உதைபந்து

Saturday, February 25, 2012

ஆச்சியின் மகன் ஸ்கைப்பில் வருவான்!


(காய்ச்சல் காரணமாக எனது சகோதரன் ஒருவனை கொழும்பு நகரின் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துவிட்டு , அவனது அறையின் வெளியே காற்று வாங்கிக்கொண்டிருக்கிறேன். அப்போது என் காதில் கேட்ட முனகலுக்கு புதுக்கவிதை சாயம் பூசி தந்திருக்கிறேன்.)
ஆந்தைகளும் உறங்கிவிடும்
அர்த்த ஜாம நேரமிது!
நோயாளர் விடுதியொன்றின்
கதவருகே நான்!


அருகிருக்கும் அறையொன்றில்
குரல் மட்டும் கேட்கிறது!
முகம் காண முடியாவிடினும்...
உலகின் எழுபது வருடத்தை
எண்ணிப்பார்த்துவிட்ட அனுபவத்தாய் என்று
அவள் குரல் வந்து காதோரம்
சேதி சொல்லி சன்னமாய் மறைகின்றது!


அவளைச்சுற்றி 
இருட்டு மட்டும் திருட்டுத்தனமாய்
விழித்துக் கிடக்கிறது!


தம்பீ! தம்பீ! என்னும்
அவளது ஈனக்குரல்களில்
நோயின் வலியைவிட‌
வாழ்வின் வடுக்கள்
கனத்து கனத்து
காற்றில் வருகிறது!


உயிர் தேய உயிர் தேய‌
முனகிப் பார்த்தவளின்
அறையிலிருந்துஅலாரம் அடிக்கிறது.


அங்கு 
தாதி வருகிறாள்......
ஏதேதோ சேதி சொல்கிறாள்!


"சாப்பிட்டியா"
தாதியிடம் அவள் கேட்கையில்
விழுங்க மறந்து மருந்து ஒழுகும்
அந்த வயோதிப வாயில்
பாசம் வழிகிறது.


அடுத்து ஏதோ 
பித்துப் பிடித்தவளாய்
தம்பீ எங்கே?
தட்சனா எங்கே?
வந்தனா எங்கே?
வருண் எங்கே?


இத்தனை கேள்விக்கும்
கொச்சைத் தமிழில்
தாதியின் பதிலோ
"எல்லாம் வெளியில இருக்கு"


பாதி புரிந்ததும்
சோர்ந்த நரம்புகளில்
சோம பானம் பாய்ந்தவளாய்......
 தாதியின் கைபற்றி
காதலுடன் அவள் கையில்
முத்தமொன்றும் தந்து
விடைகொடுத்து மகிழ்கிறாள்!


விழித்துக்கிடந்த விள‌க்கணைத்து
 தாதி சென்றதும் 
மீண்டும் அறைக்குள்
குருட்டு இருட்டு 
குடிவருகிறது!


வெளிவந்த தாதி
விழி தூக்கி
என்னிடம் சொல்கிறாள்! 
"பிள்ளைகள் எல்லாம் 
வெளிநாடு தம்பி
ஆச்சி தான் "


அந்த அன்பு ஆத்மா
தன் கதவுக்கு பின்னால்
தன் பிள்ளையும் பேராரும்
காத்திருப்பதாய் நம்பி 
கதை சொல்லத் தொடந்குகிறது!


அதைக் கேட்க என்னையும் 
தந்தி அறுந்த காற்றையும் தவிர‌
வேறெவரும் அருகிலில்லை!


யார் கண்டார் ?
ஒருவேளை நாளை அவள் மகன்
ஸ்கைப்பில் வரலாம்!

6 comments:

 1. யார் கண்டார் ?
  ஒருவேளை நாளை அவள் மகன்
  ஸ்கைப்பில் வரலாம்!

  பாசம் கனக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி..... உங்கள் ஆதரவுக்கு.தொடர்ந்தும் ஆதரவை வேண்டுகிறேன்

   Delete
 2. நெஞ்சை தொடும் வரிகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி கோபிநாத், அடிக்கடி வாருங்கள்.

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...