உதைபந்து

Thursday, October 13, 2011

நாஸ்திகனுக்கு பேய் பயம் வருமா? பீதியில் உறைந்துள்ள பிரபல பதிவர்

நாஸ்திகர்களுக்கு பேய் பயம் இருக்குமா? இது என்னுள் இருக்கக் கூடிய ஒரு கேள்வி.... கிட்டத்தட்ட கோயில்கள் , பூசை புணஸ்காரங்களை விட்டு அதிக தூரம் விலகி வந்த பிறகு கடவுள், பேய் சம்மந்தமாக அதிகமாக அலட்டிக்கொண்டது கிடையாது. சாதாரணமாகவே ஒரு பேய் படம் பார்த்து விட்டால், அதன் தாக்கம் அந்த இரவு நீடிப்பது எனக்கு வழமை. (உன்ன எவண்டா பெரிய உடைச்ச கடலை போல இரவில பாக்க சொன்னது?) அந்த படத்தில் வந்த பேயின் உருவத்தையோ , காட்சிகளையோ மறப்பதற்கு நான் நமீதாவின் "அர்ச்சுனா.. அர்ச்சுனா அம்பு விடும் அர்ச்சுனா...." பாடலை நினைத்து கொண்டிருக்கும் போத்து நான் விரும்பாமலேயே, எனது அனுமதி இல்லாமலேயே என் கனவுக்குள் புகும் அந்த பேய் சரத்குமாருக்கு பதில் நின்று கொண்டு நமீதாவுடன் டூயட் பாடும்... இது வழமை! அடுத்த சில நாட்களில் நிலமை சகஜமாகிவிடும். ஆனால் ... அண்மையில் "காஞ்சனா" பார்த்த போது, சரத்குமார் தானே பேய், அதுவும் காமடி பண்ணியிருந்ததால் அதன் தாக்கம் தெரியவில்லை. அதனால் தட தடவென அடித்து பிடித்து ஓடாமல், ஆற அமர போய் நின்று "உச்சா" அடித்துவிட்டு வந்தேன்.



அத்தோடு நான் ஒரு "நாஸ்திகன்" என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு , "பேயாவது.. பிசாசாவது.." என்று தெனாவட்டாக அலைந்து கொண்டிருந்தேன். எனது இந்த தெனாவட்டிலும், நிம்மதியிலும் மண்ணையள்ளி போட்டது "THE RITE" என்ற ஆங்கில திரைப்படம். அன்று படம் பார்த்துவிட்டு நான் தூங்கும் போது நேரம் விடியற்காலை 4.30...! படம் முடிந்தது 12.15 க்கு. நண்பர்கள் அனைவரும் லைற்றை அணைத்து விட்டு தூங்கிவிட நானும் கட்டிலில் தூங்கிவிட முயற்சி பண்ணினேன். கண் மூடினால் யாரோ முன்னே நிற்கின்ற போல் ஒரு பிரம்மை... விழித்து பார்த்தால் காயப் போட்டிருக்கும் ஜட்டி கூட பயம் காட்டுகிறது.... கொஞ்சம் கண்ணயர்ந்தால் மூச்சு முட்டி , யாரோ கழுத்தை அழுத்துவது போல ஒரு உணர்வு. இதயம் வேகமாக துடித்தது..... அன்று எனக்கு தடிமன் வேறு .. அதுகூட காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் மனது, இல்லை அது "BA'AL" (பேய்களின் தலைவன் என்று பைபிள் சொல்கிறது) என்றது.



நண்பர்கள் உறங்கிவிட கண்கள் சொருகி தூக்கம் துரத்த தூங்க பயந்தேன். பின்னே விழிக்கையில் அந்த பேய் முகத்திற்கு முன்னே நின்று சிரித்து கொண்டிருந்தால் என் கதை என்னாவது. ( ஒருவனை நேரே வந்து பயம் காட்டுவதற்கு முன்பு , "நாய் குலைக்க பண்ணுதல், காற்ற‌டிக்க பண்ணுதல், மல்லிகை பூ வாசம் வரவைத்தல்" என்று முன்னேற்பாடுகளை வழங்கி நம்மை எச்சரிக்கும் தமிழ் பேய்களின் நாகரீகம் தெரியாதவைகள் இந்த ஆங்கில பேய்கள்). சொன்னால் நம்ப மாட்டீர்கள் அதிகாலை 4.30 க்கு லைற்றை போட்டுவிட்டு உறங்க போனவன் நானாக தான் இருப்பேன். அதைவிட அசிங்கமான விடையம்.. (அப்போ கட்டாயம் சொல்லு...) சொன்னால் கேவலமாக நினைப்பீர்கள் (இப்போ மட்டும் என்ன ? உன்னோட மொக்க பதிவுகளை பாத்திட்டு உன்னை என்ன உத்தம புருஷன் எண்டா நினைச்சுக்குட்டு இருக்கம்? சும்மா சொல்லுடா...) அவசரமாக 'உச்சா " வர வெளியே போகும் பயத்தில் என் தம்பியை எழுப்பி துணைக்கு அழைத்துப் போன துயர சம்பவமும் நிகழ்ந்தது.(தூ.... நாயே..... பண்ணி , பரதேசி....). அவனை எழுப்பும் போது அவன் என்னை பார்த்த பார்வைக்கு பேயே தேவலாம் போல் இருந்தது. பின்பு என்னையறியாமல் நான் தூங்கி போக நேரம் அதிகாலை 4.30! 

இத்தனைக்கும் அந்த படத்தை பார்த்தால் நீங்கள் பயப்பிடுவீர்களா என்பது எனக்கு தெரியாது...! "மிரர்", "ஷட்டர்" போன்ற படங்களில் வருவது போன்ற பயங்கர காட்சிகளோ , உருவங்களோ இந்த படத்தில் கிடையாது. அப்படியிருந்தும் நான் ஏன் பயந்தேன் என்றால் (சொல்லித் துலையேண்டா...) .....



அந்த படத்தில் காட்டப்படும் கதாநாயகனின் கதாபாத்திரத்தை ஒத்த மன‌நிலையில் தான் நான் இருந்தேன். பேய் என்று சொல்லப்படுகின்ற அத்தனை சம்பவங்களையும் "மனப்பிறழ்வு" என கூறும் கதாநாயகனின் மனநிலையில் தான் இருந்தேன். நீ என் இனமடா .. என்று பெருமையுடன் கூறிக்கொண்டேன்.  கடைசியில் அந்த பாழாய்ப் போன கதாநயகன் அந்தர் பல்டி அடித்து பேய் பிடிப்பது எல்லாம் உண்மை என்று கட்சி மாற , பாழாய்ப் போன பக்குவப்படாத நாஸ்திக ம‌னதில் பயம் தொற்றிக்கொண்டது. அதற்காக சினிமா நாயகனை பார்த்து அதை நம்பினாயா? என்ற உங்கள் கேள்வி புரிகிறது, என்ன செய்வது ? படத்தின் தொடக்கதில் "உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டது என்று போட்டு தொலைத்து விட்டார்களே.. அது போக அந்த படத்தில் ஒலிபரப்பாகிய "பேய்பிடித்தோரின் கதறல்கள், போட்டோக்கள் " என்று அத்தனையையும் இந்த பாழாய்ப் போன இயக்குனர் எங்கிருந்தோ உண்மையானவற்றை போட்டு துலைத்திருக்கிறான்.

அவையெல்லாம் "அந்நியன் விக்ரம் " வேலைகள் என்று கதாநாயகன் ஆதாரங்கள் சிலவற்றை காட்டி மறுதலித்துவிட்டு , பின்பு பல்டி அடித்தால் என்ன செய்வேன் நான் பாவம்? 



அது போக என்னதான் பேய்களை நம்பக்கூடாது என் உள் மனதிற்கு நான் சொல்லிக்கொண்டாலும் , சின்ன வயதில் சோற்றை என்  வாயில் திணிக்கவும், தூங்கமறுத்து அராஜகம் பண்ணும் என்னை தூங்க வைக்கவும், "அ" எழுத அடம்பிடிக்கையில் அதட்டவுமாக பேய் கதைககளை சொல்லி சொல்லியே என் பெற்றோரும், சுற்றாரும் என்னை வளர்த்து விட்ட படியினால், என்னதான் மூடநம்பிக்கைகளில் இருந்து விடுபட முயன்றாலும் , அந்த பாட்டி கதையின் மோகினிகள் சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் எட்டிப் பார்த்து விடுகின்றன. அதற்க்கு இந்த படம் நன்றாகவே வாய்க்கால் வெட்டிவிட்டது.  

நான் நாஸ்திகன் என்று என்னை குறிப்பிடுவது ஒரு பாதி நிலை தான். என் நம்பிக்கை இதுதான் "நான் எந்த சமயத்தையும் சாராத ஒரு கடவுளை நம்புகிறேன் " இப்படி இருக்கையில் அந்த கதாநாயகன் ஒரு காட்சியில் பேயிடம் " நான் கடவுளை நம்புவதால் , பேய்களையும் நம்புகிறேன் " என்று கிளப்பி விட , பேதியாகியது எனக்கு. 



அது போக பேய் வந்தால் அல்லது பேய் பயம் வந்தால் "ஏசப்பா" என்று சொன்னால் பேய் தலை தெறிக்க ஓடும் என்று என் கத்தோலிக்க வளர்ப்பு சொல்லியிருக்க, இந்த படத்தில் போப்பாண்டவர் இருக்கும் வத்திக்கானின் புனித.பேதுரு சத்துக்கத்தில் (அங்குதான் கதாநாயகன் தங்கியிருப்பார்) ஒரு அறையில் பேய் (இந்த காட்சியில் தவளையை பேயாக சித்தரித்து இருப்பார்கள்) சிலுவை, யேசுவின் திருவுருவம், மேரியின் சிலை என்று ஏறி குஸ்தி கரணமடித்து விளையாட குபீர் என்றது எனக்கு. பாடம் சொல்லி தந்த சுவாமி மட்டும் இப்ப என் கையில மாட்டினா......

அதைவிட  நாயகன் பேய்விரட்ட சீரியசாக செபங்களை சொல்லிக்கொண்டிருக்கும் போது பேய் கூலாக உக்கார்ந்துகொண்டிருந்து , ஒவ்வொரு செப முடிவிலும் அசால்ட்டாக "ஆமேன் ' சொல்லும் போது பயம் வருமா ?வராதா....? அது போக நாயகன் பேயை நோக்கி சிலுவையை நீட்டும் போது , அந்த சிலுவையை  சிரித்துக்கொண்டே பேய் வளைக்கையில் , என்ன நம்பிக்கையில் நான் தூங்க முடியும் சொல்லுங்கள். 

அதைவிட நான் கொஞ்சமாக பைபிள் வாசித்திருக்கிற படியால் அதில் பேய் பற்றி குறிப்பிடப் படுவன பற்றியும் , பேயின் நடவடிக்கைகள் பற்றியும் வாசித்து அறிந்திருக்கிறேன். இந்த படத்தில் அத்தனையும் தொட்டு படமாக்கியிருக்கும் விதமும் , பைபிளில் சொல்லப்பட்டுள்ள சில சம்பவங்கள் பேய்களுக்காகவே சொல்லப்படுள்ளன தெளியும் இடத்திலும்  "உங்களை விட எங்களுக்கு பைபிள் நன்றாக தெரியும் " என்று பேய் குருவைப் பார்த்து சொல்லுமிடத்தில் அது வாய்க்குள் சிரிக்கும் தோரணையையும் பார்த்தால்...... பைபிளை பற்றி தெரிந்த எவருக்கும் குலை நடுங்கும்.  (நீங்கள் பைபிளை மெத்தப் படித்தவராக இருந்தால் ..... சாரி ! உங்களை பற்றி எனக்கு சொல்ல தெரியாது) 



அது போக பேய் என்று ஒரு வெந்த முகத்தையோ, மண்டையில் இருந்து ஓடிவரும் வண்டை நாக்கால் உள் இழுத்து "நறக்' என கடிக்கும் ஒரு மம்மியையோ காட்டியிருந்தால் , கற்பனை உருவங்கள் என்று தெளிந்திருப்பேன். ஆனால் பேய் என்று காட்டியெதெல்லம் அன்றாடம் நான் காணும் "தவளை, குதிரை, சும்மா பார்த்தாலே பேய் போலிருக்கும் பெண், இவன் நல்லவனா? கெட்டவனா? எனக் கணித்து கூறமுடியாத முகத்தை கொண்ட ஒரு மதகுரு" போன்றன தான். இந்த படத்திற்கு பிறகு , நான் குளிக்கையில் (ஓ! நீ குளிப்பியா?) அடித்து வதை செய்யும் தவளை கூட என்னை தெனாவட்டாய் பார்ப்பதை உணர்கிறேன். 

BA'AL the demon


அது போக இந்த பதிவை எழுத முன்பு, அந்த படத்தில் வரும் "பால்" என்னும் பேயை பற்றி தகவல் தேடுவதற்காக சொடுக்கிய போது "பால் என்ற பேய் அதிக சக்தி கொண்டிருப்பது "ஒக்டோபர்" மாதத்தில் என்ற புது கிலியை கெளப்பிவிட்டிருக்கிறது விக்கிபீடியா...... என் விதியை என்ன சொல்வது....... 

'உச்சா போக வேண்டும் ...  என் இனிய சகோதரனை தேடுகிறேன் துணைக்கு...!!!!

டிஸ்கி:- என்னை நானே பிரபல பதிவர் என்றதற்கு (வேற எவனும் சொல்ல மாட்டேங்கிறானே) தமிழ் கூறும் நல்லுலகம் என்னை மன்னிக்கும் என நம்புகிறேன்.

"THE RITE" திரைப்பட விமர்சனம் படிக்க இங்கே சொடுக்கவும்

6 comments:

  1. மிக அருமை நண்பா தொடர் விமர்சனங்கள் உன் திறமையை பட்டை தீட்டுகின்றன.

    ReplyDelete
    Replies
    1. ஏதோ என்னால முடிஞ்சது நண்பா! ஆதரவுக்கு நன்றி!

      Delete
  2. பாலு (BA'AL ) பாக்க நல்லவன் மாதிரி தானே இருக்கான் நண்பா ,

    வெளிநாட்டு பேய் படமெல்லாம் வேஸ்ட்டு , நம்ம படத்துல , ஒரு மல்லிகப்பூ + வெள்ள சேலை + நாய் ஊளை இந்த கலவைல ஒரு கலக்கு கலக்குவாங்க பாருங்க , கலங்கிடும் கலங்கி .
    by the by உங்களோட எழுத்து நடை பட்டாசா இருக்கு நண்பா .

    ReplyDelete
    Replies
    1. அவன் பாலு பயபுள்ள பாக்க என்னவோ நல்லாதான் இருக்கான், அவன் கேரக்டர் சரியில்லயே மச்சி! பாடா படுத்டுறானே!

      நீங்கள் சொன்னது சரிதான் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் எடுத்த "Van Helshing" தராத பயத்தை 500 ரூபா செலவில் வெள்ளை புடவை உடுத்து நம்ம ராம நாராயணன் படத்து பேய்கள் தந்து விடும்.

      Delete
  3. ஐயையோ நான் அருந்ததி பார்த்ததுக்கே அடிவயிறு கலங்கினவன் மச்சி. இண்டைக்கு தூக்கம் போச்சு.

    ReplyDelete
    Replies
    1. அருந்ததி பாத்து எனக்கு எதுவும் ஆகல மச்சி, பிகாஸ் நான் அனுஸ்காவ பாத்து ஜொள்ளு ஊத்திக்கிட்டு இருந்ததில பேய் வந்தத கவனிக்க மறந்துட்டேன். அருந்ததி பேய் படம்னு ரெண்டு நாளுக்கப்புறம் என்னோட ஃபிரண்டு சொல்லித்தான் தெரியும்னா பாத்துக்கோயேன்,. ஆனா இந்த படம் பாத்து பீதில பேதியாயிடுச்சு! முடிஞ்சா பகல்ல பாரு மச்சி ! அதுவும் உனக்கு பைபிள் சம்மந்தமா ஏதாச்சும் அறிவு இருந்துச்சுன்னா சத்தியமா இரவில பாத்திராத ! அப்புறம் நீயி மூச்சா போறதுக்கு என்னால கூட வரமுடியாது.

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...