எனக்கு இந்த அடித்தட்டு மக்களின் புகையிரத பயணங்கள் எப்போதும் ஆச்சரியமானவையும் அருவருப்பானவையும் கூடவே ஆத்திரமூட்டுவனவாயும் அமைவதுண்டு. மிதிபலகையில் கூட்டம் கூட்டமாக யாழ்ப்பாணத்தின் திராட்சை தோட்டத்து குலைகள் போல் தொங்கும் ஆண்களும், கையை தூக்கி பிடிமானத்துக்கு மேலே உள்ள கம்பியை பற்றிய உயரமான ஒருவனின் வியர்த்து சிதம்பிய அக்குளில் மாட்டுண்டு , தனது நிறுத்தம் வரும்வரை ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகத்தின் கதாபாத்திரங்களை விட துன்பப்படும் ஒரு குள்ளமானவன், தமது பின்பக்கத்தை குறிவைத்தே தமது முன்பக்கத்தை நகர்த்தும் சில விச ஜந்துக்களிடமிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள விதம் விதமான உத்திகளை கையாளும் புகையிரதத்திற்கு புதிய பெண்களும், மார்பில் குவியும் கண்களும் , உடலெங்கும் அங்குலம் அங்குலமாக உரசும் மிருகங்களின் கைகளும் இன்ன பிற உறுப்புகளும் , புகையிரதம் கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்தே பிரயாணப்பட்டு பழகிப்போனதால் அது பற்றி சட்டையே செய்யாமல் வீட்டிலிருக்கும் பிள்ளை சாப்பிட்டதோ இல்லையோ என்று அங்கலாய்க்கும் பெண்களும், குவிந்திருக்கும் கூட்டத்தினிடையே கிடைக்கும் இடைவெளியிலெல்லாம் காதலியின் அந்தரங்கம் தடவுவதிலேயே குறியாக இருக்கும் கலாபக்காதலர்களுமாக , எனக்கும் இந்த அடித்தட்டு மக்களின் புகையிரத பிரயாணங்கள் எப்போதும் ஆச்சரியமானவையும், அருவருப்பானவையும் ஆத்திரமூட்டுவனவாயும் அமைந்துவிடுவதுண்டு.
அம் மாதிரியான ஒரு அவல பிரயாணத்தை நான் இப்போது மேற்கொண்டிருக்கவில்லை. உயர்குடியினரும், அரசியல்வாதிகளும் இன்னும் ஒரு நாட்டை ஆளுவதற்கு ஆவனை செய்வோரும் பிரயாணப்படும் முதல் வகுப்பில் அதுவும் அதி விடேச கவன வகுப்பில் தான் பயணம் செய்திருந்தேன். என்னோடு பயணம் செய்த அனைவரும் ஆளும் வர்க்கம் என்றபடியால் அவர்களுக்கு மிதிபலகையில் தொங்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ரயிலில் எனக்கு பக்கத்து அறையில் இருந்தவர் பாலின் நெருங்கிய சகாவான நித்தோன். பாலின்
அத்தனை முடிவுகளிலும் இவனின் குறைந்த பட்ச தலையீடாவது இருக்கும்.
"இந்த கீழ்த்தட்டு வர்க்கம் மிதிபலகையில் தொங்குவது நம்மை போன்ற மேல்குடி மக்கள் சொகுசு பயணம் செய்யத்தானே...."
சொல்லிவிட்டு பெரிதாக சிரித்தான். அவன் சொன்னதில் ஒரு விடயத்தில் ஒத்தும் இன்னொரு இடத்தில் வேறுபட்டும் நிற்கிறேன். இந்த கீழ்த்தட்டு மக்கள் மிதிபலகையில் தொங்குவதால் தான் இவனால் இப்போது இங்கே சாவகாசமாக அமர்ந்து ரெமி மாட்டின் அடிக்க முடிகிறது, வாஸ்தவம் தான். எனக்கு எதில் உடன்பாடு இல்லையென்றால் அவன் மேல்குடி மக்கள் என்று என்னையும் சேர்த்து "நாம்" என்று விளித்தது தான்.
நான் ஒன்றும் மேல்குடிமகன் கிடையாது , நானும் யாழ்ப்பாணத்து திராட்சை குலைகளில் ஒருவன் தான், அக்குள்களில் புதைந்து புதைந்து பழகிப்போனதால் வியர்வையை வைத்தே அவன் அன்று என்ன சாப்பிட்டான் என்று சொல்லுமளவுக்கு இந்த பெருநகர புகையிரதங்களால பயிற்றப்பட்டுவிட்ட ஒரு அடிமட்ட ஜீவராசி.
எனது கனவு வேலையான காவல் துறை வேலை கூட எனது உயரத்தை காரணம் காட்டி கிடைக்காமல் போனபோது கூட நான் இந்தளவுக்கு என்னை நொந்துகொண்டது கிடையாது. நான் இன்னும் கொஞ்சம் உயரமாக வளர்ந்திருக்க வேண்டுமென்று நான் கவலைப்படும் ஒரே இடம் இந்த புகையிரத பயணம் தான்.
இப்போது நான் பிரயாணிக்கும் இந்த முதல்வகுப்பு அனுமதி கூட பால் எனக்கு வழங்கியது தான். என்னால் அவனுக்கு வேலை ஆகவேண்டியிருப்பதால் இந்த விசேட ஏற்பாடு. ஒரு வேளை நான் அவனுக்காக செய்யப்போகும் இந்த வேலை வெற்றியளிக்காமல் போனாலோ , இல்லை அவனுக்கு எனது வேலையில் திருப்தி இல்லாமல் போனாலோ எனக்கு மீண்டும் இதே முதல் வகுப்பில் சீட்டு தந்து அனுப்புவானா என்பது கேள்வி!!. அதைவிட, ஒரு வேளை அப்படி ஏதும் நடந்தால் என்னை திரும்ப அனுப்புவானா என்பதே சந்தேகம் தான் . அப்படியிருக்க திரும்பிவரும் போது முதல் வகுப்பு கிடைக்குமா இல்லையா என என்னை நானே குழப்பிக்கொள்வது முட்டாள்த்தனம்.
இந்த முதல் வகுப்பின் பெட்டிகளில் நான் இன்னொன்றையும் கவனித்தேன் . அந்த பெட்டிகளில் பயணம் செய்யும் யாருக்கும் அக்குளில் வியர்க்கவில்லை. அந்த பெட்டியில் குளிரேற்றி வசதி செய்யப்பட்டிருப்பதுகூட ஒரு காரணமாக இருக்கலாம்.
ஸ்லீவ்லெஸ் அணிந்து எங்களுக்கு சேவகம் செய்துகொண்டிருந்த அத்தனை பெண்களும் அக்குளை மழித்திருந்தார்கள் , கூடவே அங்கே ஏதேதோ வாசனைத்திரவியம் அப்பியிருந்தார்கள்.
நான் இதை கவனித்ததை கண்டுகொண்டோ என்னமோ " அக்குள் மழித்ததற்கு மட்டும் ஐந்நூறு ரூபா டிப்ஸ் வைத்தேன்" சொன்னபடியே இடதுபக்க அக்குளை தூக்கி காட்டினான் நித்தோன். வலது கையில் தளம்பி சிந்தும் நிலையில் ரெமி மாட்டின் இருந்தது. ஸ்லீவ்லெஸ் அணிந்த அந்த சேவக பெண்களின் அக்குளின் அளவுக்கு சுவாரசியமாக இல்லாத படியால் நித்தோனின் இடதுகையின் மேல் இருந்த பார்வையை ஒரு செக்கண்டு முடியும் முன்னரே வேறுபக்கம் திருப்பிக்கொண்டேன். ஆனாலும் அவனோ வாயில் வைத்து உறுஞ்சிக்கொண்டிருக்கும் தனது ரெமிமாட்டின் தீரும் வரைக்கும் உயர்த்திய தனது இடது கையை இறக்கவே இல்லை. சுமார் பத்து செக்கண்டுகள் நான் வேறு பக்கம் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதாக இருந்தது. இரண்டு கடவாயிலும் ஒழுக ஒழுக ரெமிமாடின் குடித்த அவன் இப்போது கடித்துக்கொள்ள ஆலிவ் காய்களையும் , பிரேஸில் நட்ஸையும் தேடுகிறான்.
அத்தர் அக்கா!
அவளது பெயரை அப்படித்தான் எனக்கு தெரியும். அத்தர் என்பது அனேகமாக இஸ்லாமியர்கள் தடவிக்கொள்ளும் ஒரு வாசனைத்திரவியம். பல்வேறு தரத்தில் கிடைக்கும் அத்தரில்,
மிக உயரிய தரத்தில், சந்தையில் கிடைக்கும் அத்தரை
நுகர்ந்தால், முனிவனுக்கு கூட மும்பையின் சோனாக்காச்சி போய்வர ஆசை பிறக்கும். அப்படியாக உணர்வுகளை சுண்டிவிடும் ஒரு
ஒரு அற்புத வாசனைத்திரவியம்.
தெருமுனையில் இட்லி விற்கும் அத்தர் அக்கவிற்கு அப்படியான ஒரு பெயர் வந்தது எப்படி என்று நான் இந்த மேன்சனில் குடிவந்த ஆரம்பநாட்களில் எனக்கு தெரிந்திருக்கவில்லை. அன்றொருநாள் காலை அவளது இட்லிகடையில் ஆளுக்கு நான்கு இட்லிகள் சொல்லிவிட்டு உட்கார்ந்திருக்கிறோம்.
"டேய் இன்னிக்கு அத்தர் கொஞ்சம் ஓவர் போல..."
எனக்கு ஒன்றும் புரியாமல் முழிக்கவே , இன்னொரு நண்பன் ஜாடை காட்டிய இடத்தை பார்க்கிறேன். அடுப்பு புகையினுள் வியர்த்து வழிந்து , தன் பருத்த
தேகத்தை சற்றே ஒரு பக்கவாட்டில் சரித்து , முகத்தில் அடிக்க துடிக்கும் நீராவியை "பூ... பூ..பூ... பூ.... " என்று ஊதி தள்ளிவிட்டபடி இட்லியை அடுப்பிலிருந்து பிரிக்கும் முயற்சியில் இருக்கும் அவளது அக்குளிலிருந்து வியர்வை வழிந்து அவளது சட்டையை நனைக்கிறது. அவள் அத்தர் அக்கா என்று என்று அழைக்கப்படுவதன் காரணம் எனக்கு புரிகிறது. ஆனாலும் அவளது கடையை விட்டு வேறு எங்கும் எங்களால் சாப்பிட முடியாது. காரணம் ஆனானப்பட்ட அமரிக்காவே ஆடிப்போயிருக்கும் பொருளாதார சரிவின் மத்தியிலும் ஒரு ரூபாய்க்கு இட்லி தருபவள் அத்தர் அக்கா மட்டுமே. அதுபோக தேவையான போதெல்லாம் சாம்பார் ஊற்றிக்கொள்ளவும் அனுமதிப்பாள்.
அன்றொரு நாள் மேன்சனின் மொட்டை மாடியில் பல்லுவிளக்கிகொண்டிருதேன். கீழே யாரும் வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டே "ப்ளீச்.." என்று எச்சிலை தெருவில் துப்பிவிட்டு அத்தர் அக்காவின் இட்லி கடையோரம் பார்க்கிறேன். அவள் தனது பள்ளிக்கூடம் போகும் பத்து வயது மகனோடு மல்லுக்கட்டிக்கொண்டிருந்தாள். வருஷக்கணக்காக வெட்டாத அந்த தலைமுடியுடன் இனிமேல் பாடசாலைக்குள் அனுமதிக்க முடியாது என்று வாத்தி கடுமையாக சொல்லிவிட்ட படியால் , தலைமுடி வெட்டுவதற்கு பணம் கேட்டு நச்சரித்துக்கொண்டிருக்கிறான். இந்த கூத்து சுமார் இரண்டு வாரமாக நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் எதாவதொரு சாட்டு சொல்லி அனுப்பிவிடுவாள் அத்தர் அக்கா. நாளைக்கு.. நாளைக்கு என்று ஒவ்வொரு நாளும் அவன் கடத்தப்பட்டு பள்ளிக்கூடம் போய்வரும் போதெல்லாம் உடம்பில் அடிபட்ட தழும்புகளோடு தான் வருவான். அவனுக்கு வாத்தி அடிப்பதை விட "காக்கா கூடு" என்று சகபிள்ளைகள் அதிலும் குறிப்பாக ரெண்டு வீடு தள்ளி இருக்கும் ரேவதி பழிப்பதில் இருக்கும் வலி அதிகம். அதனால் இன்று தீர்க்கமாக இருக்கிறான் என்பதை அவன் சாம்பார் பானைக்கு மேலே உட்கார்ந்திருந்த தோரணை காட்டியது.
அவன் தலையை நானும் ஒரு சுற்று பார்க்கிறேன், கண்கட்டி அடித்து விளையாடுவதற்கு
காகத்தின் முட்டையை எடுத்த பின்னர் சிறுபிள்ளைகள் கலைத்துவிட்ட காகத்தின் கூடு போலவே இருந்தது அவன் தலை. நான் அப்படி சொன்னால் கூட பரவாயில்லை , ஆனால் இவன் எப்போதும் அவள் மனதில் ஹீரோவாகவே இருக்க விரும்பும் ரேவதி அப்படி சொல்வது அவனுக்கு வலிக்கவே செய்யும்.
ஏதேதோ சமாதானம் சொல்லிப்பார்க்கிறாள் அத்தர் அக்கா . அவன் மாட்டேன் என்று அடம்பிடித்து ஆடும் ஆட்டத்தில் அவன் உட்கார்ந்திருக்கும் சாம்பார் பானை கவுந்து எனது இட்லிக்கு தொட்டுக்கொள்ள ஏதும் இல்லாமல் போய்விடுமோ என்ற கவலை தொற்றிக்கொள்கிறது எனக்கு. இருவருக்குமான களேபரத்தின் இடையில் நான் இட்லிக்கடைக்கு வந்துவிட்டேன்.
எனது சட்டைப்பையில் நூறு ரூபா இருக்கிறது. இவனுக்கு முடிவெட்ட ஐம்பது ரூபா கொடுக்க முடியும் ஆனால் இரவு ஐ.பி.எல் பார்ப்பதற்கும் நாளை மானாட மயிலாட பார்ப்பதற்கும் செட்டாப் பாக்ஸிற்கு காசு கட்டியிருக்கவில்லை. ஆக இவனுக்கு தலைமுடி வெட்ட தர்மபிரபு போல் காசை எடுத்து கொடுத்துவிட்டால் அழகாகிவிடும் இவனது தலையில் ஐ.பி.எல் பார்க்க முடியாது. மௌனமாக எனது இட்லிக்காக காத்துக்கொண்டு நிற்கிறேன். ஆனாலும் அன்றிரவே ஃபேஸ்புக்கில் யுனிசெஃப் வெளியிட்டிருந்த ஒரு புகைப்படத்தை கண்டேன். நீங்கள் பின்வரும் ஏதேனும் ஒரு செயற்பாட்டை செய்தாலும் ஃபேஸ்புக் ஏழைமாணவரின் கல்விக்காக குறிப்பிட்ட ஒரு தொகையை வழங்க தயாராக இருக்கிறது என்று ஒரு சோமாலிய சிறுவன் கையேந்துவது போன்ற ஒரு படத்தை போட்டு
"1 லைக்
= 1 டாலர் " ,
"1 கமன்ட்
= 3 டாலர் " , "
1 ஷேர் = 5 டாலர் " என்று
போட்டிருந்தது. நான் ஒரு லைக் , நான்கைந்து கமன்டுகள் , கூடவே ஒரு ஷேரும் செய்துகொண்டேன். ஒரு வேளை நாளையே யுனிசெஃப் ஊடாக ஃபேஸ்புக் கொடுக்கும் பணம் அத்தர் அக்காவின் மகனுக்கு வந்து சேர்ந்துவிடும். அதை வைத்து அவன் தலைமுடி வெட்டலாம் இல்லையேல் அவனுக்கு பிடித்த வாசம் வீசும் அழிரப்பரும்,
கூர் மாத்தி பென்சிலும் வாங்கி கொள்ளலாம். மீதி பணத்துக்கு அவன் ரேவதிக்கும் சேர்த்து இரண்டு இனிப்புக்கள் வாங்கினாலும் கூட கொடையாளி என்ற உரிமையில் நான் அவனின்
அந்த சுதந்திரத்தில் தலையிடப்போவது இல்லை.
அவன் அடம்பிடித்து அழ ஆரம்பிக்கிறான். அத்தர் அக்கா ஒரு முடிவாக அடுப்பில் எரிந்துகொண்டிருக்கும் ஒரு கொள்ளிக்கட்டையை எடுக்கிறாள். எனது "பதக்" என்கிறது , தலைமுடி வெட்ட பணம் கேட்கும் பிள்ளைக்கு கொள்ளிக்கட்டையால் சூடு வைக்க நினைக்கிறாளே இவளெல்லாம் ஒரு தாயா? சமூக பொறுப்புணர்வோடு உள்ளுக்குள் கொதிக்கிறேன். ஆனாலும் இன்னும் மன் மோகன் சிங் போன்ற ஒரு பெருமௌனமே காக்கிறேன்.
கொள்ளிக்கட்டைய எடுத்த அத்தர் அக்கா , உதிரிந்துவிடும் நிலையில் ஆடிக்கொண்டிருக்கும் தணல்களையெல்லாம் ஒவ்வொன்றாக தட்டிவிடுகிறாள், அதுவும் வெறும் விரல்களாலேயே. கொள்ளிக்கட்டையில் மீதமிருக்கும் தணல்களெல்லாம் ஸ்திரமானவை என்று முடிவான பின்பு , அந்த நெருப்பை கொண்டு அவனின் தலைமுடியை பொசுக்க ஆரம்பிக்கிறாள். நான் "ஙே..... " என்று பார்த்துக்கொண்டு நிற்கின்றேன். ஆனால் அவன் மௌனமாக இருக்கும் தோரணையிலிருந்து இதுவொன்றும் அவனுக்கு புதிய சிகிச்சை முறையல்ல என்பது எனக்கு தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
குரங்கு அப்பம் பிரித்த கதை போல இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுமாக பார்த்து பார்த்து பொசுக்கி காகக்கூட்டை குருவிக்கூட்டின் அளவிற்கு கொண்டுவந்துவிட்டாள். ஆனால் இப்போது அவனது தலை அத்தர் அக்காவின் அக்குளை விட மிக மோசமாக மணக்கிறது.
தனது தலையை மெல்ல தடவிப்பார்த்து பாரம் குறைந்துவிட்டதை உணர்ந்த அவன் , அந்த சிறிய இட்லி கடையின் பின்புறத்தில் , ஒரு சிரட்டையின் அடியில் ஒட்டியிருக்கும் பாத்திரம் கழுவும் சவர்க்காரத்தில் ஒரு துளியை பிய்த்து
எடுத்து , தலையில் தேய்த்து , ஒரு வாளி தண்ணீரை தலையில் ஊற்றிக் கொள்கிறான். துவட்டுவதற்கு அவனுக்கு அவசியம் இருக்கவில்லை. அவனது தலைமுடி பொசுங்கி தலையோடு ஒட்டியிருந்தது. இரண்டு கைகளாலும் "பட..பட..பட ..பட.. பட... என் தலையினை துவட்டிவிட்டு. அத்தர் அக்கா கையில் கொடுத்த இரண்டு ரூபாவை வாங்கிகொண்டு சிட்டாக மறைகிறான்.
ரேவதியால் இப்போது அவனை "காக்காகூடு" என்று பழிக்க முடியாது. ஆனால் அவள் "பனங்காய்த்தலையன்" என்று பழிப்பாளாக இருந்தால் அதனை தாங்கிக்கொள்ளும் மனநிலை அவனுக்கு இருக்கவேண்டுமென்று மனதுக்குள் வேண்டிகொள்கிறேன்.
"இவனை எப்புடினாச்சும் படிக்க வச்சி பெரியாசுப்பத்திரில ஒரு கம்பவுண்டராக்கிடணும்யா"
நோட்டுப்புத்தகம், முறையான சீருடை , பென்சில , பேனா , இத்யாதி இத்யாதிகள் இல்லாமையால்
வருடத்தின் அநேக நாட்களில் வகுப்பறைக்கு வெளியே நின்று கொண்டிருக்கும் அவளது மகன் தொடர்பான அவளது கனவு எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. தனது மகனை கம்பவுண்டர் ஆக்க வேண்டும் என்று தனது தகுதிக்கு ஏற்றபடி யோசிக்கிறாளா ? இல்லை கம்பவுன்டருக்கு மேல் யோசனை செய்ய அவளது மூளைக்கு தெரியவில்லையா? சிந்தித்துக்கொண்டே அவள் கொடுத்த இட்லிகளை காலி செய்துவிட்டேன்.
"ஹேஏவ்..."
உண்ட களைப்பில் பெரிதாக ஒரு ஏப்பம் விட்டபடியே சட்டைப்பையில் இருந்து நூறு ரூபா
தாளினை அத்தர் அக்காவிடம் நீட்டுகிறேன். தேவைக்கு அதிகமாகவே சற்று சாம்பார் ஊற்றி
சாப்பிடும் அந்த கடமைப்பாடு தவிர ,
எனக்கும் அத்தர் அக்காவுக்கும் வேறு கொடுக்கல் வாங்கல் இல்லையென்ற போதும்
அதிகமாக ஊற்றிக்கொள்ளும் அந்த சாம்பாருக்காக இல்லையென்றாலும் , மனிதாபிமான
அடிப்படையிலாவது அத்தர் அக்காவின் மகனுக்கு ஐம்பது ரூபாய் கொடுத்து இருக்கலாம் என
மனது உறுத்தியது. பணம் இல்லாத காரணத்தால் தலைமுடியினை நெருப்பினால் ஒரு சிறுவன்
பொசுக்கிக்கொண்டு போவதை பார்த்துக்கொண்டிருந்த என் மனசாட்சி என்னை என்னமோ செய்தது.
இந்த நினைப்பு
என்னை தூங்க விடுமா என்று நினைக்கையிலே எனக்கு என்னவோ செய்தது, ஆனாலும்
ஐ.பி.எலின் சியர் லீடர்ஸ் பெண்களை பார்த்துவிட்டால் மனசாட்சி மடிந்து போய்விடும்
பலகோடிகணக்கான மனிதர்களுள் நானும் ஒருவன் என்ற படியால் அது குறித்து மேலதிகமாக
ஏதும் அலட்டிக்கொள்ளவில்லை,
ஆனாலும் அத்தர் அக்கா ஏதும் நினைத்து விடுவாரோ என்பது மட்டும் சிறிது குத்தவே
செய்தது.
நூறு ரூபா தாளினை
எடுத்து நீட்டிவிட்டேன். அதை பார்த்ததும் அத்தர் அக்காவின் முகத்தில் "ஐயோ ! என்னிடம் சில்லரை
இல்லையே "என்பதை தவிர வேறேதும் உணர்ச்சி இல்லாத வரையில் எனக்கு சந்தோசம்.
தான் உழைப்பதற்கு மட்டும் பணத்தினை எதிர்பார்க்கும் , பெருநகர
ரயில்களில் வௌவால்களாகவும் ,
வியர்வை மூட்டைகளாகவும் தொங்கிக்கொண்டுபோகும் அடித்தட்டு மக்கள் கூடத்தில்
ஒருத்தி தான் இந்த அத்தர் அக்காவும் என நினைத்துக்கொண்டேன். இவர்கள் உழைத்து தான் உண்கிறார்கள்
என்று , இதோ என்
முன்னே இலவசமாக கிடைத்த இரண்டு ரெமிமாட்டின் போத்தல்களில் இரண்டாவதையும்
முடிக்கும் தறுவாயில் இருக்கும் நித்தோனுக்கு சொன்னால் நிச்சயம் "கெக்கே
பிக்கே" என்று சிரித்து என்னை வேறு கேவலப்படுத்துவான். உலகில் எற்ராத்தாழ்வு
இருந்தே ஆகவேண்டும் என்று "கேயாஸ் தியரி" " பட்டர்ஃபிளை
எஃபக்ட்" என்று எனக்கு சுத்தமாய் ஏதும் விளங்காத ஏதும் கோட்பாடுகளை எடுத்து
உதாரணம் காட்டி என்னை சாவடிப்பான். ஆக.. அவனை அடுத்த ரவுண்டு அடிக்க அனுமதித்தலே
எனக்கும், அத்தர்
அக்காவுக்கும் நன்மை பயக்கும்.
" சார்.... பக்கத்து
பொட்டிக்கடையில சில்லர மாத்தி தாறியளா?"
செருப்பு போட்டு நடக்கிறேன் என்ற தகுதி ஒன்று மட்டுமே போதும் அவள் என்னை
"சார்" என்று விளிப்பதற்கு.
"அவன் தான் சில்லற
தரமாடனேக்கா..."
சலிப்புடன்
சொன்னேன்.
"அத்தர் அக்கா
சொன்னேன்னு சொல்லுங்க, தருவான்"
எனக்கு தூக்கிவாரி
போட்டது, அத்தர்
அக்காவை அவளது வியர்வையின் காரணமாக நாங்கள் கொண்டழைத்த பெயர் அவளுக்கு எப்படி
தெரிந்தது. அது போக அதை அப்படியே ஜீரணிக்க கூட எப்படி முடிந்தது? எங்களிடம் இதுவரை
அதுகுறித்து ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.
அவளுக்கு இப்போது
அவளது அக்குளை சவரம் செய்து ,
அதற்கு ஐநூறுரூபா டிப்ஸ் வைக்கவெல்லாம் பணம் கிடையாது. ஒரு வேளை அவளது மகன்
கம்பவுண்டர் ஆனவுடன் அப்படி செய்வாளோ என்னமோ?
"க்ளிங்......"
நித்தோன்
இரண்டாவது ரெமிமாட்டினையும் காலி செய்து உருட்டிவிட்டிருந்தான். அவனது கண்கள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கமாய் சொருகிப்போய் பார்க்கவே படு பயங்கரமாக இருந்தான்.
நித்தோன் பாலுடன் சேர்ந்து வேலை செய்வதற்கு முன்னர் பெருநகர ரயில்களில்
தொங்கியிருக்கிறான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பெண்கள் அதிகமாக ஏறும்
கம்பார்ட்மென்டில் ஏறி, இளம்பெண்களின்
பின்னால் நிற்க பிரையாசைப்படும் அவனுக்கு,
வாரம் இரண்டு தடவையாவது அவனது மர்ம ஸ்தானத்தில் ஊசியோ, இல்லை பெண்களின்
தலைமுடியை சேர்த்து கட்ட பயன்படும் கூரான "கிளிப்" ஏதுமோ குத்திய தடம்
இருக்கும்.
நாங்கள் இப்போது
பிரயாணப்படும் இந்த முதல் வகுப்பு மேட்டுக்குடி பெட்டியினுள் யாரும் நித்தோனுக்கு
குத்திவிட முடியாது. அவன் விரும்பினால் ,
அங்கு சேவகம் புரியும் எந்த பெண்னையும் அழைத்துக்கொண்டு பிரத்தியேகமான அடுத்த அறைக்குள் போய்விட முடியும். இல்லை..
என்னை வெளியே போக சொல்லிவிட்டு இங்கயே..............
இதற்கு அங்கு
சேவகம் புரியும் பெண்கள் சம்மதிக்க வேண்டும் என்பதில்லை, நீங்கள் ஒரு
மேட்டுக்குடியாக இருத்தலே அதிகபட்ச தகுதி. இங்கே, இந்த கம்பார்ட்மென்டில்
"ஷோஷலிஷம்" என்று அழைக்கப்படும் இந்த "கலாசாரம்" , அத்தர் அக்கா
வாழும் தெருவில் இடம் பெற்றால் அதற்கு பெயர்கள் வேறு. "விபச்சாரம், கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம், கள்ளக்காதல்
" இப்படியாக எந்த வார்த்தையையும் போட்டுக்கொள்ளலாம், அது அந்த வழக்கினை
கையாளும் காவல் அதிகாரியின் மனநிலையையும் தமிழறிவையும் பொறுத்தது.
"இன்னொரு
ரெமிமாட்டின் சொல்கிறேன், சேர்ந்து
குடிக்கலாமா?"
மனசாட்சியே
இல்லாமல் கேட்கிறான் நித்தோன்.
" இல்லை எனக்கு
தூக்கம் வருகிறது நான் கிளம்புகிறேன்,
காலையில் பார்க்கலாம்"
சொல்லிவிட்டு
கிளம்புகிறேன், அந்த
அழகான பெண்கள் சேவகம் செய்ய இரண்டு "பெக்" ரெமிமாட்டின் இறக்குவதில்
உள்ள சுகம் அலாதியானது. ஆனாலும் நாளைய தினம் நான் பாலை சந்திக்கும் போது
நிதானமாகவே இருப்பதில் பெருத்த கவனமாய் இருக்கிறேன்.
நான் போகப்போகும்
இடத்தின் அதிபதி அவன், அது போக
நான் செய்யப்போகும் வேலை என்னவென்பது கூட எனக்கு சரியாக தெரியாது. ஒரு வேளை
குடித்து சொதப்பினால்? அப்படியேதும்
நடந்து , பாலின்
குணமும் மற்றவர்கள் என்னிடம் சொல்லியிருப்பது போலவே இருந்தால் , முதல் வகுப்பு
பெட்டியில் அந்த சேவக பெண்கள் "ஹிஹாப்போ, சல்சாவோ " ஆடிக்கொண்டிருக்க , அதை பார்த்தபடியே
ரெமிமாட்டின் அடித்துக்கொண்டிருக்கும் நித்தோனின் இறைச்சித்தட்டுக்களில் என்
தொடைக்கறியும் இருக்கும் படி செய்துவிடுவான் பால். ஆனாலும் சதையே இல்லாத என்
தொடைக்கறி நித்தோனுக்கு அவ்வளவான சுவாரசியத்தை தந்துவிடாது.
இவ்வளவு பயத்துடன்
நான் பாலினை சந்தித்தேயாகவேண்டுமா என்ற கேள்வியை பாலின் அலுவலகத்திலிருந்து
வந்த மின்னஞ்சலினை பார்த்த
மாத்திரத்திலேயே எனக்குள் கேட்டுக்கொண்டேன்.
பாலுக்கு உதவி
செய்வதன் மூலம் அவனுடன் ஒரு நட்புறவை வளர்த்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பமாக இதை
நினைத்துக்கொண்டு தான் என் மனதினை திடப்படுத்தினேன். அத்தோடு இப்போது இல்லை
என்றாலும் இன்னும் ஒரு ஐம்பது வருடத்திற்குள் எப்படியேனும் பாலை நான்
சந்தித்தேயாகவேண்டும். அப்படி
சந்திக்கையில் தனது அழைப்பினை நான் நிராகரித்த கோபத்தில் பால் இருக்கும்
பட்சத்தில் விரும்பியோ விரும்பாமலோ என் தொடைக்கறியை நித்தோன் தின்னும்படி
ஆகிவிடும்.
எனக்கு தெரியும்
நான் இங்கே வந்து தான் ஆகவேண்டும்,
பாலை இப்போதல்ல எப்போதாவது சந்தித்தே ஆகுவேன் என்றும் தெரியும்.
சிறுவயதில் தடம்
போட்டு ஓணானை பிடித்து , அதற்கு
வாய்க்குள் புகையிலை திணித்து ஓடவிட்டபோதும்,
அடைக்கலங்குருவிக்கு கல்லால் எறிந்த போதும் , ஞாயிறு திருப்பலி நேரத்தில் பக்கத்தில் இருந்த நண்பனிடம்
சக்திமானில் இன்று என்ன நடக்கும் என்று விவாதித்த போதும், அம்மாவுக்கு
தெரியாமல் சீனி களவெடுத்து தின்ற போதும் ,
பக்கத்து கதிரையில் இருந்த பையனுக்கு கிள்ளிய போதும் , கடைக்கு போய்
சாமான் வாங்கி வரும் போது மிச்சமாக இருந்த ஒரு ரூபாய்க்கு தோடம்பழ இனிப்பு வாங்கி
தின்றுவிட்டு அம்மாவிடம் மிச்சக்காசு இல்லை என்று பொய்சொன்னபோதும் எனக்கு
சொல்லப்பட்டிருந்தது, அவற்றின்
பொருட்டு நான் என்றாவது ஒரு நாள் இங்கு
வந்தே ஆகுவேன் என்று. பாலை சந்தித்தே தீருவேன் என்று!!
ஆக.. அப்படி வரும்
முன்னமே , இந்த
வாய்ப்பை பயன்படுத்தி பாலை பற்றியும் அவன் இடத்தை பற்றியும் அறிந்துகொள்ளுதல்
எனக்கு உபயோகமான ஒன்றாக பட்டது. இன்னுமொரு
ஐம்பது வருடங்களில் நான் இங்கு வரும் போது எனக்கு இவை புதியனவாக
இருக்கப்போவதில்லை. அத்தோடு நான் இப்போது வந்திருக்கும் காரியம் சரியாக
அமைந்துவிட்டால் பால் எனக்கு நண்பனாகி விடுவான். ஆக நான் திரும்ப வரும் போதும்
முதல் வகுப்பில் ரெமி மாட்டின் அடித்தபடியே வரலாம். இந்த எக்ஸ்பிரஸின் மூன்றாம் தர
பெட்டிகளில் அடைந்திருக்கும் மக்களின் கண்களில் தெரியும் அச்சமும், குழப்பமும்
அப்போது எனக்கு வராது.
அனைத்தையும்
கணக்கு போட்டபடியே தான் இங்கு வந்திருக்கிறேன்.
"க்க்ளீஞ்...
கிரீச்...."
இரைச்சலுடன் இந்த
எக்ஸ்பிரஸ் நிற்கிறது.
நேற்று இரவு என்
ஜன்னல் கயிற்றில் அந்த சேவக பெண் கழற்றி போட்டிருந்த அவளது மேலாடையை
விலக்கிக்கொண்டு பார்க்கிறேன். வெளியே பிரகாசமான எழுத்தில், மிகவும்
கவர்ச்சியாக எழுதப்பட்டிருந்தது அந்த வாசகம் பல மொழிகளில்.
வணக்கம்!
நரகத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
(தொடரும்)
Perfect one in all sense . Great .
ReplyDeleteஅருமை நண்பரே!!!!இதே போன்றதான சிற்று{ர்தி சேவைகள் பலவும் அவற்றிற்கு பின்னான தொடர்கதைகளும் நெஞ்சில் வநது போகின்றன.வாழ்த்துக்கள்.
ReplyDelete