உதைபந்து

Sunday, September 14, 2014

பூவரசம்மரத்தடி....

எனக்கு தெரியும்
வழமையாய் நாம் சந்திக்கும்
அந்த பூவரச மர நிழலில்
நீ இன்றும் காத்திருக்க போகிறாய்....
வழமையாகவே தாமதமாய் வந்து
உன்னிடம் திட்டுவாங்கும் நான்
இன்று வரப்போவதில்லை..
ஏன்?? ... இனிமேல் வரப் போவதே இல்லை....
உன்னிடம் மட்டுமல்ல‌
புட்டு அவித்துவிட்டு
எனக்கு பிடித்த முட்டை பொரியலுடனும்
கத்தரிக்காய் பொரியலுடனும்
காத்திருக்கும் அம்மாவிடமும்....
புதிதாய் சந்தைக்கு வந்த
சப்பாத்தை அணிய காத்திருக்கும் தம்பியிடமும்....
உன்வீட்டில் பேசுவதற்கு
புறப்பட்டு போவதற்காய்
தன் நீல நிற சட்டையை
துவைத்து வைத்து காத்திருக்கும் அப்பாவிடமும்
இதையே தான் நான் சொல்ல போகிறேன்....

இதோ இப்போது...
நான் தெருவில் கிடக்கிறேன்....
உன் ஞாபகங்கள் சுமந்திருந்த‌
என் மூளை தெருவெங்கும்
சிதறிக்கிடக்கிறது.....
நீ அடிக்கடி எடுத்து கண்ணில் ஒற்றிக்கொளும்
என் வலது கை
பக்கத்து சாக்கடையில் கிடக்கிறது.....
என்மீது ஏறிச் சென்ற பேரூந்து
என் சதைகள் ஒட்டிய சில்லுகளுடன்
சற்று தூரமாய் நிற்கிறது....

என்னை சுற்றி
கூட்டம்... கூட்டம்... கூட்டம்....
"குடித்திருப்பான்"
"வேகமாய் வந்திருப்பான்"
"தற்கொலை"
"ஹெல்மட் இல்லையா"?
வாயிருக்கும் அனைவரும் என்னை சுற்றி
பேசிக்கொண்டே இருக்கின்றார்கள்.
உனக்கு தெரியும் நான் குடிப்பது இல்லை...
ஹெல்மட் இல்லாமல் போனதொரு
நாளில் நீ தலையில் செல்லமாய் குட்டியதில்
ஹெல்மட் இல்லாமல்
பைக்கை தொடுவதே இல்லை....
"உன்னோடு போவதற்கு
ஒரு நத்தை மேல் சவாரி போகலாம்"
என் வேகம் கண்டு நீயே சொன்னவை அவை.

நேற்று...
நண்பனின் விருந்துக்கு போக அனுமதி தந்தாய்...
கூடவே வந்து எனக்கு பொருத்தமாய்
ஆடையும் தெரிந்து தந்தாய்....
நெற்றியிலே முத்தமிட்டு
"காலையில் சீக்கிரம் வந்திடு "
என்ற கட்டளையுடன் கரைந்து போனாய்....

விருந்துக்கு போனேன்..
அங்கும் இதே போலவே
கூட்டம்... கூட்டம்.. கூட்டம்...
ஆண்களும் பெண்களுமாய்
ஆடிக்கொண்டிருந்தார்கள்....
தாராளமாய் மதுவும் இருந்தது..
என்னையும் குடிக்க சொன்னார்கள்..
மறுத்த என்னை பெண்பிள்ளை என்றார்கள்...
ஹும்...
அங்கே பெண்களே குடித்து கொண்டு தான் இருந்தார்கள்...
"வைன் உடம்புக்கு நல்லது"
"பீர் குடித்தால் ஒன்றும் ஆகாது"
"விஸ்கி நாத்தமே வராது"
"காக்டெயில் கோலா போன்றது தான்"
என்னை சம்மதிக்க வைக்க‌
எத்தனையோ சொன்னார்கள்.
பெருமௌனமே காத்தேன்....
சொன்னவர்களிடம் புன்னகையை மட்டுமே தந்தேன்..
அவர்களே குடித்துவிட்டு
வெற்றுக்குவளையை வைத்துவிட்டு போனார்கள்...
எனக்கு உன் முகம் மட்டுமே ஞாபகத்தில் இருந்தது...

விருந்து முடிய நேரத்தோடே கிளம்பிவிட்டேன்...
மௌனமாய் இருந்த தெருவின்
நிசப்த்தம் கலைக்காமல்
என் வண்டியை ஓட்டிகொண்டிருந்தேன்...
எதிரில் வந்தது அவன் தான்...
அவனை நான் விருந்தில் கண்டேன்...
பந்தயம் கட்டி
மூன்று போத்தல் மது குடித்தவன்...
அந்த விருந்தில் அவன் தான்
ஹீரோவாக இருந்தான்...
அகல விரித்த கண்களோடு
ஆச்சரியப்பட்டு போய் நிறைய பெண்கள்
அவனோடு சேர்ந்து ஆடினார்கள்....
அவன் தான் உண்மையான ஆண்மகன் என்றும் சொல்லிக்கொண்டார்கள்...
அவனுக்கு நிதானமில்லை...
என்னை மோதியது அவன் தான்...
அவன் மோதிய வேகத்தில்
ஒரு அதிவிரைவு பேரூந்தின்
சில்லுக்கு அடியில் விழுந்தது தான்
எனக்கு ஞாபகம்....

எனது உயிர் உன்னிடம் தான்
ஏதோ சொல்லத் துடிக்கிறது...
இந்த உலகுக்கு சொல்ல ஏதுமில்லை என்னிடம்...
சொன்னால் மட்டும் ???
ரத்தமும் சதையுமாய் இருந்து
எத்தனையோ பேர் சொல்லி கேட்காத‌
முரட்டு குடி சூரர்கள்
ஆவியாய் நான் வந்து சொல்ல
கேட்டுவிடப்போவது இல்லை....
உன்னிடம் சொல்லத்தான்
எனக்கு மிச்சமிருக்கிறது வார்த்தைகள்....

என்னைப்போலவே அவனுக்கும் ஒரு காதலி இருக்கிறாள்...
நேற்று அவளிடமும்
நான் உன்னிடம் குழைந்தது போலவே
குழைந்து குழைந்து விருந்துக்கு அனுமதி வாங்கினான்....
அவள் தான் அவனுக்கு ஆடை தெரிந்து கொடுத்தாள்....
நெற்றியிலும் முத்தமிட்டாள்....
கூடவே "கொஞ்சாமாய் குடிக்கணும்டா" என்றும் கொஞ்சிக்கொண்டாள்....
ஹும்...
வேடிக்கை என்னவெனில்
அனுமதி கொடுத்த அவளுக்கும்...
வாங்கிய அவனுக்கும் தெரியும்
அவன் முடா கணக்கில் குடிப்பான் என்று...
உன்னை மாதிரியே எல்லோரும் இல்லை....
அடிக்கடி சொல்வேனே ?
ஞாபகம் இருக்கிறதா?
நான் குடித்துவிட கூடாது என்பதில்
கடைசிவரை நீ குறியாக நின்றாய்....
இப்போதும் அது குறித்து பெருமையே கொள்கிறேன்....

எனக்கென்ன கேள்வி என்றால்
அவனது அம்மா குடிப்பதில்லை...
காதலி குடிப்பதில்லை...
தம்பி குடிப்பதில்லை...
அக்கா குடிப்பதில்லை..
இவர்கள் எல்லாம் தெருவில் போகையில்
குடித்த எவரும் அவர்களை மோதிவிட்டால்
தெருநாயை போல அவர்களும்
செத்துக்கிடப்பார்கள் இல்லையா?
குடித்தவன் தான் சாக வேண்டுமென்ற
விதியெங்கும் இல்லையே....

அவன் இன்று காலை எழுவான்...
தொலைக்காட்சி பார்ப்பான்...
அவனது தொலைக்காட்சி
திரையெங்கும் எனது மூளை
ரத்தமும் சதையுமாய் தெறித்து கிடக்கும்...
அவனும் மனிதன் தானே...
நிச்சயம் கவலைப்படுவான்...
அவன் கைகள் தொலைபேசி தேடி
அவன் ஆருயிர் நண்பனை தேடும்....
சம்பவம் சொல்வான்...
நண்பனும் கலங்குவான்...


பாவம் அவனுக்கு கவலை போக
எந்த பாருக்கு செல்வது என்ற விவாதத்தில்
அந்த பூவரசு மரநிழலில்
எனக்காய் காத்திருக்கும்
உனது சோகம் பற்றி சிந்திக்க
அவர்களுக்கு நேரம் இல்லாது போகும்...

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...