உதைபந்து

Friday, January 11, 2013

நானும் அந்த சிவப்பு செருப்பும்........




நண்பனின் ஹாஸ்டலிலிருந்து சற்று தூரம் தான் நடந்திருப்பேன், கால் தடக்கியது. என்னவென்று பார்ப்பதற்குள் எனது ஒற்றை செருப்பு என்னை விட்டு சற்று தூரம் தள்ளி போய் விழுந்தது. மழை வேறு லேசாக தூறிக்கொண்டிருக்க அவசர அவசரமாய் செருப்பின் பக்கம் போய் அதனை மீண்டும் காலிற்குள் நுழைக்க முயன்ற போது தான் அது அறுந்திருப்பது தெரிந்தது. எனது பல்கலை கழகத்தின் ஒரு முனை வாயிலில் நின்று கொன்டிருக்கிறேன், இனிமேல் செருப்பில்லாமல் அடுத்த முனை வரை கடந்து, அதனை தொடர்ந்து வரும் பிரதான சாலையையும் கடந்து எனது ரூமை அடைய வேண்டும். என் கௌரவத்திற்கான தூரம் கிட்டத்தட்ட எண்னூறு மீட்டர்கள்.


எப்படியேனும் சரி செய்து ரூமை அடைந்துவிட்டால் போதும் அதன் பின்பு சமாளித்து விடலாம். ஆனால் இந்த செருப்பு அதற்கு ஒத்துழைப்பது போல் தெரியவில்லை. புத்தம் புதிய செருப்பு , வாங்கி சுமார் மூன்று மாதம் கூட ஆகியிருக்காது. மங்கலான தெரு வெளிச்சத்தில் தெரிந்த அந்த செருப்பின் கம்பனி பெயரை வாசித்து சத்தமாக இரண்டு மூன்று ஆங்கில கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டேன்.


என் நண்பர்களில் அனேகர் கறுப்பு வர்ணத்தில் முள்ளு முள்ளு போன்ற ரப்பர் அமைப்புடைய ஒரு வகையான் ரப்பர் செருப்பை அணிந்து கொள்ள , நான் வலிய போய் இந்த சிவப்பு வண்ண செருப்பை வாங்கிக்கொன்டு வந்தேன். அதற்கு காரணம் இரண்டு. முதல் காரணம் அந்த முள்ளு செருப்பு தண்ணீரில் பட்டதும் போடும் "கிரீச் கிரீச்" சத்தம் எனக்கு  சுத்தமாக பிடிப்பதில்லை. தெருவில் நாம் நடக்கையில் ஐம்பதடி தூரம் வரைக்கும் நம் வரவினை அநாவசியமாக அறிவித்துக்கொண்டிருக்கும். இரண்டாம் காரணம், கொழும்பிலும் சரி தற்போது நாட்டின் அநேக பாகங்களிலும் சரி பல வண்ணங்களில் செருப்பு அணிவது ஒரு ஃபேஷன். அதனைக்கும் ஆசைப்பட்டு ஆனால் இப்போது வெற்றுக்கால்களுடன் நின்று கொண்டிருக்கிறேன்.


சொன்னால் நம்ப மாட்டீர்கள் , என் பாதம் நிலத்தில் படுவது சுமார் மூன்று மாத்திற்கு பின்புதான், அதுவும் இந்த செருப்பு அறுந்துவிட்ட படியினால். நீங்கள் நம்பாவிட்டாலும் அது தான் உண்மை, சுமார் மூன்று மாத காலமாக என் பாதம் நிலத்தில் படவேயில்லை , சில செக்கன்கள் கூட....


எனது ரூமில் என் கட்டிலின் அடியில் செருப்பு எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும், காலை எழுந்ததும் காலை நேராக செருப்பின் மேல் வைத்து கொழுவிக்கொண்ட பின்புதான் கட்டிலை விட்டே எழுந்திருப்பேன். அப்படியே காலைக்கடன்களை முடித்துக்கொள்ள , கால் இன்னுமொரு செருப்பிற்கு இடம் மாறும் , ஒரு கால் அடுத்த செருப்பிற்கு மாறும் அந்த கால அவகாசத்தில் கூட ஒற்றைக்காலில் நின்று கொண்டு செருப்பை மாற்றிக்கொள்வேன். காலைக்கடன் முடிந்த பின் மறுபடி அதே செயன்முறையில் மீண்டும் இதே செருப்பு காலில் ஒட்டிக்கொள்ளும். அப்புறம் விரிவுரைகளுக்கு தயாராகி, விரிவுரை முடிவில் ரூமுக்கு வந்து மீண்டும் குளித்து, படம் பார்த்து, இன்டெர்நெட் மேய்ந்து முடித்து கட்டிலுக்கு சென்று உட்கார்ந்து கழற்றி விட்டு காலை தூக்கி கட்டிலில் வைக்கும் வரை இந்த செருப்புக்கும் என் காலிற்கும் இடையிலான பந்தம் ஓயாது. 


இத்தனைக்கும் காரணம் நான் செருப்பை அளவுக்கதிகமாக நேசிப்பதோ அல்லது பாதம் நிலத்தில் படாமல் வாழ்ந்துகொண்டிருக்க நான் அம்பானி பேரனோ கிடையாது. எல்லாம் எங்களது ரூம் இருக்கும் லட்சணம். எங்களது ரூமை யாராவது வந்து பார்த்தால் ஏனைய பேட்சுலர்கள் ரூம்கள் கோவில் என்று கும்பிடு போட்டு போவார்கள் , அந்தளவுக்கு படு "சுத்தமாக " இருக்கும் எங்களது ரூம். நாங்கள் போடும் குப்பைகளில் நாங்களே வெற்று பாதங்களை வைத்து நடக்க முடியாத அளவுக்கு மோசமாக இருக்கும் எங்களது ரூமில் வெற்றுப் பாதங்களோடு நடந்து விஷப் பரீட்சையில் இறங்க நான் மட்டுமல்ல, எனது ரூம் வாசிகள் யாரும் முயன்றது கிடையாது.


ஒரு தடவை பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துவிட்ட தனது மகனுக்கு ரூம் கேட்டு நாங்கள் இருந்த வீட்டை பார்க்க வந்த ஒரு வயதான தாய் எங்கள் ரூமை பார்த்ததும் , தனது மகனை பல்கலைக்கழகத்தை விட்டே கூட்டிக்கொண்டு போய் விடலாமா என்பது போல் ஒரு அதிர்ச்சியில் உறைந்ததை இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை. அந்த அதிர்ச்சியுடன் அந்த தாய் போயிருந்தால் கூட பரவாயில்லை , யாரென்றே தெரியாத எங்களது ரூமை சுமார் ஒரு மணிநேரம் தனது கணவருடன் நின்று சுத்தப்படுத்தி ஜீவகாரூண்ய வேலை செய்துவிட்டு தான் போனார். போனவர் சும்மா போனாரா?  "புத்தே ! பரிசமின் இன்ன... காமரே சத்து ஹிட்டியுத் ஹொயா கண்ண பரி வெனவா.." ( பிள்ளைகள் கவனமாய் இருங்கள். ரூமுக்குள், பூச்சி பூரான் கிடந்தாலும் கண்டுபிடிக்க முடியாது.....) மவராசி நாக்கு கறுப்பு என்று நினைக்கிறேன்...... நான் ஊருக்கு போயிருந்த ஒரு நாள் என் கட்டிலின் கீழே ஒரு இரத்தப் புடையன் பாம்பை எனது ககாக்கள் வெற்றிகரமாக கொன்றிருக்கிறார்கள். நான் அறிய ஒரு தடவை என் சகோதரன் இரண்டு தடவை சாரைப்பாம்புகள் இரண்டு நான் லேப் டாப் வைக்கும் பெட்டிக்குள் அடைக்கலம் புகுவதை கண்டு பிடித்து தண்டித்ததன் பின்னர் இது மூன்றாவது சம்பவம்.




எங்கள் ரூமின் பின்னால் ஒரு காடு இருக்கிறது, காடு என்பது சற்று அதிகப்படியான சொல்... சுமார் ஒரு இருபது பலா மரங்கள் கூட்டமாக நிற்கின்றன. அதை காடென்று நாங்கள்  பொருள் கொள்வதால் , அந்த காட்டிலிருந்து பாம்புகள் வருவதை பிழையென்று கொள்ள‌ முடியாது. மற்றப்படி எமது ரூமில் கிடக்கும் குப்பைகளால் தான் பாம்புகல் வந்து அடைக்கலம் தேடுகின்றன என்ற குற்ற‌ச்சாட்டு  இன்னமும் நிலுவையிலேயே இருக்கிறது. 




முடிந்தவரை வெற்றுப்பாதங்களுடன் இருப்பது உடலுக்கு நல்லது, ஏனென்றால் பாதத்தின் மூலமே உடலின் பெரும் பெரும்பாலான வெப்பம் வெளியேறி உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது. குறைந்தது அல்லது கட்டாயம் குளிக்கும் போதாவது பாதங்கள் வெறுமையாக இருப்பது அவசியம் காரணம் உடலின் சூடுழத்தல் செயன்முறை நடைபெறுவது , பிரதானமாக குளிக்கும் போது தான். ஹிம்..... எங்கள் ரூமே இந்த நிலை என்றால் , குளியலரையை சொல்லவா வேண்டும்? என் நண்பன் ஒருவனின் புத்தம் புதிய டெனிம் !! புது வருடத்திற்கு ஒரு தடவை அணிந்து விட்டு துவைப்பதற்காக , குளியலறையின்  கொடியில் போட்டிருந்தான், வழமை போலவே அந்த கொடி மூலம் ஓடித்திரியும் எலி அதனை கீழே தட்டிப்போட்டது. அன்றே அந்த டெனிமுக்கு போகி கொண்ண்டாடினான் நண்பன்..... அம்மாதிரியான பக்க சுத்தமான அந்த இடத்தில் வெற்றுக்கால்களுடன் நிற்பது என்பது , அந்தாட்டிக்காவில் அம்மணமாக நின்றுகொன்டு ஐஸ்கிரீம் உண்பதற்கு சமம்.




சரி இப்போது அது பிரச்சனையல்ல..... எனது செருப்பு அறுந்துவிட்டது, நான் ரூமுக்கு போயாக வேண்டும். பகீரத பிராயத்தனப்பட்டும் செருப்பை மீட்க முடியவில்லை. இருள் மங்கிய வேளை , நம் காலை எவன் கவனிக்கப் போகிறான்? புறப்பட ஆயத்தமாகி செருப்பை ஒரு புதரினுள் தூக்கி வீசி எறிகிறேன். சில செக்கன்கள் தாமதமாக ஒருத்தன் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தான். எழுந்த அவனை ஒரு கை மீண்டும் புதருக்குள் அமர்த்துகிறது. ஆனல்லும் என்னை பார்த்துக்கொண்டே இருக்கிறான். நான் பதறிப்போய் "தக்க நே மச்சான்.. சொறி... ( கவனிக்கவில்லை மச்சான் ... மன்னித்துக்கொள்) என்று நழுவினேன். அவன் தனியாக இருந்தால் , செருப்பால் அதுவும் அறுந்த செருப்பால், அதுவும் மூன்று மாதம் கூட முழுசாக பாவிக்க முடியாத ஒரு மானங்கெட்ட செருப்பால் அவனை நோக்கில் நான் எறிந்ததற்கு குறைந்த பட்சம் இரண்டு பல்லையாவது தட்டியிருப்பான். ஆனால் அவன் புதருக்குள் கடும் வேலையாக இருந்ததனால், என்னை பல்லுடன் போக அனுமதித்தான்.



கிட்டத்தட்ட பல்கலைக்கழக வளாகத்தை அரைவாசிக்கும் மேல் கடந்திருப்பேன், சில தெரிந்த முகங்கள் தென்பட, வழமையான குசலங்கள், ஊர் வம்பு முடிய "எங்கே செருப்பு?"  என்ற கேள்வி வருகிறது.  இதோ இப்போது உங்களிடம் கூறியதை கிட்டத்தட்ட ஆறு பேரிடம் கூறியிருப்பேன். அந்த செருப்பு பிராண்ட் சரியில்லை , கடைகளில் கண்டால் வாங்கவேண்டாம் என்ற ஒரு இலவச ஆலோசனையையும் வழங்குகிறேன் , முழுவதுமாக மழித்திருந்த முகத்தில் லேசாக அரும்பியிருந்த மீசையில் லேசாக ஒட்டிய மண்ணை  மெதுவாக தட்டும் முயற்சியில்.அவர்கள் கடந்து போகிறார்கள் அந்த கறுத்த முள்ளு செருப்பின் "சரக் சரக்" ஓசை எனக்கு கடுப்பை தருகிறது. இப்போது இது வயிற்றெரிச்சல்..



எனது கவலை என்னவென்றால் என்னை கண்ட ஆண் நண்பர்கள் எல்லோரும் நின்று கதைத்துவிட்டு போனார்கள். அவர்களுக்கு அந்த செருப்புத் தான் தரமில்லை என்று விளக்க முடிந்தது. ஆனால் அவசர அவசரமாக போய்க்கொன்டிருந்த சில பெண் நண்பிகளுக்கு என்னால் அதனை விளக்க முடியாமல் போனது. என்ன நினைத்தார்களோ? சிலர் "க்ளுக்" என்று சிரிக்க வேறு செய்தார்கள். சரி நாளை போய் சொன்னால் போகிறது.


ஆனாலும் வெற்றும் பாதங்களுடன் சிறுது தூரம் நடந்து செவது, அதுவும் சுமார் மூன்று மாதங்களின் பின்னர், சுகமாகத்தான் இருக்கிறது. நடந்து கொண்டிருக்கையில் காலில் குளிர்மையாக நீங்கள் உணர்வது இலைமேல் விழுந்த மழைத்துளியா? இலை கிழவன் துப்பிய சளியா ? என்று ஆராயாத வரையில் வெற்றுக்காலுடன் வீதியில் நடப்பது சுக அனுபவமாகவே இருக்கிறது.


எங்களது ரூமை நெருங்குகிறேன், இப்போது எனக்கு இன்னொரு கட்டமான சவால் காத்திருக்கிறது. எனது நண்பன் ஒருவன் ஒரு நாய் வளர்க்கிறான், வளர்க்கிறான் என்பதனை விட அது வந்து வளர்கிறது என்று சொல்வது பொருந்தும். நாங்கள் சாப்பிட்ட மிச்சம் , சாப்பிடாமல் கொடுக்கும் பங்கு என அந்த நாயின் பாடு படு கொண்டாட்டம் தான்.


சைவ சாப்பாடு என்றால் அவர் சாப்பிட  மாட்டார், குறைந்த பட்சம்  கோழி எலும்பாவது சோற்றில் இருக்கவேண்டும். இதனாலேயே எங்களை கோழி எலும்புகளை கடித்து உண்பதற்கு எங்கள் நண்பன் அனுமதிக்க மாட்டான், தின்ற‌து பாதி தின்னாதது பாதியாக எடுத்துக்கொன்டு போய் நாய்க்கு தானம் பண்ணி விடுவான். வீட்டில் எந்த எலும்பானாலும் மாவு போன்ரு அரைத்து சாப்பிடும் எனக்கு , இது ஒரு பெரிய இழப்பனாலும் , சரி போகட்டும் எங்கள் நாலோடு அது ஐந்தாக இருந்துவிட்டு போகட்டும் என்று விட்டுவிடுவேன். சில நேரங்களில் வெளியே கடும் மழை பெய்தால் எங்கள் ரூமில் காலியாக இருக்கும் ஒரு மெத்தையில் கூட வந்து படுத்துவிடும் , நாங்களும் கண்டுகொள்வது கிடையாது. 


அப்படி நாங்கள் சோஷலிஷமாக பழகி வந்தாலும் அது எப்போதும் மலம் கழிக்கும் விடயத்தில் சர்வாதிகார போக்கையே கடைப்பிடிக்கிறது. எவ்வளவு சொன்னாலும் , விரட்டி விட்டாலும் விரட்டும் போது ஓடிப்போய் அடுத்த தெருவில் நின்று விட்டு , நாங்கள் போனதும் சரியாக வந்து எங்கள் நடு முற்றத்தில் மலம் கழித்துவிட்டு உற்சாகமாக ஒரு ஊளையையும் விட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்க கிளம்பிவிடும்.

எவனோ எங்க ரூமுக்கு வெறும் காலோட வந்துட்டான்



இப்போது வெளிச்சமிலாத அந்த பகுதியை கடக்கையில் , காலை பதம் பார்க்க காத்திருக்கும் அந்த கண்ணி வெடிகளிடமிருந்து தப்ப வேண்டும். பார்த்து பார்த்து நடக்கின்றேன். நடந்தும் எது நடக்க கூடாதோ அது நடந்து விட்டது... குடலை புடுங்கிக்கொண்டு வந்தது.. வெளியே இருந்த குழாயில் காலை கழுவிவிட்டு ரூமுக்குள் போவதற்காக , வாசலில் நின்றபடியே நண்பனிடம் செருப்பு ஒன்று கேட்டு வாங்கிக்கொண்டு ரூமுக்குள் நுழைகிறேன்.


பிரதான எதிர்கட்சியின் ஆதரவாளனான அவன் ஏதோ பிரச்சனையில் இருக்கிறான்... "மச்சான் இந்த நாட்டில் நடப்பது சர்வாதிகாரம், பிரதம நீதியரசரை பதவி விலக்கி விட்டார்கள். இது வலுவேறாக்கத்திற்கு முரணானது, இது சுத்த சர்வாதிகாரம். இது நாட்டிற்கு ஒரு பெரிய பிரச்சனை. நாளை நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு நான் போயே ஆகவேண்டும்"


அட.... நானும் மறந்தே போனேன். விடிந்ததும் முதல் வேலையாக செருப்பு வாங்க போக வேண்டும். இந்த தடவை நான் சிவப்பு செருப்பு வாங்கப் போவதில்லை. ஊதா அல்லது நீலம் நிற‌ம் கிடைத்தால் தேவல......















8 comments:

  1. அனுபவம்.. அனுபவம்.. இத்துனூண்டு செருப்புக்கேவா? இதுல என்ன கருமத்துக்கு "ஆக்கம்" லேபலை சேர்த்து வைச்சிருக்க??

    இன்ன பிராண்ட் என்று எங்களுக்கு ஆலோசனை வழங்காயீர்களா, தல?

    ReplyDelete
    Replies
    1. சும்மா ஒரு பில்டப்புக்கு "ஆக்கம்னு" போடுறது தான்....

      ///இன்ன பிராண்ட் என்று எங்களுக்கு ஆலோசனை வழங்காயீர்களா, தல?////

      அதுவா? "நோலிமிட்டில்" அறுகம் பே செருப்பை தவிர ஆங்கில எழுத்தில் ஆரம்பிக்கும் ஒரு செருப்பு, அலார்ட்டா இருந்துக்கடா கொமாரு.. அம்புட்டுத்தேன் சொல்லிட்டேன்..

      Delete
  2. இலைமேல் விழுந்த மழைத்துளியா? இலை கிழவன் துப்பிய சளியா ?//////////////////////////////ஹிஹி தம்பி டைமிங் சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் உங்களிடம் குடித்த யானைப்பால் தான் மன்னா...

      Delete
  3. எனக்கு தெரியும் அந்த ப்ராண்ட் ...பாடும் மீன் தானே ????????

    //அந்தாட்டிக்காவில் அம்மணமாக நின்றுகொன்டு ஐஸ்கிரீம் உண்பதற்கு சமம்//

    தல எங்க இருந்து தல இந்த கற்பனா சக்தி எல்லாம் .....?????? ஒஹொமம கெனியன்ன....

    ReplyDelete
    Replies
    1. ஹெஹ்.. ஹேய்.. ஹேய்...

      ////எனக்கு தெரியும் அந்த ப்ராண்ட் ...பாடும் மீன் தானே ????????////

      # பப்ளிக் பப்ளிக்...

      ///தல எங்க இருந்து தல இந்த கற்பனா சக்தி எல்லாம் .....?????? ஒஹொமம கெனியன்ன....///

      அதுவா வருது பாஸ்...

      நன்றி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...