அவள்! அவளே தான்! ஒரு நீண்ட கடிகார இடைவெளிக்கு பின்னர் (அட ரொம்ப நாளைக்கு அப்புறம் எண்டு சொல்ல வந்தேங்க) போன ஞாயிற்றுகிழமை தான் அவளைப் பார்த்தேன். அதே களங்கமில்லா முகம், மாசு இல்லாத சிரிப்புமாக அவளே தான். வழமை போலவே தாயுடன் வந்திருந்தாள். அவளின் தனி அடையாளமே அவளது உதடுகள் தான். கடந்த எட்டு மாதா கால என் தேடல்களில் அவளை ஒத்த எத்தனையோ முகங்களை நான் பார்த்து ஏமாந்து போயிருந்தாலும், அந்த உதட்டு விடையத்தில் மட்டும் தெளிந்து விடுவேன். அன்றும் அவளது உதடுதான் அவளை எனக்கு அடயாளம் காட்டியது. ஏதோ சொல்ல வந்து, சொன்னால் தங்கம் செலவாகும் என்று சட்டென்று வார்த்தை மறைப்பதற்காக உள்மடித்துக் கொண்ட உதடு! அவளின் தனித்துவமே அதுதான். என்னை விட்டால் ஆயுள் வரை கூட பார்த்துக்கொண்டு இருப்பேன்.எனது தேடல்களில் நான் தோற்று, களைத்துப் போய் அவள் கொழும்பு விட்டு வேறிடம் போய்விட்டாள் என்று ஏமாந்த என் மனதுக்கு நான் ஆறுதல் சொல்லியிருந்தேன். ஏதோ அரையிருட்டில் குண்டுமணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அன்றைய தினம் புனித லோறன்ஸ் ஆலயத்தில் உட்கார்ந்திருந்தேன்.அப்போதுதான் அந்த தேவதை பிரசன்னம் நிகழ்ந்தது............ எத்தனை மாத காத்திருப்பின் பின் நிகழ்ந்தது? உலோபிக்கு புதையல் கிடைத்த கதையாய் மனம் குதித்தது. இவளை எப்போது பார்த்தேன்? எப்போது என் விழியில் விழுந்தாள்?
கிட்ட தட்ட இரண்டு வருடங்களுக்கு முன் நான் மொரட்டுவை பல்கலைகழகத்துக்கு தேர்வாகி வந்திருந்த நேரம். ஏதோ உசார் குணத்தில் ஞாயிற்றுகிழமை பூசைக்கு தவறாமல் கோவிலுக்கு போவேன். ஆனால் போவது கம்பஸுகு அருகிலிருக்கும் குயின் ஒஃப் ஏஞ்சல்ஸ் கோவிலுக்கு தான் போவேன். மொழி மூலம் சிங்களம் அல்லது ஆங்கிலம். வெள்ளவத்தை பற்றியோ அங்கு 11.15 க்கு நடக்கும் தமிழ் பூசை பற்றியோ அறிந்திருக்கவில்லை. போய் வரவும் தெரியாது. பின்னாளில் நான் படிப்படியாக நாஸ்திக கருத்துக்களை ஏற்க தொடங்கிய பிறகு "குயின் ஒஃப் ஏஞ்சல்ஸ்" பக்கம் தலை வைப்பது கூட கிடையாது. அங்கு மட்டுமல்ல எங்குமே..! ஆனாலும் என் அம்மாவுக்கு எனது நாஸ்திக நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. என்னை பூசைக்கு போகும் படி வற்புறுத்தவில்லை கேட்டுக்கொண்டார். அந்த கால பகுதியில் தான் என் நண்பி ஒருவர் மூலம் வெளவத்தை தமிழ் பூசை பற்றி அறிந்து கொன்டேன். சரி அம்மாவுக்காக என்று என் நாஸ்திக மனதை சமாதான் செய்துகொண்டு வெள்ளவத்தை பூசைக்கு போனேன். அடுத்த ஞாயிற்றுகிழமையை எதிர்பார்த்து காத்திருக்கும் அளவிற்கு அந்த பூசைக்கு அடிமையாகி போனேன். நான் ஒன்றும் நாஸ்திகனாகி விடவில்லை, எனக்கு அங்கு போவதற்கு சில நியாயமான காரணங்கள் இருந்தன. ஒன்று அன்றைய நாள் என் ஊரைச் சேர்ந்த நிறைய நண்பர்களை சந்தித்தேன்.அனைவரும் ஏதொவொரு காரணத்தின் பேரில் வெள்ளவத்தையை சுற்றியே முகாமிட்டு இருந்தார்கள்.அனைவரும் தவறாமல் ஞாயிறு பூசைக்கு வந்துவிடுவார்கள்.அவர்கள் அங்கு வருவதற்கும் காரணம் உண்டு.அதுதான் எனது காரண இலக்கம் இரண்டு, அதாவது அழகான தமிழ் ஃபிகருகளை பார்க்கலாம். எனது மூன்றாவது காரணம் , பல்கலைகழகத்திலும் நண்பர் சுற்றுவட்டத்திலும் சிங்கள மொழியே கேட்டு , பேசியதால் ஏற்பட்ட தமிழ் தாகம். வெள்ளவத்தை பூசையிலும் , சுற்று வட்டத்திலும் கேட்கும் தமிழ் பேச்சுக்காகவும் அங்கு போவதற்கு துடித்தேன்.
வெள்ளவத்தை படலத்தின் இரண்டாம் வாரம்! அன்றுதான் அந்த தென்றல் என்ன பார்க்க வீசியது! சுவாரசியமே இல்லாமல் சுவாமி தன் பாட்டுக்கு ஏதோ கதைத்துக் கொண்டிருந்ததை ஆர்வமே இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்த எனது நிமிடங்களை அர்த்தமுள்ளதாக ஆக்கினாள். தாயோடு வந்திருந்தாள். நேரே வந்த இருவரும் எனதருகிலேயெ அமர்ந்து கொள்ள, உடம்பு அப்படியே இருக்க வானில் பறக்க தொடங்கினேன். அழகு என்றால் அழகு அப்படியொரு அழகு! கொள்ளையழகு என்பார்களே அதே தான். ஏதோ ஏதேதோ பண்ணி அவளை இம்பிரஸ் பண்ண முயற்சி பண்ணிக்கொண்டே இருந்தேன், ஆனால் காரியகாரி கண்டுகொள்ளவே இல்லை! ஒன்று பூசையை கவனிக்கிறாள் அல்லது தாயைப் பார்க்கிறாள். ஏமாற்றத்துடனே கழிந்தது அந்த வாரம். ஆனால் பாரிய வெற்றி என்னவென்றால்,என்னால் முடிந்த வரைக்கும் அவளது அழகை என் ஃபோனில் கொஞ்சமாக படமெடுத்து கொண்டேன்.அடுத்த வார பூசையை சுவாமியை விட அதிக ஆவலோடு எதிர் பார்த்தேன்.
அடுத்த வாரம் பூசைக்கு சுவாமி வரமுதலே கோவிலுக்குள் போய் உக்காந்து கொண்டேன். அனேகமாக பின்வரிசை ஆசனங்களில் தான் அவளும் அவளது தாயாரும் அமருவார்கள். அதை மனதில் கொண்டு, ஒரு பின்வரிசை ஆசனத்தில் (புத்திசாலித்தனமாக????) அமர்ந்த்து கொண்டேன். அவளுக்கென்ன என்னை பார்க்க வேண்ணுமென்ற அவாவா என்ன? சரியான நேரத்துக்கு தான் வந்தாள். இந்த தடவை எனக்கு முன்னால் அமர்ந்து கொண்டார்கள். எனக்கு வசதியாக போய் விட்டது. அவள் இந்த தடவை பூசையை, தன் தாயை பார்த்ததை விட என்னை தான் பார்த்துக்கொண்டு இருந்தாள். எனக்கு நம்ப முடியவில்லை! அப்போது அவளது கை என் விரல்கள் மேல் பட்டது. அந்த ஸ்பரிசம் நான் வாழ் நாளில் உணராதது., புதிதானது! ஒரு புதிதாய் பூத்த பூவை ஒத்தது, குட்டி முயலொன்றிறில் மேனி வருடியதைப் போன்றது. கடவுளின் கை என்று ஆஸ்திகர் சொல்லும் அந்த உணர்வை நாஸ்த்திகன் நான் உணர தலைப்பட்டேன். அவளது கண்கள் எனது செயின் மீது பரவியது. ஒன்றும் யோசிக்காமல் கழற்றி கொடுத்துவிட்டேன். அந்த நிமிடத்தில் அவளது சந்தோசத்தை மட்டுமே ரசித்தேன். வேறு எதுவுமே மூளையில் இல்லை! அவளை இம்பிரஸ் செய்துவிட்ட வெற்றி என் முகத்தில் பரவியது.அன்று நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை! பின் எனது செயினை தந்து விட்டு நன்றியாக ஒரு புன்னகை மட்டுமே தந்து கூட்டத்தில் கலைந்து மறைந்து போனாள். சொன்னல் நம்பமாட்டீர்கள்! அன்று பூசையில் எனது முகமும் அவளது முகமும் அருகிருக்கையில் முத்தமிட முயன்று கூட தோற்று போனேன். அதற்கு தைரியம் எங்கிருந்து வந்ததோ தெரியாது! ஆனால் அவளது கொஞ்சும் அழகு என் கண்ணை மறைத்தது அவளவே! இது நடந்து இற்றைக்கு எட்டு, ஒன்பது மாதங்களுக்கு முன்..!
அதற்கு பின் போன ஞாயிற்றுகிழமை அவள்! அவளே தான்! என் தோற்று போன கண்கள் பூத்து கிடக்க, மீண்டும் நான் தளிர்க்க , என் பாலைகள் சோலைகளாக என் கண்களுக்குள் மழை பெய்தாள். ஆனால் ஏனோ தெரியவில்லை? வந்தாள் சிறிது நேரம் இருந்தாள், என் வாழ்வில் அழகு மழை பெய்தவளின் கண்கள் திடீரென பனித்துக் கொள்ள, தான் ஒரு அழகி என்ற கர்வமும் மறந்து வாய் விட்டு அழுதே விட்டாள். அந்த காட்சி இன்னும் என் மனதைச் சுட்ட படி! உடனே தாயார் அவளை அழைத்து சென்று விட்டார். இப்போது நான் அடுத்த ஞயிறுக்கான நாட்ட்களை எண்ணுகின்றேன்.
இத்தனை தூரம் வாசித்த உங்களுக்கு அவளை பார்க்க ஆர்வம் இருக்காதா என்ன? என்னொடு நீங்களும் வாருங்கள்! அந்த ஒன்றரை வயது பிஞ்சு பிரபஞ்சத்தை உங்களுக்கும் காட்டுகிறேன்.
No comments:
Post a Comment