உதைபந்து

Friday, February 24, 2012

எங்கடா வச்சிருந்தீங்க இத இத்தனை நாளா?


இன்றைய போட்டி (24/02/2012, இலங்கை எதிர் அவுஸ்ரேலியா) பற்றி இந்த பதிவை பதிவுபோடவில்லையென்றால் எனக்கு தூக்கம் வரப்போவதில்லை. "கம் பக்' என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே.... அதாவது மீள்வருகை, அது இலங்கை அணிக்கு நீண்ட காலத்தின் பின்னர் இன்று தான் நடந்திருக்கிறது என்பேன். கடந்த உலகக்கிண்ண போட்டிகளோடு சங்கக்கார அணித்தலைவர் பதவியில் இருந்து விலகியதயடுத்து இலங்கை அணியின் அனுபவங்கள் அனைத்தும் கசப்பானதாகவே இருந்தது.ஒரு சிறந்த வீரராக இனம்கானப்பட்ட டில்ஷான் அணித்தலைவராக சொதப்பினார். விளைவு இங்கிலாந்து , தென்னாபிரிக்கா என்று வாங்கிக் கட்டினோம். இங்கிலாந்தில் சில ஆறுதல் வெற்றிகள் கிடைத்த போதிலும் ஒட்டு மொத்த பெறுபேறுகள் ரசிக்கும்படியாய் இருக்கவில்லை. அதுபோக குறுகிய காலத்தில் அடுத்த அணித்தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையை உருவாக்கியது , இலங்கை அணியின் தென்னாபிரிக்க பயணம் தான். தென்னாபிரிக்க அணிக்கெதிரான ஒரு நாள் தொடரின் முதல் போட்டியாகவும், 2012 இல் இலங்கை அணி விளையாடும் முதல் போட்டியாகவும் அமைந்த அந்த போட்டியில் இலங்கை அணி தன‌து மோசமான தோல்வியை பதிவுசெய்தது. தனது இத்தனை வருட ஒருநாள் கிரிக்கட் வரலாறில் பெற்றுக்கொண்ட அதி குறைவான எண்ணிக்கையான 44 ஓட்டங்க்ளை பெற்று படுதோல்ல்வி அடைந்தது இலங்கை அணி. அடுத்து வந்த இரண்டு போட்டிகளிலும் கூட இரவு தூங்க விடாமல் துர்க்கனவு வ‌ருகிற மாதிரியான தோல்விகள் தான் கிடைத்தது.

இந்த சூழ் நிலையில் தான் இந்த தொடருக்கு பின்னர் தான் தொடர்ந்து அணித்தலைவராக நீடிக்கப் போவதில்லை என்ற முடிவை எடுத்தார்/ எடுக்க நிர்பந்திக்கப்பட்டார் டில்ஷான். டில்ஷான் ஒரு சிறந்த அணித்தலைவராக பரிமளிக்க தவறியதன் காரணம் , அவருக்கு அணி வீரர்களின் பூரண ஒத்துழைப்பு இருக்கவில்லை என்ற கூற்றிலும் உண்மை இல்லாமல் இல்லை. இதற்கு தென்னாபிரிக்க சுற்றுப்போட்டியே சான்று. முதல் மூன்று போட்டிகளிலும் எனக்கு என்ன போச்சோ.... என்று ஆடிய வீரர்கள் , மூன்றாவது போட்டியின் முடிவில் ,தான் அணித்தலைவராக நீடிக்கப் போவதில்லை என்று டில்ஷான் அறிவித்தபின்பு , அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவர்கள் உயிரைக் கொடுத்து ஆக்ரோஷமாக ஆடியது முதல் மூன்று போட்டியிலும் இலங்கை அணி வீரர்கள் ஆடிய ஆட்டமுறைக்கு முற்றிலும் முரணாக இருந்ததை எல்லோரும் உணர்ந்திருப்பார்கள். அந்த கடைசி  இரண்டு போடிகளின் ஆறுதல் வெற்றியோடு டில்ஷான் அணித்தலைவர் பொறுப்பில் இருந்து விடைபெற இரண்டாவது தடவையாக அணித்தலமை பொறுப்பேற்றார் பல வெற்றிக் கோப்பைகளை இலங்கைக்கு பெற்றுத்தந்தவரும், 2007 உலகக் கிண்ண இறுதிப்போட்டி வரை இலங்கையை கொண்டுசென்றவருமான  அனுபவ வீரர் மஹேல ஜய‌வர்த்தன.மஹேல ஒரு சிறந்த தலைவர் என்பதில் எனக்கு எப்போதும் மாற்றுக்கருத்து இருந்ததில்லை. ஆனால் அவரது இரண்டவது தடவையான தலைவர் நியமனம் குறித்து நிறையவே முரண்பட்டுக்கொண்டேன்.  இது புதியதொரு வீரரை அணித்தலைவராக நியமிக்கும் நேரம், அது அடுத்த உலகக்கிண்ண போட்டிகளுக்கு இலங்கை அணியை வெற்றிகரமாக வழிநடத்திச் செல்ல அனுபவத்தைக் கொடுக்கும் என்பதே எனது வாதமாக இருந்தது. ஆகவே எனது தெரிவெல்லாம் ஏஞ்சலோ மத்தியூஸை சுற்றி இருந்தது. ஆனாலும் உலகக்கிண்ணத்துக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் இருப்பதால் அதுவரை இலங்கை அணியை வழிநடத்த ஒரு அனுபவ வீரர் வேண்டும் எனவும், மத்யூசுக்கு அந்த அனுபவம் போதாது எனவும் சில கிரிக்கட் அவதானிகள் கூறியதில் ஏதோ சிறு நியாயம் இருப்பது போல் இருக்க ஏற்றுக்கொண்டேன். ஆனாலும் இன்னும் சில முரண்பாட்டு கருத்துக்கள் என்னுள் இல்லாமல் இல்லை.

சரி அதை வேண்டுமானால் இன்னொரு பதிவில் பார்த்துக்கொள்ளலாம். என்னவோ உப தலைவராக இருந்து மஹேலவிடம் மத்தியூஸ் அனுபவங்களை கற்றுக்கொண்டால் சரி தான். ஆனால் உலககிண்ணத்துக்க்கு ஒரு வருடம் முன்னதாக அணித்தலைவர் பதவியை மத்தியூஸ் ஏற்றுக்கொள்வது உசிதமாக இருக்கும். அது அவருக்கு முன்அனுபவத்தை கொடுப்பதோடு,  இறுதிநேர அணித்தலைவர் சுமையென்ற மனஇறுக்கத்தையும் குறைக்கும்.சரி இப்போது இன்றைய போட்டியும் , இலங்கையின் மீள் வருகையையும் பற்றி பார்ப்போம். மஹேலவின் இரண்டாம் அணித்தலைவர் அவதாரத்தின் முதல் இரண்டு போட்டிகளிலும் அவருக்கும், ரசிகர்களுக்கும் விழுந்ததென்னவோ பேரிடிதான். அவுஸ்ரேலியா இந்திய அணிகளிடம் வாங்கி கட்டினோம்.

அதன் பின்பு கிடைத்த இந்தியாவுடனான் சமநிலை மற்றும் வெற்றி அவுஸ்ரேலியாவுடனான வெற்றி என்பனவற்றை  இலங்கையின் மீள் வருகை என கொண்டாடவோ அல்லது மஹேலவின் தலைமைத்துவ திறன் இன்னமும் அற்றுப்போகவில்லை என குதூகலிக்கவோ நான் விரும்பவில்லை.

காரணம் இந்தியாவுடன் கிடைத்த சமநிலையானது டோனி மைதானத்தில் நின்றதால் வந்தது. அதே இடத்தில் யூசுஃப் பதானோ அல்லது ஷெவாக்கோ களத்திலிருந்திருந்தால் கதை வேறு. போட்டி ஒரு ஓவருக்கு முன்னமே முடிவுக்கு வந்திருக்கும். எல்லா புகழும் டோனிக்கே! அது போக எமது பந்துவீச்சாளர்கள் கூட ஏதோ வெசாக் தினத்தில் தானம் கொடுப்பது போல் ஓட்டங்களை வாரி வழங்கிக் கொண்டிருந்தார்கள். அது இலங்கை அணியின் கர்ச்சனையாக கருத்தில் கொள்ள முடியாது.
அடுத்து அவுஸ்ரேலியாவுகு எதிரான போட்டி நாம் பாதி ஆடி மழை பாதி ஆடிய போட்டி. ஆக, அதுவும் வெற்றியை மழையுடன் பகிர்ந்துகொண்ட போட்டியாகப் போனது.

அடுத்து இந்தியாவுக்கெதிரான வெற்றி..... அச்சுறுத்தும் எந்தவித பந்துவீச்சாளர்களும் இல்லாத இந்திய அணிக்கெதிராக 280+ ஓட்டங்களை எடுத்ததென்னவோ பெரிய சாதனை கிடையாது. அது போக தான் ஒரு ஃபோர்முக்கு வரும் வரை மலிங்கவின் பந்தை எதிர் கொள்வதில் இன்னும் தடுமாறும் ஷெவாக்கையும், அத்தோடு சதத்தில் சதமடிக்கும் சிந்தனையில் தனது ஃபோர்மை தொலைத்துவிட்ட சச்சினையும் ஆரம்பத்திலேயே பறிகொடுத்துவிட்டு, இப்போதேல்லாம் எப்போதாவது அணிக்கு உதவும் டோனியையும் மைதானத்துக்கு வெளியே வைத்திருந்த இந்திய அணியுடனான வெற்றி , உலகக்கிண்ண தோல்விக்கு ஒரு பழிதீர்ப்பாக இருந்ததே தவிர , எமது வலுவான மீள் வருகையை நிரூபிக்க போதுமனதாக இருக்கவில்லை.அதற்கான சந்தர்ப்பம் வாய்த்தது இன்று தான். நாணய சுழற்சியில் வென்று வெற்றிக்கனவுடன் கள‌மிறங்கிய அவுஸ்ரேலிய அணிக்கெதிரான வெற்றி, ஒரு சாலச்சிறந்த வெற்றி என்பதோடு , இலங்கை அணியின் ஃபோர்மை மீண்டும் உலகுக்கு காட்டியிருக்கிறது. இலங்கையின் பந்துவீச்சாளர்கள் தங்கள் கடமையை துல்லியமாக செய்தார்கள் என்றே சொல்ல வேண்டும். முதல் இன்னிங்ஸ்சின் சராசரி ஓட்டம் 250+ ஆக இருக்கக் கூடிய ஒரு மைதானத்தில் , அவுஸ்ரேலியா போன்ற ஒரு பலமான அணி 280 ஓட்டங்களை பெறுவது ஒன்றும் பந்துவீச்சாளர்களின் பிழையல்ல. ஆனாலும் அவுஸ்ரேலியாவின் ஆரம்ப விக்கட்டுக்களை போட்டியின் ஆரம்பத்திலேயே சாய்த்திருந்த போதும், இவள‌வு தூரம் அவர்களை ஓட்டம் பெற அனுமதித்தது , இலங்கையின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளருக்கு வேலை இருப்பதையே சொல்கின்றது. அதுவும் நன்மைக்கே! இந்த பாரிய இலக்குத்தான் இலங்கையின் துடுப்பாட்ட வரிசையால் இது போன்ற பெரிய இலக்கை , அதுவும் அவுஸ்ரேலியா போன்ற ஒரு வலுவான அணிக்கெதிராக துரத்தி வெல்லமுடியும் என்ற நம்பிக்கையை வலுப்பெற செய்திருக்கின்றது.

அவுஸ்ரேலியா அணியை பொறுத்தவரை , தற்போது ஹல்ஃபின்ஹாஸ் (எயார் ஸ்விங், ரிவேர்ஸ் ஸ்விங் என்று மனிதர் மிரட்டுகிறார்), கிறிஸ்டியன், ஹாரிஸ் அத்தோடு மின்னல் வேக லீ உட்பட மிகவும் பலமான துல்லியமான பந்துவீச்சு வரிசையை கொண்டிருகிறது. அவுஸ்ரேலிய மண்ணில் மட்டுமல்லாது வெளிநாட்டிலும் கூட 230+ ஓட்டங்களை அடித்து விட்டு , எதிர் அணிக்கு நெருக்கடியை கொடுக்குமளவிற்கு அதன் பந்துவீச்சு வரிசை பலமாக இருக்கிறது.அவ்வாறான அவுஸ்ரேலிய பந்துவீச்சு வரிசைக்கு பதிலடிகொடுத்த‌ இந்த இலக்கு துரத்தலானது , இலங்கை அணியின் துடுப்பாட்டம் மீண்டும் ஒரு ஸ்திரமான நிலையை அடைந்திருப்பதையே காட்டுகிறது.

ஆரம்பவீரராக களமிறங்கும் அணித்தலைவர் மஹேல ஒருநாள் போட்டிகளில் 33+ சரசரியை கொண்டிருக்கிறர். அதுபோக அணித்தலைவராக அவரது ஒருநாள் போட்டி சரசரி 32+ ஆக இருக்கின்றது. ஆக இது அவரது ஆட்டத்திற்கு அணித்தலைவர் பொறுப்பு ஒரு தடையல்ல என்பதையே காட்டுகிறது. அத்தோடு நான்காம் நிலை வீரராக ஆடுவதைவிட , ஆரம்பதுடுப்பாட்ட வீரராக ஆ டுகையில் மஹேலயின் ஆட்டம் மிளிர்வது அனுபவ உண்மை. அந்த வகையில் மஹேலயின் இன்றைய ஆட்டம் வெற்றிக்கு அற்புதமான ஒரு அடித்தளமாக இருந்தது.

உபுல் தரங்கவின் வரவுக்கு பின்னர் ஏற்படப்போகும் மாற்றம் குறித்து சற்று பொறுத்து தான் பார்க்க வேண்டும். தரங்கவை பொறுத்த வரையில் மத்திய துடுப்பாட்ட வரிசைக்கு பொருத்தமில்லாதவர். அவரது இடம் ஆரம்ப துடுப்பாட்டம் தான். மஹேலவால் மத்திய வரிசையிலும் நன்றாக ஆட முடியுமென்பதால் , மஹேல கீழ் இறங்குவது தான் நல்லது.
டில்ஷான் ! எதிர்பார்பதைவிட குறைவாகவே செய்கிறார்.அவரை .......................... கட்டி மலையை இழுப்பவர் வகையறாவுக்குள் தெரிந்தோ , தெரியாமலோ சேர்த்து விட்டதால், அவர் சோபித்தால் சந்தோஷபட்டுகொள்ள வேண்டியதுதான். அதைவிட அவரிடம் பெரிதாக எதையும் எதிர் பார்க முடியாது. ஆனாலும் டில்ஷான் அணிக்கு நல்லதொரு ஆரம்பம் தராமல் இப்படியே ஏமாற்றுவது அவருக்கும் அணிக்கும் நல்லதல்ல.

சங்கக்கார! எப்போதும் நம்பிக்கை வைக்க கூடிய ஒருவர். இந்த "லீடிங் எட்ஜ்சுகள்" தான் அவரை பாடாய் படுத்துகிறது. இன்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரர் மஹேலவாக அறிவிக்கப்பட்டாலும் எனது வாக்கு சந்திமாலுக்கு தான். மொத்தமாய் இன்னமும் நாற்பது போட்டிகள் விளையாடாத நிலையில் , அப்படியொரு அனுபவம். எனக்கு சந்திமாலின் ஆட்டத்தை  பார்த்துக்கொண்டிருந்த போது அப்படியே மஹேலவை பார்ப்பது போன்றதொரு உணர்வு.

அடிக்கும் ஒவ்வொரு ஷொட்டிலும் லாவகம் + அனுபவ முதிர்வு தெரிகிறது. பிரட் லீயின் பந்துகளை , ஏதோ முந்நூறு போட்டிகள் ஆடிமுடித்து அனுபவம் கண்டவர் போன்று அடித்தாடிய விதம் இலங்கைக்கு இன்னுமொரு மஹேல கிடைத்தாயிற்று என்ற நம்பிக்கையை தருகின்றது. என்ன ஒரு குறை இளம் கால்கள் கிறீசுக்குள் நிற்க கூசுகிறது. அந்த இக்கட்டான , விக்கட்டுகள் இழக்கப்பட்ட நேரத்திலும் எப்படியாவது ஒரு ஆறு ஓட்டம் அடித்துவிட வேண்டும் என்ற முனைப்பை அவதானிக்க முடிந்தது. இது அவ்வாறான இக்கட்டான நேரத்தில் அணிக்கு ஆபத்தாய் முடியலாம். அனுபவம் மூலம் சந்திமால் கற்றுக்கொள்வார் என நம்புவோமாக. அது தவிர மிகவும் திறமையான ஒரு வீரர் தினேஷ் சந்திமால் .நிச்சயம் ஒரு நாள் இலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக சந்திமால் வருவார்.அடுத்து லஹிரு திரிமானே..... லாவகமான ஆட்டம்+அதிரடி . சிறந்த ஒரு வீரராக வலம் வர வாய்ப்புக்கல் ரொம்பவே அதிகம்.  கடந்த போட்டிகளின் போதும் தன்னை நிரூபித்திருக்கிறார் திரிமானே. இன்னுமொரு இளைய நம்பிக்கை! திஷார பெரேரா! இன்றைய போட்டியின் இன்னுமொரு நாயகன். கடைசி நிமிட இருக்கை நுனி வேளையில் ஆறும் , நான்குமாக அடித்து அணிக்கும் , ரசிகர்களுக்கும் உற்சாகபானம் ஊற்றியவர். பத்து பந்துகளில் இருபது ஓட்டங்கள் என்றால் சாதித்துவிடும் திறன் இருக்கும் இவர், நான்கு விக்கட்டுகள் கைவசம் உள்ள நிலையில், பத்து ஓவர்களில் அறுபது ஓட்டங்கள் எடுக்க வேண்டுமென்ற நிலைவந்தால் தாக்குப்பிடிப்பாரா என்பதே இப்போது கேள்வி. சகலதுறை வீரரான இவர் ,அதிரடி மட்டுமல்லாது, சிறிது நிதான ஆட்டத்தையும் சேர்த்துக் கொண்டால் அடுத்த ஜக் கலிஸ் தயாராகிவிடுவார்.

மத்தியூஸ்! உப தலைவர், சகலதுறைவீரர். இன்றைய போட்டியில் திசார பெரேரா அடித்த ஆறு , நான்குகளில் இவர் அடிப்பர் என்று எதிர் பார்த்த வேளையில் ஏமாற்றிவிட்டு போய்விட்டார். ஆனாலும் எப்போதும் நம்பிக்கை வைக்ககூடிய ஒருவர், அணியின் இக்கட்டான நேரங்களில் நிதானமாகவும், தேவைக்கேற்ற அதிரடியுடனும் ஆடக்கூடியவர். சிறிது காலத்திற்கு முன்னர் தடுமாறினாலும், சமீபத்தைய தரவுகள் இவர் தேறி வருவதையே காட்டுகின்றன.ஆக இலங்கை அணியின் துடுப்பாட்டவரிசை நல்லநிலையில் இருப்பதோடு, தங்களால் எந்த அணிகெதிராகவும் , எந்த இல‌க்கையும் துரத்த முடியும் என்பதையே காட்டுகின்றது.

பந்துவீச்சு எப்போதும் போலவே நல்ல நிலையிலேயே இருக்கின்றது. ஆனால் ஃபர்வீஸ் மஹரூஃபின் தெரிவில் தான் எனக்கு உடன்பாடில்லை. துடுபாட்டத்தில் சொதப்பல், பந்து வீச்சை கூட வித்தியாசம் காட்டுகிறேன் பேர்வழி என்று ஓவருக்கு ஜந்து 'ஸ்லோ " போல் போடுகிறார். அதை என்னவோ சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வது போல அவுஸ்ரேலியர்கள் ஆடுகிறார்கள். ஓவருக்கு ஒரு ஸ்லோ போல் போட்டால் பரவயில்லை. ஓவரே ஸ்லோ போலாக இருந்தால்?இலங்கை தெரிவுக்குழு செய்யவேண்டியதெல்லாம் இன்னும் நல்ல சில சகலதுறை வீரர்களை தயார் செய்து உலககிண்ணத்துக்கு இப்போதிருந்தே தயாராவதுதான்.

எது எப்படியோ மிக நீண்ட நாட்களுக்கு பிறகு , போட்டியின் கடைசி ஓவர் வரை நீண்ட ஒரு புல்லரிக்கவைத்த போட்டியாக இது அமைந்தது. இந்த வலுவான அவுஸ்ரேலிய அணிக்கெதிராக கிடைத்த வெற்றியானது இலங்கை அணியின் பலமான மீள் வருகையை காட்டுகின்றது, இது இலங்கை அணிக்கு மட்டுமல்ல , இலங்கை கிரிக்கட்டை ஒரு மதமாக நேசிக்கும் எத்தனையோ ஆயிரம் ரசிகர்களுக்கும் ஒரு மனோதிடத்தை கொடுத்துள்ளது.


3 comments:

 1. விமர்சனம் சூப்பர் சார் !

  ReplyDelete
  Replies
  1. @திண்டுக்கல் தனபாலன்
   ரொம்ப நன்றி சார்! உங்கள் ஆதரவு எப்போதும் எனக்கு வேண்டும். நீங்க என்ன தம்பி என்றே கூப்பிடலாம். நான் சின்ன பையன் தான். ஹி ஹி ஹி

   Delete
 2. இப்போது பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டிகளிலும் மிக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது மிக சந்தோசமாக உள்ளது. சங்க i love u da

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...