உதைபந்து

Saturday, May 25, 2013

உலகை உலுக்கப்போகும் அந்த உச்ச நட்சத்திரங்களின் மாற்றங்கள்!



வழமை போலவே பலத்த எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பித்த 2012/2013ம் ஆண்டுக்கான உதைபந்தாட்ட பருவகால போட்டிகள் எதிர்பார்ப்புக்கள் , ஏமாற்றங்கள், திருப்புமுனைகளோடு நிறைவுக்கு வருகிறது. கிட்டத்தட்ட ஐரோப்பாவின் பிரதானமான அனைத்து பிராந்தியப் போட்டிகளும் நிறைவுக்கு வந்துள்ளன. அல்லது நிறைவை அண்மித்துள்ளன. இந்த நிலையில் , இப்போது அனைத்து உதைபந்தாட்ட ரசிகர்களினதும் கவனம் அடுத்த பருவகாலத்தை நோக்கி திரும்பியுள்ளது. 2013/2014 ம் ஆண்டுக்கான அடுத்த பருவகாலமானது இவ்வருடத்தின் கோடை கால வீரர்கள் பரிவர்த்தனையுடன் ( Summer Transfer Window ) சுடச்சுட, கோலாகலமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

கோடைகால வீரர்கள் பரிவர்த்தனைக்குரிய காலமானது பல்வேறு நாடுகளில் பல்வேறு காலப்பகுதிகளில் இடம்பெற்றாலும் , உதைபந்தாட்ட உலகில் பிரபலமான பிராந்திய போட்டிகளான "லா லீகா ( ஸ்பெயின் ) ", " பார்சிலேஸ் பிரீமியர் லீக் ( இங்கிலாந்து )" , " புண்டஸ்லீகா  ( ஜேர்மனி )" , " சீரீ ஏ ( இத்தாலி )" , "லீக் 1 ( ஃபிரான்ஸ்) ஆகியனவற்றுக்கான கோடைகால வீரர்கள் பரிவர்த்தனை காலமானது ஜுலை 11 - ஆகஸ்ட் 31 வரையாக இருக்கிறது. இடையில் குளிர்கால வீரர்கள் பரிவர்த்தனை காலம் நடைபெற்றாலும் கூட இந்த கோடை கால வீரர்கள் பரிவர்த்தனை என்பது தான் உலக உதைபந்தாட்ட ரசிகர்கள், அவதானிகள் மத்தியில் மிகப்பிரபலம் வாய்ந்தது. காரணம் ஒரு பருவகாலம் நிறைவடைந்தும் தங்களது அணியின் குறை நிறைகளை கணித்து தேவையான வீரர்களை வாங்கி குவிப்பதும் , பிரகாசிக்க தவறிய வீரர்களை அல்லது  அதிக விலை போகும் வீரர்களை விற்றுத்தள்ளும் செயற்பாடு இந்த கோடைகால வீரர்கள் பரிவர்த்தனை காலத்தில் தான் நடக்கும்.

ஆக இப்போது நிறைவுறும் தறுவாயில் இருக்கும் அனைத்து பிராந்திய போட்டிகளும் இன்னும் சில நாட்களில் நிறைவடைந்துவிடும். அடுத்த பருவகாலம் ஆரம்பிக்கும் வரை வீரர்கள் கோடைகால விடுப்பு எடுத்துக்கொண்டு காதலியுடன் கடற்கரைக்கும் கிளம்பிவிடுவார்கள். ஆனால் இந்த விடுப்பு கால பகுதி தான் ஒவ்வொரு அணியின் முகாமையாளரும் தீயாக வேலை செய்யவேண்டிய தருணம். இந்த காலப்பகுதியில் அடுத்த பருவகாலத்துக்கான வீரர்கள் தெரிவில் ஒவ்வொரு அணியின் முகாமையாளர்களும் அவர்களது குழுவும் பரபரப்பாக இயங்கிகொண்டிருப்பார்கள். அந்த வகையில் அடுத்த பருவகாலத்திற்கான வீரர்கள பரிவர்த்தனையின் போது, அதிமுக்கியம் பெறப்போகும் அல்லது பரபரப்பாக விற்பனையாகப்போகும் வீரர்கள் யார் யார் என்று பார்த்துவிடலாம்.





5. டேவில் வியா ( நாடு : ஸ்பெயின் , தற்போதைய கழகம் :பார்சிலோனா -ஸ்பெயின் ) : 2010இல் வலன்சியாவிடம் இருந்து பார்சிலோனாவால் வாங்கப்பட்ட டேவிட் வியா இந்த கோடைகாலத்தில் விற்கப்படலாம் என பலத்த எதிர்பார்ப்பு நிலவுகின்றது. அதற்கு மூன்று பிரதான காரணங்களை சொல்லலாம்.


* அதிகரித்துவிட்ட டேவிட் வியாவின் வயது. 31 வயதாகிவிட்ட டேவிட் வியாவினை நல்ல விலைக்கு விற்க பார்சினோவிற்கு இது தான் நல்ல சந்தர்ப்பம் , இன்னும் வயதாகிவிட்டால் , சந்தையில் டேவிட் வியாவுக்கான விலை குறைந்துவிடும். ஆகவே நல்ல விலை கிடைக்கும் போதே டேவிட் வியாவை விற்கப்பார்க்கிறது பார்சிலோனா.


* அடுத்த பருவகாலத்திற்கான வீரர்கள் கொள்வனவில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது பார்சிலோனா. பார்சிலோனாவின் அனைத்தும் இலக்குகளும் உலகின் தலைசிறந்த வீரர்களாக இருக்கின்றார்கள் கூடவே அவர்களுக்கான் விலையும் சந்தையில் மிக அதிகம்..  ஆனால் பார்சிலோனாவின் முகாமையாளர் டிட்டோ விலனோவாவிற்கு பார்சிலோனா நிர்வாகம் ஒதுக்கிய பட்ஜட் வெறும் 50 மில்லியன் டாலர்கள் தான். அந்த தொகையை வைத்துக்கொண்டு பார்சிலோனாவில் பாரிய இலக்குகளான நெய்மார், வின்சன் கொம்பனி அல்லது ஹும்மல்ஸ் , சேர்ஜியோ அக்குவேரோ + ஒரு கோல் காப்பாளர் என்பனவற்றை அடைவது சாத்தியமே இல்லாத ஒன்று. பார்சிலோனாவின் பட்ஜெட்டில் இதில் யாரேனும் இருவரை மட்டுமே வாங்க முடியும். எனவே அணியில் இருக்கும் வீரர்களை விற்று வரும் மேலதிக பணத்தில் தனது இலக்குகளை நிறைவேற்ற பார்க்கிறது பார்சிலோனாவின் முகாமைத்துவ தரப்பு. அவ்வாறு விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் பட்டியலில் டேவிட் வியா முதன்மை இடம் வகிக்கிறார்.


* கடந்த பருவகாலத்தின் போது டேவிட் வியாவின் ஆட்டம் ஒன்றும் அவ்வளவு அபரிமிதமாக இருந்துவிடவில்லை. உடல் உபாதை காரணமாக சுமார் ஒருவருடம் ஓய்வில் இருந்துவிட்டு மீண்டும் ஆடவந்ததில் அவரால் சோபிக்க முடியாமல் போனதோ என்னமோ, ஆனால் சரியான உடல் மற்றும் விளையாட்டு தகுதியில் இல்லாத டேவிட் வியாவை விற்றுவிடுவதே சால சிறந்தது என கருதுகிறது பார்சிலோனா தரப்பு.


பல்வேறு கழகங்கள் டேவிட் வியாவை வாங்க போட்டி போட்டாலும் இங்கிலாந்தின் பிராந்திய கழகமான "ஆர்சனல்" டேவிட் வியாவை வாங்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றது.




4. செஸ்க் ஃபப்ரிகாஸ் : ( நாடு :ஸ்பெயின் , தற்போதைய கழகம் : பார்சிலோன -ஸ்பெயின்)  பலத்த எதிர்பார்ப்புகளோடு 2011/2012 பருவகாலத்தின் போது அப்போதைய பார்சிலோனாவின் முகாமையாளர் பெப் குவாரியோலாவினால் பல்வேறு நிதி பிரச்சினைகளின் மத்தியிலும் இங்கிலாந்தின் "ஆர்சனல்" கழக‌த்திடமிருந்து வாங்கப்பட்டவர் ஃபப்ரிகாஸ். ஆனாலும் பார்சிலோனாவில் இருந்த இந்த இரண்டு ஆண்டுகளும் செஸ்க் ஃபப்ரிகாசிடமிருந்து பார்சிலோனா எதிர்பார்த்த அந்த பெறுபேறுகள் வெளிவரவே இல்லை. பார்சிலோனாவின் டிக்கி டக்கா முறைமையோடு ஒத்துப்போக முடியாமலும் , மத்திய களத்தில் சாபி மற்றும் இனியஸ்டா போன்ற ஜாம்பவான்களோடு போட்டி போட முடியாமலும் ரொம்ப‌வுமே சொதப்பி வந்தார் ஃபப்ரிகாஸ். ஒரு சில ஆடங்களில் சிறப்பாக ஆடினாலும் கூட , ஒட்டு மொத்தத்தில் பார்சிலோனாவின் ஆட்டத்துக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்ற முத்திரை குத்தப்பட்டிருக்கிறார்.


ஆக மொத்ததில் தனது ஆட்டத்துக்கு சரிப்படாத ஃபப்ரிகாசை விற்பது + அடுத்த பருவகாலத்துக்கான தனது இலக்குகளை அடைவதற்குரிய பணத்தை சேர்த்துவிடுவது போன்ற காரணங்களுக்காக ஃபப்ரிகாசும்  பார்சிலோனாவின் விற்கப்படுவோர் பட்டியலில் இணைவார் என எதிர்பார்க்கலாம். ஃபப்ரிகாஸை மீண்டும் ஆர்சனலே வாங்கும் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்ட போதும் மன்செஸ்டர் யுனைட்டட் அணியானது மிகப்பெரும் தொகை ஒன்றை கொடுத்து ஃபப்ரிகாசை கொள்வனவு செய்ய முனைவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனேகமாக அடுத்த பருவகாலத்தில் ஃபப்ரிகாசை மன்செஸ்டரின் மைதானத்தில் காணலாம் என உறுதியாக நம்புகிறேன்.





3.வெய்னே ரூனி : ( நாடு : இங்கிலாந்து , தற்போதைய கழகம் : மன்செஸ்டர் யுனைட்டட்-இங்கிலாந்து) : மன்செஸ்டர் யுனைட்டட் அணியின் பிதாமகர் என கருதப்படும் அவ்வணியின்  முகாமையாளர் சேர்.அலெக்ஸ் ஃபேர்குசன் இந்த பருவகாலத்தோடு தனது ஓய்வினை அறிவித்துள்ள அதிர்ச்சியில் இருந்து இன்னமும் அந்த அணியின் ரசிகர்கள் மீளாத நிலையில் ரூனியின் ரூபத்தில் வந்து விழுந்திருக்கிறது இன்னுமொரு அடி.


2004ம் ஆண்டிலிருந்து மன்செஸ்டர் யுனைட்டட் அணிக்காக ஆடிவரும் ரூனி இந்த பருவகாலத்துடன் அவ்வணியில் இருந்து விடைபெறுவார் என பலத்த எதிர்பார்ப்பு நிலவுகின்றது. தன்னை அணியில் விடுவிக்குமாறு  ரூனி மன்செஸ்டர் யுனைட்டட் முகாமைத்துவத்தை கேட்டுக்கொண்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தியினை சேர். அலெக்ஸ் ஃபேர்குசன் கூட உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


ரூனியின் விலகலுக்கு சரியான காரணம் இன்னமும் தெரியாத போதும் , சேர்.அலெக்ஸின் ஓய்வு, நீண்ட காலம் ஒரே அணியில் ஆடி வருகின்றமையால் ஒரு மாற்றம் தேவைப்படுகின்ற‌மை போன்றன காரணமாக இருக்கலாம். ரூனியின் கொள்வனவு தொடர்பில் பல்வேறு கழகங்கள் போட்டி போடுகின்றன. அதில் முக்கியமானவை செல்சியா மற்றும்  ஃபிரான்ஸின் லீக் 1 சம்பியனான பாரிஸ் செயின்ட் ஜேர்மன் . ஆனால் சக போட்டியாளரான செல்சியாவிற்கு ரூனியை விற்கும் மடமை தனமான வேலையை மன்செஸ்டர் பார்க்காது என்று நம்புவதால் பாரிஸ் செயின்ட் ஜேர்மன் பக்கம் ரூனி காற்று வீசுகிறது.




2.நெய்மார் : ( நாடு : பிரேசில் , தற்போதைய கழகம் :சன்டோஸ்-பிரேசில்) இந்தா ... அந்தா என்று இருந்து இப்போது இந்த கட்டுரை எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் அந்த பரிவர்த்தனை நிறைவேற்றப்பட்டிருப்பதாக தெரிகின்றது.


உலகின் தலை சிறந்த வீரர்களான மெஸ்ஸி , ரொனால்டோ வரிசையில் தற்போது பேசப்படும் நட்சத்திரம் தான் 21 வயதான பிரேஸிலின் நெய்மார் த  சில்வா. மிகச்சிறிய வயதிலேயே உலகின் அனைத்து உதைப்ந்தாட்ட அவதானிகளின் அவனத்தையும் வென்றுவிட்ட நெய்மார் அடுத்த பீலே என்று புகழாரம் சூட்டப்பட்டவர். பிரேசிலின் பிராந்திய கழகமான சன்டொஸிற்கு ஆடிவந்த நெய்மாரை ஐரோப்பாவிற்கு கொண்டுவர பல்வேறு முன்னணி கழகங்கள் போட்டிபோட்டன. ரியல் மட்ரிட், செல்சியா, பார்சிலோனா என்பன அவற்றுள் சில. நெய்மாரை தங்களது அணியில் ஆட வைக்க பார்சிலோனாவை விட அதிக பணம் கொடுக்க ஏனைய கழகங்கள் தயாராக இருந்த போதும் நெய்மாரின் தனிப்பட்ட விருப்பு காரணமாக நெய்மாரின் கொள்வனவை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறது பார்சிலோனா.


2014 வரை சன்டோஸ் கழகத்துடன் ஒப்பந்தம் இருந்த நிலையில் நெய்மாரை அவசர அவசரமாக பார்சிலோன வாங்கியதற்கு பிரதானமாக இரண்டு காரணங்கள் . ஒன்று , வேறு ஏதாவது கழகம் நெய்மாரை வாங்கிய பின்னர் அவரது ஆட்டம் இன்னமும் மேம்பட்டால் இப்போது கொடுக்கும் தொகையை விட பத்து மடங்கு தொகை கொடுத்து நெய்மாரை வாங்க வேண்டி இருக்கும். இரண்டாவது மெஸ்ஸி காயமடைந்த அல்லது மெஸ்ஸியில் இடத்திற்கு வெற்றிடம் ஏற்பட்ட  கடந்த காலங்களில் பலத்த சேதங்களுக்கு உள்ளானது பார்சிலோனா ( உதாரணம் : சம்பியன்ஸ் லீக் போட்டிகள் ) . ஆகவே அந்த குறையை நிவர்த்தி செய்ய மெஸ்ஸியை ஒத்த ஒரு வீரர் பார்சிலோனாவுக்கு தேவைப்பட்டமை.


இப்போது அனைவர் மனதிலும் எழும் கேள்வி பார்சிலோனாவிற்கு நெய்மாரின் ஆட்டம் பொருத்தமாக இருக்குமா என்பதே. காரணம் பார்சிலோனாவின் டிக்கி டக்கா ஆட்ட முறையான‌து பந்தை பாஸ் செய்து ஆடுவதில் நிலைத்து இருக்கின்றது. ஆனால் நெய்மாரின் ஆட்டமுறையாது  பந்தை அதிகமாக "டிபிலிங் " (Dribbling) செய்வதில் இருக்கின்றது. இரண்டுமே ஒன்றிற்கு ஒன்று முரணானவையாக இருக்கின்றன. ஆக எப்படி நெய்மாரால் பார்சிலோனாவுடன் ஒத்துப்போக முடியும்? இங்கு தான் இருக்கிறது விடயமே , பெப் குவாரியோலாவால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த டிக்கி-டக்கா முறைமை டிட்டோ வில்னோவாவால் சற்று தளர்த்தப்பட்டிருக்கிறது. அதாவது மத்திய கள வீரர்கள் டிக்கி - டக்கா முறையில் இயங்க , முன்கள வீரர்கள் குறிப்பாக "விங்ஸ்கள்" (Wingers) "டிபிளிங்க்" செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆக இடது பக்கத்து விங்கரான நெய்மாருக்கு தனது ஆட்டத்தை ஆடுவதில்  ஒன்றும் பிரச்சினை இருக்கப்போவது கிடையாது என்பது என் வாதம்.

உலகின் தலை சிறந்த வீரரகளான மெஸ்ஸி மற்றும் நெய்மார் கை கோர்க்க போகும் அந்த முதல் போட்டியை எதிர்பார்த்து காத்துகிடக்கிறது உதைபந்தாட்ட உலகம்.




1.கிறிஸ்டியானோ ரொனால்டோ : ( நாடு : போத்துக்கல் , தற்போதைய கழகம் : ரியல் மட்ரிட் - ஸ்பெயின்) எத்தனை வீரர்கள் வாங்கப்படாலும் விற்கப்பட்டாலும் , இந்த ஆண்டின் மிகப்பெரிய வீரர் விற்பனையாகவும் , மிக பிரபலமான பரிவர்த்தனையாகவும் இருக்கப்போவது ரொனால்டோவின் கழக மற்றம் தான் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்றாக இருக்கும்.


ரியல் மட்ரிடின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோவை இழப்பதற்கு ரியல் மட்ரிட் விருப்பம் காட்டாத போதிலும் , கழக‌த்தில் தொடர்ந்து ஆடுவதற்கு கிறிஸ்டியானோ விருப்பம் காட்டாததால் வேறு வழியின்றி கிறிஸ்டியானொவை விற்கும் நிர்பந்தத்தில் இருக்கிறது ரியல் மட்ரிட். மட்ரிட்டுடனான ரொனால்டோவின் ஒப்பந்தம் 2015ம் ஆண்டுடன் நிறைவுக்கு வருகின்றது.  எனவே சமீபத்தில் அதனை புதுப்பிக்க மட்ரிட் நிர்வாகம் அணுகிய போது அதனை மறுத்த ரொனால்டோ , தனது ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னர் தான் மட்ரிட்டை விட்டு நீங்க போவதாக குறிப்பிட்டிருந்தார். எனவே ரொனால்டோவின் இந்த கூற்றானது மட்ரிட்டுடனான அவரது உறவு அவ்வளவு சுமூகமாக இல்லை என்பதையே காட்டுகின்றது.


அது தவிர ஸ்பெயினில் ரொனால்டோ மகிழ்ச்சியாக இல்லாததற்கு இன்னும் சில கார‌ணங்களும் சொல்லப்படுகின்றன, அதாவது ஸ்பெயினில் பார்சிலோலாவின் நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியை தாண்டி ரொனால்டோவால் பிரகாசிக்க முடியாமல் போனது கூட ரொனால்டோ ஸ்பெயினை விட்டு விலகிப் போவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மன்செஸ்டர் யுனைட்டட் கழகத்தில் இருக்கும் போது 2008இல் உலகின் தலை சிறந்த வீரர் என்ர விருதை வாங்கியதோடு சரி.. அதன் 2009இல் பின்னர் ஸ்பெயினுக்கு வந்தன பின்னர் சகல விருதுகளிலும் மெஸ்ஸிக்கு பின்னுக்கு வர முடிந்ததே ஒழிய மெஸ்ஸியை தோற்கடிக்க முடியவில்லை. இது குறித்து பல தடவை ஊடகங்களில் மறைமுகமாக தனது அங்கலாய்ப்பை கொட்டியிருந்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 


2011/2012 சம்பியன்ஸ் கிண்ணத்தின் சிறந்த வீரர் விருதை பார்சிலோனாவின் அன்ட்ரஸ் இனியஸ்டாவிடம் பறிகொடுத்த பின்னர் , தான் சந்தோசமாக இல்லை என்று பகிரங்கமாக ரொனால்டோ பேட்டி கொடுத்தமை நினைவிருக்கலாம். ஆக வேறு பிராந்திய போட்டிகளில் தன்னால் மீண்டும் பழைய மாதிரி சோபிக்க முடியும் என ரொனால்டோ நம்புகிறார் என கூட கொள்ள முடியும்.  அத்தோடு மட்ரிட்டின் பயிற்றுவிப்பாளர் ஜொஸ் மொரின்ஹோ இந்த பருவகாலத்துடன் செல்சியாவின் பயிற்றுவிப்பாளர் பதவியை ஏற்கிறார். இது மட்ரிட்டின்  அனேக நட்சத்திர வீரர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. எனவே ரொனால்டோ மட்ரிட்டிலிருந்து நீங்குவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.


2015 வரை ரொனால்டோவை கழகத்தில் வைத்திருந்தால் பின்னர் , ரொனால்டோவை இலவசமாகவே கொடுக்க வேண்டி வரும் என்பதனால் 120 மில்லியன் டாலர்கள் செலவு செய்து வாங்கிய ரொனால்டோவை நல்ல விலைக்கு விற்றுவிடவே எத்தனிகிறது மட்ரிட். ரொனால்டோவின் சந்தை விலை சுமார் 100 மில்லியன் டாலர்களாக இருக்கின்றது. விற்பதற்கு மட்ரிட் தயார், போவதற்கு ரொனால்டோ தயார், ஆனால் 100 மில்லியன் டாலர் கொடுத்து வாங்குவதற்கு எந்த கழகத்திடம் வல்லமை இருகின்றது? ரொனால்டோவின் முன்னாள் கழகமான மன்செஸ்டர் யுனைட்டட் ரொனால்டோவை மீண்டும் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகிறது , ஆனால் அந்த கழகத்தின் பட்ஜட் இந்தளவு தொகையை செலவு செய்ய இடம் கொடுக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும் மன்செஸ்டர் பக்கமே காற்று வீசுகிறது . எப்படி?


மன்செஸ்டர் யுனைட்டட் அணியின் புதிய விளம்பர அனுசரணையாள‌ர்களாக அமேரிக்காவின் பிரபல மோட்டார் கார் உற்பத்தி நிறுவனமான "செவரலேட்" (Chevrolet) நிறுவனம் இந்த பருவகாலத்திலிருந்து ஒப்பந்தமாகின்றது. தங்களது பெயர் பொறித்த விளையாட்டு அங்கியினை உலகின் தலை சிறந்த வீரர் ஒருவர் அணிந்து ஆடுவதில் ஆர்வம் காட்டும் அந் நிறுவனம் , கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கொள்வனவுக்கான நிதியினை வழங்க முன்வந்துள்ள‌தாக தெரிகின்றது. ஆக  கூடிய விரைவில் ஓல்ட் ட்ரான்ஸ்ஃபோர்டில் கிறிஸ்டியானோ ரொனால்டோவை மீண்டும் காணலாம் என்கிறது உதைபந்தாட்ட வட்டாரங்கள்.


டிஸ்கி : இந்த பதிவு "கேடயம்" சஞ்சிகைக்காக எழுதியது, உதைபந்தாட்ட வீரர்கள் பரிவர்த்தனை தொடர்பில் இன்னமும் சில முக்கிய வீரர்கள் தொடர்பில் எழுதவேண்டியுள்ளது.அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.


12 comments:

  1. அருமை அதிலும் // பார்சிலோனாவின் டிக்கி டக்கா ஆட்ட முறையான‌து பந்தை பாஸ் செய்து ஆடுவதில் நிலைத்து இருக்கின்றது. ஆனால் நெய்மாரின் ஆட்டமுறையாது பந்தை அதிகமாக "டிபிலிங் " (Dribbling) செய்வதில் இருக்கின்றது. இரண்டுமே ஒன்றிற்கு ஒன்று முரணானவையாக இருக்கின்றன. ஆக எப்படி நெய்மாரால் பார்சிலோனாவுடன் ஒத்துப்போக முடியும்? // மிக நன்றாக கூறினீர்கள். என்னைப் பொறுத்த இந்த transfer மிக பிந்தியது அடுத்த வருடம் பிரேசிலில் உலகக்கோப்பை போட்டி இடம்பெறவுள்ள நிலையில் நெய்மாரின் transfer Brazil அணிக்கு பாதகமான காரணியாகவே அமையும் Barcelona வின் ஆட்டத்தை ஒத்த ஆட்டமே தற்போது Spain அணி ஆடும் ஆட்டம் இது Brazil அணியின் attacking ஆட்டத்துக்கு மாறுபட்டது.

    இவற்றை விட Luis Suarez(Liverpool), Zlatan Ibrahimović (PSG) என்பனவும் முக்கியமானவையாக விளங்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஏன் இந்த பந்தியை விட்டுவிட்டீர்கள்?

      ////இங்கு தான் இருக்கிறது விடயமே , பெப் குவாரியோலாவால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த டிக்கி-டக்கா முறைமை டிட்டோ வில்னோவாவால் சற்று தளர்த்தப்பட்டிருக்கிறது. அதாவது மத்திய கள வீரர்கள் டிக்கி - டக்கா முறையில் இயங்க , முன்கள வீரர்கள் குறிப்பாக "விங்ஸ்கள்" (Wingers) "டிபிளிங்க்" செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆக இடது பக்கத்து விங்கரான நெய்மாருக்கு தனது ஆட்டத்தை ஆடுவதில் ஒன்றும் பிரச்சினை இருக்கப்போவது கிடையாது என்பது என் வாதம்.
      /////

      ஆகவே நெய்மாரின் ஆட்டத்தில் பாதகமான மாற்றம் எதனையும் பார்சிலோனா செய்துவிடப்போவது இல்லை. மாறாக ஐரோப்பாவில் ஆடுவதால் நெய்மாரால் சிறந்த அனுபவத்தை பெற்று உலக கிண்ணத்தில் சிறப்பாக ஆடுவதற்கு இந்த கொள்வனவு உதவி செய்யும்.

      ஸிலாற்றன் பற்றி எழுத யோசித்தேன், ஆனால் அவரது நிலை இரண்டும் கெட்டானாக இருக்கிறது. ரூனியில் நிலையில் கூட மாற்றம் வரலாம் .அப்புறம் சுவாரிஸ்... ஹும்... மேற் சொன்ன வீரரளுடன் ஒன்றாக எழுதும் அளவுக்கு அவர் இன்னும் வளரவில்லை என்பதே என் கருத்து.

      Delete
  2. Romario, Rivaldo, Ronaldo , Ronaldinho வை தொடர்ந்து ஒருவேளை Neimar க்கும் Ballon d'Or விருதினை Barcelona வாங்கிக் கொடுக்குமோ தெரியாது.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் அது நடக்கும் என்ற நம்பிக்கையில் நானும் நெய்மாரும்...

      Delete
    2. நிச்சயம் அது நடக்காது என்ற நம்பிக்கையில் நானும் ஒஸிலும்..

      Delete
    3. இப்புடியே வருச கணக்கா காத்து மட்டுமே கெடக்க வேன்டியது தான், ரொனால்டோன்னு ஒரு லுச்சா பயலு கூட கத்து கெடந்தீக , அடுத்தடுத்து நாலு வருசம் மெஸ்ஸி ஆப்பு அடிசான், போதாத குறைக்கு இப்போ நெய்மார் வேற... காத்து வாங்கிக்கிட்டே காத்து கிடக்க வேண்டியது தான்.

      Delete
  3. டேவிட் வியா, பப்ரிகாஸ் போன்ற 'உச்சா' நட்சத்திரங்களுடன் அண்ணன் ரொனால்டோவின் பெயரை அருகில் போட்டதை மிக மிக மிக.... வன்மையாகக் கண்டிக்கிறேன்!


    அப்புறம் இந்த நெய்மார் சங்கதி.. பார்சிலோனாவில் சேர்ந்த செய்தி கேள்விப்பட்டவுடனேயே "அப்பாடி நம்ம டீம் வாங்கல.. நம்ம தலை தப்பிச்சுது" போலான கமெண்டுகளை மியூனிச் போன்ற கிளப் ரசிகர்கள் இணையமெங்கும் வாரித் தெளித்ததைக் காண முடிந்துள்ளது. அண்ணாரும் ரொபினியோ போல இல்லாத சரக்குக்கு overrate பண்ணப்பட்ட லிஸ்டில் சேர்ந்து கொள்ள எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்(தற்போதைய முழு யூத் பிரேசிலிலுமே என்னை மிகவும் கவர்ந்த வீரர் ஒஸ்கார் மட்டுமே என்பதை இங்கே குறிப்பிட்டுக் கொள்கிறேன்.)

    //மெஸ்ஸி மற்றும் நெய்மார் கை கோர்க்க போகும் அந்த முதல் போட்டியை எதிர்பார்த்து காத்துகிடக்கிறது உதைபந்தாட்ட உலகம்.//
    அடப்போங்கப்பா.. இதையேதான் வியாவுக்கும் சொன்னீங்க.. :)

    //மெஸ்ஸியில் இடத்திற்கு வெற்றிடம் ஏற்பட்ட கடந்த காலங்களில் பலத்த சேதங்களுக்கு உள்ளானது பார்சிலோனா ( உதாரணம் : சம்பியன்ஸ் லீக் போட்டிகள் )//
    மெஸி விளையாடிய ஒரு போட்டியில்தான் 4-0என அடிவாங்கியதாக ஞாபகம்..

    ReplyDelete
    Replies
    1. இந்த வரி தவிர மிச்ச அனைத்துமே வயித்தெரிச்சல் வகையறா என்பதால் அதற்கு பதில் போட வேண்டிய அவசியமே எனக்கு கிடையாது. எல்லாம் ச்சீச்சீ .. இந்த பழம் புழிக்கும் என்ற கதை தான். பார்சிலோனாவுக்கு முன்னரே போய் நெய்மாரின் வீட்டில் மட்ரிட் குடும்பம் தவம் கிடந்ததும், பார்சிலோனா கொடுத்த தொகைக்கு மேலாக கொடுக்க முயன்று மூக்குடைபட்டதும் நெறையவே இணையமெங்கும் தெளித்து அல்ல, வெள்ளமாகவே கிடக்கிறது பார்க்கவில்லையா? ரொபின்ஹோவை எபோதும் நான் ஒரு சிறந்த வீரர் என்று நெய்மார் ரேஞ்சுக்கு ஏற்றுக்கொண்டது கிடையாது, அது போக நெய்மார் ரேஞ்சுக்கு ரொபின்ஹோ பேசப்படவில்லை.

      அப்புறம் சமீபத்தைய வியாவை எனக்கு சுத்தமாக மட்டுமல்ல அசுத்தமாகவும் பிடிக்காது, ஆகவே வியா பற்றி எப்போது நான் ஆகா ஓகோ என்று புகழ்ந்தது கிடையாது.

      அந்த போட்டியில் ஆடும் போதே மெஸ்ஸிக்கு கால் உபாதை என்ற செய்தி அறியீரோ? லாலீகாவை துரத்தினார்கள், ப்ச்.. சம்பியன்ஸ் லீக் ப்ச்... கடைசி கோபா டில் ரே அட அதுவும் ப்ச்... அட யாருப்பா அது 7ம் நம்பர் ஜேர்சி போட்ட மட்ரிட் பயலுவளா கெளம்புங்க காத்து வரட்டும்..

      Delete
  4. பப்ரிகாஸ் ட்ரான்ஸ்ஃபர் ஆகுறதுல்லாம் ஒரு மேட்டரா??
    கவானி, லெவன்டோவ்ஸ்கி, இஸ்கோ, அலோன்சோ, மொட்றிக், டி மாரியா, ஹிகெய்ன், கெரத் பேல், ஃபல்காவோ, ட்ஸே்கோ இப்படி எவ்வளவோ "நல்ல" பிளேயர்ஸ் ஜம்ப் பண்ணுறதுக்கு காத்துக்கிட்டிருக்காங்க..

    பார்சிலோனா ஃபேன் தான்.. அதுக்காக இப்படியா மத்தவங்களை 'உலகமே காத்துக்கிடிருக்கும் உச்ச நட்சத்திரம்'னு சொல்லி ஏமாத்துறது? :P

    ReplyDelete
    Replies
    1. ஃபப்ரிகாஸ் பார்சிலோனாவில் தான் ஒன்னுக்குமே உதவாத பயல்.. ஆனால் உண்மையில் அவன் ஒரு சிறந்த வீரன். மேலே நீங்க சொன்னதிலே அனேக ட்ரான்ஸ்பர்ஸ் நடக்க வாய்ப்பு குறைவு , இப்போதைக்கு வெறும் வதந்தியே. லவன்டொஸ்கி , ஃபல்காவோ நல்ல பிளேயர்ஸ்.. யாருப்பா து டீ மரியா , ஹிகைன் , மொட்ரிச்?

      Delete
  5. இந்த 21 வயதில் Neimar அடித்த கோல்கள் அதே வயதில் Messi,C.Ronaldo அடித்த மொத்த கோல்களை விட கிட்டத்தட்ட 2 மடங்கு.
    நெய்மரை விட சுமாரான லுக்காஸ் மோரா, ஒஸ்கர்,பிலிப் கொண்டினோ எல்லாம் ஐரோப்பாவில் சிறப்பாக செயற்படும்போது எதுவும் நடக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. நெய்மார் திறமையான வீரர் என்பது சரி தான்.. ஆனால் இன்னொன்றும் இங்கே கவனிக்க வேண்டும். மெஸ்ஸி ரொனால்டோ ஆகியோர் தங்களது 21வது வயதுகளில் ஐரோப்பிய லீக்குகளில் ஆடிக்கொண்டிருந்தார்கள். பிரேஸில் லீக்கை விட ஐரோப்பிய லீக்குகள் கடினமானது.

      ஆனாலும் ஐரோப்பாவிலும் நெய்மார் நிச்சயம் சாதிப்பார்.

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...