உதைபந்து

Showing posts with label சினிமாவிமர்சனம். Show all posts
Showing posts with label சினிமாவிமர்சனம். Show all posts

Tuesday, October 16, 2012

இங்கிலீஷ் விங்கிலீஷ்! ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு ஃபீல் குட் படம்!




தியேட்டர் போய் படம் பார்த்து நிறைய நாளாகிவிட்ட படியால் படம் ஒன்று பார்க்கலாம் என்று கடந்த திங்கட் கிழமை கிளம்பினேன். என்னால் தெரிவு செய்யப்பட்ட படம் தான் இங்கிலீஷ் விங்கிலீஷ். அந்த படத்துக்கு போனதற்கு மூன்று காரணங்கள். ஒன்று எனக்கு சமீபத்தில் இருந்த திரையரங்கான கொன்ங்கொட்டில் அந்த படம் ஓடியது, இரண்டு மாற்றான், தாண்டவம் தொடர்பில் எனக்கு கிடைத்த எச்சரிக்கைகள், மூன்று இது மிக முக்கியமானது அதாகப்பட்டது , படம் வெளிவருவதற்கு முன்னமே " ஆங்கிலம் தெரியாமல் ஒரு குடும்ப பெண் படும் அவஸ்தைகள்" என்ற ஒன்லைன். தக்காளி ! அரமேயம் தெரியல, உருது தெரியலன்னு எவனாவது அழுதானா? இந்த இங்கிலீஷுக்கு கொடி பிடிச்சு படம் மட்டும் இருந்தா ஸ்ரீதேவியை துவச்சு தொங்கப்போடுறது என்ற திட்டம் தான் மிக முக்கியமான முனைப்பாக இருந்தது.


சென்றேன் , பார்த்தேன் ஆனால் படம் என் எதிர் பார்ப்புக்கு மாறாக இருந்தது. இந்த வருடத்தின் தமிழ் சினிமாவை நம்பி நான் செலவழித்து ஏமாந்த பல நூறு ரூபாய்கள் போல் அல்லாமல் கொடுத்த காசுக்கு திருப்தியான , அதே நேரம் நிறைவான ஒரு படம். ஒளிப்பதிவு அப்படி, இசை அப்படி , எடிட்டிங் மொக்கை, நடிப்பு ஓக்கே என்று எழுத எனக்கு சுத்தமாய் விருப்பமில்லை. படம் முழுக்க நமக்கு மெச்செஜ் ஏதோ சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கயில் , படத்தின் தொழினுட்ப குறை நிறைகளை பற்றி யோசித்துக்கொண்டிருக்க நேரம் இருக்கவில்லை எனக்கு.


எங்கடா ஆங்கிலத்தின் புகழ் பாடி எனக்கு கடுப்பேத்தி விடுவார்களோ என்று பயந்துகொண்டிருக்க, அந்த மாதிரி ஒரு கதை களத்தை வைத்துக்கொண்டு  , இந்த நவீன இயந்திர உலகில் மாறிவரும் மனிதர்கள் மத்தியில் என்று மாறிவிடாத ஒரு பொறுப்பான குடும்ப தலைவியினதும் , பாசமான தாயினதும் பாசப்போராட்டத்தை சொல்லிப்போயிருப்பது படத்தின் பெரிய பலம்.


படம் வெளியாகி பலநாட்கள் ஆகிவிட்ட படியால் கதை களத்தை சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமிருக்காது என்று நினைகிறேன். ஆங்கிலம் தெரியாமல் ஒரு குடுபத்தலைவி படும் பாடு என்ற ஒன்லைனை மட்டும் கௌதம் மேனனிடமோ ,முருகதாசிடமோ குடுத்திருந்தால் அவர் ஆங்கிலத்திலேயே பாத்திரங்களை பேசவிட்டு ஒரு எங்கிலிஷ் படம் எடுத்திருப்பார், இவர் எவனாவது துருக்கியனை காட்டி தமிழன் என்று உங்களுக்கு மிஸ்பா உல் ஹக் தமிழர் என்று தெரியுமா என்று அலப்பரையை கூட்டியிருப்பார்கள். ஆனால் இந்த மாதிரி ஒரு கதைக்களத்தில் ஒரு குடுபத்தலைவியின் பாசப்போரட்டத்தை காட்டியிருக்கும் இயக்குனரை பாராட்டியே ஆகவேண்டும்.


படத்தில் காட்டப்பட்டிருக்கும் பல விடயங்கள் யோசிக்கவைப்பவை, ஒரு பிள்ளையாக அம்மாவின் உணர்வுகளையும் , ஒரு பிஸியான கணவனாக தனது மனைவியின் உணர்வுகளையும் நம்மில் எத்தனை பேர் மதிக்கின்றோம்? எத்தனை பேர் அது பற்றி யோசிக்கின்றோம்? 


இந்த கால டீன் ஏஜ் பிள்ளைகளின் உலகத்தோடு ஒன்றித்துப் போய் அவர்களுடன் மேலும் நெருக்கமாக , பாசப்பிணைப்புடன் இருக்க ஏங்கும் தாயாக வரும் ஸ்ரீதேவின் ஏக்கம் தற்கால தாய்மார்களில் பலருக்கு இருப்பது நிதர்சனம். என்ன செய்தாவது தன் பிள்ளைகளோடு அன்னியோன்யத்தை பேண ஏங்கும் தாயின் உணர்வும், அதற்கு விலையாக அவமானத்தையும், அசட்டு தனத்தையும் மட்டுமே பரிசாக தரும் வாலிப வயதுகளையும் கண்கூடே அன்றாடம் காண்கின்றோம்.



முடிந்த வரை சுதந்திரம் கொடுப்பது, தனது பிள்ளையின் புகழை இன்னொருவர் பாடுகையில் புழங்காகிதம் அடைவது என ஸ்ரீதேவி இந்த கால நல்ல ஒரு தாயாக வாழ்ந்திருக்கிறார்.


மனைவி என்ன் யோசிக்கிறாள்? அவளது உணர்வுகள் என்ன ? என்பது பற்றி அறியாமல் வேலையே சரணம் என்று கிடக்கும் கணவ்ன்களை யோசிக்க வைக்கின்ற ஒரு படம். இந்த காலத்தில் காதலித்து கல்யாணம் செய்துகொண்டவுடன் பல ஆண்கள் காதலிப்பதை நிறுத்திவிடுகிறார்கள். பொருள் ஈட்டினால் போதும் என்ற அவர்களது மனநிலையில் , அன்புக்காகவும், சரியான மரியாதை + கரிசனைக்காக ஏங்கும் ஒரு மனைவியின் நிலைமை நிதர்சனமாக காட்டப்பட்டிருக்கிறது.


"முக்கியமான மீட்டிங் வந்திருது" என்ற கணவனின் பதிலுக்கு "இப்பெல்லாம் நான் முக்கியமில்லாம போய்ட்டன் இல்ல" என்ற பதில் சாட்டயடி. அது போல சக பெண் தோழியை தோழமையுடன் கட்டிப்பிடித்த கணவனை செல்லமாக அதட்டும் போது " அது ஒரு அன்னியோன்ய கட்டிப்பிடிப்பு தான் வேற ஒண்டும் கிடையாது" என்று கணவன் சொல்ல "நாம ரொம்ப அன்னியோன்யமா இருக்கிறோமோ? அது தான் என்னை கட்டிப்பிடிப்பதில்லையா? " என்ற ஸ்ரீதேவியின் நியாயமான கேள்விக்கு இங்கே பதில் சொல்ல வேண்டிய நிலையில் நிறைய கணவன்கள் இருக்கிறார்கள்.


மனைவியை பாராட்டுவதையே நம்மாளுகள் ஒரு ஈகோவாக நினைத்து , பிறகு மனைவியின் உண்மையான அன்புகும் கரிசனைக்கும் மரியாதை கொடுக்காமல் அவளை ஒரு வேலைக்கார இயந்திரமாக நினைத்து காதலை கோட்டை விட ஆரம்பிக்கிறார்கள். ஆனால் இந்த இடத்தில் தான் வெள்ளைக்காரன் சிக்ஸர் அடித்துவிட்டு போகிறான். ஸ்ரீதேவின் கணவனும் ஸ்ரீதேவியின் ஆங்கில வகுப்பு தோழனாக வரும் பிரஞ்சுக்காரனும் இந்த இரண்டு பாத்திரங்களின் தக்க உதாரணங்கள்.


ஸ்ரீதேவின் ஆங்கில வகுப்பு கலகலப்பு, அந்த வகுப்பிலுள்ள ஒவ்வொரு பாத்திரமும் கொஞ்ச நேரமே காட்டப்பட்டாலும் உலகின் ஒவ்வொரு மூலையிலுமுள்ள மனிதர்களை பேசுகிறது. அதிலும் அந்த ஆபிரிக்கன் " நானும் ஒரு gay தான் " என்னும் இடம் எந்த வித உறுத்தலுமே இல்லாமல் மனதுக்குள் போய்விடுகிறது. ( உலகம் வளந்திட்டுதோ?)


தன் பிள்ளைகளிடம் நல்ல பேர் வாங்க ஆங்கிலம் கற்க ஆரம்பிக்கும் ஸ்ரீதேவி அதுவே தன்னை குடும்பத்திடமிருந்து தூர கொண்டுபோகிறது என தெளியும் போது  மனம் வருந்து ஆங்கில வகுப்பை துறப்பது தாயுள்ளம்.


தல அஜித் வரும் அந்த மூன்று நிமிட காட்சியும் சொல்லி மாளாது, பார்த்து தெரிஞ்சுக்கோங்க.. அவ்ளோ அருமை, கலகலப்பு. 


"அமேரிக்காவை காப்பாத்த வந்திருக்கேன்" ," இந்த இங்கீஷை பாத்து பயப்பிட வேண்டாம்" இப்படியாக தல பேசும் ஒவ்வொரு வசனமும் நச்.



காட்சிக்கு காட்சி கவிதை, அனைத்து நடிகர்களினதும் கைதேர்ந்த நடிப்பு சொல்லவருவதை தெளிவாக சொல்வதற்கு பலம் சேர்க்கிறது. குறிப்பாக அந்த சுட்டி பையன், ஸ்ரீதேவியின் மாமி, மௌனுமாகவே காதல் மொழி பேசும் அந்த பிரஞ்சுக்காரர் உட்பட அனைவருமே கைதேர்ந்த நடிப்புக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள்.


படத்தில் மூன்று துருத்தல்கள்.

ஒன்று ; ஸ்ரீதேவியின் மூக்கு. இவவுக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை, நல்லாத்தானே இருந்திச்சு, முகத்துக்கும் மூக்குக்கும் சம்மந்தமே கிடையாது, ரெண்டும் வேறு வேறு திசைகளில் நிற்கின்றன. ( விருது நாயகன் மைந்தன் அவர்களே மன்னித்து அருள்க!)


இரண்டாவது : எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே நம்மாளுகள் பின்பற்றும் பாணி, அதாவது தான் படித்தவன் என்று காட்டிக்கொள்வதற்கோ அல்லது தனது இமேஜை உயர்வாக காட்டிக்கொள்வதற்கோ ஆங்கிலத்தில் பீத்தியடிப்பது. அதே கதை தான் இங்கேயும் தனது பிள்ளைக்கும், கணவனுக்கும்  ஆங்கிலத்தில் பேசித்தான் அன்பை புரிய வைக்கிறார் ஸ்ரீதேவி. அப்போ ஆங்கிலத்துக்காகத்தான் அவர்கள் இவரை நேசிப்பார்களா? ஆக மொத்தம் இவர்களுக்காக விழுந்து விழுந்து எவ்வளவோ செய்தும் ஆங்கிலத்தில் பேசியதும் அன்பு வந்து விடுகிறமாதிரி காட்டப்படிருப்பது .. ரொம்ப ச்சாரி.......  ( ஆங்கிலப்படங்களில் இப்படியொரு கதை காட்டப்பட்டிருப்பின் கடைசிவரைக்கும் அவர் ஆங்கிலம் கற்காமலே இருப்பார் , ஆனால் அந்த முயர்சியின் போது ஏற்படுகின்ற பாசத்தில் அவர்கள் குடும்பம் அவர்களை நேசிப்பது போல் காட்டப்பட்டிருக்கும். அப்படியான  உதாரணம் : டியர் ஜோன், லையர் லையர் )


மூன்றாவது : திருமண விழாவில் தப்பி தப்பி விழுங்கி விழுங்கி ஆங்கிலம் பேசும் ஸ்ரீதேவி , அடுத்த நாள் விமான பயணத்தில் நல்ல ஆங்கிலத்தில் தெளிவாக பேப்பர் கேட்பது எப்படி?


என்ன இருந்தாலும் அனைவரும் கட்டாயம் குடும்பத்துடன் , குறிப்பாக பிஸியான கணவன்கள் மனைவியுடனும் , டீன் ஏஜ் வயதினர் தங்கள் அம்மாவுடனும் இருந்து பார்க்க வேண்டிய அருமையான படம். 
**************************************************************************

மரணம் துரத்துகிறது : அதாகப்பட்டது , ஹாரியின் யுத்தம் ஆரம்பம் தொடரின் அடுத்த பாகத்தை நான் தான் எழுதுகிறேன். கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது. முற்றாக முடிந்ததும் உங்கள் வாழ்க்கை முடிந்துவிடும். சாவதற்கு தயாராய் இருக்கவும்.







Monday, July 23, 2012

வெள்ளைக்காரனுக்கு மட்டுமே பல்லக்கு தூக்கும் தமிழ் பதிவர்கள்! "பேட் மேன்" விமர்சனம்!


படத்தில் பேட் மேன்!





இப்போ எந்த தமிழ் திரட்டியை திருப்பினாலும் ஆளாளுக்கு பேட் மேன் விமர்சனம் போட்டு அசத்துறாய்ங்க! அவனவன் ஹிட்ஸ் சும்மா எகிறுது! ஹிட்ஸ் எல்லாம் நமக்கு ஒரு பெரிய பொருட்டே கிடையாது என்றாலும் , ஃபேஸ்புக்கில் நண்பர் தினகரன் ரேணுகா ஒரு வேண்டு கோளை முன்வைத்தார்! அதாவது எனது பாணியில் பேட் மேன் விமர்சனம் எழுத வேண்டுமென்று. ஐம்பது பதிவு தான் எழுதியிருக்கேன், ஆனாலும் இன்னும் எனது பாணி என்னவென்று எனக்கே தெரியாது ! இருந்தாலும் கொழந்தை ( அண்ணே தினகரன் அண்ணே! இப்போ சந்தோசமா?) ஆசப்பட்டுச்சேன்னு நானும் பேட் மேன் விமர்சனம் போட்டுடலாம்ன்னு களத்தில குதிச்சிட்டேன்!

எமது மக்களாகட்டும் சரி , பதிவர்களாகட்டும் சரி ஆங்கில மோகத்துக்கு கொஞ்சம் அடிமையானவர்கள் என்பது அனைவரும் அறிந்த விடயமே! அதனால தான் இந்த வெள்ளைக்கார பேட் மேன் பற்றிய விமர்சனம் எங்கும் வியாபித்து இருக்கிறது. யாரோ கிறிஸ்டோப்பர் நோலனாம் ! பெரிய அப்பாட்டாக்கராம்! அவரது இயக்கத்தில் கிறிஸ்டியன் பேல் பேட் மேனாக நடித்து   வெளியாகி இருக்கிறது இந்த பேட் மேன்!

பிரம்மாண்டம், தொழிநுட்பம், அசத்தும் இசை, நேர்த்தியான ஒளிப்பதிவு , கிறிஸ்டியன் பேலின் அர்பணிப்பான நடிப்பு ஆகியவற்றால் இந்த பேட் மேன் அனைவரது வரவேற்பையும் பெற்றிருப்பதாக பலரும் தங்களது பதிவுகளில் வண்டி வண்டியாக எழுதி தள்ளுகிறார்கள். ஆனாலும் பேட் மேன் எதிர் பார்த்த அளவு இல்லை என்றும், சுமார் தான் என்றும் கிறிஸ்டோப்பர் நோலன் ஆதரவாளர்களே கூறியிருப்பதாகவும் படிக்கிறேன். சரி ! பாக்கலாம் எத்தனை கொம்பன்கள் பதிவு எழுதினாலும் , எனக்கு  அடுத்தவர் ஒரு ஆங்கில படத்தை சிபாரிசு செய்து ,அதை நான் பார்ப்பதாக இருந்தால் அது நம்ம JZ பதிவுல போட்ட படங்கள் மட்டுமே! ( நானாக சில நல்ல படங்களையும் பார்ப்பதுண்டு) . எனக்கு என்னமோ JZஇன் பதிவுகளில் அவ்ளோ நம்பிக்கை! பயலுக்கும் என்னோட டேஸ்டு!

எல்லோரும் பதிவு போடுறாய்ங்க என்பதாலும் , அபிமானிகள் விரும்பி கேட்டதாலும் JZ பதிவு போடுறதுக்கு முன்னமே பேட் மேனை பார்த்து தொலைத்து விட்டேன். பார்த்த பின்பு தான் புரிந்தது கிறிஸ்தோபர் நோலனின் ஆதரவாளர்கள் கூட ஏன் படத்தை மொக்கை என்கிறார்கள் என்று! சுத்தமாய் நேர்த்தியில்லாத திரைக்கதை , என்ன சொல்ல வருகிறார் என்று இயக்குனருக்கே தெரியாது போல! சொதப்பலோ சொதப்பல் மகா சொதப்பல்!

பேட் மேன் குறித்து மேலதிகமாக விமர்சிக்க முன்பு வெள்ளைக்காரன் என்ன எடுத்தாலும் காவடி எடுத்து அலகு குத்தி "ஆஹா ஓஹோ பிரம்மாதம்" என்று பதிவு போட்டுத்துலைக்கும் தமிழ் பதிவர்களே! இந்த நோலனின் பேட் மேன் தரத்துக்கு, தொழினுட்பத்திலும் சரி கிராபிக்ஸிலும் சரி ஒரு படத்தை எடுப்பதற்கு தமிழ் சினிமா இன்னமும் பக்குவப்படவில்லை என்பது உண்மை தான் . அதற்காக கதை என்னவென்று தனக்கே தெரியாமல் படமெடுத்திருக்கும் நோலனின் இந்த நொந்துபோன படத்தை நீங்கள் பிரபஞ்ச ஹிட் ரீதியில் பேசுவதை வன்மையாக கண்டிகிறேன்

படத்தின் கதை என்னவென்பதை விட படத்தின் மகா சொதப்பலை சொல்லிவிடுகிறேன் முதலில்! பகலில் கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு சுத்தும் ஒருவன் இரவில் நம்ம முகமூடி ஜீவா ரேஞ்சில் முகத்தை எல்லாம் மூடி கட்டிக்கொண்டு அநியாயத்துக்கு எதிராக போராடுகிறான். வில்லன்கள், காதல், ரொமாண்டிக், ஆக்க்ஷன், சேசிங், பிரம்மாண்டம், வெடிக்கும் கட்டடங்கள், எரியும் கார்கள், இணையும் காதலர்கள் !! கடைசிலில் அந்த முகமூடி போட்டவன் ஜெயிக்கிறான், அந்த வாய் வெந்தவன் தோற்கிறான்! பிரம்மாண்டம், பிரம்மிப்பு எல்லாம் ஓக்கே!! ஆனால் அடிப்படையே இங்கு தப்பால்ல இருக்கு! எல்லோரும் அந்த முகமூடி போட்டவனைத்தான் பேட் மேன் என்கிறார்கள் , ஆனால் உண்மையில் வாயை கட்டிக்கொண்டு அலைகிறானே ஒருவன் அவன் தான் பேட் மேன்! கெட்ட வேலைகள் சகலமும் செய்வது அவன் தான்!! அப்படியிருக்க அந்த கறுப்பு உடை போட்டுக்கொண்டு சுத்துறவன் எப்படி பேட் மேன் ஆக முடியும்? இந்தப் பெரிய  லாஜிக் ஓட்டை ஒன்று இருப்பதை மறந்து நீங்களெல்லாம் அந்த மொக்கை படத்தை ஆஹா... ஓஹோ... என்று புகழ்ந்து தள்ளுகிறீர்கள்!! என்ன ஒரு மட்டமான ரசனை!

நிஜத்தில் பேட் மேன்!

ஆக மொத்தம் இந்த பேட் மேன் கதை என்னவென்றால், நல்லது செய்து எந்தவிதமான சத்திகளோ, தொழினுட்பமோ, பக்கபலமோ , துணையுமோ இல்லாமல் பறந்து பறந்து அடித்து எதிரிகளை தூள் தூளாக்கும் தமிழ் நாயகர்களை நாம் ஹீரோக்கள் என்போம். அவனுக்கு எதிராக நின்று கட்டப்பஞ்சாயத்து , கற்பழிப்பு , ஆள்கடத்தல் பண்ணிப்புட்டு கடைசில ஹீரோ கைல அடிவாங்கி சாவுறவன பேட் மேன் என்போம்! இங்கே அதை உல்டா பண்ணி பெயர்களை மட்டும் மாத்திவிட்டு நல்லது பண்றவன பேட் மேனாக சித்தரித்து தமிழ் சினிமாவை உல்டா பண்ணி அந்த நோலன் பயபுள்ள படமெடுத்திருக்கு, அத்த போயி நம்மாளுகளே அபாரம் ... அருமையின்னு புழுகுறீங்களேப்பா!

ஆனால் தமிழ் படங்களை பொறுத்தவரை எப்போதும் பேட் மேன்கள் வாயை இழுத்துக் கட்டி கொண்டு அலைவதில்லை! டாட்டா சியராவில் இடம் இருந்தாலும் வெளியே தலையை நீட்டிக்கொண்டு கையில் உள்ள பொருளை ஆட்டிக்கொண்டு "ஏய்... ஏய் .... ஏய்... " என்று உறுமிக்கொண்டு வருவதிலேயே பேட் மேன்களை பற்றி தெரியவந்துவிடும். ஆனால் இந்த படத்தில் நல்ல‌து செய்பவனை பேட் மேன் என்று சொல்கிறார்கள். தமிழ் சினிமாவில் அசோகன் முதல் லேட்டஸ்டாக மங்காத்தா அஜித் வரை எத்தனையோ பேட் மேன் கதைகள் சொல்லப்பட்டிருந்தும் கூட நாங்கள் இந்தளவுக்கு ஆர்ப்பாட்டம் பண்ணியதில்லை. ஆனா ஏதோ மூணு நாலு பாகம் பேட் மேன் கதைய எடுத்துப்புட்டு நீங்க பண்ற அலப்பர தாங்க முடியலட அய்ய்யா.... இத தான் எங்க ஊர்ல " ஆமை ஆயிரம் முட்டை போட்டிட்டு அமைதியா போகுமாம் , கோழி ஒத்த முட்டைய போட்டிட்டு கொக்கரிக்குமாம்" எம்பாய்ங்க!


இந்த திரைப்படத்தில் நல்லவன் ஒருவனை பேட் மேன் என்கிறார்கள் அதை ஆஹா.. ஒஹோவென்று எழுத எத்தனையோ பதிவர்கள் இருக்கிறார்கள். அது போல் தமிழ் படங்களில் வரும் பேட் மேன்களை பற்றி எழுதவும் அவர்களை விட அதிகம் பேர் இருக்கிறார்கள். ஆனால் நமது கண்முன்னே அலையும் பேட் மேன்களை பற்றி யாருமே கண்டுகொள்வதில்லை. எனக்கு தெரிந்து எனது தெருவிலேயே நிறைய பேட் மேன்கள் குடியிருக்கிறார்கள். அது போக வேறு தெருவிலிருந்தும் , வேறு ஏரியாக்களிலிருந்தும் கூட பேட் மேன்கள் எங்களது தெருவுக்கு வருவதுண்டு.  அவர்கள் வயது வித்தியாசமின்றி இருப்பார்கள். முகங்களை மூடியெல்லாம் கட்டியிருக்க மாட்டார்கள், துணிஞ்ச பய புள்ளைங்க அவைங்க! 

பேட் மேன்களில் நெறைய வகைகள் உண்டு! பெரிய பேட் மேன், மீடியம் , பேட் மேன், சிமோல் பேட் மேன், அப்புறம் காமடி பேட் மேன் என்று நீட்டிக்கொண்டே செல்லலாம்! பெரிய பேட் மேன்கள் கொலை ,கொள்ளை மற்றும் கற்பழிப்புக்களில் டிகிரி முடித்தவர்களாக இருப்பார்கள் ஆனால் போலீசில் மாட்ட மாட்டார்கள். மீடியம் பேட் மேன்கள் அடிக்கடி ஜெயிலுக்கு போய் வருவார்கள். சிமோல் பேட் மேன்கள் தன் எனது தெருக்களில் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் இந்த காமடி பேட் மேன்கள் யாரென்றால் இடி இடிச்சு மழையே பெய்ஞ்சாலும் நடு ரோட்டில் நின்னு சிகரட் புடிக்கிறவன், "செருப்பால அடிப்பன்டா நாயே"ன்னு ஒரு பொண்ணு சொன்னதுக்கு அப்புறமும் " மச்சி அவ செருப்பால அடிப்பேன்னு சொல்லும் போது அவளோட கண்ணை கவனிச்சியா ? அதில காதல் தெரியுதுடான்னு" அநியாயத்துக்கு அப்பாவியா இருப்பவனும்,  எங்கேயோ போயி ஃபிரண்டுங்க கூட நல்லா தண்ணி அடிச்சுப்புட்டு , சரியா வீட்டுக்கு வந்ததும் அப்பா முன்னாடி வாந்தி எடுக்கிறவன் எல்லாம் காமடி பேட் மேன் லிஸ்டுக்குள் வருவார்கள்.

என்னய இந்த பதிவு போட சொன்ன பேட் மேன்! அண்ணன் தினகரன் ரேணுகா தன் குழந்தையோடு!

எனது தெருவில் திரியும் பேட் மேன்கள் எல்லாம் இரவில் மட்டும் வருவது கிடையாது. காலாங்காத்தால பல்லு வெளக்காம கடைக்கு வர்ரது ( நைட்டியோடு நிக்கும் எதிர்த்த வீட்டு ஃபிகர் லுக்கிங்) , அப்புறம் மத்தியானம் கறியோடு சோறு தின்னுட்டு முச்சந்தில உக்காந்து பல்லு குத்துறது, சாயுங்காலம் இவனுக தொல்ல தாங்க முடியாம ஆத்தாகாரி கூட அடுத்த தெரு போய்வரும் பொண்ணெயெல்லாம் ஜொள் ஒழுக பாத்து , அப்புறம் ஆத்தாக்காரி சுடுதண்ணிய மூஞ்சில ஊத்தினதுக்கு அப்புறமா சங்கத்தை கலைக்கிறதுன்னு பகலிலும் பந்தாடுவார்கள் இந்த பேட் மேன்கள்.

இரவில் அந்த வெள்ளைக்கார பேட் மேன் போலவே இவர்களது நடமாட்டமும் அதிகமாக இருக்கும் , ஆனால் அந்த வெள்ளைக்காரன் வருவது போல் கொள்ளைக்காரன் கெட்டப்பில் எல்லாம் வந்து பயமுறுத்த மாட்டார்கள்.  வெள்ளைக்காரனிடம் நிறைய பணம் இருக்கிறது அதனால் அவன் பேட் மேனுக்காக தனியான ஃபிளைட்டு, அப்பாச்சி அத்தாச்சி ரேஞ்சில் ஒரு பைக்கு, நவீன கருவி எல்லாம் குடுத்து இருக்கான். ஆனால் எங்கள் ஏரியா பேட் மேன்கள் அனேகமாக சைக்கிளில் தான் அலைவார்கள், கொஞ்சம் வசதி கொறஞ்ச பேட் மேன்கள் நடந்தும் தங்கள் கடமைக்கு போவார்கள்.

பதிவு போட்ட பேட் மேன் ! 

அடுக்குமாடி கட்டிடம் உடைதல், ஃபிளைட்டு கிராஷ், தீப்பிடித்து எரியும் டேங்கர் லாரி என்றில்லாமல் ஏதோ தங்களால் முடிஞ்ச அளவுக்கு சோடா பாட்டில் உடைக்கிறது, தீக்குச்சிய கொளுத்தி காரணமே இல்லாம தெருவில எறியிறது, முச்சந்தியில் ஃபிகர பாத்துக்கிட்டே வந்து ஆட்டோவில் மோதுவது என்று பிரம்மாண்டம் காட்டுவார்கள்இப்படி உங்கள் தெரிவிலும் நெறைய பேட் மேன்கள் இருப்பார்களே!!!

அடுக்கு பெட்டியில் அம்மா வச்ச அஞ்சு ரூபாவ திருடினப்பவே நானும் பேட் மேன் ஆயிட்டேன்! இனிமே எனக்கு சூப்பர் ஹீர்ரொ டிரஸ் தைக்கணும்ன்னா ரொம்ப செலவாகும் என்பதால், இப்போதைக்கு அழுக்கு லுங்கியோடு அலைவதே உலக பொருளாதாரத்துக்கு நன்மை பயக்கும்! ஆமா! உங்கள்ள எத்தின பேரு பேட் மேன்?

டிஸ்கி : அது வந்துங்க , பாத்தீங்கன்னாக்கா இந்த டார்க் நைற் ரைசஸ் படத்த பாத்தவனுகள விட , அத பத்தி பதிவெளுதினவய்ங்க தொகை தான் அதிகமா இருக்கு! நான் மட்டும் என்ன புதுசா சொல்லிட போறேன்! அது தான் கொஞ்சம் வித்தியாசமா ஹி...ஹி...ஹி...

டிஸ்கி : என்ன தினகரன் அண்ணே! பேட் மேன் விமர்சனம் ஓக்கேவா? இப்போ சந்தோசமா? என்னோட பாணி வழிஞ்சு ஓடுதில்ல!!!!  இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

எனக்கு ஒண்ணுமே தெரியாது ! நான் அப்பாவி ! எல்லாத்துக்கும் காரணம் அண்ணன் தினகரன் தான்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...