உதைபந்து

Tuesday, February 21, 2012

வெளிச்சத்துக்கு வந்த இருட்டு அறை மர்மங்கள்...!!!



இது ஒரு சினிமா விமர்சனமா அல்லது அந்த சினிமாவின் பாதிப்புக்களால் நான் எழுதிகின்றேனா என்பது எனக்கே இன்னும் புரியாத நிலையில் தான் இந்த பதிவு. படம் பார்த்தவுடன் என் மனதில் தோன்றியவைகளில் சிலவற்றை , என்னால் முடிந்தவரை அதே மனநிலையில் எழுத நினைக்கிறேன்.

"தி லாஸ்ட் கிங் ஒஃப் ஸ்கொட்லாண்ட்" படத்திற்கு பிறகு ஒரு சர்வதிகாரியின் அந்தரங்க விடயங்களை தோலுரித்து காட்டிய படம் என்றால் என்னை பொறுத்த வரை "தி டெவில்ஸ் டபுள்" என்பேன். படம் வெளியானது என்னவோ 2011 இன் ஆரம்பத்தில் என்றாலும் எனக்கு பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது சில நாட்களுக்கு முன்புதான். இந்த படம் பார்த்த பின்பு எனக்கென்னவோ சதாம் ஹிசைனும், உதேய் ஹிசைனும் இன்னும் வாழ்வதாக, அதுவும் எனக்கு மிகவும் பரிட்சயமான ஒரு நாட்டில் வாழ்வதாகவே எண்ணத் தோன்றுகிறது. பதிவு நீள்கையில் உங்களில் சிலருக்கும் அந்த எண்னம் வரும் என்பதில் எனக்கு சந்தேகமேதுமில்லை.



முதலில் படத்தின் சிறிய கண்ணோட்டம். மறைந்த ஈராக்கின் சர்வதிகாரி சாதம் ஹிஸைனின் மகன் உதேய் ஹுசைனின் வாழ்க்கை முறையை (????) சொல்கிறது படம். சதாம் ஹுசைனுக்கு அவரைப்போலவே தோற்றம் கொண்ட அவரது "போட்டோ கொப்பிகள்" இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. ஏதாவது ஆபத்தான இடங்களுக்கு கூட்டங்கள் அல்லது நிகழ்வுகளுக்கு செல்வதாக இருந்தால் இந்த பலியாடுகளைத்தான் அவ‌ர் அனுப்புவாராம். இவாறான பிரபலங்களின் நகல்கள் ஒரு சில அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு கூட இருந்ததாக கேள்வி. இவ்வளவு ஏன் ? தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கும் இவ்வாறான நகல்கள் இருந்ததாக கேள்விப்பட்டு இருக்கிறேன்.

இது தான் படத்தின் கதை.... உதய் ஹுசைனும் (டோமினிக் ஹீப்பெர்) , லதிஃப் யாஹியாவும் (அதுவும் டோமினிக் ஹீப்பெர் தான்.இரட்டை வேடம்) ஒரே பாடசாலையில் படித்தவர்கள், லதிஃப் ஈராக்கின் ராணுவத்தில் பணிபுரிகிறார். பாடசாலை நாட்களில் உதய் மற்றும் லதிஃப் க்கு இடையில் தோற்ற ஒற்றுமை இருப்பதாக சக மாணவர்கள் பேசிக்கொண்டதே லதிஃபின் தலையில் இடி இறங்க காரணமாகிறது. தனது தந்தையின் பாணியில் தனக்கும் நகல் ஒன்றை வைத்துக்கொள்ள ஆசைப்படும் உதய் , ராணுவத்தில் இருந்த லதிஃபை வரவழைத்து திட்டத்தை சொல்கிறார். உதேயின் போகில் கொஞ்சமும் விருப்பமில்லாத லதிஃப் மறுக்க , பிறகு என்ன வில்லன் பாணியில் குடும்பத்தை கொலைசெய்வேன், நாசம் பண்னுவேன் என்று மிரட்ட வேறு வழியின்றி பணிகிறார் லதிஃப். உதேய் அனுபவிக்கும் அனைத்து சுகபோக வாழ்க்கையை வாழவும் அனுமதி கிடைக்கிறது லதிஃப்க்கு. ஆனால் லத்ஃப்க்கு அதில் சிறிதளவும் நாட்டமில்லாமல், உதேய் இன் கைப்பொம்மையாய் ஆடுகிறார்.

டோமினிக் கூப்பர்
உதே ஹுசைன்


உதேயோடு இருந்த காலபகுதியில் அவன் பண்ணும் அட்டகாசங்கள் பொறுக்காமல் பலமுறை தப்பித்து போக முயன்று , பிடிபட்டு அடிபடுகிறார் லதிஃப்.

படத்தில் காட்டப்படுகின்ற உதேயின் அட்டகாசங்கள் , சர்வதேச நீதிமன்றத்தால் அவன் மீது சுமத்தப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கின்றன. அண்ணனின் அட்டகாசங்களில் சில......


*அண்ணன் தனது ஆடம்பர கார்களில் (அது போர்சே, ஃபெராரி,பென்ஸ் அல்லது ரோல்ஸ் ரோயஸ்சாக இருக்கலாம்) வீதி உலா போகும் போது , தான் அழகாக இருக்கிறாள் என்று யாரை நினைக்கிறாரோ அத்தனை பேரையும் அலேக்காக தூக்கி காரில் போட்டு கதற கதற .................................. (இவரது கற்பழிப்புக்கள் தொடர்பில் ரைம்ஸ் பத்திரிக்கை 2003 இல் ஒரு அறிக்கை தயாரிக்கும் அளவிற்கு அண்னன் கற்பழிப்பில் பிரபலம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்). இவரது கற்பழிப்புக்களில் (உலகு அறிந்து) 14 வயது பாடசாலை சிறுமி ஒருத்தியும் அடக்கம்.



*சமீபத்தில் பதவி விலகிய எகிப்திய ஜனாதிபதி ஹஸ்னி முபரக்கின் மனைவி ஸுஸைன் 1988இல் வழங்கிய விருந்து ஒன்றில் தனது காம களியாட்டத்திற்கு தொந்தரவு தந்தார் என்று  தனது தந்தையின் பிரத்தியேக மெய் பாதுகாவலர் கமால் ஹானாவை இலத்திரனியல் கத்தியால் கூறு கூறாக வெட்டிகொன்றார். ( உண்மையில் கமால் தனது தந்தை சதாமுக்கு மாமா வேலை பார்த்து தனது தாய்க்கு தனது தந்தை துரோகம் செய்ய காரணாமாக இருந்தார் என்ற கடுப்பு உதேய்க்கு கமால் மீது காலம் காலமாக இருந்தது). எட்டு வருடங்கள் சிறை இருக்கவேண்டிய இந்த குற்றச்செயலுக்காக உதேய் வெறும் மூன்று மாதம் அதிநவீன தனிப்பட்ட சிறைச்சாலை ஒன்றில் சிறைவைக்கப்பட்டார்/இருந்தார். பின்பு ஜோர்டன் மன்னர் ஹிசைனின் வேண்டுகோளுக்கிணங்க உதேயை விடுதலை செய்தார் சதாம். விடுதலை செய்த கையோடு அவனை சுவிஸ்ஸர்லாந்திற்கான ஈராக்கிய தூதுவராக நியமித்தார் . ஆனால் அண்ணன் சுவிஸில் உணவகம் ஒன்றில் செய்த குளறுபடியோடு அடுத்த விமானத்தில் அண்னனை ஈராகிற்கு திருப்பி அனுப்பியது சுவிஸ் அரசாங்கம்.

உதய் ஹுசன் (இடது) லதிஃப் (வலது)


*அதன் பின்னர் ஈராக்கிய ஒலிம்பிக் செயற்குழுவின் தலைமைப் பொறுப்பு, ஈராக் உதைபந்தாட்ட சம்மேளன தலைமை மற்றும் தனது பிரத்தியேக மெய்பாதுகாவலர் குழுவின் தலமைப் பதவிகளில் உதேயை அமர்த்தி அழகு பார்த்தார் சதாம். இங்குதான் ஈராக்கிய விளையாட்டு வீரர்களுக்கு வினை ஆரம்பித்தது. மெய்வல்லுனர் போட்டிகளில் சிறப்பாக செயற்படாத ஈராக்கிய வீரவீராங்கனைகளுக்கு சாட்டையடி, மின்சார தாக்குதல் என்று வகை வகையாக தண்டனை வழங்கினார் உதெய். உச்சக்கட்ட சோகம் ஈராக் உதைபந்தாட்ட வீரர்களுக்கு தான். 1994 இல் உலக கிண்ண போட்டிகளுக்கு தகுதி பெற தவறிய‌ ஈராக் உதைபந்தாட்ட வீரர்களை ஒரு அறையில் வைத்து கொங்ரீட் பந்துகளை உதைக்கச்செய்து வினோத தண்டனை நிறைவேற்றினார் உதெய். (தகுதி காண் போட்டிகளில் அந்நாள் ஜென்ம விரோதியான ஈரானிடம் (2-1) தோற்றது விசேட கடுப்பு). சில வீரர்களின் கால்கள் வெட்டப்பட்டு தெருநாய்களுக்கு கூட வீசப்பட்டிருக்கின்றன.(மூலம்:- பிபிசி 24-6-2010). பயிற்சிகளுக்கு வருகை தர தவறும் வீரர்கள் கூட தண்டனைக்கு உளாவார்கள். தனது பிள்ளையின் மரண சடங்கின் நிமித்தம் பயிற்சிக்கு வருகை தராத வீரர் கூட சவுக்கடி வாங்கியிருக்கிறார்.

        ஒரு போட்டியில் தோற்றாலோ அல்லது போட்டி சம‌நிலையில் முடிந்தாலோ வீரர்கள் மின்சார தாக்குதல் தண்டணைக்கு உள்ளாவார்கள் அல்லது மலக்குழியில் நீந்துவார்கள். அல்லது இரண்டுமே நடக்கும். அது அண்ணன் இருக்கும் மனநிலையை பொறுத்தது. அது தவிர வாகனத்தில் கட்டி கரடுமுரடான வீதிகளில் வீரர்களை இழுத்துச்செல்லும் சம்பவமும் நடந்தது. 2000 இல் லெபனானில் நடந்த ஏ.ஃஎப்.சி ஆசிய கிண்ண போடிகளில் ஜப்பானுடன் (4-1) ஈராக் தோற்றதையடுத்து அணியின் கோல்காப்பாளர் ஹசிம் ஹுசைன், பின்கள வீரர் அப்துல் ஜபர், முன்வரிசை வீரர் சாதிர் ஆகியோர் தோல்விக்கு காரணமானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு மூன்று நாட்கள் உதய் இன் பிரத்தியேக சிறைச்சாலையில் வைத்து துன்புறுத்தப்பட்டார்கள்.

உதயின் ஆயுதங்கள்


*உதெய் சதாமின் மெய்பாதுகவலர்களின் தலமை பொறுப்பில் இருந்தபோது தனக்கு "சல்யூட்" அடிக்காத ராணுவ வீரர் ஒருவரை நையப்புடைத்த சம்பவமும் நிகழ்ந்தது. (திரைப்படம் முழுவதும் இவ்வாறான காட்சிகளை காணலாம்)

திரைப்படத்தில் காட்டப்படாத ஆனால் சதாமின் ஆட்சி வீழ்ச்சிக்கு பின் வெளியான உதெய்யின் சாகசங்கள்.....

*உதய் தனக்கு சொந்தமாக 1200 அதிசொகுசு கார்களை வாங்கி/திருடி வைத்திருந்தார். இதில் லம்போகினி, ரோல்ஸ் ரோய்ஸ், ஃபெராரி,பொர்சே,பென்ஸ் ஆகியனவும் அடக்கம். இதில் கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபி, உதெய்க்கு அன்பளிப்பாக கொடுத்திருந்த லம்போகினி எல்.எம்002 ரக கார், பின்நாளில் கார் குண்டுவெடிப்பின் விளைவுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக அமெரிக்க படைகளால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.

இந்த செல்லங்களையெல்லாம் குண்டு வச்சு தகர்க்க எப்பிடிடா மனசு வந்திச்சு?


*ஒரு ராணுவ வீரனை அவனுடைய‌ மனைவியை தன்னுடன் நடனமாட அனுமதிக்கவில்லை என்ற காரணத்திற்காக கடுமையாக தாக்கினான் உதய். சில நாட்கள் மருத்துவமனையில் இருந்த அந்த சிப்பாய் பின்பு இறந்து போனான்.

*பிந்திய தரவுகளின் படி 2000ம் ஆண்டில் தனது அரசியல் வாரிசாக தனது இன்னொரு மகன் கியுசே ஹுசைனை அறிவித்ததையடுத்துதனது தந்தையிடம் நன்மதிப்பு பெறும்பொருட்டு ஈராக் தேசிய காங்கிரஸ் தலைவர் அஹ்மத் சலாபியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினான் என தெரிகின்றது.

*ஈராக் அமெரிக்க படைகளால் கைப்பற்றப்பட்டதன் பின்னர் உதெயின் வீட்டு பதாள அறையில் சிங்கங்களும், சிறுத்தைகளும் நிறைந்த தனிப்பட்ட மிருகக்காட்சி சாலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அது போக ஏராளமான விலையுயர்ந்த சுருட்டு வகைகளும், அதி தரமான வைன் மற்றும் மதுபான வகைகளும் கண்ணுபிடிக்கப்பட்டுளன. அதிலும் முக்கியமாக என்னவென்றால் அண்ணனின் பாதாள அறையில் எயிட்ஸ் பரிசோதனை செய்யும் அங்கி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதாவது அண்ணன் இளம் பெண்களை சம்பவம் செய்ய முன்பு அவர்களை பரிசோதனை பண்ணி பாதுகாப்பானவர்களா என்று அறிந்து விட்டுதான் களத்தில் இறங்குவாராம்.

உதெயின் மிருககாட்சி சாலையில்....


ஒரு கட்டதில் லதிஃபின் தந்தையை உதெய் கொன்று விட, பொறுக்கமுடியாமல் ஒரு ராணுவவீரன் (இவனது மனைவியை அவர்களது திருமண வீட்டிலேயே வைத்து உதெய் கற்பழித்து, அடித்து துன்புறுத்தி அவள் அன்றைய தினமே அந்த வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைசெய்ய காரணமாக இருந்தான்) மற்றும் உதெயின் காரியதரசி ஆகியோரின் உதவியுடன் உதய் மீது லதிஃப் கொலைத்தாக்குதல் நடத்தினான். இதற்கு உதயின் மெய்பதுகாவலர் ஒருவரும் உடந்தையாக இருந்தார். இந்த தாக்குதல் இடம்பெற்றது 1996இல். இந்த தாக்குதலால் முள்ளந்தண்டு, கால் மற்றும் இடுப்பு பகுதிகளில் பலத்த காயமடைந்த உதய் பின்நாளில் சரிவர உடலியக்கமற்ற ஒருவராகவே 2003 இல் அமெரிக்க படைகளால் கொல்லப்படும்வரை வாழ்ந்தான். அதன் பின்பு லதிஃப் தலைமறைவானான். கடைசியாக அவனது நடமாட்டம் அயர்லாந்தில் இருந்ததாக கேள்வி. ஆனாலும் தான் உதேயுடன் இருந்த காலபகுதிகள், அனுபவங்கள் தொடர்பில் பிபிசி மற்றும் அல்-ஜசீரா தொலைக்காட்சிகளுக்கு பேட்டி வழ‌ங்கியிருந்தார்.

உதேய் ஹுஸைன் பிறந்தது 18 யூன் 1964இல். பஹ்தாத் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் வகுப்பிலேயே முதல் மாணவனாக வந்து பட்டம் வென்றார்.  ஆனால் சதாம் ஹுசைனின் மகன் என்ற தகுதியே அவருக்கு முதல் மாணவன் என்ற பட்டத்தை வாங்கி தந்தது என்கிறார்கள் பஹ்தாத் பல்கலைக்கழக விரிவிரையாளர்கள்.

உதெயின் மிருககாட்சி சாலையில்....


தந்தை ஜனாதிபதி என்ற ஒரே காரணத்தால் ஆடாத ஆட்டமெல்லாம் போட்டார், உலகின் அத்தனை சுகபோக வாழ்வும் காலடியில் கொட்டிக்கிடந்தது. தந்தை சதாம் ஹுசைன் தனது ஆட்சியின் ஆரம்பத்தில் மக்களிடையே நன்மதிப்பை பெற்றிருந்தார். ஈராக்கின் வளர்ச்சிக்கு கணிசமான பங்காற்றினார். ஆனால் பின்பு குர்திஷ் இன் மக்களின் படுகொலை, மகன் உதேயின் அடாவடித்தனம் போன்றவற்றால் சர்வதேசத்தில் மட்டுமல்ல தனது சொந்த மக்களிடத்திலும் செல்வாக்கையிழந்தார். அதுவே அமெரிக்க படைகள் ஈராக்கை கைப்பற்றியவுடன் தனது சொந்த மக்களே அவரது உருவச்சிலையை உடைத்தெறிய காரணமானது.கடைசியில் 2003 யூலை 22 இல் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார்.

தந்தை ஜனாதிபதி , தனக்கிருக்கும் அதிகார பலம் எனபன்வே உதே ஹுசைனின் மிருகத்தனமான வாழ்க்கைமுறைக்கும் ,அவனது அற்பத்தனமான சாவுக்கும் வழிகோலியது எனலாம். எவ்வளவுதான் மக்களின் நன்மதிப்பை பெற்று ஆட்சிக்கு வந்தாலும் பின்பு அதை தக்கவைக்க முடியவில்லையாயின் சதாம், உதேய் யின் நிலை தான் யாருக்கும்.

எனக்கு தெரிந்து கூட ஒரு நாட்டில் இப்போது ஒரு சிறு அச்சுக்கூட பிசகாமல் இது தான் நடக்கிறது. அது எந்த நாடு என்றுதான் மறந்து போனேன்.உங்களுக்கும் புரிந்திருக்குமே அது எந்த நாடு என்று?

இதில் ஒருவர் தான் சதாம் ஹுசைனாம்... கண்டுபிடியுங்கள்.... கண்ண‌க்கட்டுதே.!!


படத்தைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும் உதேயை போலவே தோற்றம் கொண்ட டோமினிக் கூப்பரை தெரிவுசெய்த இயக்குனர் லீயை பாராட்டியே ஆகவேண்டும். டோமினிக் கூப்பர் நடிக்கவேயில்லை , வாழ்ந்திருக்கிறார். அதிலும் எனக்கு உதெய் ஆகவரும் கூப்பரை தான் பிடித்திருக்கிறது. அப்படியே உதேய் ஹுசைனின் பக்கத்தில் இருந்து பார்த்த உணர்வு. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் கிறிஸ்டியன் ஹென்சன். சாம் மெக்கேர்டியின் கமரா யேமன் நாட்டை கூட அசல் பஹ்தாத் போலவே காடுகிறது. முடிந்தால் பாருங்கள் தவறவிட கூடாத படம்.

பதிவு கொஞ்சம் நீண்டு விட்டது தான், முடிந்தவரை படத்தின் சுருக்கத்தையும் , உதேய் ஹுசைனின் சிறு வரலாற்றையும் என்னால் முடிந்தவரை சுவாரசியமாக தரமுயன்றிருக்கின்றேன். பிழைகள் இருக்கலாம். பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டுங்கள்.

4 comments:

  1. உதய்க்கு அந்த இடத்திலேயே உதை குடுதுருக்கணும்

    ReplyDelete
    Replies
    1. படம் பார்த்தீர்களா? அது தான் அதிலயே சுட்டாம்ல அந்த பயபுள்ள, உதய்க்கு விழுந்த வெடிகளில் மைனர் குஞ்சுவும் சுடப்பட்டதாக தகவல்!

      Delete
  2. படத்தில் ஓகே . உண்மையான உதைக்கு ?

    ReplyDelete
    Replies
    1. உண்மையிலும் உதெய் சுடப்பட்டார், மைனர் குஞ்சையும் குண்டு ஊடுருவியதாக தகவல்!

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...