ஓவராகவே மெய்சிலிர்த்து,புல்லரித்தது.எனது ஃபேஸ்புக் நிலைகளிலெல்லாம் முருகதாசையும் , சூர்யாவையும் ஆகா ஓகோ என புகழப்போய் நிருபன் அண்ணா, வொல்ரன் அண்ணா போன்ற மோதிர கைகளால் குட்டுப்பட்டு உண்மைதெளிந்த கதையை இந்த தமிழ் கூறும் நல்லுலகு முன்பு ஏற்றுக்கொள்கிறேன்.
படத்தைப் பார்த்துவிட்டு முருகதாசையோ, சூர்யாவையோ தமிழின காவலர்களாக யாரும் நினைப்பார்களேயானால் அது மடமைத்தனம் தான். ஏழாம் அறிவு படமானது ஈழத்தமிழனதும், ஒட்டு மொத்த தமிழினத்தினதும் பெயரைச்சொல்லி பஞ்சம் பிழைக்க வந்ததேயன்றி, வேறேதுமல்ல என்பதை ஒட்டு மொத்தமாக ஒப்புக்கொள்கிறேன். (அதை நாங்கள் எப்பவோ ஒப்புக்கொண்டாயிற்று, நீ சொல்ல வந்தத சொல்லுடா மொதல்ல என்று பதிவர்களின் பல் நறநறப்பு கேட்கிறது)
சில நாட்களுக்கு முன்னர் , எனது அபிமான அறிவிப்பாளரும், முன்மாதிரியும் அத்தோடு இலங்கையின் முன்னணி தமிழ் ஊடகவியலாளருமான ஏ.ஆர்.வி. லோஷன் அண்ணாவின் டுவிட்டர் டுவிட்டுகளை தடவிக்கொண்டிருந்தேன். அப்போது கண்ணில் பட்டது ஒரு டுவீட். இது லோஷன் அண்ணாவின் நண்பர் ஒருவரால் டுவீட் செய்யப்பட்டு லோஷன் அண்ணாவால் ரீடுவீட் செய்யப்பட்டிருந்தது. இதை லோஷன் அண்ணா தெரிந்து செய்தாரா அல்லது தனது அபிமானி ஒருவரது டுவீட் என்பதால் ஒரு ஜாலிக்கு ரீடுவீட் செய்தாரா என்பது எனக்கு தெரியவில்லை. அனால் அந்த டுவீட் எனக்குள் நிறைய வாதங்களை கிளப்பி விட்டிருக்கிறது.
இது தான் அந்த டுவீட்.... "ஏழாம் எழவு கிளப்பி விட்ட தமிழ் உணர்வால், சிலர் லீற்றர் லீற்றராக கொப்பளிக்கிறார்கள்".
இந்த டுவிட்டில் தமிழின அல்லது, தமிழ் உணர்வுக்கெதிரான ஏளனம் தெரிந்தது. எனது கேள்வியெல்லாம் , படம் தமிழனை எமாற்ற வந்த போலியான ஒரு விளம்பரம் தான். ஆனால் அதற்காக அதன் மூலம் சில அடிமட்ட மக்களிடையே ஏற்பட்டிருக்கின்ற தமிழ் உணர்வுகளும் போலியானது, பொய்யானது என்று ஆகிவிடுமா?
உதாரணத்திற்கு ஒன்றை சொல்கிறேன், வழிநெடுகில் வரிசையாக அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்களுக்கு ஒரு விபச்சாரி பிச்சை போடுகிறள் என வைத்துக்கொள்வோம். அவளது நோக்கம் பிச்சையிடும் சாக்கில் வீதியில் பொலிஸ் காரர்களது நடமாட்டத்தை கண்காணிப்பதாக இருக்கின்றது. இந்த காட்சியைப் பார்கிறன் , வாழ்நாளில் தானம் செய்வது என்றால் என்னவென்றே அறியாத ஒரு உலோபி. அதைப் பார்த்தவுடன், "அட கேவலம் ஒரு விபச்சாரி தானம் செய்கிறாள் , நான் இப்படி உலோபியாக இருக்கிறேனே "என்று மனம் மாறி அவனும் தானம் செய்கிறான் என்றால், இங்கே அந்த விபச்சாரியின் செய்கையைப் பார்த்து வந்த உலோபியின் மனமாற்றத்தை பொய்யானது என்று கூறிவிட முடியுமா?
இன்னொரு வாதமும் வந்தது . "இத்தனை ஆயிரம் பேரை பலிகொடுத்து போராடிய போது வராத தமிழ் உணர்வு , ஒருவன் சிக்ஸ் பேக்ஸ் உடம்பை காட்டியவுடன் வந்துவிட்டதோ" என்று. இந்த கூற்றுடன் நூறு வீதம் ஒத்துப்போகிறேன். தமது இன்னுயிரை பணயம் வைத்து தமிழின விடிவுக்காய் போராடியவர்களின் தியாகம் எத்தனையோ பேரின் மரமண்டைகளை போய் சேராதது துரதிஷ்டமே.
ஆனால் இன்னொன்னொரு கசப்பான உண்மையையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். நாம் வாழும் சமூகம் எப்படிப்பட்டது எனில் "இன்று போலியோ தடுப்பு தினம், தவறாமல் உங்கள் பிள்ளைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து கொடுங்கள் " என்று வீடுவீடாக , சந்தி சந்தியாக நின்று வைத்தியர்கள் கத்தும் போதெல்லாம் கண்டுகொள்ளாமல், "இன்று போலியோ தடுப்பு தினம் எனது பிள்ளைக்கு நான் போலியோ சொட்டுமருந்து கொடுத்து விட்டேன் அப்போ நீங்க?" என்று சூர்யாவும் (அடுத்துவருவதை ஹிந்தி தமிழ் பாணியில் வாசிக்கவும்) "இன்று போல் இயோ தடுப்பு தினம், நான் எனது பேரனுக்கு போல் இயோ தடுப்பு மரு ந்து கொடுத்து விட்டேன், நீங் க கொடுக்கலயா?" என்று தனது பேரனை கையில் வைத்துக் கொண்டு அமிர்தாப் பச்சனோ தொலைக்காட்சியில் தோன்றி சொன்னவுடன் ,தமது குழந்தைகளை வைத்திய சாலைக்கு கொண்டோடும் தாய்மார்கள் தான் அதிகம்.
இங்கு தமது பிள்ளைகளுக்கு போலியோ கொடுக்கவேண்டுமென்று தாய்மாருக்கு வந்த உணர்வு பொய்யாகிவிடுமா? அல்லது பிள்ளைகளை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் தாய்மார்களை இடைமறித்து "நில்லுங்கள் வைத்தியர் சொல்லி கேட்காமல் , அமிதாப் சொன்னவுடன் வந்த உங்கள் அக்கறை உணர்வு போலியானது" என்று சொல்லி அவர்கள் தமது பிள்ளைகளுக்கு போலியோ கொடுப்பதை தடுத்து நிறுத்துவது தான் சிறந்ததென்று ஆகிவிடுமா?
எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான்,பெயர் கணேஷ்! பல்கலைகழகத்தில் என்னோடு கூட படிக்கிறான். அவனுக்கு தமிழின உணர்வோ அல்லது தமிழில் பேச வேண்டுமென்ற ஆர்வமோ சிறிதும் கிடையாதவன். மேற்கத்தேயமே கதி என்று கிடந்தவன். தனது பிள்ளைகளுக்கு தமிழ் கறுத்தருவதை சாவான பாவங்களில் ஒன்றாக கருதியவன். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் எம்குல பெண்கள் மீது தேராத காதல் கொண்டவன். அவன் ஏழாம் அறிவு பார்கப்போனான். படம் முடிய வந்தான். வந்தவன் சொன்னான் "மச்சான் என்ர பிள்ளைகளுக்கு மட்டுமில்லடா, பேரப்பிள்ளைகளுக்கும் நான் தமிழ் கற்றுத்தருவேன்.அது போக தமிழ் இலக்கியங்கள் கொஞ்சம் சொல்லு மச்சான், நான் படிக்கணும். ஸ்ருதிஹாசன் என்னமா சொன்னாள் மச்சான். அவள் ஒரு அல்ரா மார்டன் பொண்ணு என்று நினைச்சன் மச்சான், ஆனா அவ தமிழ பத்தி சொன்ன ஒவ்வொரு வசனமும் என்னக்கே சொன்ன மாதிரி இருந்ததடா".
இதை என்னவென்று சொல்வீர்கள்? இத்தனை காலமும் இவனது தமிழ் ஆசிரியரும், ரூமில் நானும், தமிழ் தியாகிகளும் சொன்ன போது அவனுக்கு புரியாத தமிழின் அருமை, "ழ", "ள", "ட்",ற்" சரியாக உச்சரிக்கத் தெரியாத சுருதிஹாசன் சொன்னபோது புரிந்திருக்கிறது.
எங்கிருந்து வந்ததோ அந்த இடம் சரியானதாக இல்லாது இருப்பினும், இவனுக்கு வந்திருக்கிற உணர்வு நியாயமானது தானே? அல்லது அவனிடம் போய் "மச்சி! ஸ்ருதி பேசுறது ஒழுங்கான தமிழே இல்லடா, அது எல்லாம் பொய் உன்னோட உணர்வும் பொய். நீ தென்கச்சி கோ சுவாமிநாதன் அல்லது சாலமன் பாப்பையாவோட இன்று ஒரு தகவல் பாத்து தெரிஞ்சுக்க என்று சொன்னால், மறிபடியும் முருங்கை மரம் ஏறிவிட மாட்டானா? அவரவர்க்கு அவரவர் ரசனைக்கு உரியவர் சொனனால் தான் உறைக்கிறது. உணர்வு எங்கிருந்து வந்தது என்பதை விட , வந்து சேர்ந்த உணர்வு சரியாக இருப்பின் அந்த உணர்வை கொச்சைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லையே!
அது போக நான் விடுமுறைக்காக ஊருக்கு போயிருந்த போது ஏழாம் அறிவு விவாதங்கள் சிலதை காதால் கேட்டேன். சுய நன்மை கருதி அவற்றில் கலந்து கொள்லவில்லை. இளைஞர்கள் பலருக்கு முருகதாசின் கபடநாடகம் புரிந்திருந்தது. அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் அவர்கள் சொன்னது ஒன்று எனக்கு மிகவும் பிடித்துப் போனது "போதிதர்மன் என்ற வேற்றினத்தானை காட்டி லாபபம் பார்க்க முருகதாஸ் முயன்றிருந்தாலும், அந்த படத்திற்கு ,பிறகு நமக்கு பரிட்சயமில்லாத தமிழ் அறிஞர்களை பற்றி அறிய வேண்டுமென்ற ஆர்வம் வந்திருக்கின்றது. அறியாத ஒன்றை அறிந்ததுமாச்சு, நாளைக்கு இன்னொருவன் வந்து ஒரு ஜப்பானியனைக்காட்டி இவன் ஒரு தமிழன் என்று சொல்லும் போது அவன் கன்னத்தில் நாலு போடுவதற்கு வசதியாகவும் இருக்கும்". இந்த விழிப்புணர்வு நியாயம் தானே?
போதிதர்மன் தமிழனாக இல்லவிடினும் அவன் காரணமாக , உண்மைத் தமிழ் அறிஞர்களை தேடி அறிந்து கொள்ள வேண்டுமென்ற அவர்களது உணர்வு பொய்யாகிப் போகுமா? அல்லது அந்த இளைஞர்களிடம் போய் "ஏழாம் அறிவைப் பார்த்துவிட்டு , தமிழ் அறிஞர்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்று நீங்கள் நீங்கள் எடுத்த முடிவு தவறானது. போய் ஒளவையார் படத்தைப் பார்த்துவிட்டு அந்தமுடிவை எடுங்கள் அப்போது ஏற்று கொள்கிறோம் என்று சொல்ல சொல்கிறீர்களா?
ஒவ்வொரு சந்தர்ப்பங்களும் ஒவ்வொருவருக்கு ஒரு உணர்வைக் கொண்டுவந்து சேர்கிறது. மொக்கையாய் வந்த இந்த ஏழாம் அறிவு சில ஏற்கத்தக்க மாற்றங்களை விதைத்து சென்றிருக்கிறது. அதற்காக படத்தைப் போன்று அந்த உணர்வுகளையும் கொச்சைப் படுத்துவது நியாயமில்லை என்றே எனக்குப் படுகின்றது.
தலைநகரில் தமிழில் கதைக்ககூசும் பெண்கள் சிலரை எனக்கு தெரியும். ஏழாம் அறிவுக்கு பின்னர் கொஞ்சமாவது தமிழ் அவர்கள் பேச முயற்சி செய்கிறார்கள் . அவர்களிடம் போய் படத்தில் சொன்னதெல்லாம் பித்தலாட்டம் , நீங்கள் உங்கள் ஆங்கிலத்திலேயே கதையுங்கள் என்று சொல்வது தான் தியாயமாக இருக்குமோ?
இல்லாத பேய் குறித்து உண்மையான பய உணர்வு வருவதில்லையா? அது போல தான் இதுவும். படம் மொக்கை தான், வெறும் வியாபர நோக்கில் வந்த ஒரு பிறழ்வான தமிழ் வரலாற்று கதைதான். நிச்சயம் அந்த இயக்குனைரை கண்டிக்கத்தான் வேண்டும். அந்த படம் குறித்த கொச்சைப் படுத்துதல்கள் அவரையே சாரும். ஒரு வகையில் அது நியாயமும் கூட.
ஆனால் அந்த படத்தின் தாக்கத்தால் உண்மையாகவே சிலரின் மனதில் எழுந்த உணர்வலைகள் பொய்யென்று ஆகாது.அது அவர்களது பிழையுமல்ல. உணர்வென்பது எப்போதும் மிகச்சரியாக இயங்கும் இடத்தில் இருந்துதான் வரவேண்டுமென்பதில்லை. அது பிறழ்வான இடத்தில் இருந்தும் வராலாம், உணர்வை ஏற்படுத்திய சம்பவம் எதிர் மறையாக இருப்பினும் ஏற்படும் உணர்வுகள் உண்மையாகவே இருக்கும்.
ஏனென்றால் தெனாபிரிக்காவில் மக்கள் சந்தோஷமாக வாழ்வதைப் பார்த்துவிட்டு காந்திக்கு சுதந்திர உணர்வு வரவில்லை. மாறாக எதிர்மறையான அடக்குமுறையை பார்த்த பின்புதான் அவருக்கு சுதந்திர தாகம் வந்தது. இதனால் காந்தியின் சுதந்திர உணர்வு பொய்யென்று ஆகிவிடுமா?
ஏதோ எனக்கு சரியென்று பட்டதை சொன்னேன். இதற்கு தமிழ் கூறும் நல்லுலகம் என்ன சொல்கிறது?