உதைபந்து

Tuesday, May 28, 2013

குஞ்சண்ணாவின் என்ஜினும் பார்லே-ஜியின் சக்திமானும்!



நம்மில் எத்தனை பேருக்கு சக்திமானை ஞாபகம் இருக்கிறது? தூர்தர்ஷன் பொதிகையில் ஞாயிற்று கிழமைகளில் பகல் பனிரெண்டு மணிக்கு ஒளிபரப்பாகிய அந்த "இந்திய சூப்பர் மேன்" தொலைக்காட்சி நாடகத்தினை எத்தனை பேர் பார்த்திருக்கிறீர்கள்?

சக்திமான் தொடர்பான ஞாபகங்கள் எனக்கு எப்போதும் பசுமையானவை. அப்போது எனக்கு எட்டு வயது இருக்கும், விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான எனது சொந்த ஊரில் இருந்த காலம். மின்சாரம் கிடையாது, தொலைக்காட்சிகள் கூட ஒன்றிரண்டு தான் . அதிலும் கலர் டி.விக்கள் இரண்டு வீட்டில் மட்டுமே இருந்தன. ஒன்று லோரன்ஸ் மாமா வீடு, அங்கு கிரிக்கட் போட்டிகள் மட்டுமே போடுவார்கள், பார்க்க வேண்டுமானால் இருபது ரூபா கொடுக்க வேண்டும், இன்னொரு வீடு எங்களது அயல் வீடான கீதா அக்காவின் வீடு. இங்குதான் சக்திமான் போடுவார்கள். சக்திமான் பார்ப்பதானால் தலைக்கு மூன்று ரூபா கொடுக்க வேண்டும்.

கீதா அக்காவிடம் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு ரேட் இருந்தது . சக்திமானுக்கு மூன்று ரூபா, கருணா மூர்த்திக்கு இரண்டு ரூபா ( யேசுவின் வாழ்க்கை வரலாற்று நாடகமான இதுவும் ஞாயிற்று கிழமைகளில் காலை பத்து மணிக்கு ஒளிபரப்பாகியது. சக்திமானை விட அதிக நேரம் ஒளிபரப்பாகிய நாடகமாக இருந்த போதிலும் கேள்வி குறைவாக இருந்த படியினால் விலையும் குறைவாக இருந்தது. கீதா அக்காவுக்கு வணிகத்தின் கேள்வி நிரம்பல் விதியும் தெரிந்திருந்தது.) பொதிகையில் ஞாயிற்று கிழமைகளில் ஒளிபரப்பாகிய தமிழ் திரைப்படத்திற்கு பத்து ரூபா. ஆனால் வெள்ளிக்கிழமை பொதிகையில் ஒளிபரப்பாகும் "ஒலியும் ஒளியும்" நிகழ்ச்சிக்கு மட்டும் ஏனோ கீதா அக்கா பணம் அறவிடுவது கிடையாது. ஆனால் பார்க்க வருபவர்கள் தங்கள் பங்குக்கு மண்ணெண்ணைய் கொண்டு வருவார்கள் .

மண்ணெணெய் என்னும் போது தான் ஞாபகமே வருகிறது , குஞ்சண்ணாவின் என்ஜினை எப்படி மறந்தேன்? கீதா அக்காவின் கணவர் தான் குஞ்சண்ணா! அவரின் உண்மை பேர் என்னவென்று எனக்கு இன்னும் தெரியாது. ஊரில் அனைவரும் அவரை அப்படியே கூப்பிடுவதால் , நானும் அப்படித்தான் அவரை கூப்பிடுவேன். வில்லேஜ் விஞ்ஞானி ! வில்லேஜ் விஞ்ஞானி ! என்பார்களே , நான் அறிய அந்த பெயருக்கு மிகவும் பொருத்தமானவர் குஞ்சண்ணாவே தான். பெரிதாக படிக்கவில்லை , ஆனால் இலத்திரனியலில் அவருக்கு இருந்த அறிவை எண்ணி இப்போதும் வியந்துகொண்டிருக்கிறேன். அனைத்தையும் தானாகவே கற்று, செய்து பார்த்து , கரண்ட் அடிபட்டு, வலிகள் தாங்கி எங்கள் ஊரில் ஒரு சிறந்த இலத்திரனியல் வல்லுனராக உயர்ந்திருந்தார். குஞ்சண்ணாவின் கை பட்டால் துருப்பிடித்த இரும்பு கூட ஏதாவது ஒரு இலத்திரனியல் உபகருணமாய் மாறிவிடும் , அப்படியொரு திறமைசாலி. குஞ்சண்னாவிடம் உதவியாளராக சேருவதற்கு எங்கள் ஊரின் இளைஞர்கள் முண்டியடிப்பார்கள், "தம்பினான்" என்ற எங்களது பக்கத்து வீட்டு அண்ணனுக்கே அந்த ஆஸ்தான உதவியாள் என்ற பதவி கிடைத்தது. மற்ற இளைஞர்கள் எல்லாம் தம்பினானுக்கே அள்ளைக்கைகளாக இருந்தார்கள்.

ஆக மின்சாரம் இல்லாத அந்த நாட்களில் சக்திமான் பார்ப்பதற்கும் இன்ன பிற நிகழ்ச்சிகளை கண்டு களிப்பதற்கும் குஞ்சண்ணாவின் தொழிநுட்பமே எங்களுக்கு கை கொடுத்தது. தண்ணீர் இறைக்கும் பம்ப் ஒன்றை தன்னுடைய முயற்சியால் ஒரு ஜெனரேட்டராக மாற்றியிருந்தார் குஞ்சண்ணா. ஒரு பெரிய முதிரை பலகையின் மீது பொருத்திவைக்கப்பட்டிருந்த அந்த என்ஜினுக்கு எப்போதும் எங்கள் மத்தியில் ஒரு ராஜ மரியாதை இருந்துவந்தது. அந்த என்ஜினை ஸ்ரார்ட் செய்வதற்கு , அதன் பக்கவாட்டில் நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு இரும்பு உருளையில் நீளமான கயிறினை ஏழெட்டு சுற்றுக்கள் சுற்றி இழுக்க வேண்டும். பம்பரம் விடும் செயன்முறைக்கு துளியும் வேறுபாடு இல்லாமல் இருக்கும் இந்த செயன்முறை. குஞ்ஞண்னாவின் செல்லப்பிள்ளை என்பதால் எடுத்த எடுப்பிலேயே ஸ்ரார்ட் ஆகிவிடாது அந்த என்ஜின். கிடந்து பிகு பிடிக்கும், ஒவ்வொரு தடவையும் குஞ்சண்னா வந்து ஏதாவது ஒரு பார்ட்டை கழட்டி மாட்டிய பிறகே உயிர்க்கும். மண்ணெண்ணை தான் அந்த என்ஜினின் எரிபொருள். ஆனால் அதன் கடைசி காலங்களில் என்ன எண்ணையில் ஓடுவது என்று அதுவே குழம்பிப்போயிருந்தது.

ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் , அந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பாவனைக்காக ராணுவ கட்டுப்பாடு பகுதியில் இருந்து , ராணுவம் மற்றும் இலங்கை கடற்படை ஆகியனவற்றின் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு கடல் மார்க்கமாக எரிபொருட்களை கொண்டுவந்து சேர்ப்பார்கள் கடற்புலிகள். "குருவி போட் ( boat) " என்று நாங்கள் அழைக்கும் அந்த போடில் தான் எரிபொருட்களை கொண்டுவருவார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் சீறிப்பாயும் விடுதலைப்புலிகளின் சொந்த தயாரிப்பான அதன் எடுப்பான தோற்றமும், முன்னே பொருத்தப்பட்டிருந்த "கலிபர் " ரக துப்பாக்கிகளும் , பின்னாலே பொருத்தப்பட்டிருக்கும் நானூறு குதிரை வலு கொண்ட என்ஜின்கள் இரண்டுமாக அந்த படகின் மீது எனக்கு ஒரு தனிக் காதலை உண்டாக்கி விட்டிருந்தது தனிக்கதை.
 அப்படியாக எரிபொருட்கள் கொண்டுவரப்பட்டு எங்களது ஊரின் இறங்கு துறையில் தான் இறக்குவார்கள். எரிபொருட்களை இறக்கி முடிந்ததும் கடற்புலிகளின் தளத்துக்கு திரும்புவதற்கு முன்னர்  , இலங்கை கடற்படைக்கு சிம்ம சொப்பனமான அந்த படகுகள் கம்பீரமாக காற்றி ஆடியபடியே  சுத்தப்படுத்தலுக்காக சிறிது நேரம் எங்கள் ஊர் துறைமுகத்தில் தரித்து நிற்கும். இந்த இடைப்பட்ட நேரத்தில் படகின் உட்புறம் சிந்திக்கிடக்கும் எரிபொருட்களை தண்ணீரோடு சேர்த்து ஒரு பிளாஸ்டிக் போத்தலில் சேகரிப்பாரகள் எனது நண்பர்கள்.

சேகரித்து முடிந்ததும் மிக சுலபமான விஞ்ஞான விதியை பயன்படுத்தி  தண்ணீரோடு சேர்ந்திருக்கும் எண்ணையை பிரித்தெடுப்பார்கள். வேறொன்றுமல்ல முழுதாக சேகரித்து முடிந்ததும் போத்தலை இறுக்க மூடிவிட்டு தலைகீழாக கவிழ்த்து பிடிப்பார்கள் உடனே பாரம் குறைந்த எண்ணை மேற்புறம் சென்றுவிட , தண்ணீர் கீழே வந்துவிடும். பின்னர் மெதுவாக போத்தலின் மூடியை கழற்றி அடியில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றிவிட போத்தலில் எண்ணை இருக்கும். இங்கு தான் வில்லங்கமே இருக்கிறது. அந்த போத்தலின் உள்ளே தேங்கி நிற்கும் எண்ணை என்ன எண்னை என்பதை சவூதி அரேபிய ஷேக்கினால் கூட சொல்லிவிட முடியாது. பெறோல், டீசல், தேங்காய் எண்ணை, மண்ணெண்ணை ஆகியவற்றின் கூட்டுக்கலவையாய் ஒரு புதுவித வர்ணத்தில் இருக்கும் அந்த எரிபொருள்.

இந்த எரிபொருள் தான் ஒரு சிலரின் சக்திமான் பார்ப்பதற்கான கூலி. இப்படியான ஒரு எண்ணையை முதல் தரத்தில் பார்த்த மாத்திரத்தில் இதனை எனது என்ஜினுக்கு ஊற்ற அனுமதிக்க மாட்டேன் என்று ஏதோ அந்த என்ஜின் "சுப்பர் பெற்றோலில்" ஓடுவதற்கு மட்டுமே தயாரிக்கப்பட்டதை போன்று அடம்பிடித்தார் குஞ்சண்ணா. ஆனால் சக்திமானுக்கு நேரம் ஆகவும், பணம் வாங்கி உட்காரவைக்கப்பட்ட பொடிசுகள் எல்லாம் "அக்கா.. சக்திமான் தொடங்கப்போகுது , கெதியா என்ஜினை இழுங்க.. " என்று கோரஸ் போடவும், கீதா அக்காவின் நச்சரிப்பு தாங்காமல் அந்த கூட்டுத்திரவத்தை என்ஜினில் ஊற்றியே விட்டார் குஞ்சண்னா. ஆனால் குஞ்சண்ணா பயந்தது போல எதுவுமே ஆகவில்லை, என்ஜின் ஒரு பிரச்சினையும் பண்ணாமல் ஓடியது. சொல்லப்போனால் அன்றைய நிகழ்வு ஒருவகையில் நன்மையாகவே அமைந்துவிட்டது. அதற்கு பின்னர் பல சமயங்களில் எண்ணை தீர்ந்துவிடப்போகிறது என்றால் கொஞ்சம் தேங்காய் எண்ணை, கொஞ்சம் எரிந்து தீர்ந்த ஒயில் , கொஞ்சம் தண்ணீர் என்று ஒரு கூட்டுத் திரவ லேகியம் தயாரித்து குஞ்சண்ணாவே என்ஜினின் வாயில் போட்டு விடுவார். அதுவும் மிக்க சந்தோசமாய் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும்.

ஆனால் அந்த என்ஜினுக்கு இரண்டு கெட்ட பழக்கங்கள் இருந்தன. ஒன்று அது போடுகிற மிகப்பெரும் சத்தம். அந்த என்ஜினை ஸ்ராட் செய்துவிட்டால் நான்கைந்து "பெல் -24 " ரக ஹெலிஹொப்டர்கள் காதுக்கருகில் பறந்துகொண்டிருக்கும் ஒலி கேட்டுக்கொண்டேயிருக்கும். இது உங்களால் தான் நேரந்த்து என்று அந்த "கூட்டு எரிபொருளை" அந்த என்ஜினுக்கு பழக்கிய என் நண்பர்களை குஞ்சண்னா குற்றம் சாட்டுவது வழக்கம். ஆனல் நான் அறிய அந்த என்ஜின் பிறப்பில் இருந்தே அப்படி கத்தியே பழக்கப்பட்டிருந்தது. குஞ்சண்னா என்ஜினை ஸ்ராட் செய்து விடுதல் தான் அந்த ஊரில் இருந்த அத்தனை சிறுவர்களினதும் சக்திமானுக்கான அறைகூவலாக இருந்தது. எட்டு திக்கும் ஓங்கி ஒலிக்கும் அந்த சத்தம் ஊரில் உள்ள அத்தனை சக்திமான் அபிமானிகளையும் பரபரப்பாகிவிடும். ஊரின் எந்த மூலையில் நின்றாலும் அந்த என்ஜினின் சத்தம் உங்களை "மாடு வந்திரிச்சு வாங்கோ" என்று கத்தி கூப்பிட்டு விடும். அந்த மகா சத்தத்தின் கீழ் சக்திமான் பார்த்து + கேட்ட எங்களது ஒலி பிரித்தறியும் சக்தியானது வௌவால்களுக்கே சவால் விடுவதாக இருந்தது.

இரண்டாவது பிரச்சினை கொஞ்சம் வேடிகையானது. தண்ணீர் பம்பினை ஜெனெரேட்டராக்கி விட்டபடியினால் , அந்த என்ஜினுக்கு கொஞ்சம் ஆட்டம் அதிகம். சொல்பேச்சு கேளாமல் தெறித்துக்கொண்டு திரியும். அதாவது அந்த என்ஜின் இயங்கும் போது ஏற்படும் "வைபிரேஷனால்" அது இருக்கின்ற இடத்திலிருந்து நகர ஆரம்பித்துவிடும். அதனை தடுப்பதற்கு இரண்டு பெரிய காட்டுக்கற்களை , அதன் அடியில் பொருத்தியிருக்கிற பலகையின் இரண்டு ஓரங்களிலும் பாரம் வைத்துவிட வேண்டும். இந்த வேலையை செய்வதற்கு , குஞ்சண்ணாவிடம் உதவியாளராக சேர வந்து கடைசியில் தம்பினானுக்கு அள்ளக்கைகளாகிவிட்ட இரு இளைஞர்கள் செய்வார்கள்ஆனால் அந்த "கல்லு பாரம் வைக்கும்" வேலையை செய்வதற்கு  ஏதோ ஒபாமாவுக்கு பிரதான மெய்க்காப்பளன் ரேஞ்சுக்கு பந்தா பண்ணுவார்கள். ஆனால் என்னதான் கல்லு பாரம் வைத்தாலும் அத்தனை கட்டுக்காவல்களயும் உடைத்துக்கொண்டு அந்த என்ஜின் அவ்வப்போது கிளம்பிவிடுவதும் உண்டு. நான் அறிய இரண்டு சந்தர்ப்பங்களில் அது நடந்தது.

சாதாரணமாக முற்றத்தில் வைக்கப்படும் அந்த என்ஜின் , மழை காலங்களில் குசினிக்குள் குடிவைக்கப்பட்டுவிடும். அன்றும் அப்படித்தான் , லேசான மழைத்தூறல் இருக்கவே என்ஜினை குசினிக்குள் வைத்துவிட்டு அனைவரும் சக்திமான் கபாலாவுடன் சண்டை போடுவதில் மூழ்கியிருந்துவிட்டோம். தற்செயலாய் குசினிக்குள் போன கீதா அக்காவின் மகள் கத்தினாள், என்ன நடந்தது என்று ஓடிப்போய் பார்த்தோம்.

கீதா அக்காவின் அப்பா போசி மாமா ஒரு சிறந்த வேட்டைக்காரர், நல்ல சமையல் காரரும் கூட….

அன்று வேட்டைக்கு போய் நன்று கொழுத்த ஒரு காட்டுப்பன்றியும் , கூடவே விசையில் மாட்டி பிடிபட்ட மரை இறைச்சியும் கொண்டுவந்திருந்தார். தள தளவென்றிருந்த  பன்றியின் கொழுப்பிலேயே அந்த பன்றியின் இறைச்சியை வாட்டி பதமாக இறக்கி , அம்மியில் அரைத்த செத்தல் மிளகாய் கூட்டோடு , கறிவேப்பிலை, ரம்பை, பூண்டு என்று அத்தனை வாசனை திரவியமும் சேர்த்து உப்பும் உறைப்புமாக அந்த மரை இரைச்சியை சமைத்து இறக்கியிருந்தார் போசி மாமா. காலையில் அடித்த பனங்கள்ளுடன் தொட்டுக்கொள்ள ஒன்றிரண்டு பன்றி இறைச்சி துண்டுகளை போசி மாமா  எடுத்தது தவிர வேறு எவரும் அந்த கறிகளை தொட்டுக்கூட பார்த்திருக்கவில்லை. அப்படியிருக்க , கல்லிலிருந்து விடுபட்ட அந்த என்ஜின் அத்தனை கறிச்சட்டிகளையும் மண்ணில் தள்ளி , உடைந்து போன அந்த சட்டிகளின் மீது நாலைந்து ரவுண்டு ஊர்ந்து சென்றிருந்தது வட்ட வடிவில் பரவிக்கிடந்த இறைச்சி துண்டுகளின் கோலத்திலேயே தெரிந்தது. அன்று ஊரின் மூக்கு துளைக்க வாசனையாய் சமைத்துவிட்டு , பச்சமிளகாயை கடித்துக்கொண்டு கீதா அக்கா குடும்பம் கஞ்சி குடித்தது தனிக்கதை.

இரண்டாவது சந்தர்ப்பம் நிகழ்ந்தது ஒரு சனிக்கிழமை இரவு!

எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது. பொதிகையில் கமலின் "காக்கிச்சட்டை" திரைப்படம் போட்டார்கள். சக்திமான், கருணாமூர்த்தி, கப்டன் வியோம் , கிரிக்கட் தவிர வேறு எதனையும் பார்ப்பதற்கு எனக்கு அனுமதி கிடையாது. அன்று சனிக்கிழமை இரவு , நேரம் கிட்டத்தட்ட பதினொரு மணி , இரவில் சுச்சா போவதானால் கூட விறாந்தை வாசலில் நின்றபடியே முற்றத்தில் கோலம் போட்டுவிடும் "துணிந்தவனான" நான் , பதினொரு மணிக்கு எழுந்து பார்க்கிறேன், வீட்டில் யாரும் இல்லை. போன வாரம் விசேட அனுமதியுடம் பார்க்க கிடைத்த "பட்டணத்தில் பூதம்" படம் கூட எனக்கு பயம் காட்டியது. ஏதோ ஒரு சந்தேகத்தில்  பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிப்போய் கீதா அக்கா வீட்டில் பார்த்தேன், அம்மா அப்பா தம்பி எல்லோரும் இருந்து படம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நானும் ஏதோ நித்திரை முரண்டு போல் அப்பாவின் மடியில் படுத்தபடி படம் பார்க்க ஆரம்பிக்கிறேன். "வானிலே தேனிலா ஆடுதே பாடுதே வானம் பாடி ஆகலாமா.. " என்று கமல் கேட்க அதற்கு அம்பிகா பதில் சொல்வதற்கு வாய் எடுக்கவும் "டுப்" என்ற சத்தத்தோடு டி.வி நின்றுவிட்டது.

பலதரப்பட்ட சோதனைகளின் பின்னர் என்ஜினில் தான் கோளாறு என்று முடிவாகி என்ஜினை பார்க்க குசினுக்குள் போனால் என்ஜினை காணோம். நலிந்து போயிருந்த குசினியின் கிடுகுகளை பிரித்துக்கொண்டு என்ஜின் கிளம்பி போயிருப்பது அதன் காலடி தடங்களில் தெளிவாகவே தெரிந்தது. சில வேளைகளில் தூரத்தில் இருக்கும் வீடுகளுக்கும் கரண்ட் கொடுப்பதற்காக குஞ்சண்ணாவின் என்ஜின் பயன்படுவதால் , அந்த என்ஜினில் எப்போதும் சுமார் இருநூறு மீட்டர் வயராவது இருக்கும். ஆக இப்போது சுமார் இருநூறு மீட்டர் தூரம் என்ஜின் போய்விட்ட பிறகே வயர் அறுந்து கரண்ட் துண்டிக்கப்பட்டு டி.வி நின்றிருக்கிறது என்ற ஊகம் வலுக்க என்ஜின் தேடுபடலம் தொடர்கிறது.


என்ஜினின் தடத்தை வைத்து அது போனவிடம் கண்டுபிடிக்க அயலில் உள்ள தடயவியல் நிபுணர்கள் அனைவரும் கையில் டார்ச் சகிதம் வந்து குவின்றார்கள். மழை காலமாகையால் சுற்றுவட்டாரமெங்கும் தவரை செடி வளர்ந்திருந்து தேடுதலை கடினமாக்குகிறது. இன்னொரு  விடயம் என்னவென்றால் , பல கிலோமீட்டருக்கு தன் இருப்பை அறிவித்து கத்தி கூச்சலிடும் அந்த என்ஜின் இப்போது மௌனம் காக்கின்றது. காரணம் , ராத்திரி நேரத்தில் சத்தம் போட்டு ஊரை எழுப்பி விடும் என்பதால் சத்தத்தை குறைக்க  நான்கைந்து சாக்குகளை ஈரத்தில் தோய்த்து என்ஜினின் மேலே குஞ்சண்ணா போர்த்திவிட்டிருப்பது நிலமையை இன்னும் மோசமாக்குகின்றது. ஆக இப்போது என்ஜினின் சத்தத்தை வைத்தும் தேடமுடியாது.

இருக்கும் ஒரே தடயம் அந்த என்ஜினின் வயர் தான். ஒரு வழியாக வயரை கண்டுபிடித்து அதை ஆதாரமாக வைத்துக்கொண்டு தவரைக்கள்ளி செடிகளூடே நடந்து, சுமார் இருநூறு மீற்றரையும் கடந்து அருகில் உள்ள பிள்ளையார் கோவிலடியை அடைந்துவிட்டோம். குஞ்சண்னாவின் கையில் இருந்த வயர் நேராக பிள்ளையார் கோவிலின் கேணிக்குள் இறங்குகிறதுகேணிக்குள் டார்ச்சை அடிக்கிறோம், டைட்டானிக் படத்தில் ஆரம்பத்தில் உண்மையான கப்பலை காட்டுவார்களே, அது போல தண்ணீரில் அமிழ்ந்து சாந்தியாக அமர்ந்திருக்கிறது அந்த ஜீவன். அது போக நாங்கள் நினைத்தது போல வயர் அறுந்து போகவும்  இல்லை, அது என்ஜினோடு இணைந்தே இருக்கின்றது. தண்ணீரில் மூழ்கி என்ஜின் மூர்ச்சையானதால் கரண்ட் துண்டிக்கப்பட்டிருக்கிறது அவ்வளவு தான். ஆளும் பேருமாக தூக்கி கேணியிலிருந்து என்ஜினை வெளியில் எடுக்கிறார்கள். அதன் மூடியில்லாத எரிபொருள் தாங்கி நிறைய குங்குமமும், விபூதியும் , பங்சாமிர்தமும் கலந்து போன பிள்ளையார் கோவிலின் கேணி நீர் இறங்கியிருக்கின்றது. என்னுடைய கவலை எல்லாம் அடுத்த நாள் சக்திமான் ஆயிற்றே.... அது போக டாக்டர் ஜெகாலுடன் சக்திமான் சண்டையிட வாய்ப்பும் இருக்கிறது, இப்போது என்ஜினுக்கு இப்படி ஆகிவிட்டது, என்ன நடக்குமோ? மனம் பதைக்கின்றது.

அடுத்த நாள் காலை ஞாயிறு திருப்பலி முடிந்தவுடனேயே கீதா அக்கா வீட்டிற்கு ஓடுகிறேன். என்ஜின் பாகம் பாகமாக பிரிக்கப்பட்டு குஞ்சண்ணா சத்திரசிகிச்சை செய்துகொண்டிருக்கிறார். கூடவே தம்பினானும் சாவி, ஸ்பானர் போன்ற சத்திர சிகிச்சை உபகருணங்களை எடுத்து கொடுத்து உதவிக்கொன்டிருக்கிறான். மணி பத்து மணியை கடந்து விட்டது, "கருணா மூர்த்தி மிஸ்ட்" , அது பரவாயில்லை, திருப்பலியிலும், மறைக்கல்வி வகுப்பிலுமாக கேட்டுக்கேட்டு யேசுநாதரின் வாழ்கை வரலாற்றை அவரை விடவே அதிகம் தெரிந்து வைத்திருக்கிறேன். இப்போதைய கவலை எல்லாம் சண்டை போடப்போகும் சக்திமானும் டாக்டர் ஜெகாலும் தான்...

நேரம் பனிரெண்டை நெருங்க கீதா அக்காவின் வீட்டில் கூட்டம் நெருக்கித்தள்ளுகிறது, அத்தனை பேர் முகத்திலும் செத்துக்கிடக்கும் என்ஜின் பற்றிய கவலை தொற்றிக்கொண்டுள்ளதுநேற்றைய இரவின் சாட்சி நான் ஆன படியால் அனைவருக்கும் அந்த என்ஜினுக்கு என்ன நடந்தது என்று விலாவாரியாக சொல்லிக்கொண்டு இருக்கிறேன். ஆண்களும் பெண்களுமாக குழுமி நின்று எனது பேச்சையே உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்தது, மனதுக்குள் ஒரு அல்ப்ப சந்தோஷத்தை வேறு தந்துகொண்டிருக்க, அந்த என்ஜினை நானும் சேர்த்து தான் தூக்கினேன், அதை ஸ்ராட் செய்து பார்க்க சொல்லி குஞ்சண்ணா என்னிடம் தந்தார் என்றெல்லாம் நாலைந்து எக்ஸ்ரா பிட்டுக்களை வேறு அள்ளிவிட்டுக்கொண்டிருந்தேன். தாங்கள் தூரத்தில் நின்று மட்டுமே ரசிக்கும் அந்த என்ஜினை நான் தொட்டு தூக்கியிருப்பதில் என் சமவயதுக்காரர்களின் வயிறுகள் எரிவதை ரசிக்கவேறு செய்தேன்.

 சக்திமானுக்கு அடுத்தபடியாக அனைவரது மனதிலும் நாயகனாக வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த என்ஜினுக்கு இப்படி ஆனது குறித்து அனைவருக்கும் ஒரே கவலை. அது மரித்துப்போய் விட்டால் ஊரின் பொழுதுபோக்கே பாழாகிவிடும். சிலர் அதன் ஆன்ம சாந்திக்காக பிரார்த்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனாலும் நான் உட்பட பலருக்கு "வைத்தியர்" குஞ்சண்ணாவின் சத்திர சிகிச்சையின் மேல் இன்னும் ஒரு அபார நம்பிக்கை இருக்கிறது. சத்திர சிகிச்சை முடிந்துவிட்டது, அறுக்கப்பட்ட என்ஜினின் பாகங்கள் மீண்டும் மாட்டப்படுகின்றன.

எங்களுக்குள் ஒரு நம்பிக்கைச்செடி துளிர்த்து இரண்டு இலை விடுவதற்குள் இறங்குதுறையில் எண்ணை சேகரிக்கப்போன டிக்சன் ஒரு பிரச்சினையுடன் வருகிறான். அவனது கையில் ஒரு போத்தல் இருக்கிறது, அது வழமையான எரிபொருள் கலவையின் நிறத்தில் இல்லாமல் கிட்டத்தட்ட தண்ணீரின் வர்ணத்திலேயே இருக்கின்றது. "குஞ்சண்ணா.... இண்டைக்கு எண்ண சரியான குறைவு.. தண்ணி கூடிப்போச்சு..." தயங்கியபடி சொல்கிறான். அவனது தயக்கத்தில் , இந்த திரவத்தை என்ஜினுக்குள் ஊற்றுவது புத்திசாலித்தனம் அல்ல என்ற கருத்து வலுத்து நிற்கின்றது. குஞ்சண்ணா என்ஜினை பார்க்கிறார், அப்படியே என்னையும் பார்க்கிறார், அவரது உதட்டோரம் ஒரு புன்னகை வந்து விழுகிறது.

"தண்ணிதானே.. நீ ஊத்துடா அது ஓடும்.... உன்ட போத்திலுக்க என்ன புள்ளையார் கோயில் கேணிய விட கனக்க தண்ணியா இருக்கு.....?"


தூர்தர்ஷனில் சக்திமான் முடிந்துவிட்ட போதும் அந்த என்ஜின் இன்னமும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

4 comments:

  1. நல்ல எழுத்துத்திறன்! காட்சிகளை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அன்பரே!

      Delete
  2. தெள்ளிய நடை... கண் முன் விரியும் காட்ச்சிகள்...உன் கைபிடித்து காட்ச்சிக‌ளூடே நடந்த உணர்வு

    ReplyDelete
    Replies
    1. நடந்தது போதும் கைய விடு ராஜா... :p

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...