உதைபந்து

Monday, June 3, 2013

பிரகாசிக்குமா இந்த புதிய நட்சத்திரம்?



நெய்மார்.... உலகின் உதைபந்தாட்ட ரசிகர்கள் மற்றும் அவதானிகளின் வாய்களில் இப்போதெல்லாம் அடிக்கடி உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பெயர் இது தான். 21 வயதேயாகும் இந்த பிரேஸில் நட்சத்திரம் , இந்தளவுக்கு ஊடகங்களின் பேசுபொருளாக ஆகியிருப்பதில் காரணங்கள் ஏராளமாக கொட்டியிருக்கின்றன.

தனது 17வது வயதில் சர்வதேச போட்டிகளை ஆட ஆரம்பித்ததிலிருந்து உலக உதைபந்தாட்ட அவதானிகளின் பார்வை முழுதும் நெய்மார் மீது திரும்ப தொடங்கியது. பிரேஸிலுக்காகவும் , பிரேஸிலின் பிராந்திய கழகமான "சன்டொஸ்" அணிக்காகவும் நெய்மார் ஆடிக்கொண்டிருந்த காலப்பகுதிகளில் , உதைபந்தாட்ட உலகின் ஜாம்பவான்களான பீலே, ரொமாரியோ, ரொனால்டினோ உட்பட பலராலும் "உலகின் தலை சிறந்த வீரர்" என்று பாராட்டு பெற்றவர் நெய்மார். லாவகமான ஆட்டம் , வேகம் , தொலைநோக்கு , கோல் போடும் சாமர்த்தியம் , ஆட்டத்தில் அழகு போன்ற காரணங்களால் "ஒரு நாயகன் உதயமாகிறான்" என்ற ரீதியில் உதைபந்தாட்டத்தின் அனைத்து தரப்பாலும் பாராட்டு பெற்றவர்உலகின் சிறந்த வீரர் நெய்மாரா? மெஸ்ஸியா? என்று உதைபந்தாட்ட ஜாம்பவான்களான மரடோனா மற்றும் பீலே இடையில் ஒரு கருத்துப் போர் நடந்தது பலருக்கு நினைவிருக்கலாம்.


இந்த நிலையில் கடந்த 10 வருடங்களாக ஆடிக்கொண்டிருந்த "சன்டொஸ்" அணியிலிருந்து , இந்த பருவகால வீரர்கள் பரிவர்த்தனையின் போது ஸ்பெயினின் பார்சிலோனா அணிக்கு ஒப்பந்தமாகியிருக்கிறார் நெய்மார். இந்த பருவகாலத்தில்  உலகின்  தலைசிறந்த பலர் வீரர்கள் தங்களது கழகங்களிலிருந்து வேறு கழகங்களுக்கு மாற இருக்கின்ற போதும், நெய்மாரின் கழக மாற்றம் அதி முக்கியத்துவம் பெறுகின்றமைக்கான  காரணம் யாதெனில் , உலக உதைபந்தாட்ட ஜாம்பவான்களால் " எதிர் காலத்தில் உதைபந்தாட்ட வரலாற்றில் பல சாதனைகளை தனக்கென தக்கவைக்கபோகும் வீரர்" என்று புகழாரம் சூட்டப்பட்ட இந்த வீரரின் ஐரோப்பிய பிரவேசம் தான்.


நெய்மாரின் ஐரோப்பிய பிரவேசத்துக்கும் , அவரின் புகழுக்கும் என்ன சம்மந்தம் என்கிறீர்களா? காரணம் இல்லாமல் இல்லை. நெய்மாரால் ஐரோப்பாவில் பிரகாசிக்க முடியாது என்று அவர் மீது குற்றச்சாட்டினை முன்வைப்போரது முக்கிய குற்றச்சாட்டு யாதெனில் , நெய்மார் இதுவரை ஆடிவந்த "பிரேஸில் பிராந்திய போட்டிகளை" விட ஐரோப்பாவின் பிராந்திய போட்டிகள் கடினமானவை, ஐரோப்பாவின் பின்கள வீரர்களோடு ( Defenders ) போட்டி போட்டி கோல் அடிக்க நெய்மாரால் முடியாது என்பதாகும். அவர்கள் கூற்றில் உண்மை இல்லாமலும் இல்லை , பிரேஸில் பிராந்திய போட்டிகளை விட ஐரோப்பாவின் பிராந்திய போட்டிகள் இறுக்கமானவை, கடினமானவை.


ஆனால் என்னை பொறுத்தவரை இந்த இறுக்கமான , கடினமான ஐரோப்பிய சவால்களை எதிர்கொள்வதற்குரிய தகமைகளை நெய்மார் கொண்டிருக்கிறார் என்பது தான். அது போக ஐரோப்பிய பிராந்திய "பின்கள வீரர்களோடு" ஒப்பிட்டு பார்க்க முடியாவிட்டாலும் கூட பிரேஸில் பிராந்திய போட்டிகளில் ஆடும் “Fluminesse Football Club, Sao Paulo FC, Flamengo , SC Corinthians Paulista “ ஆகிய கழகங்களில் சவாலான "பின்கள வீரர்கள் " இருக்கிறார்கள். அவர்களையும் நெய்மார் எதிர்கொண்டுதான் இருக்கிறார். அத்தோடு ஐரோப்பாவில் மிகப்பெரும் சாதனைகளை செய்த பிரேஸிலின் "ரிவால்டோ , ரொமாரியோ , ரொனால்டினொ " ஆகியோரும் ஆரம்பத்தில் பிரேஸிலின் பிராந்திய போட்டிகளில் ஆடியவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


அத்தோடு பிரேஸில் தேசிய அணிக்காக நெய்மார் ஆடிய ஆட்டங்களில்நெய்மாரால் பிரேஸில் பிராந்தியத்தில் மட்டுமல்ல சர்வதேச தரத்திலும் சிறப்பாக ஆட முடியும் என்று புரிந்துகொள்ள முடியும்.


அது போக நெய்மாரால் பார்சிலோனாவில் சோபிக்க முடியாது, பார்சிலோனாவின் கடந்த கால முன்கள வீரர்களது ஒப்பந்தங்களெல்லாம் தோல்வியிலேயே முடிவடைந்திருக்கிறது என்று இப்ரஹிமோவிச், டேவிட் வியா ஆகியோரது ஒப்பந்தங்களை சுட்டிக்காட்டி சிலர் செய்திகள் வெளியிட்டாலும் , பார்சிலோனாவின் பிரேஸில் வீரர்களது ஒப்பந்தங்கள் அனைத்தும் கடந்த காலங்களில் வெற்றிகரமாகவே இருந்திருக்கின்றது என்பதற்கு "ரிவால்டோ, ரொமாரியோ, ரொனால்டினோ " ஆகியோரே சாட்சி.



நெய்மாரின் அந்த தகுதி காரணமாகவே உலகின் தலை சிறந்த கழகங்களான பார்சிலோனா, ரியல் மட்ரிட் , பயர்ன் முனீச் , செல்சியா ஆகிய கழகங்கள் நெய்மாரின் பின்னால் வரிசை கட்டி நின்றன. ஒரு வீரரின் ஆளுமை + திறமை குறித்த உலகின் முன்னணி கழகங்கள் நான்கின் மதிப்பீடுகளும் தவறாகி போக வாய்ப்பில்லை அல்லவா? ஆக ஐரோப்பாவில் ஆடுவதற்குரிய அனைத்து தகமைகளையும் நெய்மார் கொண்டிருக்கிறார் என்பது 100% உறுதி. ஆனால் இப்போதுள்ள மில்லியன் டாலர் கேள்வி என்னவென்றால் பார்சிலோனாவின் ஆட்டமுறையுடன்  நெய்மாரால் ஒத்துப்போக முடியுமா? அல்லது நெய்மாருக்கு ஏற்றால் போல் பார்சிலோனா தனது ஆட்ட முறையை மாற்றியமைக்குமா என்பது தான்.


என்னைக்கேட்டால் இந்த இரண்டாம் கேள்விக்கான பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். எந்த ஒரு வீரருக்காகவும் தனக்கு வெற்றிகளையும் புகழையும் தேடித்தந்த டிக்கி-டகா (Tiki-Taka)   ஆட்டமுறையை மாற்றிக்கொள்ள பார்சிலோனா சம்மதிக்காதுஇங்குதான் நெய்மாரின் ஆட்டமுறை முரண்படுகிறது. நெய்மாரின் ஆட்டமுறையான "டிபிளிங் (Dribbling ) + வேகமும் " , பந்தை டிரிபிள் செய்யாமல் பாஸ் செய்து ஆடும் முறையான பார்சினோனாவின் டிக்கி-டாகாவும் (Tiki-Taka)  ஒன்றுக்கு ஒன்று முரணானவை.


இப்படியிருக்க நெய்மாரின் இந்த பார்சிலோனா பிரவேசமானது நெய்மாரின் திறமைக்கும் சரி, பார்சிலோனாவின் வெற்றிகளுக்கும் சரி எப்படி கைகொடுக்க போகிறது என்பதே விமர்சகர்களின் கேள்வியாக இருக்கின்றது. இங்கு தான் பார்சிலோனவின் 4-3-3 Formation கவனிக்கப்பட வேண்டியதொன்றாகிறது. . இந்த Formation கீழ் இடது பக்க விங்கர்கள் (Lest Wingers ) "ட்ரிபிள் செய்து ஆட அனுமதிக்கப்படுகிறார்கள்.


பார்சிலோனா டிக்கி-டாக முறையில் ஆடிவந்தாலும் , "டிட்டோ விலனோவா" பார்சிலோனாவின் முகாமையாளர் பதவியை ஏற்றதன் பின்னர் டிக்கி-டக்கா முறைமையில் சிறிது தளர்த்தல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது மத்திய கள வரிசை வீரர்கள் டிக்கி-டகா முறைமையில் பந்துகளை பரிமாறிக்கொள்ள , முன்வரிசை வீரர்கள் பந்த "ட்ரிபிள் " செய்வதற்கு அனுமதிக்கப்படுகிறது. கடந்த பருவகாலத்தின் லீக் போட்டிகளின் போது பார்சிலோனாவின் இடது பக்க “Winger” ஆக செயற்பட்ட "கிறிஸ்டியன் டெயோவின்" ஆட்டத்தை பார்த்திருந்தால் இது புரிந்திருக்கும். கிறிஸ்டியன் டெயோவின் இடத்துக்கு தான் நெய்மார் பிரதியீடு செய்யப்பட போகிறார். ஆக நெய்மார் தனது பாணியிலான ஆட்டத்தை தொடர்வதில் எந்த தடங்கல்களும் இருக்கப்போவது இல்லை.


ஆனாலும் "சன்டொசில்" ஆடும் போது நெய்மார் மேற்கொண்ட பூரணமான Dribbling மற்றும் தனிநபர் ஆதிக்க ஆட்டத்தை அப்படியே அப்பட்டமாக ஆடுவதென்பது பார்சிலோனாவில் நெய்மாருக்கு முடியாது போகும். காரணம் உலக தரம்வாய்ந்த வீரர்கள் உள்ள பார்சிலோனாவில் , பந்தை வீரர்களோடு Pass செய்து ஆடுவது கட்டாயமாக இருக்கும் , இரண்டாவது பிரேஸில் பிராந்திய பின்கள வீரர்களோடு ஒப்பிடுகையில் ஸ்பெயின் பிராந்திய கழகங்களின் பின்கள வீரர்கள் சற்று கடுமையானவர்கள். ஆனாலும் ஐரோப்பாவின் ஆட்டமுறைமை நெய்மாருக்கு பழக்கப்பட்ட பின்பு எத்தகைய பின்கள கட்டுக்கோப்பும் நெய்மாரால் உடைக்கப்படலாம்.



நெய்மார் + மெஸ்ஸி என்ற கூட்டணி நிச்சயம் எதிர் அணிகளுக்கு சிம்மசொப்பனமாய் இருக்கும் என்பதில் ஐயமேதும் இல்லை. இந்த இருவருமே உச்சக்கட்டமான திறமைகள் + வேகம் + தொலைநோக்கு என்பவற்றை ஒருங்கே கொண்டவர்கள். ஆனாலும் நெய்மார் பார்சிலோனாவின் ஆட்டமுறையோடு ஒத்துப்போதல் என்பது மிகவும் அவசியம். எது எப்படியிருப்பினும் எம்மாதிரியான ஆட்டமுறையோடும், எம் மாதிரியான அணிகளோடும் ஒத்துப்போய் ஆடுகின்ற திறமையான வீரர் நெய்மார் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.

ஆனாலும் இப்போது வெறும் 21 வயதேயான நெய்மார் பார்சிலொனாவின் அதிநுட்பமான ஆட்ட நுணுக்கத்தை உள்வாங்க சிறிது காலம் எடுக்கலாம். எதிர் அணிகளின் துரதிஷ்டம் உச்சத்தில் இருக்கும் பட்சத்தில் பார்சிலோனாவுக்காக ஓரிரு போட்டிகள் ஆடியவுடனேயே   நெய்மாரின் கோல் வேட்டை ஆரம்பமாகலாம். சில வேளைகளில் அதற்கு ஒரு பருவகாலம் கூட தேவைப்படலாம். பீலேவும் ஏனைய உதைபந்தாட்ட ஜாம்பவான்களும் கூறியதை போல , உலகின் தலைசிறந்த வீரராக பரிமளிப்பதற்கு 21 வயதேயான நெய்மாருக்கு நிச்சயம் அனுபவம் அவசியமாகிறது. அதுவும் ஐரோப்பிய பிரவேசமும் , அதன் மூலம் ஐரோப்பிய உதைபந்தாட்ட சூழல் அளிக்கப்போகும் பயிற்சியுமே விருதுகளின் பார்வையை நெய்மாரை நோக்கி திருப்பும்  உந்துசக்திகளாக அமையும் . ஆக அந்த சூழலானது பார்சிலோனா மூலமாக நெய்மாருக்கு கிடைத்துள்ளது.

 எது எவ்வாறு இருப்பினும் , ஃபீஃபாவின் விருதுகள் பலவற்றை தன்னகத்தே கொள்ளப்போகும் ஒரு நட்சத்திரம் இப்போது ஐரோப்பாவிற்குள் நுழைந்திருக்கிறது. ரொனால்டினோவும், ரிவால்டோவும் உதைபந்தாட்ட உயரிய விருதான Ballon d'Or விருதினை பெறுவதற்கு தளம் அமைத்து கொடுத்த பார்சிலோனா, நெய்மாருக்கும் அந்த களத்தை அமைத்து கொடுக்கும் என நம்பலாம்.

"கேடயம்" சஞ்சிகைக்காக எழுதியது...




6 comments:

  1. ஒரு டீம்ல ஒரு கத்தி இருந்தா தான் நல்லது,,முக்கியமா உதைபந்தில் ;)எனக்கென்னமோ இது சரியா படல

    ReplyDelete
    Replies
    1. ஒரு உறையில ரெண்டு கத்தி இருக்க கூடாது என்பது பழமொழி தான், ஆனால் ரெண்டு கத்தி ஈருக்கிறாப்ல ஒரு உறை வச்சிருக்கிறது தான் அவசியம். அந்த உறை தான் பார்சிலோனா, அது போக ஒரு கத்தி வெட்ட முடியாமல் போகும் போது மற்ற கத்தியை யூஸ் பண்ணி கொளலாம். ( மெஸ்ஸி உபாதைக்கு உள்ளாகி இருந்த போது பார்ஸிலோனா திண்டாடியதை பார்த்தவன் நான் ) சோ... பார்சிலோனாவுக்கு அவசியமான ஒரு கத்தி தான் இது.

      ஒரு கட்டத்தில் ரியல் ம‌ட்ரிட்டில் ஸிடேன், பெக்காம், ரொனால்டோ , ரொபார்ட்டொ கார்லோஸ் என்று நான்கு கத்திகளே ஒன்று சேர இருந்திருக்கின்றன. உதைபந்தில் ஒரு உறைக்குள் இருக்கும் நிறைய கத்திகள் எப்போதும் பிரயோசனம் தான். ஆனால் என்ன அந்த கத்திகளை சரியான முறையில் கையாளும் உத்தி தெரிந்த வித்தைக்காரன் , அந்த கத்திகளை கையாள வேண்டும் என்பது இங்கு மிக முக்கியம்.

      Delete
    2. //ஸிடேன், பெக்காம், ரொனால்டோ , ரொபார்ட்டொ கார்லோஸ் என்று நான்கு கத்திகளே ஒன்று சேர இருந்திருக்கின்றன//
      இது போன்ற பெரிய பெரிய அருவாள்களை, சின்ன சின்ன கத்திகளோடு கம்ப்பேர் செய்தல் தவறு :)

      Delete
    3. எலேய்... இந்த மூணு பேருமே ஒன்னா சேந்து சாதிச்ச சாதைனைய கூட்டி பாத்தா கூட மெஸ்ஸி கைவசம் வச்சிருக்கிற சாதனையில் பாதி கூட வராது. ஏதோ ஒரு பேச்சுக்காவது சொல்லுவோம்ன்னு பாத்தா ஏன் சார் நீங்களாவே பொல்லை குடுத்து அடி வாங்குறீக?

      Delete
  2. பார்சிலோனாவின் டிக்கி டாக்கா முறையைப் பார்த்து அலுத்து செத்துப் போய்க்கொண்டிருக்கும், இதர அணி ரசிகர்களுக்கு நெய்மாரின் வரவு ஒரு சின்ன எனர்ஜியானாகவே இருக்கப்போகிறது..
    நெய்மாரின் முதல் சீசன் எந்தளவு பிரகாசமாக இருக்கப்போகின்றது என்பது மெஸி எந்தளவு இடம் கொடுத்து ஒத்துழைக்கிறார் என்பதிலும் தங்கியிருக்கப்போகிறது..
    அப்புறம் உங்க கோல்கீப்பிங் தேவைகள் என்னாச்சு?
    # ஆவலுடன் காத்திருக்கும் RM விசிறி..

    ReplyDelete
    Replies
    1. எலேய்.. நீங்க அலுத்துக்கிறீங்க என்றதுக்காக மத்த டீம்களோட கண்ணுல வெரல‌ விட்டு ஆட்டுற எங்களோட ஆட்டமுறைமைய மாத்த முடியாது. நீங்க எல்லாம் என்ஜாய் பண்றதுக்கு நாங்க என்ன சர்கஸ்சா நடத்துறோம்? எந்த வீரரோடும் இடம் கொடுத்து ஆடுபவர் மெஸ்ஸி.. சோ , கிட்டத்தட்ட ஒரே திறமைய உடைய இருவரும் இணைந்து சிறப்பாக செயல்படுவார்கள் என்பதே என் கருத்தும், உலகின் கருத்தும். அது போக கடந்த சீசனில் மெஸ்ஸி மிகவும் சந்தோசமாக ஆடியது இடது விங்கரான டெயோ கூட.. காரணம் இடது பக்கத்திலிருந்து வருக் அஸிட்டுகளை பயன்படுத்தி மெஸ்ஸி கோல் அடித்ததே அதிகம். ஆக அந்த இடத்திற்கு வரப்போகும் நெய்மார் + மெஸ்ஸி = டெட்லி கூட்டணி.

      விக்டர் வால்டஸ் அடுத்த சீஸன் வரை பார்சிலோனாவில் ஆடுவதாஅ தெரிவித்திருக்கிறார். அது தான் எனக்கு பெரிய கவலை. ஆனாலும் அந்த பணத்திற்கு இன்னுமொரு 'டிஃபண்டரை" பார்சிலோனா வாங்க முடியும் என்பதால் ஆசுவாசமாக இருக்கிறேன்.

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...