பேயோட்டுதல் என்னும் வகையறாவுக்குள் அடங்குகின்ற இன்னொரு திகில் படம். நம்மவர்கள் பேய் என்றால் ஒரு பூசாரியை அடிப்படையாக கொண்டு எடுக்க , மேற்கத்தயவர்கள் கத்தோலிக்க குருவை கருவாக கொண்டு ( ஆஹா.. என்னவொரு எதுகை மோனை..!) களமிறங்கியிருக்கிறார்கள். உண்மை சம்பவங்களின் தொகுப்பாக இந்த வருட ஆரம்பத்தில் வெளிவந்த இந்த படத்தை இயக்கியிருக்கிறார் மிகேல் ஹஃப்ஸ்ரோம்.
அமெரிக்க புறநகர் பகுதியொன்றில் தனது தந்தையுடன் வசித்து வருகிறார் கதாநாயகன் "மைக்கேல் கோவாக்" (கொலின் ஓ' டோனகியூ) . சவப்பெட்டி தயார் செய்வதும் , பிரேதங்களை சடங்கிற்காக ஒழுங்கு படுத்துவதும் தான் நாயகன் குடும்பத்தின் குலத்தொழில். ஒருகட்டத்தில் குருமடத்தில் சேர்ந்து குருவானவராக ஆசைப்பட்டு , சேர்ந்து குருவும் ஆகிறார் மைக்கல். சிறிது காலத்திற்க்கு பின்பு அவருக்கு மத சம்பிரதாயங்கள், சடங்குகளில் நம்பிக்கை அற்றுப் போக , தான் குருமடத்தில் இருந்து விலகுவதாக தனது மேலாளருக்கு (டொபி ஜோன்ஸ்) கடிதம் அனுப்புகிறார் மைக்கல். இதனை ஏற்க்க மறுக்கும் ஜோன்ஸ் , ஒரு நாள் , நாயகன்மைக்கலுடன் உரையாடும் பொருட்டு வீதியை கடக்க முயற்சி செய்யும் போது , அதன் காரணமாக விபத்து ஒன்று நிகழ்கின்றது. அப்பொது அங்கு மரணத்தறுவாயில் இருக்கும் ஒருவர் , மைக்கலின் உடையை வைத்து அவரை ஒரு குரு என்று கண்டு கொண்டு , தனது பாவங்களுக்கு இறுதி மன்னிப்பு தருமாறு வேண்டுகிறார். முதலில் தயங்கும் மைக்கல் , பின்னர் பாவமன்னிப்பு கொடுக்கிறார்.
இதனை பார்த்துக்கொண்டிருந்த மைக்கலின் மேலாளர் , மைக்கல் அந்த பதட்டமான சூழ்நிலையிலும் சாந்தமாக நிலமையை கையாண்டதை கண்டு மைக்கல் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அவர் ஒரு குருவாக அழைக்கப்பட்டிருப்பதை உணர்கிறார். பின் மைக்கலுடன் உரையாடும் அவர் , மைக்கலை ஒரு லட்சம் டொலர் மாணவர் கடன் அடிப்படையில் சில நாட்களுக்கு இத்தாலியின் ரோமுக்கு சென்று பேயோட்டும் சடங்குகள் சம்ந்தமான வகுப்புகளில் கலந்து கொள்ள சொல்கிறார். அதன் படி ரோமுக்கு வரும் மைக்கல் வகுப்பறைகளில் ஆர்வமில்லதவராகவும் , சந்தேகத்துடனும் கலந்து கொள்கிறார். அவரது கருத்துப் படி அத்தனையும் "மனநோய்" பிரச்சினைகள் என்கிறார். இங்கு பத்திரிக்கையாளரான "ஏஞ்சலினாவை (அலிஸ் பிராகா) சந்திக்கிறார் .
இந்த சூழ்நிலையில் தனது ரோம் நகர மேலாளர் மதகுரு சேவியர் மூலமாக , பேயோட்டும் சடங்குகளில் பல வருடம் அனுபவம் கொண்ட மதகுரு " லூகாஸை " ( அன்ரனி ஹொபிங்ஸ்) சந்திக்கிறார். லூகாஸ் , சில காலமாக "தனது தகப்பனால் கற்பழிக்கப்பட்டு கர்ப்பமான ஒரு பதினாறு வயது பெண்ணிற்கு பிடித்திருக்கும் பேயை ஓட்டும் முயற்சியில் இருக்கிறார். இதனை பேய் பிடித்தல் என நம்ப மறுக்கும் நாயகன் "அந்த பெண் தனது தந்தையால் தான் கர்ப்பமான அவமானதில் இருந்து மீளவே இவ்வறு நாடகமாடுவதாக வாதிடுகின்றார்.
ஒரு நாள் தன்னுடன் இணைந்து பேயோட்டும் செபங்களை சொல்லுமாறு லூகாஸ் கேட்க, மைக்கலும் இணைந்து செபங்கள் சொல்லுகிறார், அப்பொது இத்தாலிய மொழி பேசுகின்ற அந்த பெண் ஆண் குரலிலும் , பெண் குரலிலும் மாறி மாறி ஆங்கிலம் பேச ஆரம்பிக்கிறாள். போதாதென்று நாயகனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் புட்டு புட்டு வைக்க குழம்பிப் போகிறார் மைக்கல். ஆனாலும் அவள் ஆங்கிலம் கதைப்பது "சின்ன வயதில் அவள் கேட்ட ஆங்கில பாடல்கள் அவள் அடிமனதில் பாடமாய் இருக்கின்றது என் வாதிடுகிறார் அண்ணாத்த.....
அந்த பெண்ணின் நிலமை மோசமாக , அவளை வைத்தியசாலையில் அனுமதிக்கின்றனர். அவ்வாறு ஒரு நாள் அந்த பெண்ணுக்கு மீண்டும் நிலமை மோசமாக , இரவு அந்த பெண்ணும் குழந்தையும் இறந்து போகின்றனர். இதனால், தான் தோற்று போய்விட்டதாக மனமுடைகிறார் ஃபாதர் லூகாஸ். இந்த கால பகுதியில் நாயகன் மைக்கலின் தந்தையும் இறந்து போகிறார்.இந் நிலையில் ஃபாதர் லூகாஸிற்கு பேய் பிடித்துளதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.
அவ்வாறான ஒரு நாளில் லூகாஸின் வீட்டிற்கு வரும் மைக்கலிற்கும் , லூகாஸ் மீது ஏறியுள்ள பேய்க்குமிடையே முற்றுகிறது போர். லூகாஸ் மீது வந்துள்ள பேயை விரட்டுவதற்கு ஏஞ்சலினாவுடன் கூட்டு சேர்ந்து செபிக்க தொடங்கும் மைக்கல் பேயை விரட்டினாரா? கடவுள் நம்பிக்கை கொண்டாரா ? அனுபவசாலியான லூகாஸ் எத்தனையோ தடவை கேட்டும் தன் பெயர் சொல்லாத பேய் மைக்கலிடம் மடிந்து தன் பெயர் சொன்னதா ? என்பதை சுவாரஸியமாக சொல்லியிருக்கிறார்கள்.
வழமையான திகில் படங்களில் வரும் குரூர பேய்களோ, தடால் சடால் காட்சிகளோ இல்லாமல் , அமைதியாகவே பயத்தை நெஞ்சில் விதைக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள். விஞ்ஞானத்திற்கும் , மெய்ஞ்ஞானத்திற்கும் இடையில் குழம்பும் ஒரு இளைஞனாக சிறப்பாக நடித்திருக்கிறார் நாயகன் கொலின் ஓ'டோனகியூ. மதகுரு பாடம் நடத்துகையில் தான் அதனோடு ஒத்து போகவில்லை என்பதை தன் சந்தேக கண்களாலேயே காட்டியிருக்கிறார். அலட்டல் இல்லாத நடிப்பு, பேய் பிடித்த பெண்ணுடன் உரையாடும் போது நம்பிக்கையற்ற ஒரு அலட்டல் பார்வை, தந்தை இறந்தது தன்னை சுற்றி நடக்கு விடையங்களை நம்புவதா , மறுப்பதா என்று குழம்பிப்போகும் நேரத்திலும் தேர்ந்த நடிப்பு. மைக்கல் பாத்திரத்துக்கு சிறந்த தேர்வு "கொலின் ஓ'டோனகியூ"
மேலாளர்களாக வரும் "ஷிலன் ஹைண்ஸ்", "டொபி ஜோன்ஸ்" ஆகியோர் தமது வேலைகளை திறம்பட செய்திருக்கிறார்கள். அலிஸ் பிராகாவின் ஏஞ்சலினா பாத்திரம் கதையில் பெண் பாத்திரம் ஒன்று தேவை என்பதற்காக திணிக்கப்பட்டது போல் உள்ளது.
இங்கு அன்ரனி ஹோபிங்ஸ் பற்றி சொல்லியே ஆக வேண்டும்....! மனிதர் சும்மா மிரட்டியிருக்கிறார்.... நம்ம பிரகாஷ் ராஜ் போல காட்சிக்கு காட்சி நடிப்பு..... எதை சொன்னாலும் நொட்டை சொல்லும் கொலினுக்கு எப்படி விளங்க வைப்பது என ஏங்கும் போதும், பேயோட்டுகையில் ஆரம்பத்தில் சாந்தமாகவும் பின்பு உக்கிரமடைந்து செபிக்கையிலும், தனது பேயோட்டும் முயற்சி தோற்றதை அடுத்து கலங்கிப் போய் உடக்காரும் போதும், பேய் பிடித்ததும் நம்ம அந்நியன் விக்ரம் போல் லூக்காஸ் ஆகவும் , "பால்" ஆகவும் மறும் போது என கிடைத்த இடத்தில் எல்லாம் சிக்சர் அடித்திருக்கிறார்.
அந்த பேய் பிடித்த பதினாறு வயது பெண்னாக வந்தவரின் நடிப்பு , தேர்ந்த நடிகை ஒருவரின் நடிப்பு, நமட்டு சிரிப்பும், உருட்டும் கண்களுமாக சும்மா பின்னியிருக்கிறார்.
ஒரு திகில் படத்திற்கு மென்மையான இசை மூலம மிரட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் "அலைக்ஸ் ஹஃபஸ்", " பீட்டர் பொய்ல் " இன் படத்தொகுப்பு திகில் குறையாமல் படத்தை பயணிக்க வைக்கின்றது. "பென் டேவிஸ் " இன் நேர்த்தியான ஒளித்தொகுப்பு படத்திற்கு பக்கபலம்.
அந்த களோபரத்திலும் நான் ரசித்த காட்சிகளும் வசங்களும்......
1. படத்தின் ஆரம்பத்தில் நாயகன் ஒரு பெண்ணின் உடலத்தை தயார் செய்யும் காட்சி (நேர்த்தியான ஒளிப்பதிவு)
2. வைத்தியசாலையில் வைத்து அந்த பெண்ணுக்கு பேய் ஓட்டுகையில் பேய்க்கும் நாயகனுக்கும் இடையில் இடம் பெறும் வாதமும், காட்சி அமைப்பும்.
3. சிறுவன் ஒருவனுக்கு பேய் ஓட்ட செல்லும் லூக்காஸ் , அவனது தலையணையில் இருந்து தவளை ஒன்றை எடுத்து சாத்தான் என்று அடுப்பில் போடுவார். பின்பு லூகாசின் பையில் அது போல இன்னொரு தவளையை காணும் மைக்கல் சுற்றும் முற்றும் பார்க்கையில் அது போல நிறைய தவளைகள் தண்ணீர் தொட்டியிலிருப்பது.
4.தவளையை தானே காவிச் சென்று பேய் என்று ஏமாற்றுகிறார் என எண்ணும் நாயகன், தனது அறைக்கு செல்லும் போது , அறை முழுதும் அந்த தவளைகள் நிறைந்து இருப்பது.
5. நாயகனின் தந்தை இறந்த பின்னர் வரும் ஒரு காட்சியில் வெற்றுத்தரை பனிபடர்ந்தது போல இருப்பதும், அதில் சிவப்பு கண்களோடு கன்னங்கரேல் என் நிற்கும் குதிரையும், நாயகன் இது எவ்வறு வந்தது என் சுற்றும் முற்றும் பார்க்கும் போதே குதிரையும், பனியும் மறையும் காட்சி (அற்புத்மான கிராபிக்ஸ்)
7.கிளைமக்ஸில் ஃபாதர் லூகஸின் முகம் சிவப்பாகி குரூரமாக பேயாக மாறும் காட்சியும், நாயகன் செபிக்கும் போது சாதாரணமாக மாறுவதும்.
8.பேயோட்டுவதற்காக நாயகன் செபித்துக்கொண்டிருக்க பேய் பிடித்த லூகாஸ் அசால்ட்டாக இருந்து "ஆமேன்" சொல்லும் காட்சி. (அன்டனி ஹொபிங்ஸ் நடிப்பு அபாரம்)
9.வளைந்த சிலுவையை நாயகன் மேலும் வளைப்பது போல காட்சி வைத்து ,மறு கோணத்தில் இருந்து பார்க்கும் போது அதை உண்மையில் நேராக்கியது போன்ற அருமையான காட்சி வடிவமைப்பு.
10. கிளைமாக்ஸில் நாயகன் நடக்கும்திசை எங்கும் லேசான தலை திருப்பலுடன், வாயில் ஒரு நக்கல் சிரிப்புமாக பேய் பிடித்த லூகாஸ் நடிக்கும் காட்சி.
11. பேய்:- உனக்கு என்னைப் பார்த்து பயம் இல்லையா அற்பனே?
நாயகன்:- நான் ஏன் உன்னைப் பார்த்து பயப்பட வேண்டும்? எப்போதும் இந்த உலகத்தில் நீ வாழ்ந்ததில்லை என்னும் போது....
12. நாயகன் (பேயைப் பார்த்து) உனக்கு பைபிள் எல்லாம் தெரிந்திருக்கிறது...
பேய்:- உங்களை விட எங்களுக்கு பைபிள் நன்றாக தெரியும்......
அலட்டல் இல்லாத திரைக்கதை, கோரம் அற்ற திகில் கதை, குறியீடுகள் மூலமே பேயை சித்தரிப்பது என் ஆர்ப்பாட்டம் இல்லாமல் பயம் வரவைக்கும் திரைப்படம் இந்த "RITE"
பின்குறிப்பு:- இந்த படத்தைப் பார்த்து நான் பட்ட அவஸ்தைகளை படிக்க இங்கே சொடுக்கவும்.http://kishoker.blogspot.com/2011/10/blog-post_13.html
No comments:
Post a Comment